பகவான்-49



பகவான் இன்று தேவையா?

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்து, இறுதிக்குள்ளாக மறைந்தவர் ஓஷோ. அவருடைய கருத்துகள் இன்றும் அர்த்தமுள்ளவையா என்கிற சந்தேகம் பலராலும் அவ்வப்போது எழுப்பப்படுவதுண்டு.

பகவான் என்று அவரது பக்தர்களால் போற்றப்பட்டாலும் ஓஷோ, நம்மைப் போலவே ரத்தமும், சதையுமான மனிதர்தான். தன்னை இறைவனாகவோ, இறைத்தூதராகவோ என்றுமே அவர் சொல்லிக்கொண்டதில்லை.சமூகத்தில் நிலவி வந்த சம்பிரதாயங்களை கேள்வி கேட்பவராகவே அவர் வாழ்ந்து வந்தார். எந்தவொரு மரபையும், அதன் அவசியமோ அர்த்தமோ அறியாமல் தொடர்வது முட்டாள்தனம் என்கிற எண்ணம் கொண்டவராக இருந்திருக்கிறார்.அவ்வகையில் பார்க்கப்போனால் ஓஷோ, தலைசிறந்த பகுத்தறிவாளராகவே வாழ்ந்தவர்.

கடவுள், உண்டா இல்லையா என்பது மனிதன் பகுத்தறிவு பெற்றதில் தொடங்கி, இன்றுவரை நீளும் கேள்வி.இந்தக் கேள்விக்கு ஆம், இல்லை என்று ஒற்றைவரியில் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லிவிட்டுச் செல்ல முடியாது.ஓஷோ, இந்தக் கேள்வியை தன்னைத்தானே கேட்டுக் கொண்டு தாமாகவே இதற்கு விடைபெற கடுமையாக உழைத்தார்.

உலகில் தோன்றிய மதங்கள், அவற்றின் கருத்துகள், மாற்றுக் கருத்துகள், விவாதங்கள் அத்தனையையும் வாசிக்க பல்லாண்டு உழைப்பைச் செலுத்தினார்.
தான், வாசித்த எதையுமே அவர் உடனடியாக ஒப்புக் கொண்டதில்லை. தனக்கு உவப்பான விஷயங்களை தன்மீதே பரிசோதித்துப் பார்த்துதான், மற்றவர்களுக்கு தான் பெற்ற ஞானத்தைப் பகிர்ந்தார்.

ஓஷோ, வெறும் சாமியார் அல்ல. அவர் உளவியல் பேராசிரியர். கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர். மனித இனம், தன்னைக் குறித்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதே அவரது கனவு.சிலருக்கு அவர் குரு. சிலருக்கு அவர் சிந்தனையாளர். சிலருக்கு அவர் நல்ல பேச்சாளர். சிலர் அவரை மாயாஜாலம் புரிபவராகக் கருதினார்கள். ஒவ்வொரு தனி மனிதனின் பார்வையிலும் ஓஷோ, வேறு வேறு மனிதராகக்
காட்சியளித்தார்.

ஓஷோ, நமக்கு போதித்தவை இன்றும் அர்த்தமுள்ளவையா?
அவர் எதிர்கால சமுதாயத்தை உத்தேசித்தே தன் கருத்துகளைக் கட்டமைத்துக் கொண்டவர் என்பதால், அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி, இப்போதும், வருங்காலங்களிலும் கூட ஓஷோவின் ஞானம், ஏதோ ஒரு மனிதனுக்கு உதவிக் கொண்டேதான் இருக்கும்.

நம் வாழ்க்கையை திறந்த மனதோடு எவ்வித மனச்சாய்வுகளும் இன்றி எப்படி பார்ப்பது என்பதைத்தான் நமக்கு புரியவைக்க அவர் மெனக்கெட்டார். தகவல் தொழில்நுட்பம் பரவலாகி இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் முன்பைவிட ஓஷோவின் கருத்துகள் பன்மடங்கு அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறது, கேட்கப்படுகிறது.பல்லாயிரம் பக்கங்களில் மனிதகுலத்துக்கு ஓஷோ போதித்தவற்றின் சாரத்தை மட்டும் ஒருசில பக்கங்களில் பார்க்கலாம்.

