MASTER



விஜய் - 64 ஸ்பெஷலான ‘மாஸ்டர்’ லுக் வெளியானதில் வெறித்தன சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் அவரது நெஞ்சில் குடியிருக்கும் அன்பு ரசிகர்கள். ‘கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இம்முறை கை கோர்க்கிறார் விஜய் என்ற தகவல் வெளியானது முதல் இப்போது வரை டாப் கியரில் எகிறுகிறது படத்தின்  எதிர்பார்ப்பு.

* விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போ அமைய காரணமே விஜய்யின் உதவியாளர்களுள் ஒருவரான ஜெகதீஷ் பழனிசாமிதானாம்.
விஜய்சேதுபதி மூலம் ஜெகதீஷுக்கு நட்பானவர் லோகேஷ். அவரது ‘கைதி’ மேக்கிங்கிலேயே மிரண்ட ஜெகதீஷ், ‘விஜய்க்கான கதை எதுவும் கைவசம் இருக்கிறதா?’ என லோகேஷிடம் கேட்டிருக்கிறார்.

லோகேஷும் உடனே விஜய்க்கான கதையை ரெடி பண்ணிவிட, ‘விஜய் - லோகேஷ் மீட்’ நடந்தது. முதல் பதினைந்து நிமிட நேரேஷனிலேயே ஹேப்பியாகிவிட்டார் விஜய்.

* படத்தில் ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட். விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், நாசர், சிம்ரன்... என லிஸ்ட் நீள்கிறது.
‘கைதி’ சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். முதல் ஷெட்யூல் சென்னையிலும், ரெண்டாவது ஷெட்யூல் தில்லியிலும், மூன்றாவது ஷெட்யூல் கர்நாடகாவிலும் பரபரத்தது. தில்லியில் படப்பிடிப்பு நடந்தபோதுதான், ‘கைதி’ படத்தை மொத்த யூனிட்டும் பார்த்து ரசித்திருக்கிறது.

* ஷங்கரின் ‘2.0’வில் ரஜினியின் காஸ்ட்யூம்களை டிசைன் செய்த பல்லவி சிங், ‘சர்கார்’, ‘பிகிலு’க்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். படத்தின் வசனங்களை லோகேஷுடன் இணைந்து ‘ஆடை’ ரத்னகுமாரும், ‘காற்றின் மொழி’ பொன் பார்த்திபனும் எழுதியுள்ளனர்.

* ‘மாஸ்டர்’ ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால், பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் அனிருத். ‘கைதி’யில் ஆர்ஆர் மிரட்டியது போல, இதிலும் மிரட்டும் என்கிறது யூனிட்.

* பொதுவாக ஒரு படத்தின் ஷூட் போய்க் கொண்டிருக்கும் போதே, அதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என விஜய் கணித்துவிடுவார். ‘மாஸ்டர்’ செம கெத்தாக வந்து கொண்டிருப்பதால், எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியில் மிளிர்கிறாராம் விஜய். ஏப்ரலுக்கு வரும் ‘மாஸ்டரு’க்கு இப்போதே வெல்கம் பொக்கே நீட்டுகிறார்கள் ரசிகர்கள்!                     

தொகுப்பு: மை.பாரதிராஜா