கைதி



விடுதலையாகும் கொலைக் குற்றவாளியே போலீஸ் உயர் அதிகாரிகளைக் காப்பாற்றி மீட்டுக் கொடுத்தால் என்னவாகும்? அதுவே ‘கைதி’.
கோடிகளில் மதிப்பு கொண்ட போதைப் பொருளை பொறிவைத்து பிடிக்கிறார் அதிகாரி நரேன். அதற்கான ஆதாரமான கும்பலையும் ஒட்டுமொத்தமாக பிடிக்க முயல்கிறார்.

இதற்கிடையில் பறிபோன போதைப் பொருட்களை மீட்டுக் கொண்டுவந்து விடும் நோக்கத்துடன் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சுற்றி வளைக்கிறார்கள். போதைப்பொருள் மீட்பைக் கொண்டாட போலீஸ் அதிகாரி களுக்கு மது விருந்து நடக்கிறது. அதில் கடுமையான போதையைக் கலந்துவிட அவர்கள் மயக்கத்தின்வசம் போகிறார்கள்.

இத்தகைய சூழலில் நரேன் என்ன நடவடிக்கை எடுக்கிறார்… விடுதலையாகப் போகும் கார்த்தி அவருக்கு ஏன் உதவுகிறார்… முற்றுகைக்குள்ளான கமிஷனர் அலுவலகத்தின் நிலை என்ன… பார்க்காத மகளைக் காணத் துடிக்கும் கார்த்தியின் எண்ணம் கைகூடியதா என்பதே மீதி திரைக்கதை.
ஒரே இரவில் நடந்த ‘மாநகர’த்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், இந்த முறையும் அதே இருளை நம்பியிருக்கிறார். லாஜிக் கேள்விகள் லோடு லோடாக இருந்தாலும் தியேட்டரில் இருந்தவரை எதையும் எழுப்பாத திரைக்கதை படத்தின் பெரும் உயிர்ப்பு.

ஏற்றிக் கட்டிய லுங்கியும் நெற்றி நிறைய விபூதியும் ரெண்டு மாச தாடியுமாக ஒரு இறுக்கமான வாழ்க்கையை திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் கார்த்தி. உயரப் பறக்கும் ஆக்‌ஷனில் கூட நமக்கு நம்பகத்தன்மையை ஏற்றுகிறார். கல்யாண குணங்களைத் தவிர்க்கும் ஹீரோவை சித்தரிப்பதில் பலருக்கும் இருக்கும் தயக்கத்தை உடைத்து எறிந்திருக்கிறார்.

அதனால் அவரது ஹீரோ ஏற்றக்காட்சிகள் அவருக்கு அதிகமாகவே பொருந்துகின்றன.நரேனுக்கு ஆகச் சிறந்த குணச்சித்திரம். தடம் மாறாத போலீஸ் அதிகாரியின் போக்கை துரிதமாகவும் அளவாகவும் காட்டுகிறார். புதிதாக பணியில் சேரவந்து அலுவலகத்தில் காத்திருக்கும் ஜார்ஜுக்கு இத்தனை சோதனைகள் காத்திருக்குமென்று தோன்றி யிருக்காது. ஆனால், அருமையாக சமாளிக்கிறார்.

போதைக் கூட்டத்தின் அடாவடி தம்பியாக அர்ஜுன் ராஜ் கச்சிதம். ஹரீஷ் பெராடி, ஹரீஷ் உத்தமன், ரமணா என எல்லோரும் ஸ்கோர் செய்கிறார்கள். அந்த லாரி ஓனர் தீனாவின் இருப்பு படத்தின் பதற்ற நிமிடங்களில்கூட புன்னகை தருகிறது. லோகேஷ் - பொன்.பார்த்திபன் வசனங்கள் ஷார்ப்.

கமிஷனர் அலுவலகத்தின் இத்தனை நேர தொடர்பற்ற தனிமை, இவ்வளவு குண்டர் படையையும் ஒற்றை ஆளாய் வெளுத்து வாங்கும் கார்த்தி... நம்ப முடியாவிட்டாலும் அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத திரைக்கதை அமைப்பு நிஜம். மெல்லிய இருட்டு, வேகமான பயணம், குறைந்தபட்ச வெளிச்சம்... படத்தில் இன்னொரு ஹீரோவாகவே இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

இல்லாத பாடல், ஃப்ளாஷ்பேக்கில் கூட வராத ஹீரோயின் ஆச்சர்யம்தான். சாம்.சி,எஸ்.ஸின் பின்னணி இசை படத்தின் ஆதாரம்.புதுமையான ஆக்‌ஷன் கதையில் எமோஷனல் கலந்து விறுவிறுப்பாக சொன்ன வகையில் ‘கைதி’ கவர்கிறான்.                 

குங்குமம் விமர்சனக் குழு