நான்...முருகானந்தம் அருணாச்சலம்‘‘எவ்வளவோ கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திச்சுட்டேன். ஆனால், இன்னமும் முழுமையான பலன் கிடைக்கலை. இந்த நவீன உலகிலும் பெண்கள் நேப்கின்ஸை தயங்கித் தயங்கிதான் வாங்கறாங்க. கடைகள்லயும் செய்தித்தாள்ல சுத்தி மறைவாதான் தர்றாங்க. இந்த நிலை எப்ப மாறும்னு தெரியலை.நாங்க நெசவாளர்கள் குடும்பம்.

அப்பா அருணாச்சலம் அந்தக் கால நெசவாளி. தினம் தினம் கூலிக்கு நெசவு செய்தவர். திடீர்னு அப்பா விபத்துல மரணமடைந்தப்ப நான் சின்னப் பையன். என் படிப்புக்காக எங்க அம்மா வனிதா பக்கத்து வயல்ல கூலிக்கு வேலைக்குப் போனாங்க. அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்துட்டு 9வதோட படிப்பை நிறுத்திட்டேன்.

எனக்கு இரு சகோதரிகள். கோவை பாப்பநாயக்கன் புதூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துல பிறந்தவனால 1962ல என்ன செய்துட முடியும்? படிச்சாலும் பெரிய நிலைக்கு போக முடியாதுனு தோணிச்சு. அதனால வெல்டிங் வேலை செய்யப் போனேன். ஆனா, பள்ளி வாத்தியார்களை மறக்கலை. இப்ப வரை அவங்களோடு தொடர்பில் இருக்கேன். பள்ளிப் பாட நூல்ல என்னைப் பத்தி ஒரு பாடம் இருப்பதா சமீபத்துல ஆசிரியர்கள் கூப்பிட்டு சொன்னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.

உரிய வயது வந்ததும் வீட்ல திருமணம் செய்து வைச்சாங்க. மனைவி பெயர் சாந்தி. அவங்களைப் புரிஞ்சுக்கவே எனக்கு அதிக நாட்களாச்சு. இந்த நேரத்துல எதையோ மறைச்சு மறைச்சு என் மனைவி எடுத்துட்டு போறதைப் பார்த்தேன். என்னனு கேட்டப்ப, ‘அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்’னு சொன்னாங்க.

கொண்டு போனதை அவங்க வைச்சுட்டுப் போனதும் அவங்களுக்கு தெரியாம அதை எடுத்துப் பார்த்தேன். ரத்தம் படிந்த கந்தல் துணி.
இதே மாதிரியான கந்தல் துணியை என் சகோதரிகள் கூரை இல்லாத சின்ன மறைவு மாதிரியான குளியல் அறைல மட்டைகளுக்கு பின்பக்கம் செருகி வைப்பதை பார்த்திருக்கேன். ஆனா, அப்ப விவரம் தெரியலை... வயசும் இல்லை... அதனால புரியலை. ஆனா, என் மனைவி மறைச்சு வைப்பதை பார்த்தப்ப ஓரளவு விவரம் தெரிஞ்சிருந்தது.

‘ஏம்மா... அதுக்குனு ஒரு பொருள் இருக்கே... அதைப் பயன்படுத்தலாமே? ஏன் கந்தல் துணியை யூஸ் பண்ற’னு மனைவிகிட்ட கேட்டேன். அதுக்கு சாந்தி, ‘அதை வாங்கணும்னா நம்ம வீட்ல பாலை நிறுத்தணும்’னு சொன்னாங்க. அதிர்ச்சியா இருந்தது. பாலை நிறுத்தும் அளவுக்கு விலை அதிகமா? அந்த நேரத்துல அதன் பெயர் நேப்கின்... சானிட்டரி பேட்னு எல்லாம் தெரியாது. கடைக்குப் போய் கண்ணாடி அலமாரில இருந்ததை சுட்டிக் காட்டி கேட்டேன். இன்னி போலவே பேப்பர்ல மடிச்சு கடத்தல் பொருளை தர்றா மாதிரி கொடுத்தாங்க.

வீட்டுக்கு வந்து பிரிச்சுப் பார்த்தப்ப 8 இன்ச் அளவுல வெள்ளையான செவ்வக பொருள். 10 கிராம்ல பஞ்சு அழுத்தப்பட்டிருந்தது. நெசவாளியின் மகன் இல்லையா..? 10 கிராம் பஞ்சு அப்ப ஆறு பைசானு தெரியும். அப்படியிருக்கிறப்ப அதை ஏன் இவ்வளவு விலைக்கு விற்கறாங்க?

