நான்...டிரம்ஸ் சிவமணி‘நான்’ - இப்படி என்னைப் பற்றி சொல்லிக் கொள்வது தவறுனு நினைக்கறேன். வெளிய இருக்கும் எல்லாமே மாயைதான். ஆத்மா ஒண்ணுதான் மாறாதது. என் குரு எஸ்.பி.பி. அண்ணன் எனக்கு சொல்லிக் கொடுத்தது இதுதான்... எதுலயும் அளவுக்கு மீறி பற்று வைக்கக் கூடாது!
எல்லா கடவுள்களையும் பின்பற்றுவேன். எல்லா கோயில்களுக்கும் போவேன். ஏழு வயசுல டிரம்ஸை தொட்டப்ப எங்கப்பா என்னைத் திட்டி அனுப்பினார். ‘போய் ஒழுங்கா படி’னு கண்டிப்பார். ஆனா, அவர் வெளில போன பிறகு டிரம்ஸ் பயிற்சி எடுத்துப்பேன்! தாளம், ராகம், நோட்ஸ் எதுவும் தெரியாது, நானே கத்துக்கிட்டது.

ஒருமுறை அப்பா பார்த்துட்டு, ‘அட இப்படி வாசிப்பியா’ என வியந்து என்னை ஸ்டூடியோவுக்கு கூட்டிட்டுப் போனார். சங்கர் கணேஷ் சார் மியூசிக். அங்க நோயெல் கிராண்ட் டிரம்மர். அவர் தன்னை மறந்து வாசிச்சுட்டு இருந்தார். அன்னைக்கு அவரை என் மானசீக குருவா ஏத்துக்கிட்டேன். அவர் ஸ்டைலை பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன்.

எங்கப்பா எஸ்.எம்.ஆனந்தன், ஓர் இசைக்கலைஞர். கச்சேரிகள், கம்போசிங்னு எல்லாத்துலயும் வாசிப்பார். கே.வி.மகாதேவன் குழுவுல அவர் டிரம்மர்.
அம்மா லட்சுமி ஆனந்தன். 1959, டிசம்பர் 1, அரக்கோணத்துல பிறந்தேன். வீட்டைச் சுத்தி எனக்கு இன்ஸ்பிரேஷன்தான். வீட்டுக்குப் பக்கத்துல பெரிய சுடுகாடு. அங்க இந்த பிண ஊர்வலத்துக்கு தப்படிச்சுட்டு வருவாங்க. அது ஒரு இன்ஸிபிரேஷன். அப்பாவுடைய இசை, வீட்டைக் கடந்து போகிற ரயில்... இப்படி எல்லாமே எனக்கு இசையாதான் ஒலிச்சது.

நாங்க நாலு பேர். தம்பி பிரேம்குமார், தங்கைகள் புவனா, பிரியா. நான் மூத்தவன். அரக்கோணத்துல, வால்டாக்ஸ் ரோடுல, பேசின் பிரிட்ஜ்ல வளர்ந்தேன். அவர் லேடீஸ்  நர்சரி ஸ்கூல்ல மூன்றாம் வகுப்பு வரையும், அடுத்து தம்புச்செட்டி தெருவுல ராஜகோபால் செட்டி ஹைஸ்கூல்லயும் படிச்சேன்.

அதுவரை இங்கிலீஷ் மீடியம். திடீர்னு தமிழ் மீடியம். ஒண்ணும் புரியலை. அடுத்து செயின்ட் பால் ஸ்கூல்ல ஐந்தாம் வகுப்பு சேர்ந்தேன்.
இதுக்கு இடைல இசை இன்னும் பழக்கமாகி அப்பா கூட கச்சேரிகளுக்கும், கம்போசிங்குகளுக்கும் போக ஆரம்பிச்சேன். படிப்பு மேல பெருசா நாட்டமில்லை. அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போயி கொடுப்பேன். அந்த கேப்ல நான் பயிற்சி எடுப்பேன். அப்ப சுற்றிலும் எல்லா இசைக்கலைஞர்களும் பார்ப்பாங்க.

ஒருமுறை அப்பாவுக்கு விபத்து. அந்நேரம் நான் போக வேண்டிய கட்டாயம். விஜயா கார்டன்ல சீர்காழி கோவிந்தராஜன் சார் பாடல். ‘சொந்தங்கள் ஆயிரம்’ படம். அதுதான் எனக்கு முதல் பாடல் அனுபவம். இந்த கோடம்பாக்கம்தான் எனக்கு வாழ்க்கைப் பாடமும் சொல்லிக் கொடுத்தது. இதுக்குப் பிறகு எனக்கும் கச்சேரிகளுக்கான அழைப்பு. அப்பாவைக் கூப்பிடும்போது என்னையும் சேர்த்தே கூப்பிட ஆரம்பிச்சாங்க.

