நான்...எடிட்டர் ரூபன்!



‘ராஜா ராணி’ நூறாவது நாள் விழாதான் என் மேல என் குடும்பத்துக்கு நம்பிக்கையையே வரவைச்சது. கல்லூரி சேர்ந்தப்பவே இனி அப்பா, அம்மாகிட்ட பொருளாதார ரீதியா உதவிகளை எதிர்பார்க்கக் கூடாதுனு முடிவு செய்துட்டேன். அப்படித்தான் இருந்தேன்.

நவம்பர் 15, 1986ல சென்னைல பிறந்தேன். அம்மாவுக்கு சென்னை. அப்பாவுக்கு கும்பகோணம். தாத்தா வீட்லதான் பிறப்பு. அப்பாவுடைய அப்பா ஜேம்ஸ், மேடை இசைக் கலைஞர். அப்பா சார்லியும் சித்தப்பா மார்ட்டினும் தாத்தா பெயர்ல ஒரு மியூசிக் பேண்ட் வைச்சிருந்தாங்க. இப்பவும் அவங்க பேண்ட் ஃபேமஸா இருக்கு.

கும்பகோணத்துல வளர்ந்தேன். ஏஆர்எஸ் ஸ்கூல்ல படிச்சேன். அம்மா ஜாய்ஸ், இன்டீரியர் டெகரேட்டர். மாமாவும் இன்டீரியர் டெகரேட்டர்தான். சென்னைல பல பிரபல கடைகளோட இன்டீரியரை அம்மாவும் மாமாவும்தான் வடிவமைச்சாங்க.சின்ன வயசுல இருந்தே அறிவியல் சார்ந்து ஆராய்ச்சி செய்யப்பிடிக்கும். ஸ்கூல்ல எந்த அறிவியல் கண்காட்சி நடந்தாலும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பை காட்சிக்கு வைச்சு அதன் செய்முறைகளை விளக்குவேன். சில கண்டுபிடிப்புகளுக்கு பரிசும் கிடைச்சிருக்கு.

லீவுக்குசென்னை வரும்போதெல்லாம் தாத்தா, பாட்டிகிட்ட பொம்மை கேட்க மாட்டேன். ரிச்சி ஸ்ட்ரீட்ல அலைஞ்சு பல்ப், பேட்டரி, காயலாங் கடைகள்ல கிடைக்கற பழைய பொருட்கள் எல்லாம் வாங்குவேன்.இதையெல்லாம் பார்த்துட்டு வீட்ல நான் விஞ்ஞானியா மாறுவேன்னு நினைச்சாங்க. ஆனா, நான் சயின்டிஸ்ட் ஆகணும்னா இன்ஜினியரிங் சேரணும். அதுக்கு நான் படிக்கணும்! இதெல்லாம் நடக்கலை. கஷ்டப்பட்டு படிக்க எனக்கு விருப்பமில்ல!

இசைல ஆர்வம் இருந்தது. ஆனா, அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் தங்களோட அடுத்த தலைமுறையும் நம்மை மாதிரி கஷ்டப்படக் கூடாதுனு எண்ணம். இந்த சூழல்ல பெரிய மார்க் இல்லாம ஸ்கூல் படிப்பை முடிச்சேன். விளைவு... பார்க்கறவங்க எல்லாம் அட்வைஸ் செய்ய ஆரம்பிச்சாங்க.
ஃபேஷன் பக்கம் போகலாம்னு நினைச்சேன். அது பெண்களுக்குதான் செட் ஆகும்னு சொல்லிட்டாங்க.

என்னை வளர்த்து ஆளாக்கினதுல எங்க சித்தி டாரஸுக்கும் முக்கிய பங்குண்டு. அவங்கதான் லயோலால விஸ்காம் படி... அதுக்குதான் எதிர்காலம்னு சொன்னாங்க. அது என்ன கோர்ஸ்னே தெரியாம எக்சாம் எழுதி சீட்டும் வாங்கி சேர்ந்தேன். என் இயல்புப்படி அது ஜாலியான படிப்பாதான் இருந்தது!

