ரத்த மகுடம்-77



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘என் தரப்பை எதற்காக நான் முன்வைக்க வேண்டும் இளவரசே..?’’ சாதாரணமாகத்தான் சிவகாமி கேட்டாள். ஆனால், அதில் இருந்த சீற்றத்தை அங்கிருந்த பல்லவ வீரர்களால் உணர முடிந்தது.‘‘இவர்கள் நினைக்கும் நிஜம் வெறும் நிழல்தான் என்பதை நீங்கள் புரிய வைக்க வேண்டாமா..?’’ இயல்பாகச் சொன்னார் பல்லவ இளவரசர் இராஜசிம்மர்.‘‘புரிய வைத்து..?’’
‘‘நீங்கள் குற்றமற்றவர் என விடுதலை பெறலாம்...’’

‘‘அப்படியொரு விடுதலையை நான் விரும்பவில்லை இளவரசே!’’ அழுத்தம்திருத்தமாகச் சொன்னாள் சிவகாமி.
‘‘சில கணங்களுக்கு முன் தாங்கள்தானே குற்றங்களுக்கும் குற்றச்சாட்டுக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டி
னீர்கள்..?’’‘‘பெண் அல்லவா..? சற்றே உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டேன்... நான் சொன்னதை மறந்துவிடுங்கள்...

என்னை நிரூபித்து இங்கிருக்கும் அனைவரிடமும் நல்லெண்ணம் பெற விரும்பவில்லை... அதை அவமானமாகக் கருதுகிறேன்... உங்கள் நண்பர் கரிகாலர் உட்பட இங்கிருக்கும் அனைவரும் என்மீது சுமத்திய எல்லாவற்றையும் அப்படியே ஏற்கிறேன்... இதற்கு என்ன தண்டனையோ அதை வழங்குங்கள்... மரண தண்டனை என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் இளவரசே... முன்பே சொன்னபடி என் சிரசை நீக்கும் பொறுப்பை தங்கள் நண்பர் கரிகாலர் ஏற்க வேண்டும்... இது மட்டுமே எனது வேண்டுகோள்...’’

‘‘உங்கள் வேண்டுகோளை கடைசியாகப் பார்க்கலாம்...’’ முன்பு சொன்னதையே மீண்டும் உச்சரித்த பல்லவ இளவரசர், புன்னகைத்தார். ‘‘யாரங்கே...’’ பல்லவ வீரனை அழைத்தவர், ‘‘இவர்களைக் கட்டியிருக்கும் சங்கிலியை முதலில் அகற்றுங்கள்...’’கட்டளைக்கு அடிபணிந்து அந்த வீரன் சிவகாமியைப் பிணைத்திருந்த சங்கிலியை அகற்றினான்.மாறாப் புன்னகையுடன் சிவகாமியை ஏறிட்டார் இராஜசிம்மர். ‘‘ஆக, நீங்களாக உங்கள் தரப்பை முன்வைக்க விரும்பவில்லை... அப்படித்தானே..?’’
‘‘ஆம்...’’

‘‘எனில் சில வினாக்களுக்கு விடை அளியுங்கள்...’’
‘‘கட்டளையா..?’’‘‘இல்லை... வேண்டுகோள்...’’
சொன்ன பல்லவ இளவரசரை உற்றுப் பார்த்தாள் சிவகாமி. ‘‘குற்றவாளியிடம் வேண்டுகோள் வைக்கும் இளவரசரை இப்பொழுதுதான் பார்க்கிறேன்...’’
‘‘குற்றம்சாட்டப்பட்டு நிற்பவர் அதே இளவரசரின் தங்கை என்னும்போது எப்படி கட்டளையிட முடியும்..?’’

‘‘நான் உங்கள் தங்கை அல்ல இளவரசே... உங்கள் தங்கையின் தோற்றத்தில் வந்திருக்கும் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி... பல்லவர்கள் மத்தியில் ஊடுருவ பச்சிலைக் களிம்புகளால் தோற்றத்தையே மாற்றிக்கொண்டவள்... இதை உங்கள் நண்பர் கரிகாலர் தக்க சமயத்தில் கண்டுபிடித்துவிட்டார்...’’

