நியூஸ் சாண்ட்விச்



பற்றி எரியும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மூன்று மாதங்களாகக் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில் லட்சக்கணக்கான உயிரினங்களுடன், இருபதிற்கும் அதிகமான மக்களும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பல அரிய வகை மரங்கள், மூலிகைகள் பூக்களும் மறைந்துபோயுள்ளன.

வரலாறு காணாத இந்த அபாயம் மேலும் சில மாதங்கள் கூட நீடிக்கலாம் என வல்லுனர்கள் கூறிவரும் நிலையில், அங்கு திடீரென வானம் கருஞ் சிவப்பாக மாறியுள்ளது. அதாவது காற்றில் நச்சு கலந்திருக்கிறது. இதனால் என்ன விபரீதம் நிகழுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர்.

வாரம் 3 நாள் விடுமுறை

பின்லாந்தில், உலகின் இளம் பிரதமராக சன்னா மரின் தலைமை தாங்குகிறார். பதவியேற்ற சில நாட்களிலேயே, அந்நாட்டு மக்களின் வேலை நேரத்தில் பெரும் மாற்றத்தையும் முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, இனி வார விடுமுறை மூன்று நாட்களாகவும், தினமும் வேலை நேரத்தை ஆறு மணியாகவும் குறைத்திருக்கிறார். இதனால் மக்கள் இனி அதிக நேரத்தை தங்கள் குடும்பத்தோடு செலவிடலாம் என்று அறிவித்தார். இதில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தொழிலாளர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது.

ஆட்டோவில் கிச்சன்

கேரளா மாநிலம் கொச்சியில், குடும்பஸ்ரீ என்ற இயக்கத்தின் ஒரு திட்டமாக ஆட்டோ உணவகங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதை முழுவதும் பெண்களே நிர்வகித்து வருவது கூடிய சிறப்பு. முதற்கட்டமாக 9 ஆட்டோக்கள் அடுப்புடன் கூடிய சிறிய சமையலறை போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களே இந்த ஆட்டோவை இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர், ஆம்லெட் போன்ற தின்பண்டங்கள் மட்டும் ஆட்டோவில் சமைத்து, மீதி உணவுகளை மொத்தமாக மையத்தில் சமைத்து இதில் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோ உணவகங்களில் குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.

ரிக்‌ஷாவில் ஊரைச் சுற்றும் நாய்

மனிதன் முதலில் நட்பு கொண்ட விலங்கு நாய்தான். இப்போது சுற்றியிருக்கும் மனிதர்களைவிட தங்கள் நாய்களின் மீதே அதிக பிரியத்துடன் சிலர் இருக்கின்றனர். இதனால், நாய்களுக்கும்  மனிதனுக்கும் சேர்த்தே பல உணவகங்களும், ஸ்பாக்களும் கூட வந்துவிட்டன.

இப்படியிருக்க, சமீபத்தில் தில்லியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சில நிமிடங்களிலேயே பிரேக்கிங் நியூஸாக மாறியது. அதில், ஒரு ரிக்‌ஷா ஓட்டுனர், கடும் குளிரில் தன் நாய்க்கு போர்வை போர்த்தி, இருக்கையில் அமரவைத்து, ரிக்‌ஷா மிதித்துச் செல்கிறார். இப்புகைப்படம் பத்தாயிரத்திற்கும் அதிகமான ’லைக்குகளை’க் குவித்திருக்கிறது.

நூடுல்ஸ் காலணிகள்

இத்தாலிய ஆடம்பர ஆடைகள் - காலணிகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்று, சமீபத்தில் 2020க்கான தங்கள் புதிய காலணிகளை அறிமுகப்படுத்தியது. அதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலணி ஒன்று இணையத்தில் வலம் வந்து அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. காரணம், அந்தக் காலணியின் வடிவமைப்பை நூடுல்ஸுடன் ஒப்பிட்டு ஒருவர் பதிவேற்றியிருப்பதுதான்!

காஜலுக்கு சிங்கப்பூரில் மெழுகுச் சிலை

ஆமாம். சமீபத்தில் வெளியான செய்தியில், பெருமைக்குரிய சிங்கப்பூரின் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையும் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே ஸ்ரீதேவி, ப்ரியங்கா சோப்ரா, ஷாருக்கான் போன்ற பிரபலங்களின் சிலைகளும் இடம்பெற்றுள்ளன.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்