லவ் ஸ்டோரி-எல்லோருக்கும் ஐஏஎஸ் ஆகணும்...டாக்டர் ஆகணும்னு தோணும்...எனக்கு லவ் பண்ணிப் பார்க்கணும்னு தோணுச்சு!



‘‘ஆமா. அருமையான காதலோடு, இதோ வாழ்க்கையைத் தொடங்கி போயிட்டு இருக்கோம்...’’ உற்சாகத்தின் உச்சத்தில் உருகுகிறார் ‘96’ கவிஞர் கார்த்திக் நேத்தா.சரம்சரமாக மாவிலைத் தோரணங்கள் படபடக்கின்றன. வாசலில் மாக்கோலத்தில் பூ மலர்ந்திருக்கிறது. அனுபவித்தபடி பேசத் தொடங்குகிறார்...வயசும் மனசும் வாழ்க்கையோட சண்டை போடுற பருவத்தில், ரசனையா ஒரு லவ் லெட்டர் எழுதி ரணகளமா ரத்தக் கையெழுத்து போடுவோமே… அது பைத்தியக்காரத்தனம்தான். ஆனா, அதுதானே ஆகப்பெரிய அன்பு!

வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம். ஆனா, அத்தனை பேரும் அன்புக்கும், காதலுக்கும் அலையறதுதான் நீதி. கண்ணு தெரியாதவங்க கையால தடவித் தடவியே ஒரு சிற்பத்தை அனுபவிக்கிற கெமிஸ்ட்ரி மாதிரியான காதல் எனக்கு அடுத்தடுத்து வந்தது.
எங்கேயோ ஒரு காட்டுக்குள் கிடக்கிற ஒரு கல், திடீரென ஒரு வீட்டுக்கு முதல் கல்லாவது போல, கோடிப்பூக்கள் கொட்டிக்கிடக்கிற வனத்தில் ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கிற மனசு காதலு–்க்குத்தான் வாய்க்கும். காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது.

ஆனா, நான் காதலை உணர்ந்தது அப்பா, அம்மாவைப் பார்த்து. அப்பா ரத்தினம் பிஏ படிச்சிட்டு வேலையில்லாமல் சின்ன அளவில் ஜவுளிக்கடை வச்சு, தையல் மிஷின் போட்டு தைச்சிட்டு இருக்கார். ஊருக்குக் கிராம சுகாதார செவிலியராக எங்க அம்மா ஜெயமணி வர்றாங்க. ஒவ்வொரு வீட்டிற்கும் போய் நலம் விசாரிச்சு, ஊசி போட்டு, விபரம் எழுதி சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கணும்.

அப்பா, அவங்களைப் பார்த்து ரூட் விடுறார். அம்மா பிராமணப் பெண். தொட்டு நெத்தியில் பொட்டு வைச்சுக்கிற மாதிரி அவ்வளவு சிகப்பு. அப்பா கருப்பு. அம்மா உயரத்தில் பாதி. எதிர் எதிர் துருவங்கள் இழுக்கும்ல, அப்படி நடந்திருக்கு. கல்யாணம்ன்னு நடந்தா அம்மா ஜெயமணியோடதான்னு
அப்பா முடிவு பண்ணிடுறார். ஒரு கட்டத்துல அப்பாவும் அம்மாவும் வீட்டை விட்டு ஓடிப் போயிடுறாங்க. ரெண்டு பேர் வீட்டுலயும் அலைந்து திரிஞ்சு தூக்கிட்டு வர்றாங்க. அப்புறம் கல்யாணம் ஆகி அண்ணன், அடுத்து நான், பிறகு தம்பி பொறக்கிறாங்க.

எங்க வீட்டில் கரண்ட் கட்டானா நாங்க எல்லோரும் உட்கார்ந்து பேசுகிற முதல் கதை அப்பா அம்மாவின் காதல் கதையாதான் இருக்கும்! அவர் வீரதீரமா நடந்ததைச் சொல்லும் போது, அம்மா வெட்கத்தால் இன்னும் சிவப்பாங்க. ஆக இப்படித்தான் எனக்குக் காதல் புரிஞ்சது. எல்லோருக்கும் ஐஏஎஸ் ஆகணும், டாக்டர் ஆகணும்னு தோணும். எனக்கு லவ் பண்ணிப் பார்க்கணும்னு தோணுச்சு.

