அவர் எழுதற மேஜைலதான் மிக்சி ஓடும்... அந்த சத்தத்துலயும் விடாம எழுதுவார்...



பெருமிதமாகச் சொல்கிறார் திருமதி ராஜேஷ்குமார்

‘க்ரைம் நாவல்களின் மன்னர்’ என தமிழகமே ராஜேஷ்குமாரைக் கொண்டாடினாலும் இன்று அவர் குடும்பக் கதைகளும், ஆன்மிகக் கட்டுரை பளஸ் கதைகளும் எழுதி தனிப்பெரும் ஆளுமையாக, ஆல் ரவுண்டராக உருவெடுத்திருக்கிறார்.இந்த ஆண்டுடன் அவர் எழுத்துலகில் நுழைந்து 50 ஆண்டுகளாகின்றன. சுமார் 1200க்கும் மேற்பட்ட நாவல்களையும், 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இதுவரை எழுதியிருக்கிறார் என்பது செய்தி அல்ல. வரலாறு!

இதற்கு உந்துசக்தியாகவும் நிழலாகவும் இருப்பவர் அவர் மனைவி தனலட்சுமி. மட்டுமல்ல, லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ராஜேஷ்குமாரின் முதல் வாசகியும் விமர்சகரும் கூட அவர்தான்! ‘‘அவரைப்பத்தி என்ன சொல்றதுனு தெரியல. அவர்தான் என் வாழ்க்கை. என்னோட பலம் அவர்...” மெல்லிய புன்னகையோடு பேசத் தொடங்குகிறார் தனலட்சுமி. இவருக்கும் சொந்த ஊர் கோவைதான்.

‘‘எங்களுக்கு 1975ல் திருமணமாச்சு. எங்க வீட்டுல இருந்து ரெண்டு தெரு தள்ளிதான் அவர் வீடு. அவர் எழுத்தாளர்னு எனக்குத் தெரியாது. என்னோட தங்கச்சியும், அவரின் தங்கச்சியும் பள்ளித் தோழிகள். ‘அவங்க அண்ணன் கையெழுத்து அவ்வளவு அழகா இருக்கும்’னு என் தங்கச்சி சொல்லி கேட்டிருக்கேன். ஆனா, அவரை நான் திருமணத்தப்பதான் பார்த்தேன். அவர் ராஜேஷ்குமார்ங்கிற பேர்ல சிறுகதைகள் எழுதிட்டு இருந்தார். அப்ப எனக்கு புக்ஸ் படிக்கிற பழக்கமில்ல...’’ என்றவரிடம் ‘அவரின் நிஜப் பெயர்?’ என்றோம்.

‘‘ராஜகோபாலன். தான், எழுத்தாளரானதே ஒரு விபத்துனு சொல்வார். 1968ல் கல்லூரியில படிக்கிறப்ப ஆண்டு மலருக்குக் கதை கேட்டிருக்காங்க. ‘இவர் நல்லா கதை எழுதுவார்’னு ஆசிரியர்கிட்ட இவரோட நண்பர் சொல்லியிருக்கார். ஆனா, என்னை மாதிரியே இவரும் அதுக்கு முன்னாடி எந்தக் கதைப் புத்தகமோ, வார, மாதப் பத்திரிகைகளோ படிச்சதில்ல.

ஆசிரியர்கிட்ட தலையாட்டிட்டோமேனு சில வாரப் பத்திரிகைகளைப் புரட்டி அதுல கதைகள் எப்படி எழுதப்பட்டிருக்குனு பார்த்திருக்கார். பிறகு, அந்த ஃபார்முலாவுல ஒரு கதையை எழுதிக் கொடுத்திருக்கார். அதைப் பார்த்த ஆசிரியர் பாராட்டிட்டு விழா மலர்ல அந்தக் கதையைப் போட்டிருக்கார்.

இப்படித்தான் இவரின் எழுத்துலகப் பயணம் ஆரம்பமாகியிருக்கு.ஆனா, இவருக்கு படிச்சு அரசு வேலைக்குப் போகணும்னு
தான் ஆசை. பிஎஸ்சி, பிஎட் முடிச்சதும் விழுப்புரம் பக்கத்துல பாலூர் கிராமத்துல இவருக்கு அரசுப் பள்ளில வேலை கிடைச்சுது. ஆனா, அப்ப அங்க ஒரே யானைக்கால் வியாதி. அதனால, பணில சேராம ஊருக்கே திரும்பிட்டார்.