செயலே தீர்வு:
ஏதேனும் பிரச்னைகளைப் பற்றி நாம் அதீதமாக சிந்திப்பதின் மூலமாகவே, அந்தப் பிரச்னையின் தன்மையைக் காட்டிலும் அதை நாம் மேலும் மோசமாக்கிக் கொள்வோம் என்கிறார் ஓஷோ. ஏதேனும் பிரச்னை வருமோ என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே தம்மை வருத்திக் கொள்ளும் ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணா’க்கள் குறித்தே அவரது இந்தக் கவலை. வருமுன் காப்போம் என்கிற எச்சரிக்கை உணர்வு, மனிதர்களுக்கு மட்டுமல்ல. எல்லாவிதமான உயிரினங்களுக்குமே உரித்தானதுதான்.

ஆனால் -அதற்காக ஏதோ ஒன்று வரப்போகிறது என்று எதிர்காலத்தைக் கண்டு நடுங்கி, நிகழ்காலத்தை வருத்தத்துக்கு உள்ளாக்கிக் கொள்ளக்கூடாது. நீங்கள் அச்சப்படக்கூடிய அப்படியொரு சூழல் வருமேயானால், வரும்போது அதை எதிர்கொள்ளக் கூடிய செயலாற்றல் உங்களுக்கு இருக்குமேயானால், எதைக் கண்டும் பயப்பட வேண்டாம் என்கிறார்.

இந்தக் கருத்தை ஓர் அழகிய உதாரணத்தோடு ஓஷோ விளக்குகிறார்.ஒரு மனிதன், குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனது வீடு தீப்பற்றி எரிகிறது. ‘அய்யோ, வீடு தீப்பற்றிவிட்டதே. என்னுடைய உடை என்னாகும், உடைமைகள் என்னாகும்’ என்று அங்கேயே முடங்கிக் கிடந்தான் என்றால், உடை,உடைமைகளோடு அவனும் போய்ச் சேர வேண்டியதுதான்.

உயிர் பிழைத்தால் உடைமைகளைச் சேகரித்துக் கொள்ளலாம் என்கிற உணர்வும், உடனடியாகத் தன்னைக் காத்துக்கொள்ளும் செயலாற்றலும் இருந்தால் மட்டுமே அவனது இருத்தல் இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உலகில் நீடிக்கும். அப்போதைக்கு அப்போதான சூழலில், எதிர்காலத்தைக் குறித்த பிரக்ஞை கொள்ளாமல், நிகழ்காலத்தில் புத்திசாலித்தனமான முடிவினை எடுப்பதே விவேகம்.

அன்பு என்பது என்ன?
நம்மைச் சார்ந்தவர்கள் மீது மட்டுமே நாம் பொதுவாக அன்பு காட்டுகிறோம். இதை அன்பு என்று கூறுவதே தவறு என்று குறிப்பிடுகிறார் ஓஷோ. அன்பில் திளைத்திருக்கும் இருவர், ஏதேனும் பிரச்னையில் மாறுபட்டு பிரிந்த பின்னர் ஒருவரை ஒருவர் வெறுக்கத் தொடங்குகிறார்கள். அப்படியெனில் அவர்களிடம் அன்பே இருந்ததில்லை என்று பொருள்.

மிகக்குறைந்த காலமே இருவர், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தியிருந்தாலும், அவர்கள் பிரிந்த பின்னரும் அதே அன்பு நீடிக்க வேண்டும். உறவு என்பது மலர் மாதிரி. அன்பு என்பது அந்த மலரின் மணம். மலர் உதிர்ந்தாலும், மணம் மட்டும் வீசிக்கொண்டிருக்க வேண்டும் என்று போதிக்கிறார் ஓஷோ.

மகிழ்ச்சிக்குத் திரும்புங்கள்:
வருத்தமாக இருக்கிறீர்களா? சரி, அழுது விடுங்கள். கோபம், பொறாமை மாதிரியான உணர்வுகள் தோன்றும்போது, அந்த உணர்வுகளுக்கு என்னென்ன விளைவுகளோ அதை அவ்வப்போதே நிகழ்த்தி விடுங்கள்.

