தமிழ் சினிமாவும் தீபாவளி ரிலீஸ் படங்களின் கொண்டாட்டங்களும்!



எப்பவும் தீபாவளிக்காக காத்திருப்பதை விரும்பியே வந்திருக்கிறோம். மாதத்தின் முதல் தேதிகளிலேயே தீபாவளி வந்துவிட்டால் மகிழ்ச்சியும், பின்தங்கி வந்தால் எரிச்சலும் அடைந்திருக்கிறோம்.  பலகாரங்களும், புதுத்துணிகளும், விடுமுறையும் தந்த சந்தோஷத்திற்கு மேல் நாம் காத்திருந்தது தீபாவளி படங்களுக்காக!அரக்கப் பரக்க உணவை முடித்துக் கொண்டு வரிசைகளில் காத்திருந்து வரிசையாக படங்கள் பார்த்து இருட்டியும் இருட்டாத நேரத்தில் வீட்டிற்குத் திரும்புவோம். நம்மிடம் கதை கேட்க ரெடியாக இருக்கும் அக்காக்களையும், தங்கைகளையும் கொஞ்சம் தவிக்க விட்டுத்தான் கதை சொல்ல ஆரம்பிப்போம்.

அப்படியான பொழுதுகள் இன்றைக்கு இருக்கிறதா? நாம் வேண்டி விரும்பிப் பார்க்கும் நம் ஹீரோக்களின் படங்கள் காணக்கிடைக்கிறதா? நம்முடைய தேர்வுக்கு இங்கே வழியுண்டா? அக்காக்கள் தோசைக்கு மாவு அரைத்துக்கொண்டு, மாவுக்கையோடு நம் கை இழுத்து கதை கேட்ட காலங்கள் திரும்புமா?  சரி.. விடுங்கள்… காலகட்டங்கள் மாறுகின்றன. காலம் காலமாக தமிழ் சினிமாவின் கொண்டாட்டம் தீபாவளியின் போது எப்படி இருந்திருக்கிறது? தமிழ் சினிமாவில் நிலை பெற்ற அனுபவசாலிகளிடம் பேசினோம்.

நீண்ட கால அனுபவம் மிக்க தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் தன் அனுபவத்தின் எண்ணங்களை முன்வைத்தார்:
‘‘தமிழ் சினிமாவிற்கும், தீபாவளிக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1944 தீபாவளியின்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’  வெளியாகி, அது மூன்று தீபாவளியைக் கடந்து ஓடியது. அந்த சாதனை வெகுகாலமாக முறியறிக்கப்படாமல் இருந்தது. பிறகு வந்த ‘கிழக்கே போகும் ரயில்’ ஒரு வருஷம் ஓடியது. அதற்குப்பிறகு வந்த ‘சந்திரமுகி’தான் அந்தச் சாதனையை முறியடித்தது. அத்தனை வருஷமும் அந்தச் சாதனையைத் தாண்ட விடாமல் வைத்திருந்தது ‘ஹரிதாஸ்’.

முக்கியமான ஒரு விஷயமும் தமிழ்த் திரை உலகில்  தீபாவளியின்போது நடந்தது. அதாவது தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படமும் ஒரு தீபாவளி அன்றுதான் வெளிவந்தது!தமிழ் சினிமாவுக்கு நடிப்பு தீபத்தை ஏற்றி வைத்த சிவாஜியின் முதல் படம் தீபாவளிக்கு வந்தது சிறப்புதானே! 1970ல் சிவாஜி நடித்த ‘சொர்க்கம்’, ‘எங்கிருந்தோ வந்தாள்’ என இரண்டு படங்களும் தீபாவளி அன்றுதான் வெளியாகின. அந்த இரண்டு படங்களும் பெருவெற்றி பெற்றன.

‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி ‘சொர்க்கம்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ‘சொர்க்கம்’ படத்தின் தயாரிப்பாளராக டி.ஆர்.ராமண்ணா, ‘எங்கிருந்தோ வந்தாளி’ன் தயாரிப்பாளராக பாலாஜி என இருந்தும் ஒரே இடத்தில் இந்தப் படங்களின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது! இரண்டு ஷீல்டுகள் பெற்று கை கொள்ளாமல் டெக்‌னீஷியன்கள், நடிகர்கள் இறங்கிப்போனார்கள். அப்படியொரு விட்டுக்
கொடுத்தல், எல்லோருக்கும் படம் ஓடி சந்தோஷப்பட வேண்டும் என்ற நினைப்பு இருந்தது.

கமல் நடித்த ‘கல்யாண ராமன்’, ரஜினி நடித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ படங்களுக்குக் கூட ஒரே மேடையில் அட்லாண்டிக் ஹோட்டலில் விழா நடந்தது. ஆனால், இரு படத்திற்கும் பஞ்சு அருணாசலம்தான் தயாரிப்பாளர்.எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சந்தோஷமாக இருந்ததற்குக் காரணம், அவர்களின் படங்கள் தீபாவளிக்கு எப்படியாவது ரிலீஸ் ஆகி விடும் என்பதுதான். அந்த நம்பிக்கையை அவர்கள் பொய்ப்பிக்க விட மாட்டார்கள். இப்போது ஒரு படம் ரிலீஸ் ஆனால் 600 தியேட்டர்களுக்கு மேல் வெளியிடுகிறார்கள். இரண்டு படங்கள் வந்தால், மற்ற படங்களுக்கு, வாய்ப்பே இல்லையென்றாகி விடுகிறது.

