நியூஸ் சாண்ட்விச்
கழிவறையில் செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.51 ஆயிரம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமணமாகவிருக்கும் ஆண்கள், தங்கள் வீடுகளில் கழிவறை இருப்பதை நிரூபிக்க அதனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் மணமகளின் பெயருக்கு ரூ.51 ஆயிரம் வழங்கப்படும்!முக்கிய மந்திரி கன்யா விவாகம் / நிக்கா என்ற திட்டத்தின் கீழ் இப்படியொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர். ஆனால், இப்போது புகைப்படங்களை மட்டும் ஆதாரமாக கேட்பதாக சொல்கிறார்கள்!
 டிஸ்னி படத்தில் ஐஸ்வர்யா ராய்
ஹாலிவுட்டில் நடிகை ஆஞ்சலினா ஜோலி நடித்து பிரபலமான படம் ‘Maleficent’. அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகியிருக்கும் நிலையில், ஐஸ்வர்யா ராய் இதில் இணைந்துள்ளார். அதன்படி, ஆஞ்சலினா ஜோலிக்கு இந்தியில் டப்பிங் செய்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்குக் காரணம் தன் மகள் ஆராதனாதான் என்று கூறும் ஐஸ்வர்யா, ‘Maleficent’ தங்கள் இருவருக்குமே பிடித்த கதாபாத்திரம் என்கிறார்.
பழைய பேருந்துகள் இனி குழந்தைகள் பராமரிப்பு மையம்!
பெங்களூரில் பழைய பேருந்துகளை கட்டுமானப் பணியாளர்களின் குழந்தைகளை பராமரிக்கும் நிலையமாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பொதுவாக கட்டுமானப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளையும் வேலை இடத்திற்கு அழைத்துச்செல்வார்கள்.
கட்டடம் கட்டும் இடத்தில் குழந்தைகள் அபாயகரமான சூழலில் விளையாடிக்கொண்டும் தூங்கிக்கொண்டும் இருப்பர். இதனால் கர்நாடக அரசு பழைய பேருந்துகளைப் புதுப்பித்து, அதில் புத்தகங்களும், பொம்மைகளையும் நிரப்பி, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்திற்கு அருகில் பேருந்துகளை நிறுத்த முடிவுசெய்துள்ளனர். அக்ஷய்குமாரின் ரயில் விளம்பரம்
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் தன் புதிய படத்துக்கான ப்ரமோஷனுக்காக முதல் முறையாக இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து புது முயற்சியை எடுத்துள்ளார்.
பட போஸ்டரில், அலங்கரிக்கப்பட்ட ஸ்பெஷல் இரயில், மும்மையிலிருந்து முக்கிய நகரங்கள் வழியாக தில்லி செல்லும். இதில் பயணிகளுடன் சேர்ந்து அக்ஷய் குமாரும் அப்படத்தில் நடித்த மற்றவர்களும் பயணம் செய்தார்கள்.பாலிவுட் நட்சத்திரங்களுடன் இந்த ரயிலில் பயணிக்க மக்கள் போட்டிபோட்டு டிக்கட் வாங்கியிருக்கிறார்கள்!
தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்
|