முகம் மறுமுகம்-தையல் நாயகி சரண்யா பொன்வண்ணன்!



அஜித்திலிருந்து மகேஷ்பாபு வரை கோலிவுட், டோலிவுட் ஹீரோக்களின் பாசமிகு அம்மாவாக அன்பை பொழிந்தவர்; பொழிபவர் சரண்யா பொன்வண்ணன். ‘நாயகனி’ல் காதல் சங்கீதமாக சிறகடித்தவர். ‘தென்மேற்கு பருவக்காற்று’க்காக தேசிய விருது வாங்கியவர். அம்மா கேரக்டர் ரோலுக்கென தனி மரியாதையை ஏற்படுத்தியவர். 80’ஸ், 90’ஸ் ஹீரோயின்ஸ் பலரும் இன்று அம்மா ரோலில் ஆர்வமாக முன்வந்து கமிட் ஆக முக்கியக் காரணம், சரண்யா போட்டிருக்கும் பாதைதான்.

பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே முறைப்படி டைலரிங் கற்ற சரண்யா, இப்போது ‘Dsoft’ (designing school of fashion technology) என்ற பெயரில் தொழில்முறை வசதி கொண்ட ஒரு தையல் பயிற்சிப் பள்ளியை நிர்வகித்து அசத்துகிறார்.‘‘டைலரிங் க்ளாஸ்ல நான் சேர்ந்தப்ப எனக்கு சரியா ஊசில நூல் கோர்க்கத் தெரியாது. ‘இது நமக்கு சரிவராது போலிருக்கே... கோர்ஸ்ல வேற சேர்ந்து தொலைச்சிட்டோமே…’னு ஃபீலாகி அழுதுருக்கேன்!
அந்த டைம்ல ‘கருத்தம்மா’,‘சீவலப்பேரி பாண்டி’னு சினிமால பிஸியா இருந்தேன். ஷூட்டிங்கும் போவேன். கிளாஸுக்கும் வந்துடுவேன். இதுல நாலைஞ்சு நாட்கள் கிளாஸுக்கு போக முடியலைனா பாடங்கள் மிஸ் ஆகிடும். கிளாஸ் கட் ஆனதால முந்தைய பாடங்கள் ஒண்ணுமே புரியாது. அதை மேடம்கிட்ட போய் கெஞ்சிக் கேட்டு தெரிஞ்சுக்குவேன். அப்டேட் பண்ணிக்குவேன்.

எங்க மாஸ்டர்ஸ் எல்லாருமே என்னை, ‘நான் ஒரு ஃபிலிம் ஸ்டார். பொழுதுபோக்கா கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்’னுதான் நினைச்சிட்டிருந்தாங்க. ஆனா, என்னுடைய சின்ஸியாரிட்டி, டெடிகேஷனைப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டாங்க. அவங்களும் வெறித்தனமா எனக்கு கத்துக்கொடுத்தாங்க. நானும் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்டா வந்தேன்!

சின்ன வயசுல இருந்தே எங்கிட்ட ஒரு குணம் உண்டு. நான் எதைச் செய்தாலும் அதில் பர்ஃபெக்‌ஷன் இருக்கணும்னு கவனமா இருப்பேன். ஒழுங்குமுறை அவசியம்னு நினைப்பேன். ஒரு ரசம் வச்சாக் கூட அது பர்ஃபெக்ட் ரசமா இருக்கணும். என்னோட இந்தக் குணம், ப்ளஸ்ஸா மைனஸானு தெரியல. ஆனா, இப்படி ஒரு குணம் இருந்ததாலதான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட் ஆக முடிஞ்சது..!’’ ஐந்தருவி போல சடசடக்கும் சரண்யாவின் டைலரிங் ஆர்வத்திற்கு காரணம் அவரது அம்மாவாம்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைல. எங்க வீட்ல மூணு தையல் மிஷின்கள் இருந்தது. அம்மாவுக்கு டைலரிங் அவ்ளோ பிடிக்கும். அக்கம் பக்கத்துல இருந்தவங்ககிட்ட பணமே வாங்காமக் கூட தைச்சுக் கொடுத்து சந்தோஷப்பட்டிருக்காங்க.‘நீயும் தையல் கத்துக்கோ’னு சொல்லிட்டே இருப்பாங்க. அப்ப எனக்கு சமையலையும், கார்டனிங்லயும்தான் ஆர்வம். தையல் கத்துக்கவே இல்ல. திடீர்னு ஒருநாள் அம்மா இறந்துட்டாங்க...’’ குரல் உடைய, சரண்யாவின் கண்களில் நீர் திரள்கிறது. சமாளித்துக் கொண்டு தொடர்கிறார்:

‘‘அப்புறம் அப்பாதான் என்னை வளர்த்தாங்க. அக்கா, தங்கச்சி கூட பிறக்காததால தனியாதான் வளர்ந்தேன். வீட்ல இருந்த தையல் மிஷின்ஸ் எல்லாம் தூசி படிஞ்சு, ஒட்டடை பிடிக்க ஆரம்பிச்சது. அம்மா மீதான ப்ரியத்தால, அந்த மிஷின்ஸை எல்லாம் சுத்தம் செய்வேன்.