எங்க திருமணம் நடக்கறப்ப இவர் அவங்க அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். ஒரு பிசியான பிசினஸ்மேன். வியாபார விஷயமா அடிக்கடி புனே, பம்பாய்னு அலைஞ்சுட்டு வருவார். அந்த அனுபவங்கள் எல்லாம் இவர் சிறுகதைகள்ல பிரதிபலிக்கும். இவரோட இரண்டாவது தங்கச்சி பேரு ராஜேஸ்வரி. வீட்டுக்குக் கடைக்குட்டி என்பதால் இவருக்கு தங்கச்சி மேல பாசம். மூத்த தங்கச்சி பையன் பேரு அனந்தகுமார். வீட்டுக்கே முதல் பேரன் என்பதால் அவர் மேலயும் இவருக்கு பாசம் அதிகம்.

இதனாலயே தன் பாசத்துக்கு உரிய இரண்டு பேரோட பெயர்களையும் சேர்த்து ‘ராஜேஷ்குமார்’னு தனக்கு புனைப்பெயர் வைச்சுக்கிட்டார்.
பாசத்துக்கு வலிமை அதிகம்னு சொல்வாங்க. அதனாலதான் அந்தப் பாசத்துக்குரிய பெயர்கள் இன்னைக்கு உலகம் தெரிஞ்ச பெயரா பிரபலமாகி இருக்கு. அவங்ககிட்ட மட்டுமில்ல, எல்லார்கிட்டயும் ரொம்பப் பாசமா இருப்பார்...’’ எனப் பெருமை பொங்கச் சொல்லும் தனலட்சுமிக்கு தன் கணவர் எழுதும் அனைத்தும் பிடிக்குமாம்.

‘‘இவரோட அத்தனை நாவல்களையும் நான் படிச்சிருக்கேன். ஒருமுறை படிக்க ஆரம்பிச்சா அதை கீழ வைக்கவே முடியாது. அந்தளவுக்கு சுவாரஸ்யமா இருக்கும். எப்பவும் எழுதறப்ப யோசிச்சு நிதானமாதான் எழுதுவார். சில சமயம் ஒரு பக்கத்துக்கு ஒரு மணி நேரம் கூட எடுத்துப்பார். ஆனா, ஒரு
தடவை எழுதிட்டார்னா அதைத் திரும்பப் படிக்க மாட்டார்.

என்னைய படிக்கச் சொல்லி எப்படி இருக்குனு கருத்து கேட்பார். நான் படிக்கும்போது என் ரியாக்‌ஷனை கவனிப்பார். என் முகபாவனைகளை வைச்சு சாதாரண வாசகருக்கும் இப்படித்தான் இருக்கும்னு கணிப்பார். சில நேரம், ‘ஏற்கனவே அந்தக் கதைல அப்பா- மகள் உரையாடல் இப்படித்தானே இருந்துச்சு’னு சொல்வேன். ‘அப்பா- மகள் உரையாடல் ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனா, கதை வேறு இடத்துல பயணிக்கும்’ என்பார்.

அதே கதை பத்திரிகைல பிரசுரமானதும் திரும்பப் படிப்பேன். அப்ப அவர் சொன்னது எந்தளவுக்கு உண்மைனு புரியும். சில கதைகள்ல இன்னார்தான் கொலைகாரன்னு கரெக்ட்டா சொல்லிடுவேன். உடனே ‘வாசகர்களுக்கும் இப்படி தோன்றிடக்கூடாது’னு சில இடங்களை மாத்தி எழுதுவார். வில்லியாக வரும் பெண் கேரக்டர் பேசும் வசனங்கள்ல தவறு இருந்தா சுட்டிக்காட்டுவேன். ‘உங்க நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கோ வாசகி
களுக்கோ வார்த்தைகளால் நெருடல் ஏற்படக் கூடாது’னு என் கருத்தைத் தெரிவிப்பேன்.

அதை ஏத்துக்கிட்டு என்னைப் பாராட்டுவார். நான் சுட்டிக்காட்டின வார்த்தைகளை உடனே மாத்துவார். ஆக, இவரோட முதல் வாசகியும் முதல் விமர்சகரும் நான்தான்!’’ பெருமையாகச் சொல்லும் தனலட்சுமி, தன் கணவர் முழுநேர எழுத்தாளரானகதையை விவரித்தார்.
‘‘திருமணமாகி எங்களுக்கு கார்த்திக்குமார், ராம்பிரகாஷ்னு ரெண்டு பசங்க பொறந்தாங்க. மாமனார், மாமியார்னு கூட்டுக் குடும்பமா நாங்க சந்தோஷமா இருந்தோம். 1980ம் வருஷம் பிசினஸ்ல போட்ட பணத்தை ஒருத்தர் ஏமாத்திட்டு போயிட்டார்.

