ரத்த மகுடம்- 87
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
ஆனால், பாண்டிய சேனாதிபதியான மாறவர்மனாலோ அல்லது சாளுக்கிய உபசேனாதிபதியாலோ சுவரைத் தாண்டி நுழைய முடியவில்லை.இறங்கிக் கொண்டிருந்த சுவரை முடிந்தளவு தாங்கி நிற்கவும் சிவகாமி அதற்குள் நுழையவுமே தங்கள் ஆற்றலைச் செலவிட்டார்கள்.  புரிந்து கொண்ட சிவகாமியும் தரையோடு தரையாக சறுக்கியபடி இறங்கிக் கொண்டிருந்த சுவருக்கு அப்பால் சென்றுவிட்டாள்!உடனே மாறவர்மனும் சாளுக்கிய உபசேனாதிபதியும் சட்டென்று சுவரைத் தாங்குவதை நிறுத்திவிட்டு அகன்றார்கள்.சுவரும் வேகத்துடன் இறங்கி தரையில் பதிந்தது. 
மூச்சு வாங்க இருவரும் திரும்பி சுவரைப் பார்த்தார்கள்.சாளுக்கிய உபசேனாதிபதி அந்த சுவரைத் தொட்டு அசைத்தான். துளிக்கூட அசைவில்லை. ஏதோ கட்டும்போதே தரையோடு தரையாக கட்டியதைப் போல் சுவர் ஊன்றி நின்றிருந்தது.
யாரிடமாவது, இந்தச் சுவர் எங்கள் கண்முன்னால்தான் தரையில் இறங்கியது... இந்தச் சுவர் மேலும் கீழுமாக இறங்கும்படி சிற்பி நிர்மாணித்திருக்கிறான்... இதற்கான பொறி அமைப்பு எங்கோ இருக்கிறது... என்று சொன்னால் சிரிப்பார்கள்; நம்ப மறுப்பார்கள். அவ்வளவு ஏன்... மாறவர்மனுக்கும் சாளுக்கிய உபசேனாதிபதிக்கும் கூட நடந்தவற்றை நம்ப கடினமாக இருந்தது. ஒருவேளை உறக்கத்தில் கனவு காண்கிறோமோ என்றுகூட அவர்களுக்குத் தோன்றியது.ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மற்றவரின் கவனத்தைக் கவராதபடி தங்களைத் தாங்களே கிள்ளிக் கொண்டார்கள். வலித்தது. ஆக, எதுவும் கனவில்லை.
‘‘இந்தச் சுவரை மேலே தூக்குவதற்கான பொறி எங்கிருக்கிறது..?’’ தன்னை நோக்கிக் கேட்ட சாளுக்கிய உபசேனாதிபதியை வெறித்தபடி பார்த்தார் மாறவர்மன். பதிலேதும் சொல்லவில்லை. ‘‘உங்களைத்தான்...’’ அருகில் வந்து மாறவர்மனை உலுக்கினான் சாளுக்கிய உபசேனாதிபதி.‘‘தெரியாது...’’‘‘தெரியாதா..? நீங்கள் பாண்டியப் படையின் சேனாதிபதிதானே..? இந்த மதுரை மாநகரம் உங்கள் தலைநகரம்தானே..? வணிகர் வீதியில் இருக்கும் இந்த மாளிகை உங்கள் ஆளுகைக்கு உட்பட்டதுதானே..?’’ சாளுக்கிய உபசேனாதிபதி படபடத்தான்.
அவனை வெறுப்புடன் பார்த்தார் மாறவர்மன். ‘‘நீ கேட்கும் எல்லா வினாக்களுக்குமான விடை ஒன்றுதான். ஆம்... ஆம்... ஆம்... கேட்காததற்கும் பதில் சொல்லி விடுகிறேன்... நாற்பது ஆண்டுகளாக பாண்டியப் படையில் இருக்கிறேன்... நான்கு தலைமுறைகளாக பாண்டிய மன்னருக்கு சேவை செய்து வருகிறோம்... இந்த மாளிகை உட்பட மதுரை மாநகரத்தில் இருக்கும் அனைத்தையும் நிர்மாணித்தது எங்கள் சிற்பிகள்தான்... ஒவ்வொரு மாளிகையும் எப்படி இருக்க வேண்டும்...
