தலபுராணம்-கே.கே. நகரும் அண்ணா நகரும்மாம்பலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்று ஆரிய கவுடர் சாலை. இது ராவ்பகதூர் ஹப்பாதலே பெல்லி ஆரி கவுடர் பெயரால் அழைக்கப்படுகிறது.1923ம் வருடம் ஊட்டி படுகா இனத்தில் இருந்து முதல்முதலாக மெட்ராஸ் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆரி கவுடர். மட்டுமல்ல; கட்டுமான ஒப்பந்ததாரரான இவர், ஊட்டி மலை ரயில் பாதையை அமைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.

இன்று மாம்பலம் நன்கு வளர்ச்சியடைந்த பகுதியாகிவிட்டது. ஆனால், அன்று யானைக்கால் வியாதிக்கு பெயர் போன ஏரியாவாக இருந்தது!
‘‘எங்கு திரும்பினாலும் யானைக்கால், யானைக்கை மனிதர்களுடன் நிறைய மாடுகள், பன்றிகள். பேட்டைவாசிகள். அநேகமாக எல்ேலாருமே கீழ்த்தரம் அல்லது கீழ் நடுத்தரம். வசித்தவர்களில் பாதிப் பேர் புரோகிதம் தரும் அற்ப வருவாயில் காலம் தள்ளுபவர்கள்.

இன்னொரு பாதி சமையல் தொழிலில் உதவியாளர்களாகப் பணிபுரிகிறவர்கள். இவ்வளவுக்கும் அன்று அங்கு ஒரு உணவு விடுதிகூடக் கிடையாது. காபி அல்லது டீ சாப்பிட வேண்டுமென்றால் கூட ரயில்வே கேட்டைத் தாண்டி தி.நகர் வரவேண்டும். இன்னும் திடுக்கிட வைக்கும் ஒரு தகவல்- 1955 வரை அந்தப் பகுதியில் ஒரு வைத்தியர் கூடக் கிடையாது. யாராவது உயிர்விட்டால் கூட அவரை ரயில் கேட் தாண்டி எடுத்துச் சென்றுதான் கண்ணம்மாப்பேட்டையில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்...’’ என மாம்பலத்தின் அன்றைய அவலநிலையை, ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ நூலில் விவரிக்கிறார் எழுத்தாளர் அசோகமித்திரன்.

இதேபோல சைதாப்பேட்டையும் யானைக்கால் நோய்க்கு பெயர் போன ஏரியா என்கிறார் அவர். இதற்கு வடக்குப் பக்கமாக இருந்த பழைய கிராமமே கோடம்பாக்கம்.நவாப்பின் குதிரை லாயம் இருந்த பகுதி என்பதால் ‘கோடா பாக்’ என்பது கோடம்பாக்கமாக மருவிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. காலப்போக்கில் சுற்றிலும் சினிமா ஸ்டூடியோக்கள், அது சம்பந்தமான பணியாளர்கள் நிறைந்த பகுதியானதும் கோலிவுட்டாக மாறியது.  

மாம்பலத்திற்கு மேற்குப் பக்கமாக 1964ல் அசோக் பில்லரை மையமாகக் கொண்டு அசோக் நகர் உருவாக்கப்பட்டது. இங்கே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நடுத்தர வர்க்கத்தினருக்கென வீடுகளைக் கட்டி மேம்படுத்தியது. போலவே, 1970களில் இன்னும் மேற்கே சற்று தள்ளி கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) உருவாக்கப்பட்டது. இந்த ஏரியாக்களின் அன்றைய தோற்றத்தை 1974ல் வெளிவந்த ‘முருகன் காட்டிய வழி’ திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் பார்க்கும் போது வியக்க வைக்கிறது.

நடிகர் ஏவிஎம் ராஜன் குழந்தைகளை ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டு பாடியபடியே இந்த ஏரியாக்களை ரவுண்ட் அடிப்பார். அதில், காமராஜ் சாலை என்ற போர்டுக்குப் பின்பு அவ்வளவும் காலி மனைகள். அசோக் பில்லரை ஒட்டி எந்த டிராபிக்கும் காணப்படவில்லை. 90கள் வரை இதுவே இந்த ஏரியாக்களின் நிலை!

கே.கே.நகரில் உள்ள இரண்டு நீண்ட பிரதான சாலைகளுக்கு ராமசாமிசாலை, லட்சுமணசாமி சாலை என்று பெயர். இந்தச் சாலைகள் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான திவான் பகதூர் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் இவரின் சகோதரரும் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியின் முதல்வராகவும் இருந்த ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் ஆகியோரின் பெயரில் அமைந்தவை.   

