போடி... உன்னை கொன்னுடுவேன்னு நித்யா மேனனை திட்ட நினைச்சேன்... மிஷ்கின் அதிரடி



மிஷ்கின் என்றால் சினிமா மொழி அறிந்தவர் எனப் பொருள். மழை சந்தோஷம்; ஆலங்கட்டி மழை இன்னும் சந்தோஷம் இல்லையா? இந்தத்தடவை மிஷ்கின் ‘சைக்கோ’வை அத்து வருகிறார். நுணுக்கமும், மனிதாபிமானமும் மறைக்கப்படும் பக்கங்களை எடுத்து வருவதுமாக மிஷ்கின், தமிழ் சினிமாவின் தனிக்குரல்.

‘‘நிறையப்பேர் என்னையவே ‘சைக்கோ’னுதான் சொல்றாங்க. இங்கே அந்த வார்த்தை பலவிதமா பொருள்படுது. சைக்கோ என்பது மனப் பிறழ்வு. கருவிலேயே உருவெடுக்குது. படிக்க, புரிஞ்சிக்க, கலைக்குன்னு ஒரு பக்கம் இருக்கிற மாதிரி மூளையில் அன்பு சார்ந்தும் இடம் இருக்குன்னு சொல்றாங்க.

இது சம்பந்தமாக நிறையப்படிச்சேன். சிலர் சோகம் வெடித்து, மனம் கடுமையாகி நரகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கிறாங்க.இதில் அடுத்தவங்களை துன்புறுத்துகிற, பாதிக்கப்பட்ட மனிதனை சொல்லியிருக்கேன்.


அவனோட உலகத்திற்கு உங்களை கொண்டு போறேன். பெண்கள் எச்சரிக்கையாகப் பார்க்கணும். மிகப் பெரிய ‘A’ கிடைக்கப்போகுது. கடைசியாக ஆடியோகிராபர் தபஸ் நாயக் பாத்திட்டு ‘இவ்வளவு வயலன்டாக தமிழ் சினிமா நான் பார்த்தில்லை’ன்னு சொன்னார்.

ஆனால், அன்பைப் பத்தியும், அவனுடைய உலகத்திலிருந்து அன்புக்குள்ளே வர்றதுக்குள்ளே படுகிற பாட்டையும் சொல்லியிருக்கேன். பவுத்தத்தையும், பைபிளையும், பகவத் கீதையையும் சொல்லியிருக்கேன். என்னுடைய கேரியரில் ‘சைக்கோ’ முக்கியமான படம்...’’ பழக்கப்பட்ட உரத்த சிரிப்போடு பேசுகிறார் இயக்குநர் மிஷ்கின்.

படம் எப்படியிருக்கும் ?
ஒரு சைக்கோ மோசமான மனநிலையில் இருக்கான். அப்ப இந்தப் பொண்ணைப் பார்க்கிறான். உதயநிதி பார்வையற்றவராக வருகிறார். ஒரு ரேடியோ ஜாக்கி, சைக்கோ… இப்படி மூணு பேருக்குள்ளே நடக்கிற கதை. இதில் ராமர், புத்தர், இராவணன் யார்னு படம் போகும். ஏழு நாட்களுக்குள் நடக்கிற கதை. நானும், உதய்யும் எட்டு வருஷங்களா ஒரு படம் பண்ண நினைச்சுட்டே இருக்கோம். உதய்யை நான்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது. ‘யுத்தம் செய்’ சேரன் கேரக்டர் அவருக்கானதாக இருந்தது.

இந்த லைன் சொன்னேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் உதயநிதி படம் எதுவும் பார்த்ததில்லை. உதய் ரொம்ப சென்ஸிபிள். இதில் அவர் எப்படி ஆக விரும்பினேனோ அப்படி காரியத்தில் இறங்கினார். என் படங்களின் மேல் அவருக்கிருந்த மரியாதையான்னு தெரியலை, ஒரு நாள் கூட ஒரு விரிசல் கூட இல்லை. பண்பான தம்பி.

இதுவரைக்கும் நான் சவுகர்யமாக வேலை பார்த்தது விஷால்கிட்டே. உதய் அதற்கும் ஒரு  படி மேலே இருந்தார். மற்ற படங்களுக்கும், இதுக்கும் நீங்கள் நிறைய வித்தியாசம் பார்ப்பீங்க. வேற ஒரு இடம் கொடுத்திருக்கேன். தர்மத்தை தேடுகிற ஒரு இளைஞனாகக்காட்டியிருக்கேன். உதய்க்கே. இது முக்கியமான படம்.

