கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-34



புகைப் பழக்கத்துக்கு மருந்தாகும் கந்தன்

காலை ஆறு மணி. நாகராஜன் குளித்து முடித்து விட்டு விபூதி பூசிக் கொண்டிருந்தார். அவரது மனைவி ஆனந்தி, அவருக்காக காபியை தயார் செய்து  கொண்டிருந்தாள். அப்போது அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்..?’ யோசனையுடன் நாகராஜன் வந்து கதவைத் திறந்தார்.வாசலில் இருந்த இருவரைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது. ‘‘வா... ராகவா...’’ அழைத்து அவர்களை ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தார்.

எட்டிப் பார்த்த ஆனந்தி, புன்னகைத்தாள். ‘‘வாங்கண் ணா...’’ தன் பங்குக்கு வரவேற்றாள்.நாகராஜனும் ராகவனும் பால்ய கால நண்பர்கள். ‘‘ஆனந்தி... இவாளுக்கும் காபி...’’ நாகராஜன் குரல் கொடுத்தார்.‘‘இதோ... இரண்டே நிமிஷம்...’’ என்றபடி ஆனந்தி சமையலறைக்கு நகர்ந்தாள்.
‘‘எப்படி இருக்க ராகவா..? வீட்ல எல்லாரும் சுகம்தானே..?’’ கேட்ட நாகராஜன், தன் நண்பரின் முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார். ‘‘என்ன ராகவா... என்ன பிரச்னை..?’’

நாகராஜன் இப்படி வாஞ்சையுடன் விசாரிக்கும்போதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் எதிர் வீட்டு கண்ணன்! தாத்தா வீட்டில் பேச்சுக் குரல் கேட்டால், யாரோ பிரச்னைகளுடன் வந்திருக்கிறார்கள்... அவர்களுக்கு தாத்தா பரிகாரம் சொல்லப் போகிறார் என்று அவனுக்குத் தெரியுமே!
மெல்ல நடந்து வந்து நாகராஜனின் அருகில் கண்ணன் அமர்ந்தான். எதிரே அமர்ந்திருந்த ராகவனைப் பார்த்தான். தாத்தாவின் வயதுதான். என்ன சொல்லப் போகிறார் என்று கவனிக்கத் தொடங்கினான்.

ராகவனின் கண்கள் கலங்கி விட்டன. ‘‘என்னன்னு சொல்லுவேன் நாகராஜா... என் பையனை நல்லா வளர்த்திருக்கேன்னுதான் நேத்து வரை நினைச்சிருந்தேன்... ஆனா...’’ நிறுத்தியவர் தன்னை சமாளித்துக் கொண்டு தொடர்ந்தார்: ‘‘தெருமுனைல அவன் மறைவா சிகரெட் பிடிச்சுட்டு இருந்ததை நேத்து சாயங்காலம் பார்த்தேன்... மனசு கேட்கலை...’’

‘‘அவ்வளவுதானேண்ணா... இவர் சொல்ற கோயிலுக்குப் போய் சாமியை வணங்குங்க... பையன் தன்னால சிகரெட் பிடிக்கறதை நிறுத்திடுவான்...’’ என்றபடி ஆனந்தி அனைவருக்கும் காபி கொடுத்தாள். நாகராஜன் தொண்டையைக் கனைத்தார். சிகரெட் பிடிப்பதை நிறுத்தவும் கோயில் இருக்கிறதா..? கண்ணன் கதை கேட்க தயாரானான். நாகராஜன் சொல்லத் தொடங்கினார்...அந்த மலை பச்சைப் போர்வை போர்த்திய தங்க மலை போல மின்னிக் கொண்டிருந்தது. மலை எங்கிலும் மயில்கள் சிங்காரமாக நடந்தபடியும் ஆடியபடியும் இருந்த காட்சி காண்பவரை மயக்கியது.

மயில்களின் நடனத்திற்கு ஜதி தப்பாமல் குயில்கள் பாடிக் கொண்டிருந்தன. அந்த மலையை இயற்கை அன்னை பிரத்யேக மாக அருளி
யிருக்கிறார் என்று, யார் அதை நோக்கினாலும் சொல்வார்கள். அந்த மலையின் உச்சியில் ஒரு  கோயில் இருந்தது. அது தனது அருள் அலைகளால் அந்த மலையை தெய்வீகமாக மாற்றி விட்டது.

அந்த அற்புத மலையின் மீது ஏறிக் கொண்டிருந்தது ஒரு ராஜ பல்லக்கு. அதற்கு முன்னேயும் பின்னேயும் பந்தோபஸ்தாக யானைகளும் குதிரைகளும் வீரர்களும் இருந்தார்கள். அவர்கள் அனைவரது கைகளிலும் பூஜைக்குரிய பூ, சந்தனம் முதலிய பொருட்கள்.பல்லக்கு கோயிலின் அருகில் வந்ததும் வேதியர்கள் வேத மந்திரத்தை முழங்கினார்கள். பல்லக்கை விட்டு ராஜ கம்பீரமாக ஒருவர் இறங்கினார்.