எனக்கு அப்ப பதினோரு வயசிருக்கும். சில கச்சேரிகள்ல அப்பாவை நிறுத்திட்டு ‘நீ வாசி’ன்னு சொல்வாங்க. அது அப்பாவை கொஞ்சம் வருத்தமடையவும் வெச்சது. இரவுல போதை ஆகிட்டா பெரேடுதான். ‘என்னடா அவ்ளோ பெரிய ஆளாகிட்டியா’ன்னு கேட்பார்.
இந்தசமயத்துல ஒருமுறை என்னை பாலு அண்ணன் (எஸ்பிபி) பார்த்துட்டு, ‘இவனை நான் என் குழுவுக்கு எடுத்துக்கறேன்’னு சொல்லிட்டார்.

பாலு அண்ணன் எனக்கு உலகத்தையே காண்பிச்சார். ரோட் ஷோ... ஊர் ஊரா கச்சேரிகள். மாட்டு வண்டிதான் எங்களுக்கு வாகனம். ஒவ்வொரு ஊர்லயும் அது ஒரு டிரெண்டு மாதிரி இசைக்கச்சேரி. வாழ்க்கைனா என்னனு அதையும் சொல்லிக் கொடுத்தவர் எஸ்பிபி அண்ணன்தான்.
என்னதான் கச்சேரிகளுக்குப் போயி முறைப்படி இசைக்கலைஞனா இருந்தாலும் என்னால சரியான கருவி கூட வாங்க முடியல. இப்ப எவ்வளவோ மாடல்கள், அப்டேட்ஸ் வந்துடுச்சு. அப்ப வெறும் ஒரு டிரம். கால் வைக்க இடமில்லாம ஒரு பிளைவுட் வெச்சு அதுல காலை வெச்சு வாசிப்பேன்.
எஸ்பிபி அண்ணன் கூட ஊர் ஊரா போறப்ப அங்க இருக்கற பப், ஹோட்டல், பார்னு எங்க எல்லாம் டிரம் சவுண்ட்ஸ் கேட்குதோ அங்க எல்லாம் போய் நிப்பேன். சில இடங்கள்ல சான்ஸ் கேட்டு வாசிச்ச அனுபவங்களும் உண்டு.

ஆனா, டிரம் கிடைச்சா... அதை அடிச்சுக் கிழிச்சுடுவேன். அதனாலயே சென்னைல எனக்கு வாசிக்க வாய்ப்பு தர பயப்படுவாங்க. ஒருமுறை எஸ்பிபி அண்ணனுக்கு காங்கோ வாசிச்சேன்.இந்த நேரத்துல எம்.எஸ்.விஸ்வநாதன் சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. ‘நாளை நமதே’ படம். தொடர்ந்து அவர் கூட பயணம். அப்புறம் மலையாளப் பக்கம் பிஸியானேன். அர்ஜுனன் மாஸ்டர், ஏ.டி.உமர்... இப்படி எல்லார் கூடவும் வாசிச்சிருக்கேன். 12 - 13 வயசுலயே அவ்வளவு பிசியானேன்.

எனக்குப் போட்டி அப்ப வட சென்னை குசால்தாஸ். அவர் டிரம்ல லைட், ஷூல லைட்னு ஜொலிக்கும். ‘முறைப்படி தவில் கத்துக்கலாம் வா’ன்னு உமையாள்புரம் சிவராமன் சாரும், ‘கடம் கத்துக்க வா’னு விக்கு விநாயகம் சாரும் கூப்பிட்டும் போகலை. அந்தளவுக்கு நேரமே இல்லாம வாசிச்சுட்டு இருந்தேன். பத்தாவது பரீட்சை அப்ப டிரம்ஸ் வாசிக்க எங்கப்பா என்னை சிங்கப்பூர் கூட்டிட்டுப் போனார்! பையன் படிப்பு என்ன ஆகுமோனு அம்மா வருத்தப்பட்டாங்க!

