கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-35



அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன்

அருணகிரிநாதர், தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல் திண்டாடினார். காரணம், எந்த வேடன் ஆபத்துக் காலத்தில் வனத்தில் துணையாக வந்து வழிகாட்டினானோ அந்த வேடன் இப்போது அங்கு இல்லை! அவனுக்கு பதிலாக நீலமயில் மீது ஆறுமுகத்து எம்பெருமான் அமர்ந்திருந்தார்! அவரது திருமடியில் வள்ளி, தேவசேனா நாச்சியார்கள் அமர்ந்து, அருளாட்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அதைக் கண்டதும் வேடன் வடிவில் வந்து வழிகாட்டியது வேதநாயகன் முருகர்தான் என்பதை அருணகிரிநாதர் உணர அதிக நேரம் பிடிக்கவில்லை. ‘‘அன்று, தேவர்களைக் காக்க அவர்களது சேனாதிபதியாக ஆனாய்... இன்று இந்த சிறியவனைக் காக்க வேடனாகவும் ஆனாயோ முருகா!’’ நெக்குருகினார்.

அவரது பூரிப்பைக் கண்டு அகமகிழ்ந்த கந்தன், ‘‘அருணகிரி! பாடு! சுந்தரத் தமிழால் என்னைப் பாடு! உன் தமிழைக் கேட்கவே வந்தேன்...’’ என்றார்.
‘‘சுவாமி! வேதங்கள் செய்த துதியை விடவா என்னுடைய இந்த புலம்பல் இனிமையாக இருக்கப்போகிறது? இருந்தாலும் தாங்கள் கட்டளை இட்டதால் பாடுகிறேன்...’’இருகண்களிலும் நீர் வழிய வாய் குழறிய படியே தன்னைத் தேற்றிக் கொண்டு பாட ஆரம்பித்தார்.

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆறாத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
 ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்

- அருணகிரி தனது கவிதை என்னும் அமுதத்தால் குமரனை அபிஷேகித்தார். முருகனும் பால் பஞ்சாமிர்தம் முதலிய அபிஷேகத்தை விட இந்தக் கவிதையாலேயே அகமகிழ்ந்தார். அதை அவரது பாதி மூடிய கண்களும் ஜதி பிசகாமல் தாளம் போடும் கைகளும் பைங்க மலர் தாளும் வெளிச்சமிட்டுக் காட்டின. அருணகிரி அமுத மழை பொழிந்து தீர்த்தபின் முருகன் பேச ஆரம்பித்தார். ‘‘ஆஹா... அருணகிரி! என்னே உன் கவிப் புலமை. நான்கே வரியில் நீ கண்ட அற்புதக் காட்சியை தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டாயே?’’ வியந்தபடியே கேட்டார் குகன்.

‘‘இந்தப் புலமை நீங்கள் தந்த பிச்சையல்லவா? பரம்பொருளே! என்னை விட்டு ஆணவம் என்னும் மலம் நீங்கி விட்டதா என்று சோதிக்க இப்படி ஒரு நாடகமா? வேண்டாம் பிரபு. இந்தச் சிறியவனிடம் அது வேண்டாம்...’’ பக்தியில் குழைந்தார் அருணகிரிநாதர்.‘‘சரி அருணகிரி... நான் சொல்வதைக் கேள். இன்று உனக்கு நான் சொல்லப் போகும் பாடம் அதி முக்கியமானது. அதைவிட முக்கியமானது பாடத்தின் முடிவில் உனக்கு வைக்கப் போகும் பரீட்சை...’’ புதிராகப் பேசினார் கதிர்வேலன்.

‘‘தங்கள் சித்தம் என் பாக்கியம் குருநாதா!’’ என்றபடி கைகட்டி வாய் பொத்தி குமரனருகில் உபதேசம் பெறச் சித்தமாக நின்று கொண்டார் அருணகிரியார்.‘‘இன்று உனக்கு அஷ்டமா சித்திகளையும் உபதேசிக்கப் போகிறேன்..’’ அருணகிரியாரின் செவியருகில் வந்து கிசுகிசுத்தார் கந்தன்.
அதைக் கேட்ட அருணகிரியாரின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தன. முருகன் ஒரு மர்மப் புன்னகை பூத்தபடியே அருணகிரியாரின் தலையில் கையை வைத்தார். அந்த தெய்வீக ஸ்பரிசம் தந்த பரவசத்தில் தன்னையும் மறந்து மூழ்கினார் அவர்.

