ரத்த மகுடம்-76



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

பல்வேறு உணர்வுகளால் சூழப்பட்ட கரிகாலன், நிதானமாக கஜ சாஸ்திரிக்கு பின்னால் நடந்து வந்தான்.கடிகை பாலகன் குறித்த உண்மை ஒருபக்கம் அவனைச் சுழன்றடித்தது என்றால் நடக்கவிருக்கும் சிவகாமி குறித்த விசாரணை முற்றிலுமாக கரிகாலனை அலைக்கழித்தது.இதுநாள் வரை தன் கணிப்பின் மேல் அலாதியான நம்பிக்கை கொண்டிருந்த அவன், அவை அனைத்துமே தவிடுபொடியானதில் நிலைகுலைந்தான்.

வேளிர்களின் தலைவனாக கடிகை பாலகன் இருப்பான் என்பது சற்றும் அவன் எதிர்பாராதது. அவனுடன் பழகிய பொழுதுகளில் இம்மி அளவுக்குக் கூட எவ்வித சந்தேகமும் அந்த பாலகன் மீது அவனுக்கு ஏற்படவில்லை. இந்தளவுக்கா, தான் மதியிழந்து இருப்போம்..?திகைத்த கரிகாலனுக்கு சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாக சிவகாமி நிற்கும் நிலை பித்துப் பிடிக்க வைத்தது.

அவளுடன் ஒட்டி உறவாடிய பொழுதுகளும், உரசியபடி இருந்த காலங்களும், உதடுகளால் ஒற்றி எடுத்த கணங்களும் வந்து வந்து போயின. எந்தச் சூழலிலும் அவளை, தான் சந்தேகிக்கவில்லை என்பதை கரிகாலனால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் இயலவில்லை.

அந்த அளவுக்கா காமத்தின் பிடியில், தான் சிக்கியிருக்கிறோம்..? இத்தனைக்கும் ஹிரண்யவர்மர் முதல் சாளுக்கிய மன்னர் வரை பலரும் சிவகாமியை நம்ப வேண்டாம் என தன்னை எச்சரித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் மையலில் கட்டுண்டு கிடந்திருக்கிறோம் என்றால்... உண்மையில் விசாரணை நடைபெற வேண்டியது சிவகாமிக்கு அல்ல. பல்லவ வீரர்கள் சூழல் தன்னைத்தான் விசாரிக்க வேண்டும்.

போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் எதிரி நாட்டு ஒற்றர் படைத் தலைவியுடன் தங்கள் நாட்டு உபதளபதி ஒட்டி உறவாடியிருக்கிறார் என்பதை அறியும் பல்லவ படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் தன் மீது கோபம் கொள்ளவே செய்வான்... அதுதான் நியாயமும் கூட.சிவகாமியின் மீதான விசாரணை எப்படிச் சென்றாலும் நடந்தாலும் சரி... அதில் நாம் பங்கேற்கக் கூடாது... பார்வையாளனாக மட்டுமே நிற்கவேண்டும். அவளுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டதும், தானாகவே முன்வந்து தன்னையும் அக்குற்றத்தில் இணைத்து தண்டனையைப் பெறவேண்டும். இதுதான்... இது மட்டும்தான்... நாட்டுப்பற்றுக்கு, தான் ஆற்றும் உச்சபட்ச செயலாக இருக்கும்.

முடிவுக்கு வந்த கரிகாலனின் எண்ணங்கள் ஊசலாட்டத்தை நிறுத்தின. மனதில் பிறந்த தெளிவு அவன் நடையிலும் எதிரொலித்தது.
கரிகாலனின் காலடி ஓசையை வைத்தே அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட கஜ சாஸ்திரியின் உதட்டில் புன்னகை பூத்தது. எதுவும் சொல்லாமலேயே முன்னால் நடந்தான்.

கால் நாழிகை பயணத்துக்குப் பின் இருவரும் அடர் வனத்தின் மத்தியில் இருந்த அந்த வெட்டவெளிக்கு வந்தார்கள்.
வட்ட வடிவில் பல்லவ வீரர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அலட்சியமாக சிவகாமி நின்றிருந்தாள். அவளது முகம் மட்டுமல்ல... பார்வை கூட தரையைப் பார்வையிடவில்லை.

