ஆட்டோவில் நடமாடும் தற்காலிக வீடு!‘‘இந்தியாவுல நிறைய பேர் இன்னும் சின்ன இடத்துக்குள்ளதான் வசிக்கிறாங்க. அந்த இடத்தை பிளான் பண்ணி அழகா டிசைன் செய்தா, அதுக்குள்ளேயே படுக்கையறை, சமையலறை, கழிப்பறைனு ஒரு சுகாதாரமான வீட்டை உருவாக்கலாம்.

ஆனா, அந்த விழிப்புணர்வு இல்லாமலேயே வாழ்றாங்க. அதை ஏற்படுத்தத்தான் Small Scale Architectureனு சொல்லப்படுற சிறு கட்டட வடிவமைப்புல இந்தத் தற்காலிக வீட்டை வடிவமைச்சேன்...’’ நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் அருண் பிரபு.

இவர் உருவாக்கியுள்ள ஆறுக்கு ஆறடி கொண்ட அந்தத் தற்காலிக வீட்டில் சகல வசதிகளும் நிரம்பியுள்ளன. அதை எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லலாம்! இந்த நடமாடும் சிறிய ‘ஆட்டோ வீடு’ இப்போது எல்லோரிடமும் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘‘இந்த சிறு கட்டட வடிவமைப்பு இந்தியாவுல ரொம்பக் குறைவு. இதுல குடியிருப்பு, வர்த்தகம், தொழில்துறை சார்ந்ததுனு மூன்றுவித கட்டட வடிவமைப்பு இருக்கு.

இப்ப குடியிருப்புனு பார்க்கும்போது சின்னச் சின்ன இடத்துல வாழ்ற மக்களைச் சொல்லலாம். அடுத்து, நாடோடி மக்கள் போடுற டென்ட்டைக் குறிப்பிடலாம். வர்த்தகம்னு பார்க்கிறப்ப டீக்கடை, பெட்டிக்கடை, காயலான் கடை, சலூன் கடை, இறைச்சிக்கடைனு நிறைய சொல்ல முடியும். தொழில்துறையில சிறு நிறுவனங்கள் வரும்.

ஆனா, இதையெல்லாம் எந்தகட்டடக்கலை நிபுணர்களும் கண்டுக்கிறதில்ல. அப்படியே இதுல கவனம் செலுத்தினா கூட அது ஒரு நிறுவன ப்ராண்டின் அடையாளமாவே இருக்கும். அதனாலயே என்னுடைய கவனமெல்லாம் இந்தச் சிறு கட்டட வடிவமைப்பு பத்தியே இருந்துச்சு...’’ என்கிறார் இருபத்தி மூன்றே வயது நிரம்பிய அருண் பிரபு.

‘‘எனக்குச் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்துல இருக்குற பரமத்தி வேலூர். அப்பா குணசேகரன் எலக்ட்ரிக்கல் கடை நடத்துறார். அம்மா கோமதி. ரெண்டு பேரும் இந்தத் தற்காலிக வீட்டை உருவாக்க நிறைய சப்போர்ட் பண்ணினாங்க.

நான், சென்னைல பி.இ. ஆர்க்கிடெக்சர் முடிச்சேன். என் குடும்பத்துல நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. படிப்பு முடிச்சதும், 2018ல் பெங்களூர்ல ‘பில் போர்ட்ஸ்’னு டிசைன் கம்பெனி ஆரம்பிச்சேன். பிறகு, இந்தச் சிறு கட்டட வடிவமைப்புல முதல்கட்டமா குடியிருப்புகளை டிசைன் செய்யலாம்னு முடிவெடுத்தேன்.

ஏன்னா, நான் காலேஜ்ல படிக்கிறப்பவே குடிசை வீடுகள் பத்தி ஆய்வு பண்ணியிருந்தேன். அதை நல்லபடியா உருவாக்கினா இந்தியாவின் உள்கட்டமைப்பே மாறும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதனால, உடனே இந்த டிசைனை ஆரம்பிச்சேன்.இப்ப உள்ள பொருளாதார சூழல்ல தற்காலிக வீடுகள் அதிகம் தேவைப்படுது. உதாரணத்துக்கு ஒரு பெரிய கட்டடம் கட்டுற இடத்துல கான்ட்ராக்டர்கள் நிறைய தொழிலாளர்களை அழைச்சிட்டு வருவாங்க. அந்தத் தொழிலாளர்கள் அங்கே குடிசைகள் போட்டு தங்குவாங்க. ஆனா, அது சுகாதாரமா இருக்காது.

இன்னொரு பக்கம் புயல், வெள்ளம், நிலநடுக்கம்னு ஆபத்தான சூழல்கள்ல மக்களை மண்டபங்கள்ல தங்க வைப்பாங்க. அவங்களும் சொந்த இடங்களுக்குத் திரும்ப ரெண்டு மூணு மாசமாவது ஆகும். நம்மகிட்ட அவசர நிலையில தற்காலிக வீடுகள்னு எதுவும் கிடையாது.
இதையெல்லாம் கணக்கிட்டே இந்த வீட்டை டிசைன் செய்தேன்...’’ என்கிறவர் வீட்டின் வடிவமைப்பை விவரித்தார்.

‘‘ஒரே ஒரு ரூம்தான். அதுல எந்தத் தடுப்பும் இருக்காது. இது 3டி டிசைன். ஆறடிக்கு மூணு அடில படுக்க இடம். ஓர் ஆள் மட்டுமல்ல. ரெண்டு பேர் கூட படுத்துக்கலாம். இதுல சமையலறையும், பாத்திரம் கழுவ சிங்க்கும் இருக்கு.