ஆனால் -உங்களுடைய அந்த சமயத்து உணர்வு எதுவென்கிற விழிப்புணர்வு எப்போதுமே உங்களுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஓஷோ. அந்த உணர்வுகளுக்குள் தீவிரமாக உங்களைச் செலுத்திக் கொள்ளாமல், எவ்வளவு விரைவாக மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி விடுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஏனெனில் அமைதிதான் நம்முடைய இருப்பு என்கிறார்.

நீங்கள் செய்த தவறுகளை, அவை தவறு என்று தெரிந்ததுமே ஒப்புக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மன்னிப்பதை விடுங்கள். உங்களை நீங்களே மன்னித்துக் கொள்ளுங்கள். அச்சூழலில் இருந்து வெளியேறுங்கள். உலகம் உங்களோடும், நீங்கள் செய்த தவறுகளோடும் மட்டும் முடிந்து விடுவதில்லை என்று சுட்டிக் காட்டி, மகிழ்ச்சிக்கான பாதையை மக்களுக்குக் காட்டுகிறார் பகவான்.

அமைதியும் சுதந்திரமும்:
பரஸ்பரம் அன்பு செலுத்தும் இரு உள்ளங்கள், ஒன்றையொன்று கட்டுப்படுத்தி ஆள விரும்புகின்றன. கணவன்-  மனைவி, பெற்றோர் - பிள்ளையென்று நம் குடும்பத்திலிருந்தே இத்தகைய ஆதிக்கம் தொடங்குகிறது. இம்மாதிரி கட்டுப்பாடுகளும், மேலாதிக்கமும் சூழ்ந்திருக்கும் இடத்தில் மகிழ்ச்சியும், சுதந்திரமும் இருக்காது. நம்முடைய ரிமோட் கண்ட்ரோல் வேறொருவரின் கையில் இல்லையென்றால் மட்டுமே நம்மால் அமைதியை அனுபவிக்க முடியும்; சுதந்திரத்தை உணரமுடியும் என்பது ஓஷோவின் உறுதியான எண்ணம்.

வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்வது?

ஆதி மனிதன் கேட்ட கேள்வி. அன்று முதல் இன்று வரை கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். எதிர்காலத்திலும் கேட்கத்தான் போகிறார்கள். ஓஷோ, இதற்கு கொடுக்கும் எளிய தீர்வு, ‘சரணடைதல்’. ஆம், அவரவர் வாழ்வை அதனதன் போக்கில் ஒப்புக்கொடுக்கச் சொல்கிறார். நன்மை, தீமைஎன்று வாழ்வு நமக்குக் கொடுக்கக் கூடியவற்றை ஏற்றுக் கொள்ளுமாறும் கூறுகிறார்.

நாம் அனைவருமே நம்முடைய வாழ்க்கையை மிகவும் தீவிரமாகத்தான் அணுகுகிறோம். ஓஷோ, இதற்கு நேர்மாறான தீர்வைத்தான் வழங்குகிறார்.
நாம் ஒரு நாடகத்தின் அங்கம் என்கிறார். இந்த நாடகத்தில் எது எதுவோ நடக்கும். யார் யாரோ வருவார்கள், போவார்கள். காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். அமைதியாக அத்தனையையும் நம்மை கவனிக்கச் சொல்கிறார்.

அவர் கொடுக்கும் அறிவுரைகளிலேயே மிகவும் கடினமானது இதுதான். நாம் எவருமே நம்முடைய வாழ்க்கையை, நம் போக்கில் இருந்து விடுவித்துவிட முடியாது. நம் வாழ்க்கைக்கு நாம்தான் உரிமையாளர்கள் என்கிற எண்ணம் கொண்டிருப்பவர்கள்.அதே நேரம் எதையுமே கேள்வி கேட்காமல், நீ ஒப்புக் கொள்ளும் பதில் கிடைக்காமல் ஏற்றுக் கொள்ளாதே என்கிறார். பகவான் வாழ்ந்தார், வாழ்கிறார், வாழ்வார்.

(அடுத்த இதழில் முடியும்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்