61 ஆண்டுகளாக தன் மனைவிக்கு தினம் ஒரு டிரெஸ்ஸை வாங்கிக் கொடுக்கும் கணவர்!எல்லா பண்டிகை நாட்கள் போலவே இந்த தீபாவளி அன்றும் மனைவிமார்கள் இந்த சூழலை எதிர்கொள்கிறார்கள்.

ஒரு புடவை வாங்கியதும் இன்னொன்று நன்றாக இருக்கிறதே என தொட்டுப் பார்த்தால், ‘என்ன... வீட்ல இருக்கற சேலையை எல்லாம் எடைக்கு போடப் போறியா..?’ என நக்கலாக கணவர்மார்கள் கேட்பார்கள்; கேட்கிறார்கள்; கேட்கவும் போகிறார்கள்.இப்படிப்பட்ட சூழலில்தான் அமெரிக்காவின் அரிசோனாவில் வாழும் ஒரு கணவர், தன் மனைவிக்காக ஒரு காரியத்தை செய்து வருகிறார். அதுவும் 61 வருடங்களாக!

யெஸ். ஒருமுறை தன் மனைவி உடுத்திய உடையை அடுத்த முறை அணியக் கூடாது என்பதில் இந்தக் கணவர் கண்டிப்பானவர்!இதன் காரணமாக அவரது மனைவி இதுவரை 55 ஆயிரம்... ஆமாம்... 55 ஆயிரம் உடைகளை வாங்கியிருக்கிறார்! பாலுக்கு வயது 83. இவரது மனைவி மார்கட் பிராக்மன்.

அது 1950களின் தொடக்கம். தங்கள் சொந்த நாடான ஜெர்மனியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். சும்மா ‘ஹாய்’ சொல்லி அன்று இரவு முழுக்க நடனம் ஆடியவர்கள் விடியும்போது காதலர்களாக அந்த அரங்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்!

இதன் பிறகான இவர்களது ஒவ்வொரு சந்திப்பின்போதும் மார்கட் பிராக்மனுக்கு புத்தம் புதிய உடைகளைத்தான் பால் பரிசாக வழங்குவாராம்.

தாங்கள் முதன் முதலில் சந்தித்தபோது பால் என்ன உடையை அணிந்திருந்தார் என்பதை மார்கட் பிராக்மன் மறந்துவிட்டார். ஆனால், பால்..? சரியாக அன்று மார்கட் என்ன உடையை அணிந்திருந்தார் என்பதை அதன் நிறம், டிசைனுடன் சொல்கிறார்!  ‘‘அந்த ப்ளூ கலர் டிரெஸ்ல மார்கட் அப்படி இருந்தா... ஏஞ்சல் மாதிரி! இப்ப வரை என் கண் முன்னாலயே அந்த தோற்றம் இருக்கு!’’ கண் சிமிட்டும் பால், ‘‘நாளுக்கு நாள் புதுப் புது ஃபேஷன்ஸ் அறிமுகமாகிக்கிட்டே இருக்கு.

அதுக்கு ஏத்தா மாதிரி மார்கட் காட்சிதரவேண்டாமா..? அதனாலதான் டிரெஸ் வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருக்கேன்... நான் அவளுக்கு வாங்கித் தர்ற எல்லாமே அந்தந்த சமயத்துல டிரெண்டுல இருந்ததுதான். ஒவ்வொரு வருஷமும் ஒரு செட் டிரெஸ்ஸஸ்ஸை வித்துடுவோம். பேரம் பேசமாட்டோம். கேட்கற விலைக்கு கொடுத்துடுவோம்...’’

மார்கட்டை அணைத்தபடி சொல்லும் பால், இப்போது தாங்கள் அமெரிக்காவில் வசிப்பதாகவும், ஒரு கேரேஜ் முழுக்க மார்கட் ஒரே ஒருநாள் அணிந்த உடைகள் குவிந்திருப்பதாகவும் சொல்கிறார். ‘‘எவ்வளவு சொல்லியும் பால் கேட்க மாட்டார்! ஒருநாள் உடுத்திய டிரெஸ்ஸை இதுவரை நான் மறுநாள் அணிஞ்சதில்ல.

எந்த ஒரு மகாராணியும் இப்படி வாழ்ந்திருக்க மாட்டா... அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்! இப்பதான் பாலை மிரட்டி அவர் டிரெஸ் வாங்கிக் கொடுக்கறதை நிறுத்தியிருக்கேன்.

அப்படியும் ஏதாவது ஒரு சாக்கு வைச்சு டிரெஸ் வாங்கிக் கொடுத்துடறார்...’’ செல்லமாக சிணுங்குகிறார் மார்கட்.evolution-vintage.com என்னும் தளத்தில் மார்கட் பிராக்மன் அணிந்த அத்தனை உடைகளும், அதற்கு மேட்ச்சிங்காக அவர் பயன்படுத்திய நகைகள் உட்பட அத்தனை ஆக்ஸசரிஸ்களும் விற்பனைக்கு உள்ளன!   

ஷாலினி நியூட்டன்