அப்புறம், குளியலுக்கு பாத் டப்னு வச்சிருக்கேன். பாத் டப் எதுக்குன்னா, தண்ணீரை மிச்சம் பண்ண! அதுல குளிக்காத நேரங்கள்ல சமான்களைப் போட்டுக்கலாம். பாத்திரங்களைக் கழுவிக்கலாம். அழுக்குத் துணிகளை துவைச்சுக்கலாம். இந்தமாதிரியான பயன்பாட்டுக்காக வச்சேன்.
தண்ணீருக்காக மேல 250 லிட்டர் சின்டெக்ஸ் இருக்கு. டாய்லெட் வசதியும் இருக்கு. தேவைப்பட்டா கதவைத் திறந்து இடவசதியை பெருசாக்கிக்கிடலாம்.

அப்புறம், மேல காற்றோட்டமா, ரிலாக்ஸா உட்கார ஒரு தளமும் இருக்கு. அங்க ஒரு குடையும் போட்டிருக்கேன். சேர்கள் இருந்தா நாலஞ்சு பேரு கூட உட்கார்ந்து பேசலாம். மின்சாரத்துக்காக 600 வாட்ஸ் சோலார் பயன்படுத்தியிருக்கேன். அதுல, லேப்டாப், மொபைல் போன் சார்ஜ் ஏத்திக்கலாம். ஒரு லைட்டும், டேபிள் ஃபேனும் போட்டுக்கலாம். தவிர, வெப்பத்தை வெளியேற்றும் ஃபேனும் இருக்கு.

அடுத்து, வெளியில சோலார் லைட் வச்சிருக்கேன். அது ஆட்டோமெட்டிக்கா பகல்ல சூரியக்கதிர்கள சேர்த்து வச்சிட்டு இரவுல வெளிச்சத்தைத் தரும். அதுக்கும் உள்ளிருக்கும் இன்டீரியர் சோலாருக்கும் சம்பந்தம் இல்ல. பிறகு, குளியலறை தண்ணீரும், டாய்லெட் கழிவுகளும் வெளியேற தனித்தனியா வழிகள் இருக்கு. அடியில் 70 லிட்டருக்கான டேங்க் பொருத்தியிருக்கேன். அதுல சேகரமாகும் கழிவுநீரை சரியான இடத்துல போய் வெளியேற்றிட வேண்டியது. டாய்லெட் கழிவுகனுக்கும் சேமிப்பு டேங்க்கும் இருக்கு.  

காற்றோட்டம் வர்ற வழிகள தொடர்ந்து கவனிச்சு அதுக்கான துளைகள சரியான இடத்துல போட்டிருக்கேன். அதனால, எந்த இடத்துல வீட்டை வச்சாலும் காத்து வரும். முதல்கட்டமா, ஆட்ேடாவுல இந்தத் தற்காலிக வீட்டை பொருத்தி டெமொ பார்த்திருக்கேன். ஆட்டோனு இல்ல. உங்களுக்குத் தேவைப்பட்டா இதிலுள்ள ஆறு போல்ட்டை கழற்றிட்டு ஃபோர் வீலர் வண்டில கூட மாத்தி வச்சிக்கலாம். லாரியா இருந்தா ஐந்தாறு தற்காலிக வீடுகளை வைக்க முடியும்.

அவசர நிலையில சில லாரிகள்ல நூறு வீடுகளை ஏத்திட்டு போனாலே போதும். ஒரு வீட்டுல ஒரு குடும்பமே தங்கிக்க முடியும்.
ஆனா, இப்போதைய டிசைன் ஓர் ஆள் தங்கற மாதிரியானது. அதனாலதான் இதுக்கு ‘சோலோ:1’னு பெயர் வச்சேன். இதுல ஒண்ணுங்கிறது முதல் மாடலைக் குறிக்கும்.

இந்த டிசைனை உலக அளவுல நான்தான் பண்ணியிருக்கேன். நடமாடும் வீடு கான்செப்ட் நிறைய இருக்கேனு கேட்கலாம். கேரவன் கூட குட்டி வீடுதான். ஆனா, அதெல்லாம் தயாரிக்கிற செலவு இதைவிட ரொம்ப அதிகம். டிசைனும் வேறுமாதிரியானது. இப்ப பேடன்டுக்கு விண்ணப்பிச்சிருக்கேன்.

என் டிசைனை பார்த்திட்டு நிறைய பேர் பாராட்டுகளும், கருத்துகளும் தெரிவிச்சாங்க. எனக்கு அது ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு. இப்ப இந்தத் தற்காலிக வீட்டின் வெளித்தோற்றத்துக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் செலவாச்சு. உள்ள இருக்குற பொருட்களுக்கான செலவு தனி.

ஆனா, என்னோட நோக்கமெல்லாம் முன்னாடியே சொன்னமாதிரி சின்ன இடத்துக்குள்ள அழகா டிசைன் பண்றது. அதனால செலவைப் பத்தி கவலைப்படாம செய்தேன். தவிர, முதல் முயற்சிங்கிறதால செலவும் கூடிடுச்சு.

இப்ப இதைவிடவும் குறைவான செலவுல ஒரு நபர் தங்குற மாதிரியும், ஒரு குடும்பமே தங்குற மாதிரியான வீட்டையும் டிசைன் செய்ய பிளான் பண்ணிட்டு இருக்கேன். அதுவும் நிச்சயம் எளிய மக்களுக்கானதாகவே இருக்கும்...’’ நம்பிக்கையாகச் சொல்கிறார் அருண் பிரபு.  l

பேராச்சி கண்ணன்