முன்பு ‘எங்க வீட்டுப் பிள்ளை’வெளியானபோது ஜெய்சங்கரின் ‘இரவும் பகலும்‘ படம் வெளியாகும் சூழ்நிலை இருந்தது. அது மாதிரியான ஸ்பேஸ் இப்போது இல்லை. ஒவ்வொரு நடிகரின் படம் வெளியாகும் தினமே, அந்த ரசிகனுக்கு தீபாவளி என்றாகிவிட்டது. அப்படியே ஆக்கிக்கொள்ள அஜித், விஜய் ரசிகர்களும் பழகி விட்டார்கள்.இப்போது டிஜிட்டல் மூலமாக படம் திரையிடுகிற தியேட்டர்களுக்கு போய்விடுகிறது. படப்பெட்டியை தூக்கிக்கொண்டு, தேங்காய் உடைத்து ஊர்வலம் போய், வகையாக நடனம் ஆடி, தியேட்டர்களுக்கு கொண்டு வந்து சேர்த்ததெல்லாம் இப்போது நினைவாகிவிட்டது...’’ என்கிறார் சித்ரா லட்சுமணன்.

இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்வதும் உண்மையாகவே இருக்கிறது: ‘‘‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சிந்து பைரவி’ ஆகியவை ஒரு தீபாவளி நாளில் வந்தது. என் அத்தை பையன் ‘சிந்து பைரவி’ பார்த்து விட்டு ‘ஒரு பாட்டு அருமையாக இருக்கு. படம் ரொம்ப சுமாராக இருக்கு...’ என்றான்.
நான் ‘வைதேகி காத்திருந்தாள்’ பார்த்து விட்டு, மாலையே, ‘சிந்து பைரவி’ பார்த்தேன். அவன் நல்லாயிருந்த பாட்டுன்னு சொன்னது ‘தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக் குட்டி...’ பாட்டு. எனக்கு அதில் பிடிக்காத பாட்டே அதுதான். ஏன் ஜிகேபியை அவ்வளவு தூரம் குப்புறத் தள்ளணும்னு நினைச்சேன்.

ஒரே நாளில் ஓடி ஓடி படம் பார்த்த அனுபவம் இருக்குல்ல…. அப்ப எல்லோரும் படம் பார்த்து, ஒரு படத்தைப் பற்றியே பேசியாகணும். தீபாவளி கொண்டாட்டம் என்றால் அது பட ரிலீஸ்தான். மறக்க முடியாமல் இருக்குன்னா... அது இளையராஜாதான். பத்துப்படம் ரிலீஸ் ஆனால் அதில் எட்டுபடத்துக்கு அவர்தான் மியூசிக் போடுவார்! எட்டுபடங்களையும் பத்து நாளைக்கு முன்னாடிதான் மியூசிக் போட அவர் கையில் கொடுப்பார்களாம். அவரும் வஞ்சகம் இல்லாமல் வாசித்திருப்பார்.

பெரிய ஹீரோக்கள் படம் வரும்போது ‘மின்மினிப் பூச்சிகள்’னு ஒரு படம் வந்தது. ராதிகாவும், நிரோஷாவும் நடிச்ச ‘கைவீசம்மா கை வீசு’ வந்தது.
இப்ப ஹீரோ படமாச்சே, நாலு நாள் கழிச்சு பார்த்துக்கலாம்னா இங்கே யாருக்கும் வேறு ஆப்ஷன் கிடையாது. ஒரு நாடு ஒரு மொழின்னு சொல்ற பிஜேபி திட்டம் பலிக்குதோ இல்லையோ,‘ஒரு பண்டிகை ஒரு படம்’ என தமிழ் சினிமா முதலாளிகள் வென்றுவிட்டார்கள்...’’ என்கிறார் கரு.பழனியப்பன்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ‘‘தமிழ் சினிமா அடியோடு மாறிவிட்டது...’’ என்று ஆரம்பிக்கிறார். ‘‘சேட்டிலைட் அக்ரிமென்ட் முன்பு ஒரு வருடம் வரைக்கும் இருக்கும். இப்போது 50 நாள் என போட ஆரம்பித்து விட்டார்கள். டிக்கெட் விற்பனை மட்டுமில்லை; பார்க்கிங், பாப்கார்ன், என பல விஷயங்கள் இருக்கு.

ஒரு பெரிய படத்திற்கு வெளியிலிருந்து நெருக்கடிகள் உண்டு. படம் வெளியாகி 30 நாட்களுக்குள் லாபம் பார்த்தால்தான் உண்டு. பின்பு எல்லாமே உங்கள் கை மீறிப் போய் விடுகிறது. தயாரிப்பாளர்களுக்கு பணம் வந்து சேர்கிற வரைக்கும் நீண்ட பொறுப்பு இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்...’’ என்கிறார் தனஞ்செயன்.இன்னும் படங்களும், வேண்டிய சாய்ஸ்களும் அடுத்தடுத்து தீபாவளிக்கு வந்து சேரட்டும். சினிமா பற்றிய ஞாபகங்களில் இனிமேலும் தீபாவளிப்படங்கள் இருக்க பிரியப்படுவோம்.

நா.கதிர்வேலன்