ஏற்கனவே எனக்கு இந்த வீடியோ எடிட்டிங், சாஃப்ட்வேர்கள்ல கொஞ்சம் வேலை செய்யத் தெரியும். வீட்லயும் கம்ப்யூட்டர் இருந்துச்சு. அதுல அதற்கான சாஃப்ட்வேர்களும் போட்டு வெச்சிருந்தேன். நண்பர்கள் அப்பப்ப குறும்படங்கள், ஆல்பம் மாதிரி ஷூட் பண்ணுவாங்க. அவங்களுக்கு எடிட்டர் நான்தான்.

இப்படித்தான் எடிட்டிங் பக்கம் வந்தேன். இந்த நிலைல கவுதம் மேனன் சார் அஸிஸ்டெண்ட் எடுக்கறதா கேள்விப்பட்டு அவரை சந்திச்சேன். என்ன நினைச்சார்னு தெரியல... ‘நாளைல இருந்து வா’னு சொல்லிட்டார். சினிமா மேல ஒரு காதல் இருந்தது. டெக்னிக்கலா ஏதாவது செய்யணும்னு ஒரு உத்வேகம். அவர் அழைச்ச மாதிரியே மறுநாள் போனேன். ஃபீல்டுக்கு நடுவுல நின்னுக்கிட்டு ஃபீல்டை சரிபண்ற காமெடியெல்லாம் செய்திருக்கேன்.
ஒருநாள் ஷூட் முடிஞ்சதும் ஈவினிங் தன் அசிஸ்டெண்ட்ஸ் கூட ஜாலியா கவுதம் சார் அரட்டை அடிச்சார். ஒவ்வொருத்தரும் தங்கள் ஆசையை சொன்னாங்க. நான் எடிட்டிங் எனக்கு நல்லா வரும்னு சொன்னேன்.

‘அப்படீன்னா இங்க ஏன் இருக்க... ஆண்டனி கூட போய் உட்காரு’னு சார் அனுப்பி வைச்சார். ஆண்டனி சார் ஸ்டூடியோவை சும்மா எட்டிப் பார்த்தேன். ‘உட்காருப்பா’னு அமர வைச்சார். எடிட்டிங்ல அத்தனையும் சொல்லிக் கொடுத்தார். ‘வேட்டையாடு விளையாடு’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படங்கள்ல ஆண்டனி சார் கூட ஒர்க் பண்ணினேன்.

பெரிய எடிட்டர்கள் பெரும்பாலும் டிரெய்லர் கட் பண்ண மாட்டாங்க. ஏற்கனவே டிரெய்லரை எடிட் பண்ண ஆண்டனி சார் சொல்லிக் கொடுத்திருந்தார். அதை வைச்சு ‘தோரணை’, ‘அவன் இவன்’, ‘வெடி’ உட்பட சில படங்களுக்கு டிரெய்லர் கட் பண்ணினேன்.வாழ்ந்தது சென்னைல... சாப்பிடணும்... அதுக்கு பணம் வேணும்... அதனால இரண்டாயிரம் ரூபாய்க்காக எல்லாம் டிரெய்லர் கட் பண்ணி கொடுத்திருக்கேன்.

ஆக்சுவலா டிரெய்லருக்குனு தனியா கதை எழுதி கட் பண்ணணும். அது பெரிய ப்ராசஸ். அதனாலயே ஆண்டனி சார், எல்லா மொழிகள்லயும் வர்ற புதுப்புது டிரெய்லர்ஸை பார்க்கச் சொல்லுவார். இப்ப வரை அதை கடைப்பிடிச்சுட்டு இருக்கேன். என் கூடவே பயணிச்ச அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ், ‘நாம சேர்ந்து படம் பண்ணலாம்’னு சொல்லுவாங்க.

‘சரி’னு தலையசைப்பேனே தவிர பெருசா அதை எடுத்துக்க மாட்டேன். ஏன்னா, சினிமா மாயை எனக்கு நல்லாவே தெரியும். என்னதான் நண்பர்களா இருந்தாலும் தயாரிப்பாளர்கள்தான் ஃபைனல் டிசிஷன்னு தெரியும். ஸோ, வாக்குறுதிகளை மனசுல ஏத்திக்க மாட்டேன்.