‘ஒருதலை ராகம்’ படத்துக்கு மட்டும்தான் டி.ராஜேந்தர் சார் கூட நான் வேலை செய்யலை. அதன்பிறகு அவர் இசையமைச்ச அத்தனை படங்களுக்கும் நானும் திலீப்பும் (ஏ.ஆர்.ரஹ்மான்) வேலை செய்தோம். என்னையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் அவருக்கு அவ்ளோ பிடிக்கும்.

எனக்கான புதுப் புது இசைக்கருவிகளை நானே உருவாக்குவேன். ஹோட்டல்கள்ல உள்ள குப்பை டப்பாக்கள் கூட எனக்குக் கருவிதான். கேட்டு வாங்கி வந்த சம்பவங்களும் உண்டு.

ஒருமுறை பாடல் ரிக்கார்டிங். எம்.எஸ்.வி ஐயா கம்போசிங். அதுல பட்டாசு சப்தம் வரணும். பட்டாசு வெடிச்சு ரெக்கார்ட் பண்ணலாம்னு திட்டமிட்டாங்க. ஆனா, அதை நானே வாசிக்கறேன்னு சொல்லி அப்படியே பட்டாஸ் சப்தத்தை வாசிச்சேன்! எம்.எஸ்.வி ஐயா மிரண்டுட்டார்.

இவர் அப்படின்னா இசைஞானி வேற மாதிரி. சில நேரம் நம்மை மட்டுமே வாசிக்க விட்டு ரிக்கார்டிங் செய்வார். பிடிச்சா நம் இசை மட்டுமே கூட காட்சியில் வந்துடும். அப்படி ‘சிப்பிக்குள் முத்து’ல ஒரு காட்சில என் டிரம்ஸ் பீட்டை மட்டுமே வெச்சார். கமல் நெருப்பு மேல நடக்கும்போது ஒரு பின்னணி இசை வருமே... அதுதான்.

ராஜா சார் கூட குழுவா கார்ல போறப்ப நிறைய மியூசிக் கேட்போம். அப்படிதான் ஒருமுறை பில்லி கோபாம் என்கிற இசைக்கலைஞர் வாசிச்ச டிரம் இசையைக் கேட்க முடிஞ்சுது. என்ன ஒரு டிரம்மர்...நான் வியந்ததைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் சவுண்ட் இன்ஜினியரான தர், என்னைக் கூட்டிட்டுப் போய் எல்லா பில்லி கோபாம் பாடல்களையும் சேகரிச்சுக் கொடுத்தார். இப்ப தர் இல்ல... காலமாகிட்டார்.
நோயெல் கிராண்ட் எனக்கு முதல் குருனா பில்லி கோபாம் எனக்கு இரண்டாவது குரு.

கடவுள் மேல நம்பிக்கை அதிகம். நேரம், ஒழுக்கம், குறிப்பிட்ட காலத்துக்குள்ள முடிச்சே ஆகணும் என்கிற வரையறை எல்லாம் எனக்கு கத்துக் கொடுத்தது ராஜா சார்தான். கோடி சாமி அடிகள் பற்றி ராஜா சார் நிறைய சொன்னார். அவரை ஒருமுறை சந்திக்கக் கூடிய வாய்ப்பு
கிடைச்சது. உடனே அவருடைய பக்திமான் ஆகிட்டேன்.

‘காயத்ரி’ படம்தான் எனக்கு ராஜா சார் கூட முதல் படம். அப்படியான பயணத்துல ஒருமுறை நோயெல் சார் கூட வேலை செய்யற பாக்கியம் கிடைச்சது. அது ‘மதனமாளிகை’ படம். ஏகப்பட்ட டெக்னிக்ஸை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அடிக்கடி பாலு அண்ணன் கூட மலேசியா போவேன்.

ஒருமுறை ‘பில்லா’ கம்போசிங். அங்க ஒருத்தர் தொப்பி போட்டு கம்போசிங்கை வேடிக்கை பார்த்துட்டு இருந்தார். பார்த்ததுமே அவர் இசைக் கலைஞர்னு புரிஞ்சுது. கணிப்பு சரிதான். அவர் பேரு லூயிஸ் பிரகாசம். அவரை வாசிக்கச் சொன்னேன். பேஸ் டிரம் ஸ்டைல்ல பட்டையக் கிளப்பிட்டார்.

