மெகா சொதப்பல்கள்



ஒரு நிறுவனம் தனது புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வு என்பது சாதாரணமானது அல்ல. விளம்பரம், நிகழ்ச்சி ஏற்பாடு என ஏகப்பட்ட பணத்தை வாரி இறைக்க வேண்டும்.
தவிர, நேரிலும் இணையத்திலும் லட்சக்கணக்கான மக்கள் அந்த நிகழ்வைப் பார்ப்பார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அந்த நிகழ்வுகளில் கூட சில சொதப்பல்கள் ஏற்பட்டு வைரலாகிவிடுகின்றன. அவற்றில் சில இதோ...

ஐபோன் 4

டிஜிட்டல் உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு நிகழ்வு. 2010ம் வருடம். மாபெரும் அரங்கில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன் 4ஐ அறிமுகப்படுத்தினார். உலகமே அந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தது. இணைய சேவையை உலகுக்குக் காண்பிக்க, போனில் உள்ள ‘சபாரி’ பிரவுசரைத் திறந்து, ‘நியூயார்க் டைம்ஸி’ன் இணைய பக்கத்துக்குப் போனார்.

ஆனால், அந்தப் பக்கம் திறக்கவில்லை. பலமுறை ஜாப்ஸ் முயற்சித்தும் இணைய சேவை கிடைக்கவில்லை. போனில் ஏதோ பிரச்னை என்று பார்வையாளர்கள் நினைத்தனர். பிரச்னை போனில் இல்லை. வைஃபை நெட்வொர்க்கில் என்று பிறகு தெரியவந்தது!

வால்வோ

2010ம் வருடம் வால்வோ நிறுவனம் எஸ்60 என்ற ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்தது. ஏதாவது அவசரம், ஆபத்து என்றால் ஆட்டோமேட்டிக்காக ப்ரேக் போட்டு, கார் நின்று விடுவது இதன் ஸ்பெஷல். ஆனால், காரின் அறிமுக நிகழ்வில் ஆட்டோமேட்டிக் பிரேக் வேலை செய்யாமல் ஒரு டிரக் வண்டியின் மீது மோதிவிட்டது!

டேப்லெட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ டிவிஷனின் பிரசிடண்ட்டாக இருந்தவர் ஸ்டீவன் சினோஃப்ஸ்கி. 2012ம் வருடம் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டேப்லெட்டை அறிமுகப்படுத்தினார்.

அந்த டேப்லெட் வேலை செய்யும்விதம், அதன் சிறப்பம்சங்களை அவர் பட்டியலிட்டு அதை செயல்படுத்திக்காட்டும்போது டேப்லெட் வேலை செய்யாமல் நின்றுவிட்டது. அதாவது ‘ஹேங்’ ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அது வேலை செய்ய ஆரம்பித்தபோது சினோஃப்ஸ்கி அதை ஆஃப் செய்துவிட்டார்!