சூரரைப் போற்று



கொளுத்தும் கோடையை குதூகலமாக்க வருகிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் முந்தைய படங்களான ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘என்ஜிகே’, ‘காப்பான்’ ஆகியவற்றுக்கு இல்லாத ஸ்பெஷல் கவனிப்பு இதற்கு உண்டு. காரணம், ‘இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா + சூர்யாவின் காம்பினேஷன்!

ஸ்ரீஎப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியில் மின்னும் சூர்யாவை ‘இறுதிச் சுற்று’ கவர்ந்தது. அடுத்த நாளே, அதன் இயக்குநர் சுதா கொங்கராவை அழைத்து தனக்கொரு கதையை ரெடி பண்ணச் சொல்லிவிட்டார்.
திரைக்கதையை சுதாவுடன் இணைந்து ஷாலினி உஷாதேவி எழுதியிருக்கிறார். வசனங்களை ‘உறியடி’விஜயகுமார் எழுதியுள்ளார். கட்டுக்கோப்பான டீமுடன் அதிரடியாக ஆரம்பித்த படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் மாதமே நிறைவடைந்து விட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் பரபரக்கிறது.

படத்திற்கு படம் லுக்கில் கவனம் செலுத்தும் சூர்யா, இதில் எலைட் லுக்கைத்தாண்டி புது லுக்கில் அசத்துகிறார். இதற்காக ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தியிருப்பவர், முறுக்கேறிய உடம்புடன் வருகிறார். ‘பருந்தாகுது ஊர்க்குருவி... வணங்காதது என் பிறவி...’ பாடலில் வரும் வரிகள்தான் படத்தின் அதிரடி ஒன்லைனாம்.

சூர்யாவின் ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரான மோகன்பாபு, நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படம் வழியாக தமிழுக்கு வருகிறார். ‘‘ஐந்நூறு படங்களுக்கு மேல் நடித்த உங்களுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்கிறேன். உங்களிடம் நிறைய கற்றுக்கொள்வேன்...’’ என சூர்யா நெகிழ்ந்துபோய் அவரிடம் சொல்லியிருக்கிறார்.

காமெடிக்கு கருணாஸ். தவிர ஜாக்கி ஷெராஃப், பரேஷ் ராவல் என பாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம் உள்ளனர். டெக்னீஷியன் டீமும் சுதா கொங்கராவின் டீம்தான். நிகேஷ் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கன்னடத்தில் ஹிட் அடித்த ‘யூ டர்ன்’ கேமராமேன் இவர்.

படத்தின் ஆக்‌ஷன் ஏரியாவை கிரேக் பவல், விக்கி இருவரும் கவனித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘மாரா’ என்ற தீம் ஸாங்கை சூர்யாவே பாடியிருப்பது இன்னும் ஸ்பெஷல்.

ஸ்ரீ‘சூரரைப் போற்று’க்கு அடுத்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா!