தர்பார் Exclusive-மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் Return!



வரும் பொங்கல்... ‘தர்பார்’ பொங்கல்! போதாதா? ஏக குஷியில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். விஜய்காந்துக்கு ‘ரமணா’, மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ‘ஸ்டாலின்’ என திருப்புமுனை படங்கள் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸுடன் முதன்முறையாக ரஜினி கூட்டணி அமைத்திருப்பதால், இது சர்க்கரைப் பொங்கல் காம்போவாகி இருக்கிறது.

‘தர்பாரி’ன் சிறப்புகளை அதன் வட்டாரத்தில் விசாரித்தபோது வந்து விழுந்த ஒவ்வொரு தகவலும் ஆச்சரியத்தை அள்ளுகிறது!  ‘தர்பாரி’ல் ரஜினியின் கேரக்டர் பெயர் ஆதித்யா அருணாசலம். ‘‘என் கேரியரில் இந்த வகை படம் பண்ணினதில்ல...’’ என அவரே மனம் விட்டு ‘வாவ்’விய கதை இது.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாக ரஜினி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

அந்த அதிகாரியின் அழகான பூந்தோட்ட வாழ்வில் வழக்கு ஒன்று குறுக்கிடுகிறது. அதனால் அவருக்கு சில பர்சனல் இழப்புகள். வெகுண்டெழுந்தவர் வில்லனை பல கோணங்களில் பந்தாடுவதுதான் மீதிக்கதை. நார்மல் கதை போலத்தோன்றினாலும் ஃபேமிலி ஆடியன்ஸையும் சுண்டி இழுக்கும் ஸ்கிரிப்ட் இது. பொங்கல் விருந்தாக, ஃப்ளாஷ் பேக்கில் ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியனாக ரஜினி வரும் காட்சிகளுக்கு கைதட்டல் நிச்சயம் என்கிறார்கள்.

* மும்பையில் நடக்கும் கதை என்பதால் பெரும்பாலான நட்சத்திரங்கள் அந்த ஊர் ஆட்களே. பாலிவுட் நடிகர்கள் சுனில் ஷெட்டி. ப்ரெதேக் பாபர், ஜஸ்டின் சர்னா, நவாப் ஷா, டலிப் தஹில்... என அங்குள்ள டாப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மிரட்டுகின்றனர். ஸ்ரேயா, தம்பிராமையா, ஸ்ரீமன் என தெரிந்த முகங்களும் நிறைய உண்டு. படத்தின் ஆக்‌ஷன் பிளாக்குகளை ராம் - லக்ஷ்மண் மற்றும் பீட்டர் ஹெயின் ஆகியோர் அமைத்துள்ளனர். தெறிக்க விடும் அரசியல் பன்ச்சஸ் எதுவும் படத்தில் இல்லையாம். இதை அதிரடி ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் ஈடுகட்டுமாம். ஒவ்வொரு ஃபைட்டும் அதிரிபுதிரி ரகமாம்.

* படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் ரஜினி தன் உடம்பைக் காட்டும் போஸ் இடம்பெற்றிருக்கும். அந்த லுக் ஷூட்டின்போது, ‘கிராஃபிக்ஸ் அல்லது டூப் வச்சு மேட்ச் பண்ணிக்கலாம்’ என டைரக்‌ஷன் தரப்பில் கூறியிருக்கிறார்கள். ஆனால், ரஜினி அதை மறுத்திருக்கிறார்.

‘ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. அவரது வயசுக்கான உடம்பு அது. அவரை உள்ளது உள்ளபடி காட்டுறது அந்த வயசுக்கான மரியாதை. ஆடியன்ஸும் படம் பார்க்கும் போது இந்த நியாயத்தை புரிஞ்சுக்குவாங்க...’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. அவர் கொடுத்த நம்பிக்கைக்குப் பிறகே அந்த லுக் வெளியாகியிருக்கிறது.

* சக்சஸ் கூட்டணியான ரஜினி - நயன்தாரா, ஓர் இடைவெளிக்குப் பின் இப்படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். வழக்கம் போல் இதிலும் நயன் ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களது மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். மூர்க்கத்தனமான கேரக்டர் கொண்ட அவரை கூல் செய்பவராக யோகிபாபு நடித்துள்ளார்.

* ரஜினியின் போர்ஷன்ஸ் அனைத்தும் ஷூட் செய்தாகி விட்டது. இப்போது லண்டனில் சுனில் ஷெட்டியின் போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது.

* ‘தர்பார்’ யூனிட்டே முருகதாஸ் - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் நட்பைப் குறித்துதான் பேசுகிறது. சந்தோஷ் சிவன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் முருகதாஸ். படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த ஆகஸ்ட் மாதமே முடிந்திருக்க வேண்டியதாம். மும்பை, ஜெய்ப்பூரில் ஷூட் சென்றபோது அங்கே அடை மழை.

