தொல்(லைக்) காப்பியம்அண்ணன் பூமான்!

அவெஞ்சர்ஸ் தலைவன் அயர்ன்மேனைக் கூட தெரியாதவர்கள் இந்த அகிலத்தில் உண்டு. ஆனால் ,அண்ணன் பூமானைத் தெரியாதவர்கள் யாருமே கிடையாது. விரல் சப்பி விளையாடும் குழந்தைகளில் இருந்து குரல் கம்மிக் கிடக்கும் கிழவர்கள் வரை, தங்கள் மாமனை மறந்தாலும் அண்ணன் பூமானை மறக்காமல் இருப்பார்கள்.

இன்னைக்கு அண்ணனோட ஹிஸ்டரி ரொம்பவே மிஸ்டரியா இருந்தாலும், ஒரு காலத்துல, கருப்புச் சட்டை போட்டு கை முஷ்டி மடக்கி, கழுத்து நரம்பு புடைக்க அவரு கத்துன கத்துல,பூமி கூட பத்து நிமிஷம் சரியா சுத்தல. அவரை போராளின்னு நினைச்சு போன பலரும் இன்னைக்கு ஏமாளியா போனாலும், இப்பவும் தன்னோட குண நலன் மாறாம, மன நலன் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேரை வச்சு பக்காவா பிசினெஸ் பண்ணிக்கிட்டுதான் இருக்காரு.

தமிழ் சினிமாவில் ஹீரோ முன்னேற எப்படி ஒரு பாட்டோ, அது போல அண்ணன் முன்னேற உதவியது ஒரே ஒரு போட்டோ. அண்ணன் பூமானின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அவர் யாரை இன்று டாப்ல வைக்கிறாரோ, அவருக்கு எதிர்காலத்தில் ஆப்பு வைப்பார். புழல் ஏரி, போரூர் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரின்னு எல்லா ஏரியையும் தூர் வாரிடலாம். ஆனா, அண்ணன் வாய்ல இருந்து வர வந்தேறிய மட்டும் தூர் வார முடியாது.  

மிட்நைட் மசாலா பாடல்களை விட உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது மேடையில் அண்ணன் பேசும் சிறப்புரை மற்றும் ஏசும் பரப்புரை. இன்னைக்கு அவரு பேசுறதை பார்க்கிறப்ப, சாப்பாட்டுல நெய் ஊத்தி சாப்பிடுறாரா இல்லை பொய் ஊத்தி சாப்பிடுறாரான்னு சந்தேகம் வந்தாலும், நாம இந்தியருன்னு ஆதார் அட்டை வாங்கிக்கிற மாதிரி, இவருகிட்ட ஒரு அடையாள அட்டை வாங்கிக்கிறதும் நல்லது.

‘வீழ்ந்து விடாத அண்டா, விளக்கி வைக்காத குண்டா, தீஞ்சுவிடாத ஆட்டுக்கறி, தீர்ந்துவிடாத ஆமைக்கறி...’ என்ற கூர்மையான கோஷத்தை எப்போதும் முன்னெடுக்கும் அண்ணன் பூமான், தனது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளாக பலவற்றை கதைக்கும் போதெல்லாம் அதன் மேஜிக்கை மறந்துவிட்டு லாஜிக்கில் ஏதோ உதைக்கிறது என நினைப்பவர்களுக்கு சொல்கிறேன்... பாலின் நிறம் வெண்மை, அவர் சொல்வதெல்லாம் உண்மை, அதை நம்புவதே உன் உடம்பிலுள்ள 206 எலும்புகளுக்கும் நீ செய்யக்கூடிய நன்மை!

பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருக்குறளை எழுதிவிட்டு திரைத்துறையில் பாட்டெழுத வாய்ப்பு தேடிய ஒரு நன்னாளில், பின் சக்கரம் பஞ்சரான தனது சைக்கிளை திருவள்ளுவர் தள்ளிக்கொண்டு போனபோது, வள்ளுவரோடு ஒட்டிக்கொண்டும் சைக்கிளோடு முட்டிக்கொண்டும் நடந்து தமிழ் படித்தவர்தான் நமது அண்ணன்.