இதேகாலகட்டத்தில்தான் அண்ணாநகரும் உருவாக்கப்பட்டது. இதையும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமே மேம்படுத்தியது. ஆரம்பத்தில் மெட்ராஸின் புறநகராக இருந்தது அண்ணா நகர். இதன் பெயர் நடுவக்கரை. அமைந்தகரைக்கும் கூவம் நதிக் கரைக்கும் இடைப்பட்ட பகுதியே நடுவக்கரை. ஒரு
காலத்தில் விவசாய நிலங்களாக இருந்த இடம். இதனருகே இருந்த கிராமம் முள்ளம். இதுவும் அண்ணாநகராக உள்ளது.

1968ல் இந்தப் பகுதியில் இந்திய சர்வதேச வர்த்தக மற்றும் தொழில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதை அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமையில் துணை ஜனாதிபதி வி.வி.கிரி திறந்து வைத்தார். இதையொட்டி டாக்டர் விஸ்வேஸ்வரய்யா டவர் (அண்ணா டவர்) உருவாக்கப்பட்டது. இதை மெட்ராஸ் கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங் திறந்து வைத்தார்.

சிவில் எஞ்சினியரான டாக்டர் சர் மோட்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா மைசூர் திவானாக இருந்தவர். பாரத ரத்னா விருது பெற்றவர். இவரின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதியே எஞ்சினியர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவரின் பெயரில் அமைக்கப்பட்ட இந்த டவர் 135 அடி உயரமும் 12 அடுக்குகளும் கொண்டது. இதைச் சுற்றி 15 ஏக்கரில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. இன்று எல்லாமும் சேர்ந்து அண்ணா டவர் பூங்கா என்றழைக்கப்படுகிறது.

பிறகு, டவரில் 1979ம் வருடம் விளக்கொளி அமைக்கப்பட்டது. அன்று இதில் பல்வேறு சினிமா பாடல்கள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
1968ல் வெளிவந்த ‘கலாட்டா கல்யாணம்’, 1972ல் வெளியான ‘பிள்ளையோ பிள்ளை’ உள்ளிட்ட படங்களில் இந்த டவரின் தோற்றம் மட்டுமல்ல; சுற்றிலும் மணற் பங்கான பகுதிகளாகவும், மரங்களாகவும் அந்தப் பகுதி இருப்பதைப் பார்க்கலாம்.
   
முன்பு இந்த டவரின் மேல் பகுதி வரை செல்ல அனுமதி இருந்தது. சில வேண்டத்தகாத சம்பவங்களால் 2011ல் இருந்து தடை செய்யப்பட்டுவிட்டது. 1970-80களில் அண்ணாநகர் வேகமான வளர்ச்சியை எட்டியது.இப்போது டவரை ரசிக்க அதனருகே சென்றால்தான் பார்க்க முடியும். அந்தளவுக்கு சுற்றிலும் கட்டடங்களும் குடியிருப்புகளும் வந்துவிட்டன.
 
தொழில் வர்த்தகக் கண்காட்சி நடந்தபிறகு அதனை மையப்படுத்தியே அண்ணா நகர் பகுதி மேம்படுத்தப்பட்டது. தவிர, 1964ல் உருவான அம்பத்தூர் தொழிற்பேட்டையால் பல்வேறு பகுதி மக்களும் இங்கே குடியேறினர். இன்று கிழக்கு அண்ணாநகர், மேற்கு அண்ணாநகர், முகப்பேர், ஷெனாய் நகர் எனப் பல்வேறு பகுதிகள் அங்கே வந்துவிட்டன.

இதில், அமைந்தகரை அருகே அமைந்துள்ள பகுதி ஷெனாய் நகர். இது 1944ல் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஜே.பி.எல்.ஷெனாய் பெயரில் அழைக்கப்படுகிறது. இதனையடுத்துள்ள புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், சூளை, வேப்பேரி எல்லாம் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே இருக்கிற பழைய கிராமங்கள்.

இதில், வேப்பேரியும், புரசைவாக்கமும் ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் குடியிருப்புகளாக இருந்தவை. இதில், பெரம்பூரும், வேப்பேரியும் 1742ல் ஆற்காடு நவாப்பிடம் இருந்து ஆங்கிலேயர்கள் பெற்ற பகுதிகள்.             

பேராச்சி கண்ணன்

ராஜா