சற்றுத் தொலைவில் குறிப்பிட்ட இடைவெளியில் வில் அம்புகளுடனும், வாள் வேல்களுடனும் சில பல்லவ வீரர்கள் நின்றிருந்தார்கள்.
சூழ்ந்த இருளைப் போக்க ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு மரத்தில் கட்டப்பட்டிருந்தன.சருகுகள் மிதிபடும் ஓசையைக் கேட்டு அந்தப் பக்கம் திரும்பிய பல்லவ வீரர்கள், கஜ சாஸ்திரியையும், கரிகாலனையும் கண்டதும் பரபரப்பானார்கள்.

அமர்ந்திருந்த வீரர்கள் சட்டென எழுந்து நின்றார்கள்.யார் ஜாடை காட்டினார்கள் அல்லது கண்களால் சைகை செய்தார்கள் என்று தெரியாது. ஆனால், ஜெயகோஷம் எழுப்ப தங்கள் வாய்களைத் திறந்த பல்லவ வீரர்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் சட்டென்று உதட்டை மூடினார்கள்.
பார்வையால் அங்கிருந்த ஒவ்வொரு வீரனிடமும் உரையாடியபடியே சிவகாமிக்கு அருகில் வந்த கஜ சாஸ்திரி, சற்றே ஓரமாக இருந்த பாறையின் மீது அமர்ந்தான்.

கரிகாலன் அவனுக்கு அருகில் நின்றுகொண்டான்.கஜ சாஸ்திரி அமர்ந்ததுமே அதுவரை தரையில் அமர்ந்திருந்த பல்லவ வீரர்கள் மீண்டும் அதே புல்தரையில் அமர்ந்தார்கள்.எங்கும் அமைதி. சூழலை, தானும் உணர்ந்து கொண்டதற்கு அறிகுறியாக இலைகளை அசைக்கவும் காற்று மறந்தது.
சிவகாமியையே பார்த்துக்கொண்டிருந்த கஜ சாஸ்திரி தன் பார்வையை விலக்கி சுற்றிலும் பார்த்தான்.

உடனே சற்று தள்ளி நின்றிருந்த நடுத்தர வயதுள்ள மனிதன் முன்னால் வந்து நின்றான். அங்கிருந்த படைக்கு அவன்தான் தலைவன் என்பது பார்த்ததுமே புரிந்தது. தன் உடலை வளைத்து வணங்க முற்பட்டவனின் கருவிழிகளை கஜ சாஸ்திரி உற்று நோக்கினான்.

அதிலிருந்து என்ன செய்தியை அத்தலைவன் உள்வாங்கினானோ... வளைய முற்பட்ட தன் உடலைச் சமாளித்து நிறுத்தியவன் கண்களால் மட்டும் கஜ சாஸ்திரியை வணங்கிவிட்டு தொண்டையைக் கனைத்தான்.

திரும்பி சிவகாமியை ஒரு பார்வை பார்த்தான். ‘‘நம் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் வளர்ப்பு மகள் சிவகாமி, தான்தான் என்று அறிவித்தபடி நம் படைக்குள் ஊடுருவிய இந்தப் பெண்... உண்மையில் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி. இதற்கான அத்தாட்சிகள் ஏற்கனவே இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன...’’அறிவித்துவிட்டு சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து கூட்டத்துடன் கலந்து நின்றான் அந்தத் தலைவன்.

துடிக்கும் இதயத்தை அடக்கியபடி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நின்றிருந்த சிவகாமியை விழி அகற்றாமல் பார்த்தான் கரிகாலன்.அவன் பக்கமே அவள் திரும்பவில்லை. மாறாக அவள் பார்வை பாறையின் மீது அமர்ந்திருந்த கஜ சாஸ்திரியின் மீதே படிந்திருந்தது. மரணதண்டனை தனக்கு விதிக்கப்படலாம் என்ற நிலையிலும் எவ்வித பதற்றமும் இன்றி அவள் நின்றிருந்தாள். உதட்டோரம் புன்னகையும் பூத்தது.

