ஓவியர் ஷாம்லி! முகம் மறுமுகம்அஜீத் ஃபேமிலியில் ஒரு ஓவியர் ரெடி. ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது வாங்கிய ஷாம்லி, பின்னர் ஹீரோயினாக சில படங்களில் சிறகடித்தார். அதன்பின், சிங்கப்பூரில் ஃபிலிம் மேக்கிங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஜெர்மனியில் வெஸ்டர்ன் டான்ஸ் கோர்ஸ் என பன்முகமாக மினுமினுத்தவர், இப்போது கையில் தூரிகை பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்!விதவிதமான ப்ரஷ்ஷும், கலர்ஃபுல் பெயிண்ட்ஸுமாக ஷாம்லி இப்போது பிசி.

‘‘அந்தப் படத்துல a girl in next door ரோல் பண்றேன். நல்ல கேரக்டர், நல்ல கதை. டோலிவுட்டிலும் பண்ணிட்டிருக்கேன்...’’ இப்படி சினிமாவைப்
பற்றிப் பேசிய ஷாம்லியின் பேச்சில் இன்று ஆச்சரிய மாற்றம். ‘‘ஆயில் பெயிண்டிங்கில் இருந்து அக்ரிலிக் பெயிண்டிங் வரை இப்போ அத்தனையும் வரைய வருது...’’ என கெத்தாக ஆரம்பிக்கும் ஷாம்லி, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஓவியக் கண்காட்சி ஒன்றில் தனது ஓவியங்களையும் வைத்து, வரவேற்பை அள்ளியிருக்கிறார்.

‘‘சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரையறதுல ஆர்வம். அப்ப நடிப்புல பிசியா இருந்தேன். தினமும் ஷூட் இருக்கும். படிப்பு பாதிக்காம பார்த்துக்கிட்டேன். அவுட்டோர்ல பிரேக் கிடைக்கிறப்ப பேப்பர், பென்சிலை எடுத்துக்கிட்டு ஏதாவது வரைவேன். மெல்ல மெல்ல இதுவே ஹாபியா மாறிச்சு! வளர்ந்து படிப்பு, நடிப்புனு டிராவல் பண்றப்ப என் அக்கா பெண் - ஆமா... அஜீத் சாரோட மகதான் - அனோஷ்கா, பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோ சார்கிட்ட ஓவியம் கத்துக்க ஆரம்பிச்சா. இளங்கோ சார் பெயிண்டிங்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தொன்மத்தையும் நவீனத்தையும் ஒருசேர அவர் ஓவியங்கள் பிரதிபலிக்கும்.

யதார்த்தமான மனித உணர்வுகளையும், உருவங்களையும் வரையறதுலதான் எனக்கும் ஆர்வம். அதனால அனோஷ்காவை டிராயிங் க்ளாஸுக்கு கூட்டிட்டுப் போய் வந்ததுல நானும் இளங்கோ சார் மாணவியாகிட்டேன்! அப்புறம், சிங்கப்பூருக்கு ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிக்க போயிட்டேன். அங்கேயும் சரி, நியூ இயருக்காக ஜெர்மனிக்கும், சம்மருக்காக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு போனப்பவும் சரி... வெஸ்டர்ன் டான்ஸ் கத்துக்கிட்ட கையோடு அந்தந்த ஊர்ல இருந்த ஓவியக் கண்காட்சிகளுக்கும் போனேன்.

ஓவியம் வரைவது மட்டுமில்ல... அதைப் புரிஞ்சுக்கறதும் ஒரு கலைதான். வெளிநாடுகள்ல ஓவியங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும், மரியாதையும் தனி.
இதை நேர்ல பார்த்தப்ப எனக்குள்ள உத்வேகம் பிறந்தது. நாமும் நிறைய வரையணும்... இதே மாதிரி கண்காட்சி நடத்தணும்னு முடிவு செய்தேன்...’’ மலர்ச்சியுடன் சொல்லும் ஷாம்லி, ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் ஸ்கெச்சிங் செய்ய ஆரம்பித்தாராம்.

‘‘ஓவியத்தின் பலமே கோடுகள்தான். கோடுகளின் தன்மை தெரிஞ்சாலே, கிரியேட்டிவ் மைண்ட் ஒர்க் ஆக ஆரம்பிச்சுடும். ஸ்கெச்சிங் தவிர வாட்டர் கலரிங், அக்ரிலிக்னு வெரைட்டியான ஃபார்ம்ஸ்ல வரைய ஆரம்பிச்சுட்டேன். என் ஒவ்வொரு ஓவியமும் அந்தந்த நேர மன ஓட்டத்தை
பிரதிபலிக்கும். அந்தந்த மூடுக்கான கலர்ஸையே பயன்படுத்துவேன். ஒரு பெயிண்டிங்குக்கு எத்தனை நாட்கள் ஆகும்னு சொல்ல முடியாது. அது நம் ஐடியாவைப்பொறுத்தது.  ரெண்டு நாள்லயும் முடிச்சிருக்கேன். மாசக்கணக்குலயும் வரைஞ்சிருக்கேன்.