அம்மாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்கிட்ட, ‘உங்க அம்மாகிட்ட இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்ட நீ, டைலரிங் மட்டும் கத்துக்காம போயிட்டீயே... அவங்க பிளவுஸ் தைக்கிற மாதிரி யாராலும் தைக்கவே முடியாது. அதையெல்லாம் நீ மிஸ் பண்ணிட்டீயே’னு வருத்தப்பட்டாங்க.
அவங்க சொன்னது உண்மை! அந்த சொல் மனசுல நின்னுக்கிட்டே இருந்துச்சு. யார்கிட்டயாவது டைலரிங் கத்துக்கணும்னு முடிவெடுத்தேன். கெல்லீஸ்ல இருக்கற ஒரு இன்ஸ்டிடியூட்டை அம்மாவுடைய ஃப்ரெண்ட் ரெஃபர் செய்தாங்க.

உடனே அங்க அஞ்சு மாச கோர்ஸ்ல சேர்ந்தேன். தையல்ல என்னுடைய குரு ரெண்டுபேர். மிஸஸ் சுகந்தி அய்யாசாமி, மிஸஸ் கோகிலா கல்யாணசுந்தரம். இவங்களாலதான் எனக்கு தையல் சாத்தியமாச்சு. பிறந்த குழந்தைல இருந்து கல்யாணம், பார்ட்டி, மத்த ஃபங்ஷன்ஸ் வரை எல்லாத்துக்குமான உடைகளை எப்படி தைக்கணும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தவங்க இவங்க ரெண்டு பேரும்தான்.

கோர்ஸ் டைம்ல என் டிரெஸ், அண்ணி, அண்ணன் குழந்தைகள் டிரெஸ்... எல்லாம் தைப்பேன். அப்புறம் பயிற்சி முடிச்ச டைம்ல எனக்கு கல்யாணமாச்சு. கடவுள் புண்ணியத்துல ரெண்டு பெண் குழந்தைகள். ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.இதுதான் சாக்குனு குழந்தைகளுக்கான டிரெஸ்களை அழகழகா தைச்சு குவிச்சேன். பர்த் டே ஃபங்ஷனுக்கெல்லாம் என் மகள்களின் டிரெஸ்கள் அசத்தும்.

நான் தைச்ச டிரெஸ்ஸை என் பசங்க ஸ்கூலுக்கு போட்டுட்டு போவாங்க. அந்த  நேர்த்தியைப் பார்த்து என் பொண்ணுங்க கிளாஸ்ல படிக்கற பிள்ளைகளோட அம்மாக்கள்  வியக்கற அளவுக்கு என் ஒர்க் ரீச் ஆகிடுச்சு.இப்படி குழந்தைங்களுக்கு தைச்சு தைச்சு அழகும் பார்த்தேன்... பிராக்டீஸும் எடுத்துக்கிட்டேன்...’’ கலகலக்கும் சரண்யாவின் பேச்சு, Dsoft பற்றித் திரும்பியது.

‘‘என் அம்மாவின் ஃப்ரெண்ட் ஒருத்தர் அடிக்கடி ஒரு விஷயத்தை என்கிட்ட வலியுறுத்திக்கிட்டே இருந்தாங்க. ‘நீ எப்பப் பாரு சினிமா சினிமானு சொல்லிட்டே இருக்க. அது நிரந்தரமில்லாத தொழில். உன் கைல அருமையான கைத்தொழில் ஒண்ணு இருக்கு. அதைப் பயன்படுத்தற வழியைப் பாரு...’ அதாவது ஒரு தையல் கடையாவது நான் வைக்கணும்னு அவங்க விரும்பினாங்க. அப்ப கைவசம் நிறைய படங்கள் இருந்ததால இந்த முயற்சில நான் இறங்கலை. விருப்பமும் இல்லாம இருந்தேன்.

