தாயானபிறகு...சர்வதேச ஹாக்கியில் பட்டையைக் கிளப்பும் தமிழக வீராங்கனைகள்!25 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் கனவை இவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்

விளையாட்டில் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பார்கள். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை வயதைக் காட்டிலும் திருமணமே முதல் தடையாக வந்து நிற்கும். பிறகு குடும்பம், குழந்தை, வீட்டு வேலை, அலுவலகப் பணி எனப் பரபரப்பாகி விடுவார்கள். திருமணத்திற்குப் பிறகு பெண்களால் விளையாட்டில் சாதிக்க முடியுமா?

முடியும் என சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் பதினைந்து பேர் கொண்ட தமிழக பெண்கள் மாஸ்டர்ஸ் ஹாக்கி அணியினர்! கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த 17வது ஆஸ்திரேலியன் மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி யில் கலந்துகொண்ட இந்த அணி ஃபைனலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது.

இதில், விளையாடிய வீராங்கனைகளின் வயது என்ன ெதரியுமா? 30, 35 மற்றும் 40 ப்ளஸ்!  ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. 25 ஆண்டுகளுக்குப் பிறகு என் ஹாக்கி ஸ்டிக்கை தூக்கியிருக்கேன். 93ல் திருமணமாகி செட்டிலான பிறகு குழந்தைகள், கணவரின் பிசினஸ்னு வாழ்க்கை வேகமா ஓடிடுச்சு. மறுபடியும் இப்படியொரு வாய்ப்பு வரும்னு கனவுலயும் நினைக்கல...’’ எனக் குதூகலமாகப் பேச ஆரம்பிக்கிறார் அணியின் கோல் கீப்பரான அனிதா.

‘‘இந்த டீம்ல உள்ள எல்லோரும் காலேஜ்ல படிக்கிறப்ப தமிழக அணிக்காக விளையாடினவங்க. சிலர், இந்திய அணி கேம்ப்லயும் கலந்துக்கிட்டவங்க. எல்லோரும் கேம்ப்ல சந்திச்சு நண்பர்கள் ஆனோம். ஆனா, யாரும் இந்திய அணிக்குத் தேர்வாகி சர்வதேச அளவுல போகல. இப்ப அந்தக் குறை தீர்ந்திருக்கு!

இந்த டீம் தயாராக முக்கிய காரணமே தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷனின் பொதுச் செயலாளராக இருக்குற ரேணுகாலட்சுமி மேடம்தான். அவங்க இல்லன்னா நாங்க இவ்வளவு தூரம் போயிருப்போமானு தெரியலை...’’ என அனிதா நிறுத்த... அணி உருவான கதையைத் ெதாடர்ந்தார் ரேணுகா லட்சுமி: ‘‘நான் 80கள்ல இந்திய ஹாக்கி அணிக்கான ேகம்ப்ல ஆடியிருக்கேன். பிறகு, ரயில்வேயில் தேர்வெழுதி வேலைக்குப் போனேன். அப்பெல்லாம் விளையாட்டுக்கான வேலை வாய்ப்பு ரொம்பக் குறைவு. இப்ப ஓய்வு பெற்றதும், அசோசியேஷன் வேலைகள்ல பிஸியா இருக்கேன்.

இந்நேரம், நிர்வாகத்தை கவனிக்கிற இரண்டாவது டீம் உருவாக்கணும்னு தோணுச்சு. ஏன்னா, கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வீடு, வேலைனு தங்கள் உலகத்தைச் சுருக்கிக்கிறாங்க. ஆக்சுவலா டெக்னீஷியனாகவோ, பயிற்சியாளராகவோ அவங்க ஆகலாம். அதன் வழியா தங்கள் விளையாட்டுடன் தொடர்பில் இருக்கலாம். உடலையும் ஃபிட்னஸா வச்சிக்கலாம்.

அதுக்காக தயார்படுத்த நினைச்சப்பதான் பழைய வீராங்கனைகள் நினைவுக்கு வந்தாங்க.முதல்ல என்னோட ஃப்ரண்ட்ஸை சும்மா விளையாட்டைப் பார்க்க வாங்கனு கூப்பிட்டேன். முருகப்பா தங்கக் கோப்பைக்கும், சென்னை லீக் போட்டிகளுக்கும் வந்தாங்க. அப்படிேய ஒருத்தர் வழியா இன்னொருத்தர்னு ஒவ்வொருவரா சீனியர், ஜூனியர்னு பலர் இணைஞ்சாங்க. ஆனா, மாஸ்டர்ஸ்ல விளையாடலாம்னு எனக்குத் தோணல. அதுக்கு அனிதாவின் பேட்ச்ல இருக்கிற ரேகாதான் காரணம்.