‘‘இப்படியொரு சூழலில் தங்களை சந்திப்பேன் என்று துளியும் நான் எதிர்பார்க்கவில்லை...’’ அமைதியைக் கிழித்தபடி கஜ சாஸ்திரி சொற்களை உச்சரித்தான். அதில் கோபம் வெளிப்படவில்லை. மரியாதையே நிரம்பி வழிந்தது என்பதை கரிகாலன் கவனித்தான். பொதுவாக பல்லவர்களின் இயல்பு அதுதான். எதிரியாகவே இருந்தாலும் மரியாதையுடன் நடத்துவதே வழக்கம். என்றாலும் அந்தப் பொதுத்தன்மையை மீறி சிவகாமியின் மீது ஒரு வாஞ்சை கஜ சாஸ்திரியிடம் வெளிப்பட்டதை கவனிக்க கரிகாலன் தயங்கவில்லை.

இனம் புரியாத உணர்வுகள் அவனைச் சூழத் தொடங்கின. என்ன நடக்கிறது இங்கே... அல்லது என்ன நடக்கப் போகிறது இங்கே... ஒவ்வொரு அணுவிலும் பூத்த பரபரப்பை அரும்பாடுபட்டு அடக்கினான். எது நடந்தாலும் அல்லது நடக்கப் போவதாக இருந்தாலும் அதை உச்சி முதல் உள்ளங்கால் வரை கவனிப்பதுதான் இப்போதிருக்கும் ஒரே வழி...

ஆனாலும் முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கப் போகின்றன என்பதை கரிகாலனின் உள்ளுணர்வு அறிவித்தது. நடப்பது விசாரணையாகவே தெரியவில்லை... ஏதோ அறிந்தவர்களுக்குள் நடைபெறும் சகஜமான உரையாடல்களாகவே தென்பட்டது.
பரபரப்புக்கும் அமைதிக்கும் இடையில் கரிகாலன் ஊசலாடிய கணத்தில், அவன் உணர்வு மேலும் வெடித்துச் சிதறும் வண்ணம் கஜ சாஸ்திரி கேட்ட கேள்விக்கு சிவகாமி பதிலளித்தாள்.

‘‘ஆம்... இப்படியொரு சூழலில் தங்களைச் சந்திக்க நேரும் என நானும் எதிர்பார்க்கவில்லை...’’
கஜ சாஸ்திரி புன்னகைத்தான். ‘‘வேறு எந்த சூழலில் என்னைச்சந்திக்க வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள்..?’’
‘‘அது பல்லவர்களின் உபதளபதியும் உங்கள் நண்பருமான கரிகாலருக்கு நன்றாகவே தெரியும்...’’ ‘‘யார்... இவனையா சொல்கிறீர்கள்..?’’ திரும்பாமலேயே தன் கைகளை மட்டும் கரிகாலனை நோக்கி சுட்டிக் காட்டி கஜ சாஸ்திரி கேட்டான்.

‘‘ஆம்... பாரத தேசத்தின் தலைசிறந்த அசுவ சாஸ்திரியான தங்கள் நண்பரைத்தான் குறிப்பிடுகிறேன்... தங்களைச் சந்திக்கும் பொருட்டுதான் அவரையே முதன்முதலில் சந்தித்தேன்... அதுவும் தங்களது குருவான புலவர் தண்டியின் கட்டளைப்படி...’’ சிவகாமி அலட்சியமாக பதில் சொன்னாள்.
கரிகாலன் எதையோ சொல்ல முற்பட்டான்.தன் கரங்களை உயர்த்தி அதைத் தடுத்த கஜ சாஸ்திரி, ‘‘அப்படி ஏதும் நீங்கள் சொல்லவில்லை என்கிறார் என் நண்பர்...’’ என்றான்.‘‘அவர் பொய் சொல்கிறார்...’’ சிவகாமி அழுத்தம்திருத்தமாகச் சொன்னாள்.

‘‘இல்லை... நீ... நீங்கள் பல்லவர்களின் கஜ சாஸ்திரியைச் சந்திக்க வேண்டும் என என்னிடம் சொல்லவோ கேட்கவோ இல்லை...’’ கரிகாலன் சட்டென பதிலளித்தான்.‘‘ஆமாம்... கஜ சாஸ்திரி என்று எங்குமே... எந்த இடத்திலுமே இவரை நான் குறிப்பிடவில்லை...’’ நிறுத்திய சிவகாமி, புன்னகையுடன் பாறையில் அமர்ந்திருந்த கஜ சாஸ்திரியைப் பார்த்தாள். கருவிழியை உயர்த்தி கரிகாலனை ஏறிட்டாள். ‘‘பல்லவ இளவரசரைச் சந்திக்க வேண்டும்... அவரிடம் ஒரு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்...