‘‘அருணகிரி! அருணகிரி! கண்களைத் திற...’’ வேலனின் இனிமையான குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தார் அருணகிரி
நாதர். அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்கச் செய்தது. ஆம். முருகன் அவரது சிரத்தில் கைவைத்ததும் ஆறடி இருந்த அவரது தேகம் அணுவையும் விட சிறியதாகிப் போனது. சிறு எறும்பு கூட அவரது கண்களுக்கு ஏதோ ராட்சச பூச்சி போலத் தோன்றியது. காண்பது அனைத்தும் பெரியதாக  இருக்கவே அவர் தன்னையும் அறியாமல் ‘‘கந்தா...’’ என்றார்.

உடன் நொடியில் அவரது உருவம் இமயமலையை விட உயரமாக நெடிது உயர்ந்து வளர்ந்தது. இந்த உலகமே அவருக்கு கால் தூசியைப் போல தென்பட்டது. அதைக் கண்ட அவருக்கு தலையெல்லாம் சுற்றியது. ஒன்றும் விளங்கவும் இல்லை. ‘‘முருகா! இந்த ஏழையை வைத்து ஏன் இந்த விசித்திர விளையாட்டு?’’ அவரது இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன. ஆனால் அவரது உருவம் நன்கு பெருத்திருந்தபடியால் அது அண்டங்கள் எங்கும் எதிரொலித்தது. அருணகிரியார் அச்சத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டார்.

‘‘கண்களைத் திற அருணகிரி...’’ மீண்டும் கேட்டது அந்த இனிமையான குரல். கண்களைத் திறந்தார். எதிரில் அழகே வடிவான முருகனின் சிங்காரத் தோற்றம். ஆனால், அவர் அதை ரசிக்காமல் அச்சத்தில் நடுங்கியபடியே கண்களைத் திறந்தார். எதிரில் சிங்கார ரூபத்தோடு மயில்வாகனன் இருந்தார். அவரது முகம் மர்மப் புன்னகையால் நிரம்பி இருந்தது. ‘‘ஏனப்பா இந்த விளையாட்டு என்று கேட்கிறாயா? சொல்கிறேன் கேள்.... ‘அநோ ரநீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ:’ என்று வேதம் சொல்கிறது.

அதாவது உலகில் அனைத்தையும் விட பெரியது எதுவோ அதுவே அனைத்தையும் விட சிறியதாக இருக்கிறது. அது இந்த உடல் என்னும் குடிலில் இருக்கிறது என்று வேதம் உறுதியிட்டுக் கூறுகிறது.”முருகன் சொன்னது புரியாமல் விழித்தார் அருணகிரி. அதைக் கவனிக்கத் தவறாத கந்தன் மெல்ல நகைத்தார். ‘‘சரி,நீ ஒரு தாயிடம் ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்’ என்று கேட்கிறாய். அதற்கு அந்தத் தாய், அவளது அருகில் இருந்த தன் குழந்தையைக் காட்டி ‘என் வீட்டில் இருக்கும் எல்லாக் குழந்தைகளைக் காட்டிலும் இந்தக் குழந்தைதான் வயதால் பெரியது.

ஆனால், இதே குழந்தைதான் இருக்கும் எல்லாக் குழந்தைகளைக் காட்டிலும் வயதால் சிறியது’ என்று சொல்கிறாள் என்றால் அவளுக்கு எத்தனை குழந்தைகள்?’’ மீண்டும் புதிர் போட்டார் கதிர்வேலன்.‘‘அவர்களுக்கு ஒரே ஒரு குழந்தைதான் என்று பொருள்...’’ அருணகிரியார் சிறிது யோசித்துப் பின் பதில் சொன்னார்.

‘‘அதையேதான் இங்கு வேதமும் சொல்கிறது. பரமாத்மா ஒன்றேதான். அதுவே மலைகளையும் விடப் பெரியது. அணுவைக் காட்டிலும் சிறியது. அந்த பரம்பொருளை உள்ளபடி உணர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்தினால், யாரும் இப்படி பெருக்கவும் சிறுக்கவும் செய்யலாம். இதுவே அனிமா மற்றும் மஹிமா என்னும் சித்திகள்.

எனது மாமா மாலவன் குட்டை வாமனனாக வந்து பின் உலகளந்து நின்றதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்...’’ புன்னகையுடன் முருகன் சொல்லி முடித்தார். அருணகிரி ஏதோ பெரிதாகப் புரிந்தது போல தலையை அசைத்தார். அதைக் கண்ட கந்தன் பூரிப்படைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு திடமான பலகையை அருணகிரியின் முன்னே வைத்தார். பிறகு அருணகிரியை நோக்கி ‘‘அருணகிரி! இதில் அமர்ந்து என் பாதத்தை தியானி...’’ என்று அன்புக் கட்டளையிட்டார்.

