ரஜினியின் ஒரிஜினலான வீரம், ஈரம், சக்ஸஸ்தான் தர்பார் ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி!



சென்னைக்கும் மும்பைக்கும் சீஸன் டிக்கெட் போட்டு பறந்து பறந்து வேலை பார்த்து, கச்சிதமாக படத்தை வெளியிட்டு ரிசல்ட் கொடுத்த தெம்பில் மகிழ்ச்சியும் திருப்தியுமாக புன்னகைக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘‘அரிசியிலிருந்து அன்பு வரைக்கும் ஒரிஜினலைத் தேடித்தானே ஒவ்வொருத்தரும் போறோம். அப்படி ஒரு ஒரிஜினலான வீரம், ஈரம், சக்ஸஸ்- இதுதான் ‘தர்பார்’. மும்பையிலிருக்கிற போலீஸின் தர்பார் என்கிற அர்த்தத்தில் எடுத்துக்கலாம். அதற்கு ஒரு வலிமையான கதையோடு இணைச்சு சொல்லியிருக்கேன்.

ரஜினியின் படங்களிலிருந்து நிச்சயம் வித்தியாசப்பட்டு அவரை என்னோட பாணியில் வடிவமைச்சிருக்கேன். ஃபேமிலி ஆடியன்ஸ், குழந்தைகள், மாஸ் ஆடியன்ஸ்னு எல்லோருக்கும் பிடிக்கிற விஷயங்கள் இருக்கு. ரொம்ப சந்தோஷமா பார்த்துட்டு வெளியே வரலாம்.

ஸ்கிரிப்ட் எழுதும் போது ரஜினியின் வசனங்களை எழுதியிருப்பேன். அதை அவர் கேமரா முன்னாடி பேசி வெச்சதும் ஒரு சிரிப்பு, திடீர் வேகம்னு அந்த வசனமே நான் எதிர்பார்க்காத இடத்துக்கு போய் நிக்கும். அதை ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன்.

போலீஸ் ஸ்டோரி. த்ரில்லர் ஊடாடி இருக்கும். அவரோட மேஜிக்னு ஒண்ணு இருக்குல்ல… அது தவறாம வந்திருக்கு. அவ்வளவுக்கும் பொருந்திப் போகிறார் ரஜினி.

இதுக்கு முன்னாடி ‘பாண்டியனில்’ அவர் போலீஸ் யூனிபார்ம் போட்டிருந்தார். அவரோட துடுக்கு, ஹியூமர், வகை தெரியாத இன்னோசண்ட், வேகம் இதெல்லாம் ஒரு பத்து வருஷமா சரியா வரலைன்னு தோணிச்சு. இப்ப ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் மாதிரி ஒரு பவர்புல் கேரக்டர் வந்தால் நல்லாருக்கும்னு நினைச்சதோட விளைவுதான் ‘தர்பார்’. ரசிகர்களும் அதை ஆமோதிச்சு கொண்டாடறதை பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு...’’ கண்கள் மின்ன சொல்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

நூறு நாட்களுக்கு மேல் ரஜினிகூட நெருக்கமா இருந்திருக்கீங்க, எப்படி அவரை பார்க்குறீங்க..?
என்னை ஆச்சரியப்படுத்தினது அவரோட தொழில் பக்தி. ரொம்ப முக்கியமான குடும்ப விழாக்கள்னு இருக்கும், அவசியம் கலந்துக்க வேண்டிய திருமணம் இருக்கும். ஆனாலும் ஷூட்டிங் இருந்தால் எதையும் கண்டுக்கமாட்டார். நமக்கே விஷயம் தெரிஞ்சி ‘நான் வேற எடுத்துக்கறேன்’னு பார்த்து அனுப்பினால்தான் உண்டு. ஒரு நாளும் ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டு போனதில்லை. எங்கே தங்கணும், எப்போ ஷூட்டிங், எந்த இடம், எந்த நேரம்னு சொன்னாலும் சந்தோஷ முகத்தோட ரெடியாக வந்து நிப்பார்.