எந்தெந்த அமைப்பில் இயங்க வேண்டும் என்பதை எல்லாம் பட்டுத்துணியில் வரைந்து காட்டி அதன்படி கட்டச் சொன்னவர் அன்று பாண்டிய சேனாதிபதியாக இருந்த எனது பாட்டனார்தான்... மதுரைக்கு உயிர்கொடுத்த சிற்பிகள் அனைவரும் பாண்டிய மன்னருக்கு விசுவாசமானவர்கள். தங்கள் உயிரே போனாலும் மதுரையின் ரகசியத்தை காற்றிடமும் வெளிப்படுத்த மாட்டார்கள்... போதுமா..?’’ ‘‘அப்படியானால்..?’’ சாளுக்கிய உபசேனாதிபதி வாக்கியத்தை முடிக்காமல் விழுங்கினான்.
‘‘இந்த சுவரின் மேல் கீழ் அசைவும் சூட்சுமமும் எனக்குத் தெரியாது! உன்னைப் போலவே நானும் இப்பொழுதுதான் முதல் முறையாக இதைப் பார்க்கிறேன்! வா...’’‘‘எங்கு..?’’‘‘எங்கள் மன்னரிடம்! இதுவரை இங்கு நடந்ததையும் இந்த சுவரின் ரகசியத்தையும் அவரிடம் தெரியப்படுத்த வேண்டும்... என்ன பார்க்கிறாய்..? எங்கள் மன்னர் உறங்கச் சென்றிருக்க மாட்டார்! நம் வரவுக்காக காத்திருப்பார். சிவகாமி என்ன சொல்கிறாள் என்பதை தன்னிடம் எத்தனை ஜாமம் ஆனாலும் வந்து தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பினார்...’’
அதன் பிறகு சாளுக்கிய உபசேனாதிபதி எதுவும் பேசவில்லை. ஒருமுறை அந்தச் சுவரைப் பார்த்தான். தட்டினான்.‘‘வா...’’ என்றபடி மாறவர்மன் நடக்கத் தொடங்கினார்.‘‘ஒன்று சொல்ல வேண்டும்...’’ பின்தொடர்ந்தபடியே சாளுக்கிய உபசேனாதிபதி இழுத்தான்.‘‘அந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது!’’ பட்டென்று பதிலளித்தார் மாறவர்மன்.வியப்புடன் அவரது கரங்களைப் பற்றி நிறுத்தினான் சாளுக்கிய உபசேனாதிபதி.நின்று அவனை ஏறிட்டார் மாறவர்மன். ‘‘சிவகாமியும் கரிகாலனும் கூட்டுக் களவாணிகள் என்றே நானும் நினைக்கிறேன்! இந்த சுவரின் ரகசியம் கரிகாலனுக்கு தெரியும் என்பது போலவே சிவகாமியும் அறிவாள் என ஊகிக்க இடமிருக்கிறது! இல்லையென்றால் ஓடிவராமல் எதற்காக சறுக்கியபடி வரவேண்டும்..?
சுவர் கீழே இறங்கும் ஒலி நம் இருவரின் செவிகளிலும் விழவில்லை. ஆனால், துல்லியமாக சிவகாமி அதைக் கேட்டிருக்கிறாள்! எப்படி..? காலக் கணக்கு... இந்த ஜாமத்தில்... இந்த நாழிகையில் சுவர் இறங்கும் என இருவரும் முன்பே திட்டமிட்டிருக்கிறார்கள்! அதனால்தான் நம் இருவரையும் இந்தப் பக்கம் நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அந்தப் பக்கம் சென்றிருக்கிறார்கள்.
எங்கு சென்றார்கள்... என்ன செய்யப் போகிறார்கள்..? தெரியவில்லை... நாம் இருவரும் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தவில்லை... பெரும்பாலும் சிவகாமிதான் பேசினாள்... அதுவும் வரலாற்றுத் தகவல்களைத்தான் தெரிவித்தாள். எதற்காக..? யார் கேட்பதற்காக..? ஒருவேளை கரிகாலனுடன் யாராவது இருந்தார்களா..? சீனன் என்று சொன்னாள்... ஆனால், சீனனுக்கு நம் மூன்று அரசுகளின் சரித்திரம் எதற்கு..?’’ ‘‘மாறவர்மரே...’’ கூவிய சாளுக்கிய உபசேனாதிபதிக்கு தலையே சுற்றியது.