எனக்கு டிரம்ஸ்ல இருக்கற டெக்னிக்கல் டெர்ம்ஸ் எதுவும் தெரியாது. இந்த டபுள் ஸ்ட்ரோக், சிங்கிள் ஸ்ட்ரோக் எல்லாமே லூயிஸ் பிரகாசம் சார்தான் கத்துக் கொடுத்தார். மூன்றாவது குரு அவர். எப்ப மலேசியா போனாலும் லூயிஸ் சார் வாசிக்கற இடத்துக்குப் போய் கவனிப்பேன்.18 வயசுக்குள்ள எனக்கு எல்லாமே சாத்தியமாச்சு... நிச்சயமா இது கடவுளின் செயல்தான்.

‘கலர்ஸ் ஆல்பம்’ மிகப்பெரிய திருப்புமுனையை என் வாழ்க்கைல ஏற்படுத்துச்சு. கர்நாடக சங்கீதம் பத்தி எனக்கு அ ஆ கூட தெரியாது. ஆனாலும் என்னை குழுவில் சேர்த்துக்கிட்டார் குன்னக்குடி வைத்தியநாத ஐயா. ஆல்பம் வேலைக்குப் போனா அங்க குன்னக்குடி ஐயா, தவில் வலையப்பட்டி ஐயா, விக்கு விநாயகம் ஐயானு எல்லாரும் உட்கார்ந்திருக்காங்க! இவங்க கூட வாசிக்கப்போறேன் என்பதே இன்ப அதிர்ச்சி!இதன் தொடர்ச்சியாதான் எனக்கு திருவையாறு நிகழ்ச்சில வாசிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

புல்லாங்குழல் ஹரிபிரகாஷ் சாவ்லா, என் அப்பா கூட வேலை செய்தவர். அவர் மூலமா தபேலா ஜாகிர் ஹுசேனை சந்திச்சேன். ஹரிபிரகாஷ் சார் ஒருமுறை பிரசாத் லேப்ல ஒரு ரூம்ல புல்லாங்குழல் வாசிக்க... அதைக் கேட்டு நான் இன்னொரு அறைல இருந்தபடி அதுக்கு ஈடா டிரம் வாசிச்சேன்.
அப்ப எல்லா ஸ்டூடியோவுக்குள்ளும் மைக் இருக்கும். ஆன் செஞ்சு அத்தனை அறைகளுக்குள்ளும் பேசிக்கலாம். அப்படித்தான் நான் இவர் புல்லாங்குழல் கேட்டு என் டிரம் இசையை இணைச்சேன்.

கொஞ்ச நேரத்துல நேரடியாகவே வந்துட்டார். பயங்கர பாராட்டு. அவர் என்னைப் பற்றி ஜாகிர் ஹுசேன் கிட்ட சொல்லியிருக்கார். அவர் பிரபல தபேலா கலைஞர்னு கூட தெரியாம யார் ஜாகிர் ஹுசேன்னு கேட்டேன். சொன்னவுடன் சந்திக்கக் கிளம்பிட்டேன். அவர் பேட்டிகள்ல பிஸி. நாளைக்கு இதே நேரம் இங்கே வானு சொன்னார். நான் ரொம்ப பிஸி, எனக்கு பிரசாத் ஸ்டூடியோலே கம்போசிங்னு சொன்னேன். டி.ஆர்.சார் ‘உறவைக் காத்த கிளி’ படம் போகுது.

சொன்னா நம்ப மாட்டீங்க ஜாகிர் சார் நேராவே வந்துட்டார். என்னை வாசிக்க சொல்லிக் கேட்டார். இந்த சந்திப்பு என்னை வேற ஒரு மேடைக்குக் கூட்டிட்டுப் போனது. எனக்கு இந்த வெஸ்டர்ன் மக்கள் கூட பழகி அவர்கள் டெக்னிக் எல்லாம் வாசிக்கணும்னு ஆசை.

1984ல ஜெர்மன் ட்ரூப் ஓரியண்டல் நிகழ்ச்சிக்காக வந்திருந்தாங்க. அவர்களுக்கு உதவியாளனா பேக் எல்லாம் தூக்கிட்டு சுத்தினேன். எந்த ட்ரூப் மேலை நாட்டிலே இருந்து வந்தாலும் நான் உதவியாளனா சேர்ந்திடுவேன். அப்படிதான் இந்தக் குழு தலைவர் விக்கி தாமஸ் சந்திப்பு உண்டானது.