இதுக்கிடைல, என்னோட சில ஃப்ரெண்ட்ஸும், ‘எங்களுக்காவது சொல்லிக் கொடு’னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு மட்டும் கத்துக் கொடுக்கலாம்னு 2014ல ஒரு முடிவு எடுத்தேன். சும்மா இருந்த எங்க வீட்டு மாடி ரூமை க்ளீன் பண்ணி, ஒரே ஒரு மிஷின் மட்டும் போட்டு, அவங்க நாலு பேருக்காக ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு.

இங்கதான் ஒரு டுவிஸ்ட். அந்த டைம்ல ஒரு ஆங்கிலப் பத்திரிகைல ஃபிலிம் ரிவ்யூவுக்காக என்கிட்ட பேசிட்டிருந்தப்ப தையல் கத்துக் கொடுத்திட்டிருக்கற விஷயத்தைச் சொன்னேன். உடனே அவங்க ஆச்சரியமாகி, ‘ரிவ்யூ செய்திலயே இந்த விஷயத்தையும் குறிப்பிடறோம். உங்க மெயில் ஐடியை இன்னிக்கு ராத்திரியே அனுப்பிடுங்க’னு அவசர அவசரமாக் கேட்டாங்க.

அப்ப மெயில் ஐடினா என்னான்னே எனக்குத் தெரியாது. என் இன்ஸ்டிடியூட்டுக்கும் பெயர் எதுவும் வைக்கல. அன்னிக்கு ராத்திரி வீட்ல கணவர், மகள்களுடன் சேர்ந்து சாப்பிடறப்ப Dsoft (டிசைனிங் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி)னு அழகான பெயர் செட் ஆச்சு.
சந்தோஷத்துல உடன மெயில் ஐடியையும் கிரியேட் பண்ணி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பிட்டேன். அந்த பேப்பர் பார்த்து இருபது பேர் அட்மிஷனுக்கு வந்துட்டாங்க!

இவ்ளோ பேரானு பிரமிப்பாகிடுச்சு. முதல்முறையா கிளாஸ் எடுக்கணும். கூட வேற யாரும் இல்ல. கொஞ்சம் கை கால் உதறல் எடுத்துச்சு. என் குரு சுகந்தி மேம்தான், ‘உன்னால முடியும். தைரியமா பண்ணு’னு பூஸ்ட் அப் பண்ணினாங்க.முதல் பேட்ச்சுல சேர்ந்த இருபது மாணவிகளுக்கும் நானே கத்துக் கொடுத்தேன். கிளாஸ் ரூமை திறந்து, ப்ளாக் போர்டை துடைக்கறதுல இருந்து மெட்டீரியல் கட்டிங் பண்றது வரை ஒன் உமன் ஷோ.

ஷூட் இருந்தா கூட, என் ஸ்டூடன்ட்ஸ்கிட்ட முன்கூட்டியே தகவலை சொல்லிடுவேன். முதல் பேட்ச்சுல எனக்கு தன்னம்பிக்கை வந்தது. அடுத்தடுத்த பேட்ச்ல வறுமைல வாடும் பெண்கள் கூட எங்க குவாலிட்டி பத்தி தெரிஞ்சு தேடி வந்து படிக்க ஆரம்பிச்சாங்க.

இன்னிக்கு மலேசியா, சிங்கப்பூர் தவிர பாண்டிச்சேரில இருந்து கூட இதற்காகவே வர்றாங்க. விருகம்பாக்கம் சுத்துபட்டு ஹாஸ்டல் எல்லாம் எங்க மாணவிகளாலயே நிரம்பி வழியுது! எம்பிபிஎஸ், சிஏ, எஞ்சினியரிங் படிச்சவங்க கூட கோர்ஸ்ல சேர்ந்து ஆர்வமா படிக்கறாங்க.

எதையும் இலவசமா கொடுத்தா அதுக்கு மதிப்பு இருக்காது. அதனால ஃபீஸ் வாங்கிடுவோம். அப்பத்தான் படிப்போட வேல்யூ புரியும் திருநங்கைகளும் எங்க இன்ஸ்டிடியூட்ல படிச்சு, பட்டம் வாங்கியிருக்காங்க. கேன்சர் பேஷன்ட் சிலரும் இங்க படிச்சிருக்காங்க. ‘இங்க பாசிட்டிவிடி அதிகமா இருக்கு’னு பூரிச்சிருக்காங்க. சிலருடைய குடும்பச் சூழல்கள் உணர்ந்து அவங்க படிச்சு முடிச்சதும் அவங்களோட கட்டணத்தை திருப்பிக் கொடுத்து மகிழ வச்சிருக்கோம்!என்கிட்ட படிச்ச மாணவிகள்தான் இப்ப டீச்சர்ஸா ஒர்க் பண்றாங்க. அவங்களுக்குத்தான் என் ஸ்கூல் சிலபஸ்ல இருந்து என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் வரை எல்லாம் தெரியும்.