என்னுடைய கற்பனையில் கொஞ்சம் தேன் கலந்து, பூக்கள் சேர்த்து, கொஞ்சம் ரத்தமும் சேர்த்து ஒரு ஓவியம் வரைஞ்சிருக்கேன். அறிவிலிருந்து எழுதாமல் இதயத்திலிருந்து எழுதியிருக்கேன். சிறந்த நடிகன்னா நான் டிஸிப்ளின் எதிர்பார்ப்பேன். முகத்தில் ஆக்டிங் தேவையில்லை. செயல்களில் இருக்கு நடிப்பு. நல்ல நடிகன் ஒரு சீனை சீக்கிரமா பண்ணிட்டு அடுத்த சீனுக்கு கடந்து போயிடணும்.

அங்கேயே இருந்து கிணறு தோண்டி, விவசாயம் பண்ணி, விதையைப் போட்டு நான் எவ்வளவு பெரிய நடிகன் தெரியுமாடான்னு சொல்லக்கூடாது. ‘அந்த வயலுக்குள்ளே பாம்பு இருக்கு, பாத்துப்போ’னு சொன்னால் எவ்வளவு வேகமா கடந்து போவோம். ஒரு நடிகன் காட்சியை அப்படிக்கடக்கணும். நான் வயலில் நாலு செத்த பாம்பையும், நாலு கயித்தையும் போடுவேன். அவங்க கயிறையும் பாம்பா நினைச்சு கடப்பாங்க..அது என் யுக்தி. என் நடிகன் 100 மார்க் எல்லாம் வாங்க வேண்டாம். ப்ளீஸ்..

அதிதி ராவ், நித்யா மேனன்னு ரெண்டு பேர் இருக்காங்க…என்னோட அஸிஸ்டெண்ட், மணிரத்னம் படத்தில அதிதி ராவ் நடிச்ச ஒரு சீன்ல ஒரு ஷாட் காட்டினான். ஓகே சொல்லிட்டேன். அழுக்கான உலகத்திற்குள்ளே இருக்கிற மாதிரி இருக்கணும்னு சொன்னேன். சரிசரின்னு சொல்லிட்டு, ஷூட்டிங் வந்திட்டு கஷ்டப்பட்டது. நான் நினைக்கிற இடம் வரும் வரை விடமாட்டேன். அது என் பிடிவாதம். சின்னச்சின்ன பிரச்னைகள் வந்தது. கண்டிப்பாக இருந்தேன்.

எங்களுக்குள்ளே பெரிய நட்பெல்லாம் இல்லை. இந்த ஆளிடம் மாட்டிக்கிட்டோம்னு அது நினைச்சது. இப்படி படுத்துதே இந்தப்பொண்ணுன்னு நான் நினைச்சேன். படத்தை எடிட் பண்ணும்போது பல இடங்களில் அதிதி நயமா செய்திருக்கு. போன்ல கூப்பிட்டு ‘ரொம்ப நன்றிம்மா.

சந்தோஷமா ஃபீல் பண்றேன். நல்லா செய்திருக்கே. திட்டுனது எல்லாம் மனசுக்குள்ளே இருக்கட்டும். அதெல்லாம் உண்மை. அப்படியே வச்சுக்க’னு சொன்னேன்.

அடுத்து நித்யா. டைரக்டராக ஆகியிருக்க வேண்டிய பொண்ணு. தப்பி நடிகையாயிட்டா. அவளோட மேக்கப்மேன் ஒரு ஷாட்ல குறுக்கே வந்திட்டாரு. கடுமையா திட்டிட்டேன்.  

அடுத்த நாள் வந்த நித்யா ‘நீங்க மன்னிப்பு கேட்காம நடிக்கமாட்டேன்’னு சொல்லிட்டா. ‘போடி, உன்னை கொன்னுடுவேன்’னு
மனசுக்குள்ளே சொல்ல வந்தவன், ஒரு நிமிஷம் யோசிச்சேன். தன்னோட வேலை செய்கிற மேக்கப்மேனுக்காக இவ்வளவு தூரம் பொண்ணு பேசுதேன்னு உருகிட்டேன்.