அவர் மனதில் குடி கொண்டுள்ள முருக பக்தியை அவரது நெற்றியில் மின்னும் திருநீறும் வாயில் ஒலிக்கும் முருகனின் நாமமும் சொல்லாமல் சொல்லின.அந்த நபருக்கு வைபோகமாக பூரண கும்ப மரியாதைகளை வேதியர்கள் குறைவின்றி செய்தார்கள். ‘‘வரவேண்டும்... வரவேண்டும் புதுக்கோட்டை மகாராஜா அவர்களே! தங்களது கருணை நோக்கு இந்த விராலி மலையில் விழுந்ததை எண்ணி நாங்கள் உள்ளம் பூரித்துப் போகிறோம்!’’ வேதியர்கள் வரவேற்றார்கள்.  

‘‘இந்த விராலி மலை முருகன் என் மீது கருணை செய்ததால் அல்லவா என்னால் இங்கு வர முடிந்தது..? பரம் பொருளான அவனை வணங்க அவன் அருள் நிச்சயம் தேவை! அதனால்தானே மாணிக்க வாசகர்,‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்றார். ஆகவே அந்த கந்தப் பெருமானின் தனிப் பெரும் கருணையால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதை மறக்க வேண்டாம்...’’ பவ்யமாக சொன்ன மன்னர் பக்தி
யுடன் கோயிலுக்குள் நுழைந்து முருகனை வணங்கினார்.

முருகனுக்கு தீபாராதனை காண்பித்துவிட்டு பிரசாதத்தைக் கொண்டு வந்து மன்னருக்கு அளித்தார் அந்த வேதியர். அதை வாங்கி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் மன்னர். ‘‘சுவாமி! இந்த அற்புதமான மலையில் என்னப்பன் முருகன் வந்த கதையையும், அவர் செய்த லீலைகளையும் ஒன்று விடாமல் எனக்குக் கூறி அருள வேண்டும்...’’ என விண்ணப்பித்தார்.மகிழ்ந்த வேதியர் முருகனை வணங்கிவிட்டு சொல்லத் தொடங்கினார்...

அடர்ந்த வனப் பகுதி. அங்கு எதிரொலித்துக் கொண்டிருந்த கொடிய வன விலங்கின் சத்தம், பெரிய வீரனையும் அச்சுறுத்தும்.
இரவு அர்த்த ஜாமம் வேறு. எங்கும் மை இருள். கொடிய மிருகங்கள் இருக்கும் அந்த வனப் பகுதியில் பகலில் வரவே பலர் பயப்படும் நிலையில், இரவில் அந்த ஒருவர் மட்டும் திட சித்தராக நடந்துகொண்டிருந்தார்.

அவரின் மீது திருநீற்றின் மணம் ஏகத்துக்கும் வீசியது. ஒற்றை நாடி போல் மெலிந்திருந்த அவர் தேகம் காவியுடையோடு கூடி பிரகாசித்தது.
அவரது வாய் ‘முருகா! குமரா! குகா!’ என ஜபித்துக் கொண்டிருந்தது. அந்த நாம ஜபமே அவருக்கு இந்த அபாயமான வனத்தில் பயணிக்க தைரியம் தந்திருக்க வேண்டும். ஆனால் அந்த தைரியமும் நேரம் ஆக ஆக குறைய ஆரம்பித்தது.

‘‘என்னப்பனே முருகா! நான் காட்டில் வழி தவறிவிட்டேன் என்று நினைக்கிறேன். என்ன செய்வதென்று புரியவில்லையே. தேவர்கள் தம்பிரானே! எனக்கு அபயம் தந்தருள வேண்டும்!’’அவரது புலம்பல் அந்த முருகப் பெருமானுக்குக் கேட்டதோ இல்லையோ.... அருகில் இருந்த ஒரு வேடனுக்கு தெளிவாகக் கேட்டது. உடனே அந்த மகானின் அருகில் வந்தான்.  

‘‘என்ன சாமி... கரடி, புலி, சிங்கம், சிறுத்தைங்க நடமாடற காட்டுல இப்படி தனியா வரலாமா...? சாமிக்கி எந்த ஊரு? என்ன பேரு?’’
‘‘என் பெயர் அருணகிரிநாதன். வயலூரிலிருந்து வருகிறேன். நேற்று இதே நேரம் வயலூரில் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த ஆறுமுகப் பெருமான் என்னை விரைவாக விராலி மலைக்கு வருமாறு கனவில் கட்டளையிட்டார்.

திடுக்கிட்டு எழுந்தேன். வயலூரில் இருப்புக் கொள்ளவில்லை. ஒரே ஓட்டமாக நடுநிசி என்றும் பாராமல் விராலிமலைக்குக் கிளம்பி விட்டேன். வழி தவறி இங்கு வந்து சிக்கிக்கொண்டேன்....’’ வேடன் கேட்ட கேள்விக்கு பெரிய பதிலைத் தந்தார் திருப்புகழ் தந்த தனிப் பெரும் புலவரான அருணகிரிநாதர்.