தினமும் ஆயிரம் பேர் அவரோடு செல்ஃபி எடுத்துக்க நிப்பாங்க. அவங்க ஒவ்வொருவரையும் கேரவனுக்குள் அழைச்சு படம் எடுத்து அனுப்புவார். ‘பாதுகாப்பு பத்தி கவலைப்படுங்க சார்’னு நான் சொல்வேன். அதற்கு அவர் ‘அவங்கெல்லாம் நம்ம புள்ளைங்க’ன்னு சிரிப்பார்.    
ஸ்பாட்டில் வசனம் பேசும் போது அதற்கு முத்தாய்ப்பு வெச்சு பேசுறது அழகா இருக்கும். நான் இதுவரைக்கும் எத்தனையோ ஹீரோக்களோடு பயணப்பட்டிருக்கேன். அவங்க ஸ்டார், நாம டைரக்டர் என்றுதான் அலைவரிசை போகும்.

ஆனால், ரஜினி சார்கிட்ட ஃபேன் மொமண்ட் தன்னால வந்திரும். கஷ்டப்பட்டு எகிறிக் குதித்து டிக்கெட் வாங்கிய இடமெல்லாம் ஞாபகம் வரும். பெரிய லெஜண்ட்னு மனசுல மரியாதை வந்தே தீரும். படத்தில் அரசியல் இல்லை. ஆனால், அப்படி தோன்றுகிற இடங்களாக சிலது வரலாம்.

சிட்டி போலீஸ் கமிஷ்னர்னா சில பொறுப்புகள், இடர்ப்பாடுகள், சிலரை தண்டிக்க வேண்டிய இடங்கள் இருக்குமில்லையா… அப்படிப்பட்ட இடங்களில் வேற லெவலுக்கு போயிருக்கார். யாருக்கும் தெரியாத ரஜினி கூட இதில எட்டிப் பார்க்கலாம்.

நயன்தாரா சிறப்பா இருக்காங்க…
டபுள் டமாக்கா சார். நான் அவங்ககிட்ட ஆரம்பத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். விட்ட இடத்திலிருந்து இன்னும் உறைய வைக்கிற அதே அழகில் இருக்காங்க. ரஜினியும் இவங்களும் திரையில் வருகிற இடங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கும். அது படத்தின் இன்னொரு பக்கத்துக்கு கை கொடுக்கும். ரஜினிக்கு சமமா டஃப் கொடுக்கிற தோரணை வேணும். அதுக்கு சுனில் ஷெட்டி சரியா வந்தார். சரியான நேரத்துக்கு வந்து அருமையா நடிச்சு கொடுத்தார்.

ரஜினியின் மகளா நிவேதா தாமஸ் வர்றாங்க. யோகி பாபு பிரமாதமா செய்திருக்கார். அனிருத் பாடல்களை நல்லபடியா கொண்டு வந்திருக்கீங்க…
எல்லா மொழிகளிலும் அனிருத் பாடல்கள் ஹிட். அனிருத், விவேக்னு வரும்போது பாடல்களுக்கு இன்னும் புது கலர் கிடைக்குது.

ரஜினியை இன்னும் அழகா இளமையா காட்டறதுக்கு சந்தோஷ் சிவன், மேக்கப் வுமன் பானுவின் உழைப்புதான் காரணம். சந்தோஷ் ரொம்ப பிரத்யேகமான லைட்டிங் வெச்சு அப்படியே அவரை ஃபீல் குட்டா பார்க்கற மாதிரி செய்துவிடுவார். அதற்கு ரஜினி நாற்பது வயது எனர்ஜி மாதிரி இருக்குற Attitude அப்படியே உதவும்.

என் வாழ்க்கையில் சில சிறப்பான தருணங்கள் இருக்கு… நான் ‘தீனா’ செய்து அறிமுகம் ஆனது, ‘கஜினி’, ‘ரமணா’ செய்துவிட்டு இந்தியில் நுழைந்து இடம் பிடிச்சது, அமீர்கான், சிரஞ்சீவியோடு பயணம் செய்தது... இப்போ ரஜினி சார் கூட சேர்ந்து படம் செய்கிறவரை எல்லாமே நல்லா இருக்கு.

இந்த ‘தர்பார்’ நிச்சயம் பிரெஷ்ஷா இருக்கும். ரசிகர்களும் படம் பார்த்துட்டு ஆமானு கைதட்டி வரவேற்றிருக்காங்க. வேறென்ன சொல்ல... ‘தர்பாரை’ மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி!