நம்மால் முடியும்-ஒருபோதும் தாழ்வு மனப்பான்மையால் சுருங்காதீர்கள்!கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

‘‘மனிதர்களின் தோற்றம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் சூழலில் என் தோற்றம் சரியில்லை என்பதற்காகவே நான் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டேன்...’’ என பேசத் தொடங்கிய ராஜீவ் ராஜன், மூளை முடக்குவாத (cerebral palsy) குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.

மூளைக்கு வரும் ஆக்ஸிஜன் குறைபாடே மூளை முடக்குவாதம் எனச் சொல்லப்பட்டாலும், இதற்கு சரியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மூளை சொல்வதை உடல் கேட்காத நிலையே நிதர்சனம். குழந்தை தவழ்வது, உட்காருவது, பேசுவது என அனைத்தும் வயதுக்கேற்ற வளர்ச்சியில் இல்லாமல் தாமதமாக நடக்கும்.
பிரச்னைகள் ஒரே மாதிரியும் இருக்காது. சிலர் நடக்கத் தடுமாறலாம். சிலரால் பேச முடியாது. சிலருக்கு இரண்டுமே பாதிக்கும். பாதிக்கப்பட்டவர்களின் தோற்றம் வித்தியாசப்பட அவர்கள் புறக்கணிப்பிற்கு ஆளாகிறார்கள்.ஆனால், ராஜீவ் ராஜன் லயோலா கல்லூரியில் பி.காம் முடித்த முதல் செரிபரல் பால்சியை வென்ற பட்டதாரி.

மனித உரிமைகள் (human rights) பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கூடவே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் (Child and women rights) பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்கிறார். சென்னையில் இயங்கும் ஏக்தா (EKTHA) அறக்கட்டளையின் இயக்குனராக இருக்கிறார். மாற்றுத் திறனாளிகள் உரிமை சார்ந்து பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியும், அவர்களின் நலன் சார்ந்து இயங்கியும் வருகிறார்.

டிசேபிள்ட் பீப்பிள் இன்டர்நேஷனல் -ஏசியா பசிபிக் ரீஜன் (DPI-AP), டிசெபிளிட்டி ரைட்ஸ் அலையன்ஸ் (DRA), பாரா ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். உலகின் எந்த மூலைக்கும் தனித்தே பயணிக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் உள்ள போஸியா (boccia) விளையாட்டுக்காக ஒரு டீமை இந்தியாவில் உருவாக்கும் முயற்சியில் இன்று இருக்கிறார்.

‘‘பெற்றோருக்கு நான் ஒரே பையன். பிறப்பில் என்னிடம் வித்தியாசத்தைக் கவனித்த பெற்றோர், பத்து வயதுவரை பல மருத்துவர்களைச் சந்தித்தும், பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறியும் பலனில்லை. 14 வயது வரை வீட்டிற்குள்ளேயே இருந்தேன். அப்போது என் அப்பா ஊட்டி அருவங்காடு கார்டைட் பாக்டரியில் பணியாற்றினார். அங்கிருந்த நண்பர் ஒருவர் மூலமாக, சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் வித்யாசாகர் சிறப்புப் பள்ளி குறித்து தெரியவர 15 வயதில் அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அம்மா உதவியோடு வீட்டில் பாடங்களைப் படித்த என்னை, பள்ளி வாழ்க்கை அப்படியே மாற்றியது.

21 வயதில் பத்தாம் வகுப்பை முடித்தேன். கணக்கு எனக்கு நன்றாக வர, சென்னை ஐஐடி வளாகத்தில் இருக்கும் வனவாணி மெட்ரிகுலேஷன் நார்மல் பள்ளியில் காமர்ஸ் வித் மேத்ஸ் பிரிவை எடுத்தேன். 72 சதவிகிதம் மதிப்பெண்களோடு பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன். தொடர்ந்து லயோலா கல்லூரியில் பி.காம் முடித்த கையோடு, உயர் கல்வி, டிப்ளமோ என்று என் கல்வித் தகுதிகளை தொடர்ந்து வளர்த்துக் கொண்டேன்...’’ புன்னகைக்கிறார் ராஜீவ்.

‘‘டிஎல்யு (Disability Legislation Unit) என்பது நான் படித்த வித்யாசாகர் பள்ளியின் ஒரு செயல்பாடு. அதில் நானும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். மேலும் சட்ட ஆலோசனைகளுக்கான அட்வகசியிலும் 23 வருடங்களாக தொடர்ந்து செயல்படுகிறேன். 2003ல் ஏக்தா அறக்கட்டளையை என் நண்பர்கள் தீபக் மற்றும் தனசேகருடன் இணைந்து ஆரம்பித்தேன். நாங்கள் மூவருமே செரிபரல் பால்சி குறைபாடு மாற்றுத் திறனாளிகள். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் இணைந்து நடத்தும் ஒரே அமைப்பு ஏக்தா மட்டுமே.

எங்களின் அமைப்பு வழியே, மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம், அவர்களுக்கான உரிமைகள் தொடர்பான ஆலோசனைகள், சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.சட்டம் என்ற ஒன்று இருந்தால்தான் எதையும் முறையாகச் செய்யவும், கேள்வி கேட்கவும் நம்மால் முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான சட்டங்களைக் கொண்டு வந்து, அதனை நடைமுறைப்படுத்த வைக்கும் முயற்சிகளை அமைப்பின் வழியே கையிலெடுத்திருக்கிறோம்.

நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சி சென்றபோது, முன்கூட்டியே தங்கும் விடுதி பதிவு செய்தும், என்னை நேரில் பார்த்தபின், அறை தர மறுத்தார்கள். அப்போது நள்ளிரவு மணி 12. ஆன்லைன் மூலம் நான் கட்டிய முன் பணத்தை திருப்பிக் கொடுத்தாலும், அந்த நள்ளிரவில் மாற்றுத் திறனாளியான நான் எங்கு சென்று அறை தேடுவது?

விடாமல் அங்கேயே இருந்து போராடி, கடைசியில் அவர்களை மன்னிப்புக் கேட்க வைத்து கடிதமும் பெற்றேன்!’’ என சட்டத்தின் தேவையை தன் வாழ்வில் இருந்தே உதாரணமாக விளக்கும் ராஜீவ், மாநகரப் போக்குவரத்தும் ரயில்வேயும் தங்களைப் போன்றவர்களுக்கு ஏற்றதாக இல்லை என்கிறார்.
‘‘பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளும் டிசெபிளிட்டி ஃப்ரெண்ட்லியாக இல்லை. இவையெல்லாம் சரிசெய்யப்பட்டால் எங்களாலும் தடையின்றி பயணிக்க முடியும்.

2011ல் மாநகரப் பேருந்துகளில் ஒரு சதவிகிதம் என்கிற கணக்கில் 10 பேருந்துகளில் மட்டுமே லிஃப்ட் இடம் பெற்றது. சமீபத்தில் வெளியான சிவப்பு நிறப் பேருந்துகளிலும் ஒரு பேருந்தில் மட்டுமே லிஃப்ட் வசதி செய்யப்பட்டிருந்தது. லிஃப்ட்டைத் தவிர்த்து அனைத்துப் பேருந்தும் தாழ்தள (low floor) சாய்வு வழியோடு இருந்தால் நாங்களே ஏறி நாங்களே இறங்க முடியும். எல்லா வழித் தடங்களிலும் எங்களுக்கான பேருந்துகள் அடிக்கடி இயக்கப்பட்டால் பயன்பாடாகவும் இருக்கும்.

இப்போது மாற்றுத் திறனாளி சிறப்புச் சலுகையில் ரயில்களில் தனித்து பயணிக்க அனுமதி கேட்டும் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். இதுவரை 750 வழக்குகளை மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்து பதிவு செய்திருக்கிறோம்...’’ என்று அடுக்கும் ராஜீவ், 2006ல் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கையால் சிறந்த ரோல் மாடலுக்கான தேசிய விருதைப் பெற்றதோடு, 2009ம் ஆண்டுக்கான கவின்கேர் எபிளிட்டி (CavinKare ability award) விருதையும் வென்றிருக்கிறார்.

‘‘எங்கள் பிரச்னை சார்ந்து கூட்டம் மற்றும் மாநாட்டுக்காக வியட்நாம், நேபாள், கொரியா, தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இதுவரை பயணித்துள்ளேன். கொரியாவுக்கு மட்டும் மூன்று முறை சென்று வந்திருக்கிறேன்.

மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்து 2012ல் அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தேன். 2016ல் அமைக்கப்பட்டுள்ள டிசெபிளிட்டி ஆக்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் டிராஃப்டிங் கமிட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

ஒரு மாநாட்டிற்காக அமெரிக்கா சென்றபோது, மாற்றுத் திறனாளி நபர் தனியாகச் செல்லக் கூடாது என அனுமதிச் சீட்டு (boarding pass) தர மறுத்தார்கள். மீடியாவை அழைத்து வழக்கு பதிவு செய்தேன்.மாற்றுத்திறனில் பலவிதம் உண்டு.

விளையாட்டு என்பதும் அவரவர் விருப்பம், உரிமை மற்றும் பொழுதுபோக்கு சார்ந்தது. மற்ற விளையாட்டுகளை விளையாடும் மாற்றுத் திறனாளிகளால் போஸியாவும் விளையாட முடியும். ஆனால், போஸியா விளையாடுபவர்களால் மற்ற விளையாட்டுகளை விளையாட முடியாது.

எனவே தீவிர மாற்றுத்திறன் கொண்டவர்களையும் விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பின் வழியே போஸியாவைக் கையில் எடுத்திருக்கிறோம். பாரா ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள போஸியா விளையாட்டில், இந்தியாவுக்காக ஒரு டீமை உருவாக்கி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.

இதுவரை சென்னை தவிர பல்வேறு இடங்களில் 80 முகாம்களை நடத்தி இருக்கிறோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் போஸியா விளையாட்டுக்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது. இதுவரை மாநில அளவிலான போட்டிகள் மூன்றும், தேசிய அளவிளான போட்டி ஒன்றையும் நடத்தியுள்ளோம்...’’ என்ற ராஜீவ், போஸியா விளையாட்டிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.

போலியோவில் பாதிக்கப்பட்ட, தன்னுடன் பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த மீனாட்சி என்பவரை காதல் மணம் புரிந்திருக்கும் ராஜீவ், இருவர் வீட்டிலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், பேசிப் புரிய வைத்து திருமணம் செய்து கொண்டோம் என்கிறார் புன்னகைத்தபடி.

‘‘மீனாட்சி மாடிஃபைட் காரை சிறப்பாக ஓட்டுவார். பல இடங்களுக்கு அவர்தான் எனக்கு சாரதி! இவ்வளவு வேலைகளில் என்னால் ஈடுபட முடிகிறதென்றால் அதற்கு அவர்தான் காரணம். தன் பங்குக்கு மீனாட்சியும் ஈக்குவல்ஸ் என்கிற அமைப்பில் செயல்படுகிறார்.

விரல்கள் தனக்கு ஒத்துழைக்காத நிலையில் கையெழுத்திற்கு பதிலாக விரல் பதிவை இடுகிறேன். என் தோற்றத்தால் அரசு சார்ந்த நடவடிக்கைகளில் கையொப்பம் இட அனுமதிப்பதில்லை. இதைக் காரணம் காட்டியே சட்ட ஒப்பந்தங்களில் நான் தலையிடுவதையும் தடை செய்கிறார்கள்.

எனக்கான தனிநபர் வங்கிக் கணக்குகள், ஏடிஎம் கார்ட் பயன்பாடுகளை வங்கிகள் தருவதில்லை. நாங்கள் குடியிருப்பதற்கு வாடகைக்கு வீட்டைக்கூட தர யாரும் முன் வருவதில்லை. நாங்கள் படித்தவர்களாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும் இருந்தாலும் எங்களின் தோற்றம் ஒரு தடையாகவே இருக்கிறது...’’ என்ற ராஜீவ், இறுதியாக சொன்னது என்ன தெரியுமா?கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒருபோதும் தாழ்வு மனப்பான்மையால் சுருங்காதீர்கள்!     

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்