பையனைக் கூப்பிட்டு கட்டிப்பிடிச்சு ‘என்னை மன்னிச்சிடு… மன்னிக்கலைன்னா காலில் விழுந்திடுவேன்’னு மைக்கில சொன்னேன்.நித்யா விழுந்து விழுந்து சிரிச்சா. என்னைப் புரிஞ்சுக்கிட்டா. என் இறப்பில் அவள் வந்து இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

அந்த அளவுக்கு நெருக்கமாயிட்டா. நட்புன்னா இந்த மாதிரி ஆண்கிட்டே கூட பார்த்ததில்லை. என் பெரிய சோகத்தை அவள் கையைப்பிடிச்சுக்கிட்டு என்னாலே கொட்டித்தீர்க்க முடியும். இரண்டு ஜென்மத்திற்கு முன்னாடி அவ என் தாயா இருந்திருக்கணும். பேய் மாதிரி இறங்கி நடிச்சிருக்கு. ‘யானைப்பசிக்கு சோளப்பொரிகொடுக்கிறியே’ன்னு கத்துது!மறுபடியும் இளையராஜா...

இது அவரோடு மூணாவது படம். அவரைப் புரிஞ்சுக்கிட்டேன்னு நினைத்தால், அந்தக் கிணத்துல இறங்கவே இல்லைன்னு தெரியுது.
கொடுத்திட்டு லண்டன் போயிட்டேன். போன்ல ‘எப்படிய்யா இருக்கு’ன்னு கேட்டதற்கு ‘என்ன இப்படி பண்ணி வைச்சிருக்கே. சேலன்ஜ் ஆக வேலை பார்க்க வேண்டியிருக்கு.பிரமாதம்’னு சொன்னார். அங்கேயே மனசு நிறைவாகிவிட்டது.

ஒரு நாளும் அவர்கூட சண்டை போடாமல் திரும்பினதில்லை. போன உடனே பெத்த பையன் மாதிரி பேசுவார். நான் எதாவது கேட்டு வைக்க திட்டுவார். ‘மரியாதை தரமாட்டேங்கிறே’ன்னு திடீர்னு சொல்வார். ‘பத்தாயிரம் வாட்டி, காலில் விழவா’ன்னு கேட்பேன். ‘அப்பா முடியலை. போய்த் தொலைடா’ன்னு சொல்வார். போனவனை திருப்பிக் கூப்பிடுவார். ‘போகச்சொன்னா போயிடறதா’ன்னு  கேட்பார். அவர் கூட இருந்த நாட்கள் வாழ்ந்த நாட்கள். அந்தத்தாய் இசையாக எனக்கு பெத்துப் பெத்துக் கொடுக்கும்போது அப்படியே ரத்தமும் சதையுமாக நான் வாங்குறேன்.

‘வெக்கை’ நாவல் ‘அசுரனா’ வந்திருக்கு. உங்களுக்கு எந்த  நாவலையும் படமாக்கத் தோணலையா..?

காஃப்காவை திரும்பத் திரும்பப் படிக்கிறேன். என் படங்களில் நான் படித்த பக்கங்களின் அதிர்வுகள் இருந்துகிட்டே இருக்கு. டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கிக்கு எல்லாம் வேறு வடிவம் கொடுக்கலாம். ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’, அவரோட சிறுகதைகளில் சினிமாவா இடம் இருக்கு. ஜெயமோகன் நாவல்களில் ஒர்க் பண்ண ஆசை.

ஆனால், பாருங்க, சினிமா கடைசியில் கத்திரிக்கோலின் ஷார்ப்பில் வந்து நிற்குது. அப்படிச் செய்யும்போது நாவல்கள் காயப்படும். நாவலை படம் பண்றது, பெரிய யானையை வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போய் குளிப்பாட்ற மாதிரி. வரும்போது முதுகு இடிபடும். கழுத்து சுளுக்கிக்கும். தந்தம் உடைஞ்சிடும். அப்படியே நாவலும் உடையும். எப்படி எடுத்தாலும் நாவல் ஆசிரியருக்கு மனசுக்கு ஏத்துக்கிற மாதிரி இருக்காது. நாவல் ஆசிரியர்களே சினிமாவை எடுத்திட்டு. அவர்களே ரசிச்சு பார்த்துக்கட்டும்!

நா.கதிர்வேலன்