‘‘நம்மிருவரால் இதற்கு மேல் எதுவும் யோசிக்க முடியாது. மன்னரிடம் அனைத்தையும் தெரிவிப்போம். அவர் அமைச்சருடன் கலந்தாலோசித்து எல்லா முடிச்சுகளையும் அவிழ்ப்பார்...’’‘‘முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறேன்...’’ நிதானமாக சொல்லிவிட்டு தன் மைந்தனைப் பார்த்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மன்.எதுவும் பேசாமல் அவர் முன் கைகட்டியபடி நின்றார் பாண்டிய இளவரசரான கோச்சடையன் இரணதீரன்.
‘‘‘இன்னமும் உறங்கவில்லையா..? இந்த நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...’ என்று என்னைக் கேட்டாய். பதில் சொல்லிவிட்டேன். இப்போது அதே வினாவை நான் கேட்கிறேன்... உறங்கவில்லையா..?’’ எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதாரணமாகக் கேட்டார் அரிகேசரி மாறவர்மன். ‘‘உறக்கம் வரவில்லை மன்னா... காற்று வாங்கியபடி யோசிப்பதற்காக உப்பரிகைக்கு வந்தேன்...’’ தந்தையின் கண்களைப் பார்த்தபடியே சொன்னார் இரணதீரன்.
பாண்டிய மன்னர் புன்னகைத்தார். ‘தந்தையே’ என்று அழைக்காமல் ‘மன்னா’ என தன் மைந்தன் அழைத்ததை எண்ணி சிரித்தார். அப்படியானால் இனிவரும் உரையாடல்கள் அந்தரங்கமாக இருக்கப் போவதில்லை...
‘‘உன் சிநேகிதன் என்ன செய்கிறான்..?’’ ‘‘யாரைக் குறிப்பிடுகிறீர்கள் மன்னா..?’’ ‘‘சாளுக்கிய இளவரசர் விநயாதித்தனை!’’ ‘‘நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்...’’ ‘‘அந்த நிம்மதி உனக்கு ஏற்படவில்லையா..?’’ ‘‘இல்லை மன்னா...’’ ஏன் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார் அரிகேசரி மாறவர்மன்.
‘‘மதுரைக்குள் சோழ இளவரசர் நுழைந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்...’’ ‘‘ம்...’’‘‘எதற்காக மாறுவேடத்தில் நுழைய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் மன்னா...’’ ‘‘வேளிர் குலத் தலைவனான கடிகை பாலகன் இதற்கு பதில் சொல்லியிருப்பானே..!’’ சிரித்தபடி கேட்டார் அரிகேசரி மாறவர்மன். ‘‘சொன்னான்...’’ ‘‘கரிகாலனைப் பற்றியா..? சிவகாமியைக் குறித்தா..?’’‘‘இருவரைப் பற்றியும்!’’‘‘அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறாயா..?’’‘‘ஆம் மன்னா... தாங்களும் இந்த முடிச்சுகளைத்தான் அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்களா..?’’
பதிலேதும் சொல்லாமல் தன் மைந்தனை சில கணங்கள் உற்றுப் பார்த்தார். பின் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ‘‘ரணதீரா..!’’ ‘‘தந்தையே...’’ அழைத்தபடி அவர் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தார் பாண்டிய இளவரசர்.‘மன்னா’ என இம்முறை தன்னை அழைக்கவில்லை என்பதை மனதுக்குள் அரிகேசரி மாறவர்மர் குறித்துக் கொண்டார். இதற்குக் காரணம், ‘ரணதீரா...’ என பெயர் சொல்லி, தான் அழைத்ததே என்பதும், இதன் வழியாக இனி அந்தரங்கமாக உரையாடலாம் என்ற சமிக்ஞையை, தான் வெளிப்படுத்தியதே என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது. ‘‘சில கணங்களுக்கு முன் எங்கு நின்றிருந்தாய்..?’’ ‘‘அங்கு தந்தையே...’’
‘‘அப்போது நம் இருவருக்கும் இடையில் எத்தனை அடிகள் இருந்தன..?’’ ‘‘ஐந்தடிகள்...’’‘‘பத்தடிகள் என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்... திடீரென்று நம் இருவருக்குமிடையில் மேலிருந்து ஒரு சுவர் இறங்கினால் எப்படி இருக்கும்..?’’கேட்ட அரிகேசரி மாறவர்மரை அதிர்ச்சியுடன் பார்த்தார் பாண்டிய இளவரசர். ‘‘மன்னா...’’ சட்டென எழுந்து நின்றார். ‘‘இது... இது... ரத்த வழியுள்ள பாண்டிய மன்னர் குலம் மட்டுமே அறிந்த ரகசியமல்லவா..? இந்த மதுரை மாநகரில் இதுபோன்ற பொறி அமைப்புள்ள மாளிகைகள் எங்கிருக்கின்றன என்பது நமக்கு மட்டும்தானே தெரியும்..? யுத்த காலங்களில் மட்டுமே அது குறித்து உரையாடக் கூட வேண்டும் என்று என்னிடம் சொன்ன நீங்கள், இப்போது எதற்காக அதைக் குறிப்பிடுகிறீர்கள்..?’’‘‘போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால்...’’ ‘‘மதுரையிலா..?’’
