ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் கருவி!இன்று எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். இந்தியாவில் இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து மரணிப்பவர்கள் அதிகரித்து விட்டனர். சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் சாதாரணமாகிவிட்டன. இன்னும் என்னென்னவோ பிரச்னைகள் நம் ஆரோக்கியத்துக்கு எதிராக நிற்கின்றன.
இருந்தாலும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளவே எல்லோரும் விரும்புகின்றனர். இதற்காக உணவுக்கட்டுப்பாடு, ரன்னிங், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என பல பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நம் உடலின் ஆரோக்கியத்தைத் துல்லியமாக கணித்து நம்மிடம் சொல்வதற்காக வந்துவிட்டது ‘மி ஸ்மார்ட் பேண்ட் 4’.
கைக்கடிகாரத்தைப் போல இதை நாம் கட்டிக்கொள்ளலாம். 0.95 இன்ச்சில் வண்ணமயமான AMOLED டிஸ்பிளே, பட்டப்பகலில் கூட ஸ்கிரீனை நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், நீச்சல் அடிக்கிறீர்கள், ஓடுகிறீர்கள், சைக்கிள் ஓட்டுகிறீர்கள் என்று உங்களின் ஆரோக்கியம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் கவனிக்கிறது இந்தக் கருவி.

இதுபோக தண்ணீர் புகாத வசதி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு நிற்கும் பேட்டரி, ஒரு நொடி கூட வீணாக்காமல் உங்களின் இதயச் செயல்பாட்டைக் கவனிக்கும் ஆற்றல், உங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள பாடல்கள் மற்றும் வால்யூமை கன்ட்ரோல் செய்யும் வசதி என அசத்துகிறது இந்த பேண்ட்.

நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதோடு ஆழமாக எவ்வளவு நேரம் தூங்கினீர்கள், மிதமான தூக்கம் எவ்வளவு நேரம் என்று உங்கள் தூக்கத்தின் தரத்தை சுட்டிக்காட்டுகிறது. இதனால் நம் தூக்கமும் மேம்படுகிறது. இது கொடுக்கும் மிதமான அலார அதிர்வுகள் உங்களின் காலைப் பொழுதை அழகாக்குகின்றன.

ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்பை இதன்மூலமே செக் செய்துகொள்ளலாம். அவசியம் என்றால் பேசலாம், இல்லை என்றால் நிராகரிக்கலாம். பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போனை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அமேசான் தளத்திலும் மீ ஷோரூம்களிலும் இந்த பேண்ட் கிடைக்கிறது. விலை ரூ.2,299.

த.சக்திவேல்