எனவேதான் இந்த டிலே. என்றாலும் பெய்த மழையை மிஸ் செய்ய இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் விரும்பவில்லை. மழையிலேயே ரஜினியின் ஓப்பனிங்கை ஷூட் செய்துவிட்டார்கள்.‘தளபதி’ படத்துக்குப் பின் மழையில் ரஜினியின் ஓப்பனிங் அமைவது இந்தப் படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது!  

* முருகதாஸின் திட்டமிடலை யூனிட்டே வியக்கிறது. பக்கா ப்ளானிங் என்பதால் ஸ்பாட்டில் ஒருவரும் டென்ஷன் இல்லாமல் உழைக்கிறார்கள். ‘பசங்களா... சாப்ட்டீங்களா?’ என முருகதாஸே தன் உதவியாளர்களை ஃபாலோ பண்ணுவது ஆச்சரியம் என்கிறார்கள்.

போலவே லைட்மேன்களிடம் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை அத்தனை பேர்களிடமும் ‘உங்க பேமென்ட் வந்துடுச்சா..? பேட்டா கிடைச்சுதா..?’ என கேட்டு தயாரிப்பு தரப்புக்கு பாலமாக இருந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

* க்ளைமாக்ஸ் போர்ஷனை படத்தின் இறுதியில் ஷூட் செய்வதுதான் முருகதாஸின் பாணி. இந்தப் படத்திலும் அப்படியே பின்பற்றி இருக்கிறார். கடைசி ஃபைட்டுக்கு ராம் - லக்ஷ்மண் இரட்டையர் கோரியோகிராஃப் அமைக்க வேண்டும். ஆனால், மகேஷ்பாபுவின் படத்துக்கு அவசரமாக அவர்கள் செல்ல வேண்டி இருந்ததால் மகிழ்ச்சியுடன் அவர்களை வழியனுப்பிவிட்டு பீட்டர் ஹெய்ன் மாஸ்டரிடம் அந்த சண்டை போர்ஷனை அமைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

* ரஜினி - யோகிபாபு கூட்டணியின் காமெடி, ஆஃப் த ஸ்கிரீனிலும் களைகட்டியதாம். யோகிபாபுவை ‘என்ன யோகி...’ என்றுதான் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக அழைத்திருக்கிறார் ரஜினி. ஒருமுறை யோகிபாபு விழா மேடையொன்றில் தனக்கு சம்பளம் யாரும் சரியா கொடுக்க மாட்டேங்
கிறாங்க என்று பேசியதை நினைவில் வைத்திருந்து, ‘உங்க சம்பளம் கிடைச்சுதா யோகி..?’ என ஸ்பாட்டில் அக்கறையாக விசாரித்திருக்கிறார் ரஜினி.

* நான்கு பாடல்களில் டிரிபுள் மாஸ் தெறிக்கும்படி அனிருத் இசையமைத்திருக்கிறாராம். ஒரு பாடல் ஜெய்ப்பூரில் ஷூட் செய்யப்பட்டுள்ளது.

* ‘‘நிறைய படங்கள் பண்ணிட்டேன்... ஆனா, நீங்க என்னை கவனிச்சது ரொம்ப ஸ்பெஷலா இருந்தது... எந்த பிரஷரும் இல்லாம கூலா நான் நடிக்க நீங்கதான் காரணம்...’’ என கடைசி நாளில் ரஜினி நெகிழ, முருகதாஸ் கசிந்திருக்கிறார்.

ரஜினி இப்படி நெகிழ காரணமிருக்கிறது. முதல் நாள் ஷூட் முடிந்ததும் மறுநாள் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒன்லைனை ரஜினியிடம் தெரிவித்து விடுவாராம் முருகதாஸ். போலவே மறுநாள் ரஜினி வந்ததும் அன்று எடுக்கப்படும் ஷாட் விவரங்களைக் கூறிவிடுவாராம்.திட்டப்படி அன்று எத்தனை காட்சிகளோ அதை மட்டும்தான் ஷூட் செய்வாராம்.

சில காட்சிகளை முருகதாஸ் விவரித்ததும், ‘இது பாசிபிளா..?’ என சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் ரஜினி. அதை சொன்னபடியே ஜஸ்ட் லைக் தட் ஆக முருகதாஸ் ஷூட் செய்து இம்ப்ரஸ் செய்திருக்கிறார்.

ஷெட்யூல் சேன்ஜ், க்ளைமேட் சேன்ஜ்... என எந்த சிக்கலை எதிர்கொண்டாலும் அதை கூலாக முருகதாஸ் சமாளித்த விதமும், நைட் அண்ட் டே என அவசர அடி அடிக்காமல் ரிலாக்ஸ் ஆக அனைவரையும் அவர் வேலை வாங்கிய விதமும் ரஜினியை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. ஸோ, ‘தர்பாரு’க்குப் பிறகும் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பிருக்கிறது!  
 

மை.பாரதிராஜா