தனது அருகில் நிற்பது யார் என்று தெரிந்ததும் வேடனுக்கு பரம சந்தோஷம். ‘‘அந்த முருகன் ‘முத்து முத்தா பாடு’னு சொன்னதும் ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ பாடின அருணகிரி நாதரா நீங்க?’’ ஆச்சர்யத்துடன் கேட்டான். ‘‘அதே அருணகிரிதானப்பா நான். உனக்கு சிரமம் இல்லையென்றால் என்னை எப்படியாவது விராலி மலைக்கு அழைத்துச் செல்ல முடியுமா?’’

‘‘என்ன சாமி இப்பிடி கேட்டுட்டீங்க! உங்கள மாதிரி மகான்களுக்கு உதவுற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கிறதே அபூர்வம். உங்கள பத்தரமா விராலி மலைக்கு கூட்டிட்டு போக வேண்டியது என் பொறுப்பு...’’ வேடன் மகிழ்ச்சியோடு சொன்னான். 

அது அருணகிரியாருக்கு காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது. ‘‘மிக்க நன்றி மகனே! உன்னை அந்த முருகன்தான் எனக்கு உதவ அனுப்பி இருக்க வேண்டும்....’’ என்றபடி கை கூப்பினார்.‘‘இந்த சின்ன விசயத்தை போய் பெருசுபடுத்திக்கிட்டு... பேசாம வாங்க சாமி...’’அருணகிரிநாதரின் கைகளைப் பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் அந்த வேடன்.

அந்த வேடனது கை பட்டதும் ஒரு தெய்வீக சக்தி அதில் இருப்பதை அருணகிரிநாதர் உணர்ந்தார். இதற்கு முன் இந்த அற்புத ஸ்பரிசத்தை முருகனிடம் உபதேசம் பெறும்போதுதான் அவர் உணர்ந்திருந்தார். இப்போது அது அந்த வேடனிடமும் உணரவும் அவருக்கு அந்த வேடனைப் பற்றி அறிய வேண்டும் என்று தோன்றியது. நடந்து கொண்டே பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

‘‘ஏனப்பா... நீ எங்கு வசிக்கிறாய்.? உன் குடும்பம் எங்கிருக்கிறது?’’  

‘‘இதோ... நம்ம போகப் போற விராலிமலைலதான் சாமி இருக்கேன். எங்க அப்பாவுக்கு பித்து புடிச்சுப் போச்சு. உலகளவு சொத்து இருந்தும் சுடுகாட்டுல போய் ஆடிக்கிட்டு இருப்பாரு! விஷத்தை பாயசம் மாதிரி ஒரு முறை குடிச்சிட்டாரு! அப்புறம் எங்க அம்மா படாத பாடுபட்டு அவரைக் காப்பாத்தினாங்க.!’’

‘‘அடாடா... கவலைப்படாதே அப்பா! அந்த முருகன் உன்னை நிச்சயம் ரட்சிப்பான்...’’ அருணகிரிநாதர் அவனைத் தேற்றினார். ‘‘உனக்கு வேறு உறவு யாருமில்லையா?’’ ‘‘ஏன் இல்லாம? எனக்கு ஒரு மாமா இருக்காரு... அவருன்னா எனக்கு கொள்ளைப் பிரியம். ஒரு தடவை அவர் பிள்ளை என் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம திணறினான். உடனே அவன் மண்டைல ஓங்கி ஒரு குட்டு குட்டி அவனை சிறைல அடைச்சு ஒரு வழி பண்ணிப்புட்டேன்! இப்படி செஞ்சும் மாமாக்கு என் மேல கொஞ்சம் கூட கோபம் வரலைனா பார்த்துக்குங்க...’’ வெள்ளந்தியாக வேடன் சிரித்தான்.

அருணகிரிநாதரும் அவனது அந்தப் பேச்சை ரசித்தபடியே நடந்தார். அவனது தேனான பேச்சில் நடந்த களைப்பே தெரியவில்லை. பல மைல் தொலைவை அவனோடு பேசியபடியே இன்பமாகக் கடந்தார் அவர். திடீரென்று ஓர் இடத்தில் வேடன் நின்றான். ‘‘சாமி... நீங்க கேட்ட விராலி மலை இதுதான். அதோ தெரியுது பாருங்க... அதுதான் நீங்க தேடி வந்த முருகன் கோயில்....’’ தனது ஆள்காட்டி விரலால் விராலிமலை கோபுரத்தைக் காட்டினான்.

வேடன் காட்டிய திக்கை நோக்கினார் அருணகிரிநாதர். அங்கே விண்ணை முட்டும் கோபுரத்துடன் ஓர் அற்புத கோயில் தென்பட்டது. அதைக் கண்டு சிலிர்த்தவர், தனது இரு கைகளையும் முடிமேல் குவித்து ‘‘முருகா! குமரா!குகா!’’ என நெக்குருகி சேவித்தார். வெகுநேரம் பக்திப் பரவசத்தில் தன்னை மறந்திருந்தார் அவர். சுயநினைவு வந்ததும் அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தது அந்த வேடனும் அவனது அமுதமான பேச்சும்தான். உடனே வேடன் இருந்த திக்கை நோக்கினார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது!

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்