ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை



உலக அமைதிக்காக பல சர்வதேச அமைப்புகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இது ஒருபுறம் இருக்க, கிராமங்களில் இதே இலக்கை முன்வைத்து நம்பிக்கை சார்ந்த பல்வேறு சம்பிரதாயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொன்றுதொட்டு நடைபெறும் இதுபோன்ற சம்பிரதாயங்கள் விஞ்ஞானப் பார்வைக்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் மனிதநேயமும், இப்பூமி மீது கொண்ட நேசமும் ஆழ்ந்துகிடக்கின்றன.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தேவிநாயக்கன்பட்டி.
இங்கு உலக அமைதிக்காகவும், ஊர் செழிக்கவும் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு தை முதல் தேதியிலும் இந்நிகழ்வு நடைபெறும்.
இந்த விழாவில் சிறுமிகள் அனைவரையும் பொது இடத்தில் இரவு முழுவதும் அமரவைப்பர். யார் விடியும் வரை தூங்காமல் இருக்கிறார்களோ அவரை நிலாப் பெண்ணாகத் தேர்வு செய்வர்.

இந்த ஆண்டு தண்டபாணி என்பவரின் மகள் கல்பனாதேவி (10) நிலாப் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறாள். இவரை மற்ற சிறுமிகள் அனைவரும் சூழ்ந்து நின்று விழா எடுப்பர். பால் படையல் நடத்தப்படும்.பின்னர் ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்குச் செல்வர். அங்கிருந்து ஆவாரம் பூக்களை நிரப்பி அக்கூடையைச் சிறுமியிடம் கொடுப்பர்.

அந்தச் சிறுமி அவற்றைத் தலையில் வைத்தபடி ஊர்வலமாக தேவிநாயக்கன்பட்டிக்கு வருவார். மக்கள் தாரை, தப்பட்டை மேளம் முழங்க நிலாப் பெண்ணுக்கு வரவேற்பு கொடுப்பர்.பின்பு மாடச்சியம்மன் கோயிலுக்கு நிலாப்பெண் அழைத்து வரப்பட்டு சிறுமியின் முறைமாமன்கள் தென்னை ஓலையால் குடிசை போல் அமைத்து அமரவைப்பர்.

தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு மாவிளக்கு எடுத்து கோயில்முன்பு வைத்து அவளைச் சுற்றி கும்மிப் பாடல் பாடியபடி சடங்கு செய்வார்கள். இந்தப் பெண் நிலாப் பெண்ணாக மூன்று ஆண்டுகள்  தொடர்ந்து இருப்பார்.சடங்கு நிகழ்வின் நிறைவாக அதிகாலையில் நிலா மறையத் துவங்கியதும் ஊர் மக்கள் அந்தச் சிறுமியை அழைத்துச் செல்வர். அப்பகுதியில் உள்ள கிணற்றுக்குச் சென்று சிறுமியிடம் உள்ள ஆவாரம்பூக்கள் நிரப்பப்பட்டிருந்த கூடையைக் கிணற்றில் வீசுவர். இந்தப் பூ பந்து போல மிதக்கும்.

பின்பு அந்தச் சிறுமி விளக்கேற்றுவார். அதன்பிறகு அனைவரும் ஊர் திரும்புவர். கிணற்றில் ஏற்றப்பட்ட விளக்கு தொடர்ந்து ஏழு நாட்கள் எரிந்துகொண்டு இருக்கும் என்பது  ஐதீகம். இந்த விழா நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜி.மணிமாறன்