அவருக்கு ஒரு தவில் மற்றும் பீடி தேவையா இருந்தது. இரவோடு இரவா தவில், பீடி சகிதமா அம்மாவையும் கூட்டிக்கொண்டு கையிலே காபி சகிதமாக கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியாகி அவர் வெச்சிருந்த டிரம் ஸ்டாண்ட், சிம்பல் ஸ்டாண்ட் எல்லாத்தையும் கொடுத்தார்.
அப்போதிருந்து எனக்கும் அவருக்கும் ஒரு பந்தம். கடிதம், தந்தி இப்படி போனது, அவர் ‘ஒரு சிம்பல் அன்பளிப்பா எடுத்துட்டு வரேன், மும்பை வா’னு சொல்ல நேரடியாக போனேன். அங்க தாமஸ் சாருக்கு உதவியாளனா கூடவே இருந்தேன்.

‘தால்வாதியா உத்சவ் நிகழ்ச்சி’ சர்வதேச டிரம் விழா. அவருக்கு பேக்கிங் செய்திட்டு இருக்கேன். அந்நேரம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்னை மேடையிலே இருந்து பிடிச்சு தள்ளிவிட்டு ‘நீ இங்கே எல்லாம் வரக்கூடாது’னு சொல்லிட்டார்.

‘ஒரு நாள் உனக்கு வாசிப்பேன்’னுசொல்லிட்டு வந்தேன். மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு வந்தார் ஜாகிர் ஹுசேன் சார். என்னைப் பார்த்துட்டு சிவமணின்னு கட்டியணைச்சிட்டார். அவர் நிகழ்ச்சி முடிஞ்சு மைக்கை எடுத்தவர் என் பெயரைச் சொல்லி மேடைக்குக் கூப்பிட்டார்.

அவ்வளவு பெரிய இசைக்கலைஞர்கள் ஒண்ணு கூடி இருந்த இடம்... அங்க என் டிரம் வாசிப்பு. என் அப்பா, அம்மா இதையெல்லாம் டிவிலே பார்த்திட்டு இருக்காங்க. அந்த ஒருங்கிணைப்பாளர் வந்து மன்னிப்பே கேட்டுட்டார்.

‘புன்னகை மன்னன்’ முடிஞ்சது. ஏ.ஆர்.ரஹ்மான் ஜிங்கிள்ஸ் செஞ்ச ‘லியோ காபி’ விளம்பரம் பார்த்துட்டு ‘ரோஜா’ பட வாய்ப்பு அவருக்கு கிடைச்சது. என்னையும் கூட்டிக்கிட்டு பயணிக்க ஆரம்பிச்சார் ரஹ்மான். ரஹ்மான்தான் இந்த தலைக்குக் குல்லா வரக் காரணம்.

இஸ்லாமிய பாடல் கம்போசிங் அப்ப முறைப்படி குல்லா போட்டுக்கிட்டுதான் வாசிப்பார். நல்ல விஷயம், நாமும் பின்பற்றுவோமேன்னு அப்பா இறந்தப்ப மொட்டை அடிச்சேன், அதை மறைக்க தொப்பி, ரஹ்மான் காரணமா குல்லா, அப்படியே அது என் ஸ்டைல் ஆகி கலர் கலர் குல்லாக்கள், செயின்கள், இப்படி என்னை நானே மாத்தினேன்.

ஐபிஎல், ரஹ்மான் காம்போ, ‘சில்க்’, ஏசியா எலெக்ட்ரிக், பாம்பே ட்ரீம்ஸ் எல்லாமாக என்னை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. 2009ல் கலைமாமணி, 2019ல் பத்ம. இடையிலே இருமுறை திருமணம். எதிலும் மனம் ஒத்துப்போகலை. ஒரு மகன் இருக்கிறார். குமரன். ரஹ்மான்கிட்ட உதவியாளரா ஸ்டூடியோ இன்ஜினியரா இருக்கார்.

மூன்றாவதா வந்தவர்தான் மனைவி ரூனா. அவர் பாடகி. மகள் மிலானா. ரெண்டரை வயசு. இப்பவே டிரம் வாசிக்கிறாள். நிறைய கான்சர்ட், நிறைய சர்வதேச அழைப்புகள்... மும்பைக்கு குடிபெயர்ந்தோம். அங்க சிவமணி டிரஸ்ட்  மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இசைப் பள்ளி ஆரம்பிச்சிருக்கோம்.

கடந்த டிசம்பர் 1ம் தேதி ஜாகிர் ஹுசேன் சார், விக்கு விநாயகம் சார் தலைமைல திறப்புவிழா நடந்தது! ‘நான்’ நானாக இல்லை, நாமாக பல இடங்களில் என்னை பலரும் வழிநடத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லாம்
கடவுள் அருள்.

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்