1782ஆம் ஆண்டு, திப்பு சுல்தான் பீரங்கில குண்டு சிக்கிக்கிட்டப்ப, தன் சுண்டுவிரலை விட்டு நோண்டி எடுத்தவர்தான் அண்ணன் பூமான்.
சித்தார்த்தர் S/o சுத்தோதனர் என்கிற தனது அடையாளத்தை துறந்து, போதி மரத்தடியில் படுத்திருந்த புத்தருக்கு பாஸ்போர்ட் எடுத்துத் தந்து சீனாவுக்கு அனுப்பியது நமது அண்ணன்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்தது பனிப்போர் என்றாலும் வீரர்களுக்கு குளிருமே என காஷ்மீர் கம்பளத்தை கை காசு போட்டு வாங்கி அனுப்பியவர் அண்ணன் பூமான். கன்யாகுமரியில் தியானம் செய்ய விவேகானந்தர் அந்த பாறைக்கு போகும் முன், நீரில் நீந்திச் சென்று பாறையில் டிஸ்டர்ப் செய்த நாரைகளைத் துரத்தி விட்டவர் நம் அண்ணனைத்தவிர வேறு யார்?

இவ்வளவு ஏன், இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் பேன்ட் பாக்கெட் துப்பாக்கியை எடுத்து துடைத்துக் கொடுக்கும் அளவுக்கு அண்ணனுக்கு பழக்கம் இருந்தது. ஒரு முறை மகிழ்மதி வழியாக மலேசியா செல்லும்போது, பெரிய பாகுபலி கேட்டுக்கொண்டதுக்கு இணங்க குட்டி பாகுபலிக்கு போர்ப் பயிற்சி அளித்தவர் நமது அண்ணனே!

பணப்பெயர்ச்சி பலன்கள்

நம்ம நாட்டுல பசு மாட்டுக்கு கிடைக்கிற மரியாதை கூட பத்து, இருபது, அம்பது ரூபா நோட்டுக்கு கிடைக்கிறது இல்ல. பத்து ரூபாய்க்கு ஒரு டீயும் பன்னும் சாப்பிடமுடியாது. இருபது ரூபாய்க்கு நல்லதா டிபனும் சாப்பிடமுடியாது. சாவித்திரி காலத்துல அம்பது ரூபாய்க்கு சில்லறை தேடிய மக்கள், சமந்தா காலத்துல ஐம்பது ரூபாயவே சில்லறையாதான் பார்க்கிறாங்க. அதனால இதற்கு அடுத்த நிலையில இருக்கிற நோட்டுகளுக்கு இலையைப் போடுவோம்.

ரூ.100 நோட்டு

மாசி மாசம் மேரேஜ் பண்ண திட்டம் போட்டானாம். ஆனா, மார்கழி குளிருக்கே மட்டுப்படாம மேல போயிட்டானாம்ங்கிற கதையா காத்துல காட்டுன பெட்ரோல் மாதிரி கைல எடுத்தாலே கால் நிமிஷத்துல செலவாகுற நோட்டுதான் 100 ரூபா நோட்டு.

இருந்தாலும் இது பணப் புழக்கத்தில் கங்கை ஆறு. கடும் கோடைகாலத்தில் கிடைக்கின்ற கூலிங் மோரு. கரன்சிகளின் சூப்பர்ஸ்டாரு.
பணக்காரர்களுக்கு இது எப்பவாவது பேப்பர்ல படிக்கிற குண்டுவெடிப்பு. ஆனா, எளியவர்களுக்கு நித்தம் கேட்கிற நாடித்துடிப்பான நூறு ரூபாய் நோட்டுக்கு இந்த பணப்பெயர்ச்சி காலம்னு இல்ல எந்த காலத்துலயும் அழிவே இல்ல.

 எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிறம் மாறி வருமே தவிர இது என்றுமே அழிவில்லாத வகையில் வரம் வாங்கி வந்தது. நாலாம் வீட்டுல மரு வச்சு சனிபகவான் சைலன்ட்டாக, ஏழாம் வீட்டுல குருபகவான் வயலன்ட்டாக, வருகின்ற வருஷத்துல எல்லா பேட்டையிலும் கோட்டை கட்டி வாழும்.

ரூ.200 நோட்டு

கரன்சி கலர்களில் நீதான் சவுகார்பேட்டை சேட்டு. சரக்குக்கும்
சைட்-டிஷ்ஷுக்கும் கச்சிதமாய் tallyயாக டாஸ்மாக்குக்கென அடிக்கப்பட்ட பெர்ஃபெக்ட் நோட்டு. ரெண்டாயிரம் நோட்டுக்கு சில்லறை தரவே படைக்கப்பட்ட இது, இந்த வருஷ பணப்பெயர்ச்சில கல்லறைக்குப் போக வாய்ப்பு குறைவு.

ரூ.2000 நோட்டு

பொதுத் தேர்தலை நடத்தும் புண்ணியவானே, இடைத்தேர்தலைக் காத்தருளும் கண்ணியவானே, நயன்தாராவைக் காத்திடும் விக்னேஷ் சிவன் போல நாடாள்வோரைக் காப்பாற்றும் பிங்க் கலர் சிவனே, இரவு நேர இளையராஜா பாட்டு, அதுவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு!
இதன் மீது சிரிக்கிறார் வெட்கப்பட்டு காந்தி, இதைப் பெறவே நிற்கிறோம் இரு கைகள் ஏந்தி.

ஏழைகளின் கைகளில் எப்பவாவதும், பணக்காரங்க பைகளில் எப்பொழுதும் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கு, இந்த பணப்
பெயர்ச்சி காலகட்டத்துல, எட்டாம் வீட்டுல இருக்கிற ரிசர்வ் வங்கி எந்திரிச்சு எதிர்வீட்டுக்கு கதை பேசப் போனதால, காதுல ஆடுற கம்மலை வித்து தும்மலுக்கு வைத்தியம் பார்க்கிற நிலைமை வந்திடுச்சு.

ஆயுள் ரேக, அழி ரப்பர் தேய்க்காமயே அழிஞ்சுபோக, கூடிய விரைவில் காணவில்லை போஸ்டரோ, கண்ணீர் அஞ்சலி போஸ்டரோ அடிக்க நேரம் வந்திடுச்சு. ஆக, கடைசியா சொல்றது என்னன்னா, 2000 ரூபா நோட்டு இல்லாதவன் மனசைத் தேத்திக்க. நோட்டு இருந்தா உடனே மாத்திக்க!

ரூ.500 நோட்டு

சீன அதிபர் வாராருன்னு மாமல்லபுரம் சிற்பங்கள் சுத்தமா துடைக்கப்பட்டது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை மிடில் கிளாஸுக்காகவே அடிக்கப்பட்டது 500 ரூவா நோட்டு என்பது. அரசாங்க அலுவலகங்களின் அதிகாரபூர்வமற்ற அனுமதிச் சீட்டு இந்த ஐநூறு ரூபாய் நோட்டு.

எட்டுல சுக்ரன் கெட்டாலும், ஏழுல சூரியன் வாழுறதால, நடிகர் லாரன்ஸ் பேய்களைப் புடிக்கிற காலம் வரைக்கும் இந்த நோட்டுக்கு நோய்கள் புடிக்காது. மத்திய வர்க்கம் மொய் வைக்கறதுக்காகவே இந்த நோட்டு மேல இப்போதைக்கு கை வைக்க மாட்டாங்க. போன தடவை ஐநூறு நோட்டை மாத்தினதுக்கே மக்கள் கோவத்துல பார்க்கிறதுனால, இப்போதைக்கு இதுக்கு end கார்டு இல்லை.

தோட்டா ஜெகன்