‘‘பாண்டிய நாட்டிலும்!’’ நிறுத்திய பாண்டிய மன்னர், வணிகர் வீதி இருந்த பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். ‘‘அந்த சிற்ப ரகசியம் இன்னும் ஒருவனுக்கு தெரிந்திருக்கிறது ரணதீரா..!’’ ‘‘அறிந்தவன் யார் தந்தையே..?’’ ‘‘சோழ இளவரசன்... கரிகாலன்!’’ ‘‘எப்படித் தெரியும்... யார் சொன்னது..?’’ ‘‘சிவகாமி!’’ சொல்லிவிட்டு தன் இமைகளை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார் அரிகேசரி மாறவர்மர்.
மூடிய சுவரை ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள் சிவகாமி. அதன் பிறகு அவள் திரும்பவே இல்லை. வாளை முன்னோக்கி நீட்டியபடி சில கணங்கள் நின்றாள். இருளும் ஒளியானதும் தன் முன் விரிந்த பாதையில் ஓடத் தொடங்கினாள்.வளைந்து நெளிந்து அருவத்தைப் போல் காணப்பட்ட அந்த ஒற்றையடிப் பாதையை புயல் போல் கடந்தாள். பாதையின் இருபக்கமும் சுவர்கள். வலப்பக்க சுவர் எந்த இடத்தைச் சுட்டுகிறது என்பதும் இடப்பக்க சுவர் எந்த அறையின் எல்லை என்பதையும் அவள் அறிவாள். அதனாலேயே இரு பக்கங்களிலும் தன் கவனத்தை அவள் செலுத்தவில்லை. தான், ஓடி வரும் பாதை எந்த இடத்தில் முடியும் என்பதை அறிந்தவளைப் போலவே இலக்கை நோக்கி நகர்ந்தாள்.
எதிர்பார்த்தது போலவே அவள் வந்த பாதை ஒரு சுவரின் முன்னால் நின்றது.சுவாசத்தை நிலைப்படுத்தி அந்த சுவரை மூன்று முறை தட்டினாள்.மறுகணம் அந்த சுவர், திரைச்சீலையைப் போல் மேலே ஏறத் தொடங்கியது.படுத்தபடியே உருண்டு வெளியே வந்தாள்.வந்த சிவகாமியை நோக்கி ஒரு வாள் இறங்கியது!தன் வாளால் அதைத் தடுத்தாள். தன்னை நோக்கி இறங்கிய வாளை பலமாகத் தள்ளினாள்.
அந்த வேகத்தில் அந்த வாளைப் பிடித்திருந்த நபர் பின்னோக்கி இரண்டடிகள் நகர்ந்தார்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சிவகாமி துள்ளி எழுந்தாள். தன் மீது வாளை இறக்கிய நபர் யாரென்று பார்த்தாள். அதிர்ந்தாள்.
காரணம், அது ஆணல்ல, பெண்!‘‘நீயா..? நீ... எப்படி... இங்கு..?’’கேட்ட சிவகாமிக்கு அந்தப் பெண் தன் உதட்டைப் பிரித்து எந்த பதிலையும் சொல்லவில்லை. மாறாக தன் கரத்தில் இருந்த வாளால் விடையளிக்க முற்பட்டாள். சிவகாமியை நோக்கி தன் வாளைச் சுழற்றத் தொடங்கினாள்!
(தொடரும்)
காட்டனின் பட்டு மனசு!
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் திரு. கே.ஆர்.நாகராஜன், சென்னையில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் கல்வி சேவை மையத்துக்கான நன்கொடையாக ரூபாய் ஒரு கோடியை வழங்கினார்.அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனரான நடிகர் சூர்யாவும் தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையனும் இணைந்து அந்த காசோலையைப் பெற்றுக்கொண்டனர்.
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|