இதனால நொடிஞ்சு போயிட்டோம். இவர், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்குப் போனார். மாசம் 450 ரூபாய் சம்பளம். இப்பவும் ஊர் ஊரா சுத்துற வேலை. இதிலும் இவருக்கு நிறைய அனுபவங்கள் கிடைச்சது. இந்நேரம், முதல் நாவல் எழுதினார். மாமாவும் அத்தையும் வெளிமாநிலங்கள்ல இருந்து துணிகளை வாங்கி உள்ளூர்க்காரங்ககிட்ட வித்து வருமானம் பார்த்தாங்க.

வாழ்க்கை இப்படியே நகர்ந்துச்சு. வேலைக்குப் போயிட்டே நிறைய எழுதினார். பாராட்டுகள் குவிஞ்சது. எழுத்து அவருக்கு நம்பிக்கை தந்ததும் 1988ல் இருந்து முழுநேர எழுத்தாளரா மாறினார். ஆனா, எனக்குதான் அது கஷ்டமா இருந்துச்சு...

ஏன்னா இவர் சாப்பிடுற, தூங்குற நேரங்கள் தவிர்த்து முழுநேரமும் எழுதிட்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு பத்திரிகை. பிறகு, பாக்கெட் நாவல்கள். இதனால, மாதப் பத்திரிகைக்காரங்க வீட்டுக்கே வந்து எங்களுக்கு எழுதித் தாங்கனு கேட்டு காத்திட்டு இருந்தாங்க. இவர், முடியாதுனு சொல்லிப் பார்த்தும் விடாம வீட்டுல இருந்து வாங்கிட்டு போவாங்க.

சில பத்திரிகைக்காரங்க கோபப்பட்டு பேசுறதையே நிறுத்திட்டாங்க. எனக்கு அவங்களப் பார்க்கவும் கஷ்டமா இருக்கும். அதேநேரம், இவரின் உடல்நிலை கெட்டுடக்கூடாதுங்கிற பதட்டமும் இருக்கும். எங்களை வெளியே அழைச்சுட்டுப் போகமுடியாத சூழல். ‘ஊட்டி, கொடைக்கானல் எங்கேயாவது வெளியில் போலாம்பா’னு பசங்க கேட்டுட்டே இருப்பாங்க.

‘அடுத்த வாரம்’னு சொல்லுவார். ஆனா, அடுத்த வாரம் ‘வண்டி வரல’னு சொல்லி ஏமாத்திடுவார். அப்ப, எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். ஆனா, அதை நாங்க புரிஞ்சுகிட்டோம். ஏன்னா, அவருக்கு வேலை இருந்திட்டே இருக்கும். அப்ப நாங்க ஓர் ஒண்டுக்குடித்தன வீட்டுல வாடகைக்கு இருந்தோம். இவர் எழுதிட்டு இருக்குற டேபிள்லதான் மிக்சியும் இருக்கும். மிக்சி போட்டாக்கூட அவர் பாட்டுக்கு எழுதிட்டு இருப்பார். அந்தளவுக்கு எழுத்துல மூழ்கிப் போவார்.

எழுதறப்ப இவருக்கு கொட்டாவியோ, சலிப்போ வந்ததேயில்ல. காபி கூட குடிக்கமாட்டார். ஒரே இடத்துல உட்கார்ந்து சிந்திச்சு எழுதுவார். அதனாலதான் 1200 நாவல்கள், 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவரால எழுத முடிஞ்சது. ஒவ்வொரு நாவலுக்கும் அவ்வளவு மெனக்கெடுவார். இதெல்லாம் பார்க்கும்போது இது தேவையானு கூட தோணும். ஆனா, எழுத்துதான் இவரை எப்பவும் உற்சாகமா வச்சிருக்கு. இதை கடவுள் கொடுத்த வரம்னுதான் சொல்வேன்...’’ நெகிழ்கிறார் தனலட்சுமி.

‘‘இப்ப பேரன், பேத்திகள் வந்த பிறகு ரொம்ப மாறியிருக்கார். அவங்களோட போன்ல பேசறதும், ஊருக்கு வந்தா ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போறதுமா இருக்கார். அன்னைக்கு எங்களை வெளில அழைச்சிட்டு போகாததற்கு வட்டியும் முதலுமா சேர்த்து இப்ப கடந்த மூணு வருஷங்களா சிங்கப்பூர், மலேசியா, துபாய்னு குடும்பமா கூட்டிட்டு போறார். இந்த 71 வயதில்தான் இவர் எழுத்தை ரெண்டாம்பட்சமா ஆக்கியிருக்கார்!’’ மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராஜேஷ்குமாரின் முதல் வாசகி!

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்