அவங்க பேட்ச் செல்போன் வழியா பல்வேறு விஷயங்களை அப்டேட்டா வச்சிருக்காங்க. அவங்க கூட விளையாடிய சீனியர், ஜூனியர்ஸை இணைச்சாங்க. பிறகு, மாஸ்டர்ஸ் கேம் பத்தி தெரிஞ்சுகிட்டு எங்கிட்ட வந்து நின்னாங்க. ‘நாங்க மறுபடியும் விளையாடலாம்னு நினைக்கிறோம் மேம்’னு அவங்க சொன்னப்ப எனக்கும் சேர்ந்து விளையாடணும் போல இருந்துச்சு. உடனே ஓகே சொன்னேன். மத்தபடி அவங்க பயிற்சிதான் அவங்கள பேச வச்சிருக்கு...’’ பூரிப்புடன் சொல்கிறார் ரேணுகா லட்சுமி.

அவரைப் பார்த்து மலர்ச்சியுடன் தொடர்ந்தார் அனிதா: ‘‘எலினா, லதா, ஷீலா, லட்சுமி, லாவண்யா, ரஸ்னா, தெரசா பெல்லா, மேனகா, டீனா, திலகம், தேன்மொழி, ராஜேஸ்வரி, ரேகா, சாருமதி கூட என்னையும் சேர்த்து மொத்தமா பதினைஞ்சு பேர் கொண்ட டீம். இதுல லதா நெய்வேலி பள்ளில பி.டி டீச்சரா வேலை பார்க்கறாங்க.

அத்துடன், தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷனின் துணைப் பொதுச்செயலாளராவும் இருக்காங்க.இதேபோல, மேனகாவும், தெரசா ெபல்லாவும் பி.டி டீச்சர்ஸா வேலை செய்றாங்க. அப்புறம், திலகம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தேன்மொழி தலைமைக் காவலராகவும் பணியாற்றுறாங்க. டீனா ஆர்பிஎஃப்ல இருக்கார். அணி கேப்டனான ரேகா அடையாறுல பெண்கள் விடுதி நடத்திட்டு இருக்கார். ராஜேஸ்வரி வங்கி வேலைல இருக்காங்க. சாருமதி கேரளாவுல பணி செய்றாங்க. மத்தவங்க வீட்டுல இருக்கோம்.

மறுபடியும் நாங்க பயிற்சியைத் தொடங்கினதும் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நான் கோல் கீப்பரா இருக்கேன். என் உடல் வெயிட்டுடன் பதினெட்டு கிலோ கிட்டையும் தூக்கணும். ஆரம்பத்துல முடியல. என் கணவரும், ரெண்டு பொண்ணுங்களும் உன்னால முடியும்மானு ரொம்ப உற்சாகப்படுத்தினாங்க. என்னோட பொண்ணுங்க கீப்பர் கிட்டை தூக்கிட்டு வர்றதுல இருந்து மாட்டி விடுறது வரை உதவி செய்தாங்க. என்னைப் போலவே மற்றவங்க வீடுகளிலும் அவங்க கணவர்களும், பசங்களும் என்கரேஜ் பண்ணினாங்க.

அதனால, பயிற்சியை நம்பிக்கையா செய்தோம். முதல்ல சென்னை லீக்ல விளையாடி ஜெயிச்சோம். பிறகு, டேராடூனில் நடந்த மாநிலங்களுக்கிடையேயான போட்டிகள்ல தமிழக அணியாகப் போய் வெற்றியை ஈட்டினோம். அதனால, ஐரோப்பிய மாஸ்டர்ஸில் விளையாட வாய்ப்பு வந்துச்சு. கெலோ மாஸ்டர்ஸ் கேம் அசோசியேஷன்ங்கிற பெயர்ல போனோம்.

இப்ப தமிழக அணியே இந்திய அணியா கலந்துக்கிட்டது! ஏன்னா, மாஸ்டர்ஸைப் பொறுத்தவரை நம்ம கைக்காசு போட்டுதான் விளையாடணும். ஸோ, விளையாட்டுல ஆர்வமும், செலவு செய்ய வசதியும் இருக்கிறவங்க விளையாடலாம். அதனால, வேறு சில மாநில பிளேயர்ஸ் ஒதுங்கிட்டாங்க. நாங்க விளையாட்டுதான் முக்கியம்னு நின்னோம்.

கடந்தாண்டு இத்தாலியில நடந்த ஐரோப்பிய மாஸ்டர்ஸ்ல வெண்கலப் பதக்கம் வென்றோம். இப்ப ஆஸ்திரேலியாவுல வெள்ளி வாங்கியிருக்கோம். ஃபைனல்ல டைபிரேக்கர்ல வெற்றி வாய்ப்பு பறிபோயிடுச்சு. இப்ப மறுபடியும் விளையாடணுங்கிற எங்க கனவும், இந்தியா சார்பா சர்வதேச போட்டிகள்ல விளையாடணுங்கிற லட்சியமும் நிறைவேறியிருக்கு...’’ என நெகிழ்கிற அனிதா, ‘‘இப்ப, எங்க அணி அடுத்த ஆண்டு ஜப்பானில் நடக்கவுள்ள உலக மாஸ்டர்ஸ் போட்டிக்காக தயாராகிட்டு வருது. நிச்சயம் இதுல தங்கம் வெல்வோம்!’’ என்கிறார் நம்பிக்கையுடன்!   

பேராச்சி கண்ணன்