அருணகிரியாரும் மறுவார்த்தை பேசாமல் அப்படியே செய்தார். சில நொடிகள் கடந்ததும் அருணகிரி அமர்ந்திருந்த உறுதியான பலகை சுக்கு நூறாக உடைந்தது! அதனால் அவரது தியானமும் கலைந்தது. கண்விழித்து கந்தனை நோக்கினார். அவர் வழக்கம் போல மர்மப் புன்னகை பூத்தார்.
‘‘அன்று இராவணன் கயிலை மலையைத் தகர்க்க அதைப்பெயர்த்தபோது, தங்களது தந்தை ஈசன் தனது கட்டைவிரலை ஊன்றினார். இலங்கை வேந்தன் பாரம் தாங்காமல் இன்னலுற்றான். அந்த நிகழ்வே இப்போது நீங்கள் கற்றுத்தந்தசித்தியின் உதாரணம். என்ன கந்தா சரிதானே?’’
கந்தன் விளக்கம் தரும் முன் அருணகிரி முந்திக்கொண்டார்.

‘‘முற்றிலும் சரி! உடல் எடையை இஷ்டப்படி அதிகரிக்கும் இந்த சித்திக்கு கரிமா என்று பெயர். சரி, மீண்டும் கண்களை மூடி என் பாதத்தை சிந்தனை செய் பார்க்கலாம்...’’ மீண்டும் கட்டளையிட்டார் முருகன். அருணகிரி மற்றொரு ஆச்சரியத்தைச் சந்திக்க சித்தமாக தியானத்தில் ஆழ்ந்தார்.
தியானத்தில் ஆழ்ந்த அருணகிரிக்கு, தான் மிகவும் லேசாகி வானத்தில் பறப்பது போன்று தோன்றியது.

அதை உறுதிப்படுத்திக் கொள்ள கண்களைத் திறந்தார். அவர் நினைத்தது உண்மைதான் என்பது போல தரையை விட மூன்றடி மேலே மிதந்து கொண்டிருந்தார்!அருணகிரிக்கு மூளையில் மீண்டும் பொறி தட்டியது. ‘‘இலங்கைக்கு அனுமன் பறந்து சென்றது இந்த சித்தியைக் கொண்டே! சரிதானா கந்தா?’’ நொடியில், தான் உணர்ந்ததை சொன்னார் அவர்.‘‘முற்றிலும் உண்மை அருணகிரி! உடலை லேசாக்கும் இந்த சித்திக்கு பெயர் லஹிமா!’’
நாகராஜன் கதை சொல்லிக் கொண்டே கண்ணனை நோக்கினார்.

அவன் ‘‘முருகா! குமரா! குகா!’’ என்று முணுமுணுத்த
படியே எம்பி எம்பிக் குதித்தான்.
அவனது இந்தச் செயலைக் கண்ட நாகராஜனும் ஆனந்தியும் பெரிதாக நகைத்தார்கள்.
அவர்கள் நகைப்பதற்குக் காரணம் புரியாமல் கண்ணன் மட்டு
மல்ல... நாகராஜனின் நண்பரான ராகவனும் குழம்பினார்.

அதை கவனித்த நாகராஜன்சிரிப்பதை நிறுத்திவிட்டு பேச ஆரம்பித்தார். ‘‘இப்ப நான் சொன்னேனே சித்திகள்... இதெல்லாம் உயர்ந்த தவ பலம், குரு அருள், அப்புறம் தெய்வ அருள்... எல்லாம் ஒண்ணு சேர்ந்தாதான் கிடைக்கும். அப்படியே இதெல்லாம் சேர்ந்தாலும் உலக ஆசை கொஞ்சம் கூட இல்லாம இருக்கணும். முக்கியமா இந்த சித்திகள் எல்லாம் கைகூடின பிறகு அதை உலக நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தும் பக்குவம் வரணும்... சுயநலத்துக்காக இந்த சித்திகளை பயன்படுத்தவே கூடாது... கண்ணன் சின்னப் பையன் இல்லையா... முருகரை தியானம் செஞ்சுகிட்டே அவன் குதிச்சதும் சிரிப்பு வந்தது... ஏன்னா, கண்ணனும் முருகர் மாதிரியே சின்னப் பையன்தானே...’’

‘‘புரிஞ்சுதா கண்ணா...’’ நாகராஜனின் மனைவி ஆனந்தி மெல்ல வந்து கண்ணனின் தலையைக் கோதினாள். ‘‘வாழ்க்கைல எதுக்காகவும் எந்த நேரத்துலயும் ஆணவப்படவே கூடாது...’’ புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக கண்ணன் தலையசைத்தான்.

‘‘நாகராஜா... சரி, கடைசீல அருணகிரிநாதர் எல்லா சித்தியும் அடைஞ்சாரா இல்லையா?’’ ஆர்வத்துடன் கேட்டார் ராகவன்.
நாகராஜன் கதையைத்தொடர்ந்தார்.

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்