அது என்ன பஞ்சமி நிலம்?சில மாதங்களுக்கு முன்பு, ‘‘சோழர்கள் காலத்தில்தான் தலித்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன...’’ என இயக்குநர் பா.இரஞ்சித் ஒரு விவாதத்தைக் கிளப்பினார். இன்று தலித்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் குறித்த ஆழமான உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறது ‘அசுரன்’ திரைப்படம்.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது செங்கல்பட்டில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் திரெமன்ஹீர் என்ற வெள்ளைக்காரர்.

அவர் 1891ல் ‘பறையர் நிலை’ எனும் தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். ‘பறையர்கள்தான் விவசாய வேலைகளை எல்லாம் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் சொந்தமாக ஒரு துளி நிலம் கூட இல்லை. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது...’ என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம்.

ஒருவேளை நிலம் அவர்களுக்குக் கிடைத்தால் உற்பத்திப்பெருக்கத்தோடு அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேன்மையுறும் என்பது அவரது வாதம். வெறுமனே வாதம் மட்டும் செய்யாமல் இதை பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கும் எடுத்துச் சென்றார். பிரிட்டிஷ் பாராளுமன்றமும், சென்னை மாகாண அரசும் இந்த அறிக்கையை சீர்தூக்கிப் பார்த்தன. அடுத்த ஆண்டே திரெமன்ஹீர் சொன்ன 12 லட்சம் ஏக்கர் நிலத்தை ஒடுக்கப்பட்டோருக்கு விநியோகிக்க அரசு  ஆணை பிறப்பித்தது.

இதுதான் பஞ்சமி நில ஆணை என்னும் புகழ்மிக்க ஆணை. 100 வருடம் கடந்தும் அந்த நிலங்கள் ஒடுக்கப்பட்டோரின் கைகளுக்குப் போய்ச்சேரவில்லை அல்லது அந்த நிலங்கள் மடைமாற்றப்பட்டு ஆதிக்கச் சாதியினரிடமும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களிடமும் மாட்டிக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.
இதுதொடர்பாக சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளரான சாமுவேல் ராஜிடம் பேசினோம்.

‘‘திரெமன்ஹீர் குறிப்பிடுகிற 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் சுமார் 40 சதவீதம் அன்றைய செங்கல்பட்டு, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காட்டைச் சுற்றிய பகுதிகளில் இருந்தன. அதாவது இன்றைய செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், கல்லிடைக்குறிச்சி, வேலூர் பகுதிகளில் உள்ளன...’’ என்று ஆரம்பித்தவர் பஞ்சமி நிலம் தொடர்பான ஆணைக்கு என்ன நடந்தது என்று விவரித்தார்.

‘‘ஒரு சிலருக்குத்தான் பஞ்சமி நிலம் போய்ச் சேர்ந்தது. மற்றபடிக்கு அந்த நிலங்கள் எல்லாம் ஆதிக்க சாதிகளிடம் தான் மறைமுகமாக இருந்தது. இன்றைய நிலையில் பஞ்சமி நிலம் எங்கு உள்ளது என்பதையே கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அரசிடம் போய் கேட்டால் இப்போதைக்கு சுமார் 1.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள்தான் கணக்கில் உள்ளதாகச் சொல்கின்றனர். ‘நிலத்தை பிறகு பிரித்துக் கொடுக்கலாம். முதலில் அது எங்கே இருக்கிறது’ என்பதற்கான ஆதாரத்தைத் கேட்கிறோம். ஆனால், அதற்கு சரியான பதில் இல்லை.

பயனாளிகளும், சில அமைப்புகளுமாகச் சேர்ந்து வழக்குகளைத் தொடுத்திருக்கிறார்கள். தீர்ப்புகள்கூட சிலவற்றுக்குத்தான் வந்திருக்கிறது. தீர்ப்புகள் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் திறன் அரசிடம்தான் உள்ளது. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது கருப்பன் ஐஏஎஸ் தலைமையில் ஓர் ஆணையம் ஏற்படுத்தினார்கள். ஆனால், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது அந்த ஆணையத்தை புதுப்பிக்கவில்லை.

இதனால் அந்த ஆணையத்தின் செயல்பாடே முடங்கியது. அது செயல்பட்டிருந்தால் பஞ்சமி நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடந்திருக்கும்.
இப்போதைக்கு பயனாளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றுசேர்ந்து போராடத்தான் முடிகிறது. ஆனால், 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பஞ்சமி நிலங்களை முழுவதுமாக பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் அது அரசால்தான் முடியும்...’’ என்ற சாமுவேல் ராஜ், சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்:‘‘பஞ்சமி நிலம் தொடர்பான சட்டமே ஒடுக்கப்பட்டவரைத் தவிர இந்த நிலங்களை மற்ற சாதியினர் வாங்கக்கூடாது என்றுதான் இருக்கிறது. ஒருவேளை வழக்குகள் தொடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்தாலும், இப்போது நிலத்தை வைத்திருப்பவருக்கு அரசு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது.