‘‘அதாவது அம்புகள் பாய்ந்த நிலையில் இருந்த உங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது இந்த உண்மையை இவன் கண்டுபிடித்தான்... அப்படித்தானே..?’’
‘‘ஆம்...’’‘‘இது நம்பும்படியாக இல்லையே... காயங்களைக் குணப்படுத்த உதவும் பச்சிலைக் களிம்பு எப்படி ஒரு மனிதரின் தோற்றத்தையே மாற்றும்..?’’
‘‘சாளுக்கியர்களின் பச்சிலை ரகசியங்கள் எல்லா வித்தைகளையும் அரங்கேற்றும்...

இதற்கு சாட்சி காலத்தால் அழியாத அஜந்தா குகை ஓவியங்கள்... அந்த வர்ணக் கலவை ரகசியங்களை அறியத்தான் ஆயனச் சிற்பியும் மகேந்திரவர்மரும் அரும்பாடு பட்டார்கள்... மாறுவேடத்தில் எங்கள் சாளுக்கிய நாட்டுக்குள் புகுந்து இதைத் தெரிந்து கொள்ளவும் மகேந்திரவர்மர் முற்பட்டார்... இவை எல்லாம் தாங்கள் அறியாததல்ல...’’‘‘அறிந்ததால்தான் ஐயமே ஏற்பட்டிருக்கிறது...’’‘‘புரியவில்லை இளவரசே...’’

‘‘அவ்வளவு சக்தி வாய்ந்த மூலிகை ரகசியங்களை அறிந்த சாளுக்கியர்கள் ஒரு சிகிச்சையின்போது தங்கள் மர்மம் வெளிப்படும் வகையிலா பச்சிலைக் களிம்புகளை உங்கள்மீது பூசி தோற்றத்தை மாற்றியிருப்பார்கள்..? சாளுக்கியர்களின் தலைமை மருத்துவர் இந்தளவுக்கு அலட்சியமாக இருப்பவர் அல்ல...’’

‘‘ஒப்புக் கொள்கிறேன் இளவரசே... அதேநேரம் பல்லவர்களின் மருத்துவக் குழுவும் சாதாரணமானதல்ல... களிம்பு ரகசியங்களை அவர்கள் அறியாமல் இருக்கலாம்... ஆனால், பச்சிலைகள் என்னவெல்லாம் செய்யும் என்பதை நன்கு அறிந்தவர்கள்... அதனால்தான் என் ரகசியத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள்...’’

‘‘அது ரகசியமே இல்லை என்றல்லவா நான் சொல்கிறேன்..!’’ உதட்டோரம் புன்னகை வழிய பல்லவ இளவரசர் சொன்னார். ‘‘நீங்கள் சிவகாமியின் தோற்றத்தில் வந்திருப்பவர்தான்... அதற்காக களிம்பைப் பூசி உங்கள் தோற்றத்தையே மாற்றியிருப்பவர்தான்... அதனால்தான் அம்பு பாய்ந்ததற்கு உங்களுக்கு சிகிச்சை அளித்த எங்கள் மருத்துவர்கள் இந்த தோற்ற மாறுதலைக் கண்டுபிடித்தார்கள்... ஆனால், சாளுக்கியர்கள் அனுப்பிய ஆயுதம் நீங்கள் அல்ல!’’

இராஜசிம்மர் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த பல்லவ வீரர்கள் பரபரப்படைந்தார்கள். விசாரணையின் தொடக்கம் முதலே மரியாதையுடன் அவர் சிவகாமியை அழைத்து வந்ததற்கான காரணம் அவர்களுக்குப் புரிவதுபோலவும் புரியாதது போலவும் இருந்தது.

பல்லவ இளவரசரின் பின்னால் நின்றிருந்த கரிகாலனுக்குத்தான் உலகமே சுற்றுவது போல் இருந்தது. இராஜசிம்மர் என்ன சொல்கிறார்..? இங்கே நிற்பவள்... தன்னுடன் உறவாடியவள்... தனக்கு சமமாக நின்று சாளுக்கியர்களுடன் போர் புரிந்தவள்... சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி அல்லவா..? அப்படியானால் இவள் யார்..?

தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சிவகாமி அளிக்கப் போகும் பதிலுக்காக கரிகாலன் காத்திருந்தான்.ஆனால், சிவகாமி எந்த பதிலையும் அளிக்கவில்லை. மாறாக வாய்விட்டுச் சிரித்தாள். தொடர்ந்து அந்தப் பிரதேசமே நடுங்கும்படி சிரித்தவள் சட்டென்று அமைதியானாள். ‘‘மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்துவிட்டேன் இளவரசே... உங்கள் முன்னால் இப்படி நான் சிரித்திருக்கக் கூடாது...

சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் ஒரு பெண் சிரித்தால் என்ன நடக்கும் என்பதற்கு மகாபாரத திரவுபதியே உதாரணமாக இருக்கும்போது அதே பிழையை அடியேனும் செய்திருக்கக் கூடாது... என்னை மன்னித்து விடுங்கள்... ஆனால், நீங்கள் சொன்னதைக் கேட்டதும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை...’’‘‘சிரிக்கும் அளவுக்கு நான் சொன்னதில் நகைச்சுவை அம்சங்கள் நிறைந்திருக்கிறதா..?’’‘‘நிரம்பி வழிகிறது இளவரசே! சாளுக்கியர்கள் அனுப்பியிருக்கும் ஆயுதமே நான் அல்ல என்றல்லவா சொல்கிறீர்கள்..?’’‘‘அதுதானே உண்மை!’’

‘‘இல்லை இளவரசே... பல்லவர்களை அழிக்க சாளுக்கியர்களால் அனுப்பப்பட்ட ஆயுதம்தான் நான்! ஓலைக்குழலுடன் பிடிபட்ட சாளுக்கிய வீரர்கள் இந்நேரம் என்னைப் பற்றிய உண்மைகளை தங்களிடம் தெரிவித்திருப்பார்களே..?’’
‘‘அதையெல்லாம் கேட்டு ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவுக்கே வந்தேன்!’’
‘‘சாளுக்கியர்களால் அனுப்பப்பட்டவள் நான் அல்ல என்பதா..?’’
‘‘ஆம்...’’

‘‘போதும் இளவரசே... உங்கள் கருணைக்குப் பாத்திரமானவள் அல்ல நான்... என்னைப் பற்றிய ஆதாரங்கள் அனைத்தயும் உங்கள் முன் இவர்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள்... அவை அனைத்தையும் நான் மறுக்கப் போவதில்லை... உடனடியாக எனக்கு தண்டனை அளியுங்கள்...’’
‘‘தண்டனை பெறுவதிலேயே குறியாக இருக்கிறீர்களே..?’’

‘‘வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்..? யாரை உயிருக்கு உயிராக நேசித்தேனோ அவரே என் மீது குற்றம் சுமத்துகிறார்... யாரை எல்லா தருணங்களிலும் உயிரைக் கொடுத்து காக்க முற்பட்டேனோ அவரே என் உயிரை எடுக்க இப்போது காத்திருக்கிறார்...’’ என்றபடி கரிகாலனை ஒரு கணம் பார்த்த சிவகாமி, சட்டென தன் பார்வையை இராஜசிம்மர் பக்கம் திருப்பினாள். ‘‘வாழ விருப்பமில்லை இளவரசே...’’
‘‘வாழ்வதும் இறப்பதும் நம் கையிலா இருக்கிறது..?’’

‘‘என் இறப்பு உங்கள் கரங்களில் இருக்கிறது இளவரசே... அதை கரிகாலர் வழியாக நிறைவேற்றுங்கள் என்றுதான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன்...’’‘‘சரி... இதுதான் என் தங்கையின் விருப்பம் என்றால் அதை இந்த அண்ணன் நிறைவேற்றுகிறேன்...’’ அமர்ந்திருந்த பாறையில் இருந்து இராஜசிம்மர் எழுந்தார். ‘‘அதற்குமுன் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விடுங்கள்...’’‘‘என்ன இளவரசே..?’’

‘‘என் தங்கை சிவகாமியின் தோற்றத்தில் சாளுக்கியர்கள் அனுப்பிய பெண் எங்கே? அவளை எங்கு மறைத்து வைத்திருக்கிறீர்கள்..?’’  
இராஜசிம்மன் இப்படிக் கேட்டதும் அவரை வெறித்தாள் சிவகாமி.அவள் சொல்லப்போகும் பதிலுக்காக அனைவரும் காத்திருக்க -
கண்ணிமைக்கும் நேரத்தில் தன் அருகில் நின்றிருந்த பல்லவ வீரனிடம் இருந்த வாளை சிவகாமி உருவினாள். அந்த வாளால் தன் கழுத்தை, தானே வெட்டத் தொடங்கினாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்