என்றுதான் தங்களிடம் சொன்னேன்... கேட்டுக்கொண்டேன்... இது உண்மையா இல்லையா..?’’கரிகாலனின் புருவங்கள் விரிந்தன. தரையில் அமர்ந்திருந்த வீரர்களும், காவலுக்கு நின்றபடி தன் செவிகளை இந்தப் பக்கம் திருப்பி இருந்த வீரர்களும் பரபரப்படைந்தார்கள்.அனைத்து மாறுதல்களையும் கவனித்தபடி, ‘‘இந்த பாரத தேசத்தின் தலைசிறந்த கஜ சாஸ்திரியும் பல்லவ இளவரசர் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவர் என்கிற இராஜசிம்ம பல்லவரும் வேறு வேறல்ல என்பது பிறந்த குழந்தைக்கும் தெரியும்... அப்படியிருக்க சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாக குற்றம்சாட்டப்பட்டு உங்கள் முன் நிற்கும் எனக்கு இதுகூடத் தெரியாமலா இருக்கும்..?’’ நிதானமாகக் கேட்டாள் சிவகாமி.

மறுகணம் வாய்விட்டுச் சிரித்தார் - ஆம்... இனி பல்லவ இளவரசரை மரியாதையுடன் அழைப்பதுதானே முறை - கஜ சாஸ்திரி என அதுவரை அறியப்பட்ட பல்லவ இளவரசர். ‘‘ஆக... நான் யாரென்பது தங்களுக்கு முன்பே தெரியும்..?’’‘‘ஆம்...’’‘‘எங்கள் ரகசியங்கள் அனைத்தையும் அறிவீர்கள்..?’’‘‘அப்படித்தான் குற்றம்சாட்டப்பட்டு உங்கள் முன்னால்
நிறுத்தப்பட்டிருக்கிறேன்!’’

‘‘இப்படி நீங்கள் சொல்வதில் இருந்து உங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொள்கிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா..?’’
‘‘அது இளவரசரின் விருப்பம் சார்ந்தது...’’‘‘எனது விருப்பமா..?’’‘‘ஆம் இளவரசரே! ‘குற்றங்கள்’ என நீங்கள் சொல்கிறீர்கள்... நானோ ‘குற்றம்சாட்டப்பட்டு’ என்கிறேன்... இரண்டுக்குமான பொருள் வேறு வேறு என்பது தாங்கள் அறியாததல்ல...’’

‘‘நான் அறிந்ததைக் குறித்து இங்கு விசாரணை நடைபெறவில்லை... கரிகாலர் அறிந்ததை வைத்து தங்கள் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது... ஓலைக்குழலுடன் சிக்கிய சாளுக்கிய வீரர்கள் உதிர்த்த விவரங்கள் அந்த நிழலை வீரர்கள் மத்தியில் நிஜமாக்கி இருக்கிறது... எனவேதான் நீங்கள் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்...’’‘‘நிழலை நீங்களாகவே நிஜமாக்கிய பின்னர்...

நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? கையோடு தீர்ப்பையும் அளித்து விடுங்கள்... அது மரண தண்டனை எனில் தங்கள் நண்பர் கரிகாலரின் கையால் என் கழுத்து சீவப்பட வேண்டும்... இது மட்டுமே எனது வேண்டுகோள்...’’

‘‘உங்கள் வேண்டுகோளை கடைசியாக பரிசீலிக்கலாம்... இப்போது உங்கள் தரப்பை தாங்கள் சொல்லலாம்... இவர்கள் நினைக்கும் நிஜம் வெறும் நிழல்தான் என்பதை புரிய வைக்கலாம்...’’பல்லவ இளவரசர் இப்படிச் சொல்லி முடித்ததும் கண்கள் சிவக்க சிவகாமி பேசத் தொடங்கினாள்.அந்த கொற்றவையே வந்து தங்கள் முன்னால் பேசுவது போல் அங்கிருந்தவர்கள் உணர்ந்தார்கள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்