ஆனால், இன்றைய நில உரிமையாளர்கள் அந்த நிலங்களில் தோட்டமும் துரவுமாக சுகபோகத்துடன் வாழ்கிறார்கள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஜமாபந்தி மூலம் நிலங்களை சரி பார்க்க ஒரு முறையையும் சட்டம் கொண்டுவந்தது. ஆனால், இதுவும் சிறப்பாக நடைபெறுவதில்லை.
இப்படியாக பஞ்சமி நிலங்களின் ஆதாரங்கள் ஒருவர் மாறி இன்னொருவர் என்று கைமாற்றப்பட்டு, பஞ்சமி நிலமா என்பதற்குரிய ஆதாரத்தையே இழந்து நிற்கிறது அந்த நிலம்.

ஆனால், சென்னை ஆவணக் காப்பகத்தில் ஆயிரம் வருடத்துக்கு உரிய நில ஆதாரங்கள் உள்ளன. அவற்றை சோதனை செய்து வெளியிடுவதற்கான திறனும் உரிமையும் அரசிடம்தான் உள்ளது. அரசு முன்வந்தால் இவையெல்லாம் சாத்தியமாகும்...’’ என சாமுவேல் ராஜ் முடிக்க, பஞ்சமி நிலம் சார்ந்து ஆய்வு செய்திருக்கும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பணிபுரியும் உதவிப் பேராசிரியரான ஜெரோம் சாம்ராஜ் ஆரம்பித்தார்:‘‘அன்றைய சென்னை மாகாணத்தின் எல்லா கலெக்டர்களும் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டது.

அதில் திரெமன்ஹீரின் அறிக்கைதான் முத்தாய்ப்பாக இருந்தது. காரணம், அவர் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஆழமாக எழுதியிருந்தார். நிலம் மட்டுமில்லாமல் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தனியான பள்ளிக்கூடம், குடியிருப்பு போன்ற விஷயங்களையும் சேர்த்திருந்தார். அத்துடன் ஒடுக்கப்பட்டவர்கள் பிறரின் நிலத்தில் வேலை செய்வதால் கல்விக்கும், உயிருக்கும் கூட ஆபத்து இருப்பதாகக் கருதினார்.

காடாக இருந்த தரிசு நிலங்களை அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அந்தக் காட்டை விளைநிலமாக மாற்றி விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வார்கள் என்று நம்பினார்...’’ என்றவர், பஞ்சமி நிலங்கள் தொடர்பான விநியோக முறையையும் எடுத்துரைத்தார்:

‘‘ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. காலப்போக்கில் பல்வேறு பொருளாதார, சமூகப் பிரச்னைகளாலும், வறுமை, குடும்பச் சூழலாலும் இந்த நிலங்கள் ஆதிக்க சாதிகளின் கைகளுக்குப் போனது.

ஒடுக்கப்பட்டோருக்குக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை விற்கக்கூடாது, அப்படியே விற்றாலும் அதை இன்னொரு ஒடுக்கப்பட்ட குடும்பத்துக்குத்தான் விற்க வேண்டும். ஒருவேளை மற்ற சமூகத்துக்கு விற்கப்பட்டிருந்தால் அந்த நிலத்தை அரசே எடுத்துக்கொள்ளவேண்டும் போன்ற கெடுபிடியான சட்டங்கள் இருந்தாலும் அரசு இந்த சட்டங்களை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.

அதனால்தான் இன்று பஞ்சமி நிலங்களை ‘கிணத்தைக் காணோம்’ எனும் நிலையில் தேடவேண்டியுள்ளது. அண்மைக்காலங்களில்கூட இதுதொடர்பான சட்டங்களை நீதிமன்றங்கள் புதுப்பித்து வருகின்றன. ஆனால், அரசே நேரடியாக இறங்காத வரையில் இதுபோன்ற நல்ல காரியங்களுக்கு விடிவு காலம் பிறக்காது.

தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஒடுக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 சதவீதம். ஆனால், அவர்கள் கையில் உள்ள நிலத்தின் அளவு வெறும் 5 சதவீதம். பஞ்சமி நிலங்கள் போன்ற ஒரு ஆணையை சிறப்பாகக் கடைப்பிடிக்கும்போது ஒடுக்கப்பட்டோரின் வாழ்விலும் ஒளி பிறக்கும்...’’ என்றார்  ஜெரோம் சாம்ராஜ்.

டி.ரஞ்சித்