சிறுதானிய பொங்கல் ஸ்நாக்ஸ்!



*சொல்கிறார் சமையல் கலைஞர் மகேஷ்வரன்

குதிரை வாலி மிளகுப் பொங்கல்

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி - 200 கிராம்
லேசாக வறுத்த பாசிப்பருப்பு - 100 கிராம்
தண்ணீர் - 4 குவளை
உப்பு - தேவைக்கு
இஞ்சி - தேவையான அளவு
பச்சைமிளகாய் - சிறிது
சீரகம் - 2 சிட்டிகை
மிளகு - 3 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 50 கிராம்,
முந்திரிப்பருப்பு - 20 கிராம்

செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து குழைய வேக விடவும். சிறிதளவு நெய் சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து பொங்கல் பதம் வந்ததும் எண்ணெயைக் காய வைத்து சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும். பொங்கல் மேல் நன்றாக நெய்யை ஊற்றவும். மிளகை அப்படியே முழுசாகச் சேர்க்காமல் அம்மியில் தட்டிப் போட்டால் சுவையாக இருக்கும்.

வாழைப் பூ வரகு பிரியாணி

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி - 1 கிலோ
பட்டை - 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
எண்ணெய் - 250 மி.லி
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 300 மிலி
பச்சைப்பட்டாணி - 150 கிராம்

வெங்காயம் - 350 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 300 கிராம் (நறுக்கியது)
புதினா - 1 கட்டு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
முந்திரி - 150 கிராம்
நெய் - 100 மி.லி
எலுமிச்சைப்பழம் - 2
கேரட் - 300 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
தயிர் - 200 மி.லி
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 60 கிராம்

செய்முறை: வெறும் கடாயில் வரகு அரிசியை லேசாக வறுக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து 20 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்
இஞ்சி  பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, சுத்தம் செய்த வாழைப் பூவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
பிரியாணி பதத்திற்கு வந்ததும் நெய் சேர்த்து இறக்கவும். கவனமாக இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் இறுதி சில நொடிகளில் குழைய வாய்ப்பிருக்கிறது.

வரகு கத்தரிக்காய் சோறு

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1 டம்ளர்
கத்தரிக்காய் - 1 டம்ளர் (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
தனியா - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் - 5

செய்முறை: வரகரிசியுடன் 3 பங்கு நீர் சேர்த்து வேகவிடவும். கடலைப் பருப்பு, மிளகாய், தனியாவை தனித்தனியாக வறுத்து மசாலாவாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி வெந்தயம், சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து லேசாக வதக்கவும். பாதி வெந்த பிறகு புளியைக் கரைத்து சேர்த்து அத்துடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு இக்கலவையைச் சோற்றுடன் சேர்த்துக் கலக்கவும். பின் அரைத்த மசாலாவை சோற்றுடன் கலந்து பரிமாறவும்.

செவ்வாழை அல்வா

தேவையான பொருட்கள்:

செவ்வாழைப் பழம் - 10
பனை வெல்லம்  300 கிராம்
எலுமிச்சை சாறு - 1 சிட்டிகை
நெய்  50 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய் - 1

செய்முறை: செவ்வாழைப் பழத்தை தோல் நீக்கி நன்கு மசித்துக் கொள்ளுங்கள்.கடாயில் மிதமான சூட்டில் மசித்த செவ்வாழைப் பழம், வெல்லம் சேர்த்து வதக்குங்கள். அல்வா போல கெட்டிப்பதம் வரும்போது எலுமிச்சை சாறு பிழியுங்கள். சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

மற்றொரு கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதில் கொட்டவும். அதோடு ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கெட்டியான பதத்தில் பிரவுன் நிறத்தில் வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.

சிறுதானிய பாஸ்தா

தேவையான பொருட்கள்:

சாமை மாவு - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 20 கிராம்
குடமிளகாய் - 50 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 8 பல்
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை: சாமை மாவில் உப்பு கலந்த சூடான நீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு சிறு நீள உருண்டைகளாக உருட்டவும்.
இதை நன்கு கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக விட்டுப் பின் நன்றாக வடிக்கவும்.

நறுக்கிய காய்கறிகளுடன், 4 பல் பூண்டு, சிறிது உப்பு கலந்து வேக வைத்து, வடித்து, நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைச் சூடாக்கி, மீதி பூண்டுகளை பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும்.சாமை மாவு உருண்டைகளைப் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து மெதுவாகக் கலந்து கொதித்த பின் உப்பும், மிளகுத்தூளும் கலந்து பரிமாறவும்.           

தொகுப்பு: திலீபன் புகழ்

ஆ.வின்சென்ட் பால்