மோனலிசா ஓவியம் முழுமை பெற 12 வருஷங்கள் ஆச்சுனு சொல்வாங்க. எப்படி செதுக்க செதுக்க சிற்பங்கள் புதுவடிவம் கொடுக்குமோ அப்படி டச் பண்ண டச் பண்ண ஓவியமும் மெருகேறும்.ஆக்சுவலா ஓவியம் வரைய ஆரம்பிச்சாலே கவனிக்கும் திறனும், கல்வித்திறனும் அதிகரிக்கும். இப்ப நிறைய வரைய ஆரம்பிச்சிருக்கேன். எப்பவும் பெயிண்ட்டும், ப்ரஷ்ஷுமா நான் இருக்கறதைப் பார்த்து எல்லாரும் ஆச்சர்யப்படறாங்க. பெண்களின் மறுபக்கத்தை ரியலிஸ்டிக் ஃபார்ம்ல வரைய பிடிக்கும்.

ஏழெட்டு ஓவியங்கள் ரெடி பண்ணிட்டேன். சென்னைல சோலோவா ஒரு கண்காட்சி வைக்க நினைச்சேன். அப்பதான் பெங்களூரு எக்ஸிபிஷன்ல சான்ஸ் கிடைச்சது...’’ புன்னகைக்கும் ஷாம்லியின் பேச்சு, பெங்களூர் ஆர்ட் எக்ஸிபிஷன் பக்கம் திரும்பியது.

‘‘என்னோட மாஸ்டர் ஏ.வி.இளங்கோ சார்தான் அவரோட ஆர்ட் ஸ்பேஸ்ல பங்கேற்க வச்சார். இந்தக் கண்காட்சில ‘diverse reflections’ தீம்ல படங்கள் இடம்பெற்றன. ஏ.வி.இளங்கோ சாரோட மாணவர்களின் ஓவியங்களைத்தான் இதுல வைச்சோம். அஃப்ஷனா ஷமீன், ஐஸ்வர்யா, காந்திமதி, வி.பரிமளா  கோபிநாத், ரீனா, நான், வினிதா ஆனந்த்னு மொத்தம் எட்டு பேர்களோட ஒர்க்குகள் இருந்துச்சு.

எல்லா ஓவியங்களுமே அக்ரிலிக் பெயிண்ட்டிங்ஸ். நாங்க எட்டு பேருமே வெவ்வேறு துறைகள்ல இருந்து வந்தவங்க. ரீனா, மலேசியாவைச் சேர்ந்தவங்க. ஐஸ்வர்யா பயோகெமிக்கல் என்ஜினியர். காந்திமதி பெங்களூரைச்சேர்ந்தவங்க. வினிதா ஆனந்த் திருவனந்தபுரம். அவங்க கிரேட் ஆர்ட்டிஸ்ட் ராஜா ரவிவர்மாவோட தங்கை மங்களாபாய் தம்புராட்டியோட பேத்தி! பென் அண்ட் இங்க்ல வரையறதுல ஷங்கர் எக்ஸ்பர்ட்.

சிலர் மிக்ஸ்ட்வுட்ல வரைஞ்சிருந்தாங்க. நான் கேன்வாஸ்லதான் வரைஞ்சிருந்தேன். சிலர் மாடர்ன் சிற்பம் வெர்ஷன்ல பண்ணியிருந்தாங்க. எக்ஸிபிஷனோட முதல் நாள் முதல் பட ரிலீஸ் மாதிரி படபடப்பா இருந்துச்சு. அப்புறம் நார்மலாகிட்டேன். பலரும் என் ஒர்க்கை பாராட்டினாங்க. நல்ல டீமோட நானும் இருந்திருக்கேன் என்பதில் பெருமைதான்.  

கத்துக்கறதுக்கான எல்லை விரிவடைந்திருப்பதா நினைக்கறேன். அஜீத் சாருக்கு கார் ரேஸ், போட்டோகிராஃபினு இன்னொரு டேலன்ட் இருக்கு. அக்கா ஷாலினி பாட்மின்டன்ல கெட்டிக்காரங்க. அவங்களைப் போல எனக்கு பெயிண்ட்டிங் அமைஞ்சிருக்கு. இந்த எக்ஸ்ட்ரா டேலன்ட் டைவீட்ல எல்லாருமே என்கரேஜ் பண்றாங்க. சில ஃப்ரெண்ட்ஸுங்க, ‘நடிப்பில் கவனம் செலுத்தாம, இப்படி வரைஞ்சுக்கிட்டு இருக்கியே’னு வருத்தப்படறாங்க.

எனக்கு இதுவும் passion. நிறைய வரையணும்னு ஐடியா இருக்கு. நாம பார்க்கற விஷயத்தைத்தான் ஓவியமாக்கணும்னு நினைக்கறேன். அது கண்ணுக்கு அழகா, கலர்ஃபுல்லா, சுதந்திரமா... அப்படியே உறைய வைக்கற ஃப்ரேம்ல இருக்கணும்னு நினைச்சு ஒர்க் பண்றேன். என் ஒர்க்குகளை எல்லாம் ஒரு சோலோ ஷோவா சென்னைல வைக்க ஐடியா இருக்கு!’’ என்கிறார் ஷாம்லி.

மை.பாரதிராஜா