இந்தக் கேள்வி எழுந்ததும் நானே சொந்தமா பஞ்சுகளை வாங்கி நேப்கின்ஸ் செய்தேன். சகோதரிகள், மனைவிகிட்ட இதுபத்தி பேச ஆரம்பிச்சு பெரிய சிக்கலாகிடுச்சு. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தவங்க ஒரு கட்டத்துல என் கூட பேசறதையே நிறுத்திட்டாங்க. ‘இந்தப் பக்கமே வராத’னு என் சகோதரிகள் கத்தினாங்க.

மனைவியோ வேதனையும் அவமானமுமா என்னைப் பார்க்க ஆரம்பிச்சாங்க. எதையும் பொருட்படுத்தாம, கிடைச்ச பஞ்சுகளை வைச்சு முயற்சி செஞ்சுகிட்டே இருந்தேன். ஒரு ரப்பர் பையில ஆட்டு ரத்தத்தை நிரப்பி நானே சோதிக்கலாம்னு முயற்சி செஞ்சேன். இந்தப் பரிசோதனைகளால அப்ப நான் அனுபவிச்ச கஷ்டங்களை எல்லாம் வார்த்தைல விளக்க முடியாது.

ரத்த வாடையும் ஈரமுமா இருந்தப்பதான் பெண்களே உலகுல வலிமையான உயிர்னு புரிஞ்சுகிட்டேன். ஆட்டு ரத்தத்தோடு நான் பரிசோதனைல இறங்கினப்ப என் ஆடை முழுக்க ரத்தமாகி... ஊர் முழுக்க இந்த விஷயம் பரவி... என் அம்மா உட்பட பலரும் எனக்கு பேய் பிடிச்சுட்டதா நினைச்சு மந்திரிக்கவே ஆரம்பிச்சாங்க.

மருத்துவக் கல்லூரி மாணவிகளை சந்திச்சு என் நேப்கின்ஸை கொடுத்து முடிவுகளைக் கேட்க நினைச்சேன். அவங்களும் இதுபத்தி பேச மறுத்தாங்க. ஆனாலும் சில மாணவிகள் உதவினாங்க. ஒரு மாணவி, ‘உங்க நேப்கின்னால நான் மாதவிடாயில் இருப்பதையே மறந்துட்டேன்’னு நெகிழ்ச்சியோடு சொன்னாங்க.

அப்பதான் என் பரிசோதனைகள் மேல எனக்கே நம்பிக்கை வந்தது. சரியான பாதைலதான் போறோம்னு புரிஞ்சுது. அடுத்த கட்டமா ‘நீங்க பயன்படுத்தின நேப்கின்ஸை கொடுங்க’னு மெடிக்கல் காலேஜ் மாணவிகள்கிட்ட கேட்டேன்.

அலறி அடிச்சுட்டு ஓடினவங்க அப்புறம் ஒரு பெட்டில போட்டுக் கொடுத்தாங்க.இதுக்குள்ள நான் கல்லூரி மாணவிகள் பின்னாடி சுத்துறேன்னு என் மனைவி வீட்டாருக்கு தகவல் போச்சு. என் போக்கை மாத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடிவு செய்த சாந்தி, என்னைப் பிரிஞ்சு தன் அம்மா வீட்டுக்கே போனார். திரும்பி வரவே இல்ல. வக்கீல் நோட்டீஸ்தான் வந்தது.

கஷ்டமா இருந்தாலும் இதை பொருட்படுத்தாம என் சோதனைகளைத் தொடர்ந்தேன். வீட்ல சோதிக்க முடியாது. அம்மா பார்த்தா அவ்வளவு
தான். அதனால வீட்டுக்குப் பின்னாடி அதிகாலைல யூஸ் பண்ணின நேப்கின்ஸை பிரிச்சு சோதிச்சுட்டு இருந்தேன். எதேச்சையா தூங்கி எழுந்து வந்த எங்கம்மா, பெட்டி நிறைய ரத்தக் கறை படிந்த நேப்கின்ஸை பார்த்துட்டு, ‘என் பையனுக்கு காட்டேரி பிடிச்சுடுச்சு’னு அலறி அழுது வீட்டை விட்டே போயிட்டாங்க.

ஊரும் என்னை ஒதுக்கி வைக்க நினைச்சது. என்னை மரத்துல கட்டி பேய் ஓட்ட ஆணி அடிக்க முடிவு செய்தாங்க. நண்பர் மூலமா இந்தத் தகவல் கிடைச்சதும் கோவைக்கு வந்தேன். மேன்ஷன்ல தங்கி என் பரிசோதனைகளைத் தொடர்ந்தேன். என் மனைவிக்காக ஆரம்பிச்சதுதான்.

ஆனா, பரிசோதனைகள் செய்தப்பதான் பல பெண்கள் கந்தல் துணி கூட இல்லாம சாம்பல், மரத்தூளை எல்லாம் பயன்படுத்துவது தெரிஞ்சுது. எந்தக் காரணத்துக்காகவும் இதை விடக் கூடாது... வெற்றி பெற்றே தீரணும்னு முடிவு செய்தேன்.

இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு வெற்றி கிடைச்சது. பைன் மரப் பஞ்சுதான் இதுக்கு வேணும். ஆனா, அதை அழுத்தி நேப்கின்னா மாத்த மெஷின் வேணும். அந்த மெஷின் விலை ஏழரைக் கோடி ரூபா. உடனே அடுத்த கட்டமா குறைந்த விலைல மெஷின் தயாரிக்க முடிவு செய்தேன்.

இதுக்காக பீகார் வரை போனேன். நினைச்சா மாதிரியே மெஷின் ரெடியாச்சு. இதை மக்களுக்கு தெரியப்படுத்தணும். என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப ஐஐடில கண்காட்சி நடப்பது தெரிய வந்துச்சு. என் மெஷினை அந்த கண்காட்சில வைச்சேன்.

அந்த எக்ஸிபிஷனுக்கு வந்தவங்கள்ல பாதிப் பேர் வெளிநாட்டுக்காரங்க. இங்கிலீஷ்ல கேள்வி கேட்டாங்க. எனக்கு பதில் சொல்லத் தெரியலை. ஆனா, செஞ்சு காட்டினேன்! பாராட்டி பரிசு கொடுத்தாங்க. பீகார் முழுக்க சுத்தி அங்கிருக்கும் பெண்களுக்கு இந்த மெஷின் பத்தி தெரியப்படுத்தி, நீங்களே நேப்கின்ஸ் தயாரிக்கலாம்னு புரிய வைச்சு இதை ஒரு தொழிலா மாத்தினேன்.

ஒரு சின்ன மெஷின்... ஏழரைக் கோடி ரூபா மதிப்புள்ள மெஷினுக்கு போட்டியா... அதுவும் இரண்டே நிமிடங்கள்ல யார் வேணும்னாலும் நேப்கின் தயாரிக்கலாமானு உலகம் முழுக்க ஆச்சர்யமா பார்த்தாங்க. பல நாடுகள்ல இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

பீகார் தொடங்கி வட இந்திய கிராமங்கள் முழுக்க இதைக்கொண்டு போனேன். தென்னிந்தியாவை விட வட இந்திய கிராமப்புற பெண்கள்தான் இன்னமும் மாதவிடாய் காலங்கள்ல அதிக துன்பங்களை அனுபவிக்கறாங்க.அதனாலயே இன்னமும் மின்சாரம் கூட நுழையாத கிராமங்கள், மலைவாழ் பிரதேசங்களுக்குப் போய் இந்தத் தொழிலை அவங்களையே செய்ய வைக்கறேன். ஆமா... இந்த மெஷினை வெறும் கைகளால் இயக்கலாம்!

நான் கண்டுபிடிச்ச மெஷினின் விலை ரூ.65 ஆயிரம்தான். குழுவா பெண்கள்கிட்ட அதை கொடுக்கறேன். அவங்க உற்பத்தி செஞ்சு கிடைக்கற லாபத்துல மெஷினுக்கான தொகையை கொஞ்சம் கொஞ்சமா அடைக்கறாங்க.

இப்ப 1700க்கும் மேற்பட்ட பகுதிகள்ல இந்த குறைஞ்ச விலை நேப்கின்ஸ் தொழில் நடக்குது. ஐஸ்லாந்து, இங்கிலாந்துனு 27க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த மெஷின் ஏற்றுமதி ஆகுது.இப்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமா வைச்சு ஆர்கானிக் நேப்கின்ஸ் தயாரிக்கும் பணில இறங்கியிருக்கேன்.

ஐந்தரை வருஷங்களுக்கு அப்புறம் என் போராட்டத்தை புரிஞ்சுகிட்டு என் மனைவி திரும்ப என் கூட வாழ வந்தாங்க. அம்மாவும் அப்படித்தான். இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரின் மனைவி டிவிங்கிள் கண்ணா, என்னைப் பத்தி புத்தகம் எழுதி வெளியிட்டாங்க.

அந்த நூலை அடிப்படையா வைச்சு எடுக்கப்பட்ட ‘பேட்மேன்’ படத்துல அக்‌ஷய்குமார் நடிச்சார். நான் நடிச்ச ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் கிடைச்சிருக்கு. பத்ம உட்பட பல தேசிய விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் வாங்கிட்டேன்.ஆனாலும் இன்னமும் நான் போக வேண்டிய தூரம் அதிகம். ‘மாதவிடாய் காலத்துல உனக்கு என்னென்ன பிரச்னை இருக்கு’னுஓர் ஆண் தன் வீட்டுப் பெண்கிட்ட எப்ப கேட்டு புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறானோ அப்பதான் இந்த சமூகம் முழுமையா மாற்றமடையும்!’’  

ஷாலினி நியூட்டன்