எங்க நிறுவனத்துல கண்டிப்பும் பாசிட்டிவிடியும் அதிகம் இருக்கும். அட்மிஷன்போதே, ‘முதல்நாள் ஹோம் ஒர்க் கொடுத்தால், மறுநாளே செய்துட்டு வரணும். இல்லைனா வீட்டுக்கு அனுப்பிடுவோம். டிசிப்பிளின் அதிகம் எதிர்பார்ப்போம்’னு கறாரா சொல்லிடுவோம்.

பெற்றோர் எல்லாருமே அதை விரும்புறாங்க. இங்கே பெண்களை அவங்க கணவர்களே சேர்த்து விட்டு ஊக்குவிக்கறாங்க. நான் ஆச்சரியப்பட்ட விஷயம் அது...’’ என பிரமிக்கும் சரண்யாவின் மகள்கள் இருவரும் எம்பிபிஎஸ் மருத்துவர்கள். ‘‘என் ஃபேஸ் வேல்யூக்காகதான் இவ்ளோ பேர் படிக்க வர்றாங்கனு சொல்லிட முடியாது.

கிளாஸ்ல சேர்ந்த பிறகு இங்க சரியா சொல்லிக் கொடுக்கலைனா, அடுத்த நாளே பிச்சுக்கிட்டு போயிடுவாங்க. குவாலிட்டின்னாலதான் இவ்வளவு ரீச் ஆகியிருக்கோம். மவுத் டாக்தான். வேற எந்த பப்ளிசிட்டியும் நாங்க பண்ணினதில்ல. வேற வேற ஸ்கூல்ல படிச்சவங்களே இங்கே வந்து கத்துக்கறாங்க. அதை ரொம்ப பெருமையாகவும் நினைக்கறேன்.

இங்க கத்துக்கிட்டு போன பெண்கள் பலரும் வீட்ல இருந்தே சம்பாதிக்கறாங்க. கிராமத்துல கூட கடை வச்சிருக்காங்க. பொட்டிக் நடத்துறாங்க. வருஷா வருஷம், எங்க பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் ‘House of Dsoft exhibition’னு கண்காட்சி நடத்துறோம். ஜூனில் நடக்கும் அந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஜனவரிலயே தொடங்கிடுவோம். கண்காட்சில பங்கேற்கும் பெண்களுக்கு தனித்தனி ஸ்டால்கள் அமைச்சு கொடுத்து, அவங்க ரெடி பண்ணின டிரெஸ்களுக்குமான விலையையும் நிர்ணயித்து உதவுறோம்.

இந்த அஞ்சு மாச கோர்ஸ்ல கைத்தொழில் மட்டுமில்ல, தன்னம்பிக்கையையும் கொடுத்தே வெளிய அனுப்பறோம். இப்ப எனக்கு ஐம்பது ப்ளஸ் ஆகிடுச்சு. என் பெரிய பொண்ணு டாக்டராகிட்டா. சின்னவ டாக்டருக்கு படிச்சிட்டிருக்கா. அவங்க ரெண்டு பேருமே ‘டிசாஃப்ட்’ல முறையா படிச்சிருக்காங்க.

தையல்ல அவங்களுக்கும் ஆர்வம் உண்டு. என் மகள்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, எங்க பேரன் பேத்திகளை பொறுப்பா வளர்த்து ஆளாக்கறதுல என் பங்களிப்பு பெரியளவுல  இருக்கணும்னு விரும்புறேன்.

எங்க அப்பாவும் இப்ப எங்களோடதான் இருக்கார். வயசு தொண்ணூறைத் தாண்டினாலும் இன்னமும் அவருக்கு நான் குழந்தையா இருக்கேன். அவர் பக்கத்துல இருந்து நான் கவனிச்சிக்கணும்னு எதிர்பார்க்கறார். இப்படி குடும்ப பொறுப்–்புகளை நேசிக்கறேன். இதனாலயே படங்களின் எண்ணிக்கையை குறைச்சிட்டேன். படங்கள்ல மட்டுமில்ல, வீட்டுலேயும் பாசக்கார நேசக்கார அம்மாவா இருக்கணும்ங்கிறது என் ஆசை!’’ புன்னகைக்கிறார் சரண்யா.

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்