அப்பா, அம்மா காதலும், அன்பும் எவ்வளவு வலியதுன்னு சொல்ல இன்னும் நிறைய விஷயம் இருக்கு. அம்மா வருமானத்துலதான் அப்பா பிஎல் படிச்சார். எனக்குத் தெரிஞ்சு எந்தக் காதல் ஜோடிக்கும் இது நடந்திருக்காது. மனைவி சம்பாத்தியத்தில் படிக்கலாமா, சாப்பிடலாமானு நினைக்கவேயில்லை. அடிச்சு, பிடிச்சு எங்க மூணு பேரையும் கொண்டாந்து நிறுத்தியதும் இந்தக் காதல் என்ற உணர்வுதான்.

அம்மா காலையில் ஏழு மணிக்கு எழுந்து போனால் மாலையில்தான் வருவாங்க. எங்க  மூணுபேரையும் பார்த்துக்கிறது அப்பாவின் வேலை. பெரியார், அம்பேத்கார்னு கலந்து கட்டி சொல்லிக் கொடுப்பார். ஆம்பிளைங்கிற திமிர் மனசுல வரக்கூடாதுனு அப்பாகிட்டே கத்துக்கிட்டேன். ‘என்னடா ஆம்பிளை, ஒட்டு மொத்த உலகத்தில் நீ ஒரு சின்ன உயிர்டா’னு தட்டி வைப்பார்.

பாடல் எழுதி கொஞ்சம் பிரபலம் ஆனதும் டிவியில் பேச ஆரம்பிக்கிறேன். முதன் முதல்ல நாகர்கோவிலிலிருந்து ஒரு பொண்ணு ‘வெளிப்படையாக பேசுறீங்க’னு முகநூலில் சொல்லிட்டு ஆரம்பிக்கிறாங்க. ‘திருமணம் செய்துக்கலாமா’னு அந்தப் பொண்ணு கேட்க, ‘என்னைப்பத்தி என்ன தெரியும்’னு நான் சொல்ல, அந்தப்பொண்ணே நல்ல முடிவு எடுத்து பிரிஞ்சு போயிடுறாங்க.

அப்புறம் இவங்க… கீதா. முகநூலில் தென்படுறாங்க. புதுசா ஊர் முகமா இருக்கு. நீள முகத்தில் ஏதோ பூரணம். ரிக்வெஸ்ட் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன். பேச ஆரம்பிக்கிறோம். அவங்களுக்கு கார்த்திக் நேத்தான்னா யாருனு தெரியலை. ‘96’ ஹிட்டாகி ‘காதலே காதலே தனிப்பெரும் துணையே’னு பாடல் எங்கே பார்த்தாலும் கசிந்துகிட்டே இருக்கு. யாரும் தப்பிக்கவே முடியாது.

அப்படியும் இந்தப் பொண்ணுக்கு என்னைத் தெரியலை. பெருத்த அவமானமா போச்சு. அப்படியும் ‘திருமணம் செய்து கொள்ளலாமா’னு நானே கேள்வியை முன்வைக்கிறேன். நல்ல துணையா இருப்பாங்கனு மனசு காட்டித்தருது. அடித்துப் பெய்கிற ஒரு மழை நாளில் அந்த வார்த்தையை நான் சொன்னதாக ஞாபகம். மழையில் எடுத்துரைக்கப்பட்ட காதல்கள் எதிர்த் தரப்பில் நிராகரிக்கப்பட்டதாய் வரலாறு இல்லை. சாகக்கிடக்கிற விதை, மழையால் உயிர் பிழைப்பது மாதிரி.