இதையும் மீறி சிலர் சொன்னா மாதிரியே டைரக்டர் ஆனதும் கூப்பிட்டாங்க. அப்படிதான் ‘கண்டேன்’ படம் வழியா எடிட்டரானேன். அதைத் தொடர்ந்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’. இந்த டிரெய்லர் ஒர்க் முடிச்ச நேரம் பக்கத்து ஸ்டூடியோவுல ஷங்கர் சார் அஸிஸ்டெண்ட் அட்லீ குறும்பட வேலைகள்ல இருக்கறதா தெரிஞ்சு போய் சந்திச்சேன்.

அவர் ஒரு பெரிய இயக்குநருடைய அஸிஸ்டெண்ட். நான் ஒரு பெரிய எடிட்டருடைய அஸிஸ்டெண்ட். எங்க அறிமுகம் நட்பாகி விரிஞ்சது. அட்லீகிட்ட ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ பட டிரெய்லரை காட்டினேன். அதுல என்ன ஸ்பெஷலை கண்டுபிடிச்சாரோ... போன் போட்டு இன்னும் சிலரை வரவைச்சு காட்டினார். ‘நாம ரெண்டு பேரும் படம் செய்யறோம்’னு சொன்னார்.

இதையும் பெருசா எடுத்துக்கலை. ஆனா, ‘சமர்’ கன்னடப் படம் முடியறப்ப அட்லீகிட்ட இருந்து அழைப்பு வந்தது. ‘ராஜா ராணி’ எனக்கு பெரிய பிரேக்கை கொடுத்தது. தொடர்ந்து ‘நான் சிகப்பு மனிதன்’, ‘ஜீவா’, ‘டார்லிங்’னு வரிசையா படங்கள்.இந்த நேரத்துல ‘வீரம்’ டிரெய்லரை கட் பண்ணி கொடுங்கனு சிவா சார் வந்தார். இந்த டிரெய்லர்தான் என் முதல் மாஸ் பட டிரெய்லர். நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. சிவா சாருக்கும் என் மேல ஒரு நம்பிக்கை வர, தன் படங்களுக்கு எடிட்டரா என்னை மாத்தினார். ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’னு அவர் கூட பயணப்படறேன்.

அதே மாதிரி அட்லீயுடனும் நட்பு தொழில் ரீதியாகவும் தொடருது. ‘தெறி’, ‘மெர்சல்’, இப்ப ‘பிகில்’ வரை அவர் கூட டிராவல் ஆகறேன்.
ஒவ்வொரு முறையும் என் குருநாதர் ஆண்டனி சார் எங்க என் வேலையைப் பார்த்துட்டு திட்டுவாரோனு பயந்து பயந்துதான் வேலை செய்யறேன். இப்ப ‘பொன்மகள் வந்தாள்’, சிவகார்த்திகேயன் நடிக்கிற ‘ஹீரோ’ படங்கள் போயிட்டு இருக்கு.  

பேஸிக்கா எடிட்டிங் ரொம்ப டென்ஷனான வேலை. எனக்கு முன்னாடி சில எடிட்டர்ஸ் டென்ஷனால பட்ட துன்பங்களைப் பார்த்ததால அதீத டென்ஷனுக்கு ஆளாக மாட்டேன். பொதுவா எடிட்டிங் முடிஞ்சதும் ரிக்கார்டிங், டப்பிங் எல்லாம் நடக்கும். அதனால எல்லா பக்கத்துல இருந்தும் நம்மை அவசரப்படுத்திக்கிட்டே இருப்பாங்க.

டென்ஷன் ஆகக் கூடாதுனு நினைச்சாலும் பரபரப்பு நம்மை தொத்திக்கும். இதனால வீடு, ஆபீஸ், இன்னொருத்தருடைய ஸ்டூடியோனு மாத்தி மாத்தி வேலை செய்வேன். ஒர்க்கிங் அட்மாஸ்ஃபியரை இப்படி மாறி மாறி அமைச்சுக்கறதால ஓரளவு டென்ஷன் ஆகாம தப்பிச்சுக்கறேன்!                   
ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்