அம்மா, அப்பாவை அவள் ஊருக்கு அனுப்பி வச்சேன். அதிலேயே பாதி கல்யாண வேலைகள் முடிஞ்சிடுச்சு. அப்புறம்தான் வீட்டிலே தெரியும், நாங்கள் இன்னும் நேரில் சந்திக்கலைனு!பிறகு, அவசர அவசரமா கோயிலில் சந்திப்பு நடக்குது. அவங்க உறவினர்கள், என் நண்பர்கள்னு 15 பேர் நடுவிலே பேச முடிஞ்சதை பேசிக்கிட்டோம். அந்த அரைமணி நேரம் அவ்வளவு அழகானது. எவ்வளவோ உரையாடல்களைக் கேட்டிருக்கேன். ஆனா, எனக்கு மட்டுமே கேட்கும்படியா கீதாவின் வார்த்தைகள் இருந்துச்சு. சின்னச் சின்னதா, அழகா கோத்து எடுத்துப் பேசினாங்க. அப்படியே கிறங்கி விழணும் போல இருந்தது.

ஒவ்வொரு உறவிலும் ஒரு சின்ன ஹார்மனி இருக்கும். பெயரிடப்படாத ராகம் தொனிக்கும். தாம்பாளம் ஒன்று விழும் போது, ‘சாம்பா என்னடா ஸ்வரம் அது’னு தி.ஜானகிராமன் எழுதிய ‘மோகமுள்’ளில் கேட்பார் ரங்கண்ணா. முதல் படியில் பந்து எழும்பி, ஏழாம் படியில் உயர எழுந்து, தரை நோக்கி ஓடும் லாவகம் அந்த அரை மணி நேரத்தில் நிகழ்ந்துடுச்சு.

அன்பு எல்லா இடங்களுக்கும் துரிதமாக பரவ முடியாது. அது சிறு பொருள். ஆனா, உணர வைக்கலாம். அது கீதாவால் முடிந்தது.
இதுக்கு முன்னால் பெண்களை ஒருபடி கீழேதான் மனசு வைச்சிருந்தது. ஆண் என்கிற குரூரத்துடன் பார்த்தது. எல்லாவற்றையும் மாற்றிவிட்டு, அதற்கான ரிவார்டு எதிர் பார்க்காமல் போகிறாள். திமிரில் பேசினாலும், அதை அன்பாக மாற்றிப் புரிகிறாள். மிகவும் நெருக்கமாக சக மனுஷியை பார்க்கிற கட்டம்.

இப்போது நான் இரைந்து பேசுவதில்லை. அகந்தை சுத்தமாக போய்விட்டது. தியானத்தின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. நண்பர்களை வகை பிரித்து அறியத் தருகிறாள். ‘நான் சொன்னதெல்லாம் சரின்னு நினைக்காதே… மனசுல இருத்திக்கிட்டு பாரு கார்த்தி’னு புன்னகைக்கிறாள்.
என்னைப் பற்றி எல்லாமும் அவளுக்குத் தெரியும். காதலில் விழுந்தது, போதையின் எல்லை வரை தொட்டுத் திரும்பியது, விழுந்து, புரண்டு, நாகரீகமற்று கிடந்ததுனு எல்லாமே தெரியும். அதற்குப் பிறகும் அவளது அன்பு மிருதுவானது.

இப்படி யாருக்கும் கலாபூர்வமான ஓர் உயிர் போதும். ‘காதலா..? வா. நிதானமாச் சொல்கிறேன்’ என்கிறாள். ‘பதட்டமாகாதே, பயப்படாதே, விசனப்படாதே… போகப்போக எல்லாம் சரியாகும்’ என தலைகோதுகிறாள். இன்னும் தாண்டிய விஷயமா… ‘வா, நெடுந்தூரம் நடந்து பேசலாம்’ என்கிறாள்.

இப்பவும் ஊருக்குப் போனாலும் அப்பா இன்னமும் காதல் பற்றிப் பேசுகிறார். அண்ணனும், நானும், தம்பியும் காதலித்தே திருமணம் செய்ய, ‘எங்க ரொமான்ஸ் உங்களுக்கு இருக்காடா… ஒரு சீன் சொல்லுடா பார்ப்போம்’னு வம்பு இழுக்கிறார்.

காதல் தித்திப்பு! சரியாக அமைந்து விட்டால் பேரு வகை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள் தோழர்களே!

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்