தேனி பெண் இப்ப விண்வெளி வீராங்கனை!உதயகீர்த்திகா - போலந்து நாட்டில் விண்வெளி பயிற்சி முடித்து திரும்பியிருக்கும் தேனி பொண்ணு! அநேகமாக, விண்வெளி பயிற்சி பெற்ற முதல் தமிழ்ப் பெண் இவராகவே இருக்கும். தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் அல்லிநகரம் தாமோதரன் - அமுதா தம்பதியரின் ஒரே மகள் உதயகீர்த்திகா. தமிழ் வழியில் கல்வி பயின்றவர். சிறுவயதிலிருந்தே விண்வெளியில் அதீத ஆர்வம் உள்ளவர்.

பள்ளியில் படிக்கும்போதே மாநில அளவில் இஸ்ரோ நடத்திய பள்ளிகளுக்கிடையேயான கட்டுரைப் போட்டியில் பங்குபெற்று முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக இஸ்ரோ நடத்திய போட்டியிலும் முதல் பரிசு வென்றார். இதன்பிறகு, விண்வெளிக்குச் செல்லவேண்டும் என்கிற ஆர்வம் அவரின் மனதில் மேலோங்கியிருக்கிறது. இதற்கு அவரின் பெற்றோரும் பக்கபலமாக இருந்தனர்.

இதனால், பிளஸ் டூ முடித்ததும் அதற்கான கல்லூரியைத் தேடினார். நிறைவாக உக்ரைன் நாட்டிலுள்ள, `கார்க்கிவ் நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டி’யில் எஞ்சினியரிங் படிக்க இடம் கிடைத்தது. பொருளாதாரப் பிரச்னையால் அங்கே இங்கே கடன் வாங்கி உக்ரைன் சென்று, ஏர்கிராஃப்ட் மெயின்டினன்ஸில் ஸ்பெஷல் டெக்னீஷியன் டிகிரியை 92 சதவீத மார்க்குடன் முடித்தார்.

பிறகு, கடந்த ஜூனில் இரண்டு மாத விண்வெளி பயிற்சிக்காக போலந்து செல்லும் வாய்ப்பு வந்தது. இப்போதும் பொருளாதார நெருக்கடி எழ, தொகுதி எம்பி முதல் சினிமா நடிகர்கள் வரை பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி செய்தனர்.இப்போது விண்வெளி பயிற்சியை முடித்து விண்வெளி வீராங்கனைக்கான முழுத் தகுதியோடு நிற்கிறார் உதயகீர்த்திகா.

‘‘இந்த விண்வெளி பயிற்சி மையங்கள், சில ஐரோப்பிய நாடுகள்ல மட்டும்தான் இருக்கு. அதுல ஒண்ணு போலந்து. விண்வெளி சம்பந்தமான எல்லா பயிற்சியும் அங்க கொடுக்கறாங்க. அதுல விண்வெளி வீராங்கனைக்கான மிகவும் கஷ்டமான பத்துவித பயிற்சிகள முடிச்சிட்டு வந்திருக்கேன்...’’ என்றவர், பயிற்சிகளை விவரமாகப் பகிர்ந்தார்.

‘‘இந்தப் பயிற்சிகள் போலந்து நாட்டின் மிலிட்டரி மெடிசன் அகடமியுடன் சேர்ந்து நடத்தப்படுது. முதல்ல ‘மூன் அனலாக் மிஷன்’னு ஒரு பயிற்சி. அதாவது, நிலவுக்குப் போனா எப்படி இருக்கணும்னு பயிற்சி தருவாங்க. அதே மாதிரியான ஒரு சூழலை உருவாக்கி அதுல ஏழு நாட்கள் பயிற்சி தந்தாங்க. உண்மையில நிலவுல இருந்ததுமாதிரி இருந்துச்சு.   

அதை முடிச்சதும், ‘மார்ஸியன் அனலாக் மிஷன்’னு ஒரு பயிற்சி. இது செவ்வாய் கிரகத்துக்கான பயிற்சி. அங்குள்ள டைம், சூழல் எல்லாமே ஒரு செட்அப்ல இருக்கும். அதுக்குள்ள நம்மள தங்கவச்சு இந்தப் பயிற்சி நடக்கும். அப்ப சில கடினமான பணிகளும் தருவாங்க. அதைச் செய்து முடிக்கணும்.அடுத்து, ‘ஸ்ட்ராடோஸ்ஃபியரிக் மிஷன்’. அதாவது, ஒரு பெரிய பலூன்ல ஹைட்ரஜன ஃபுல்லா நிரப்பி அதுக்கு கீழ கேமிராவுடன் ஜிபிஎஸ் பொருத்தி பூமியின் மேற்பரப்பில் ஸ்ட்ராடோஸ்ஃபியரிக் லேயர் வரை பறக்கும்படி செய்வோம்.

அப்ப பூமிக்கு மேல என்ன மாதிரியான விஷயங்கள் நடக்குதுனு அந்தக் கேமிரா ரிக்கார்ட் பண்ணி அனுப்பும். நாங்க ஜிபிஎஸ்ஸை ஃபாலோ பண்ணி குறிப்புகள் எடுப்போம்.  பிறகு, ஸ்கூபா டைவிங் கத்துக் கொடுத்தாங்க. இது எதுக்குன்னா, ஒரு விண்வெளி வீரர் வான்வெளியில மிதந்தபடிதான் வேலைகள செய்ய முடியும். அப்படி மிதக்கும்படியான பயிற்சி தண்ணீருக்கு அடியிலதான் கிடைக்கும். ஸோ, தண்ணீருக்கு அடியில எஞ்சின் எல்லாம் வச்சிடுவாங்க. நாம மிதந்துகிட்டே பணிகளைச் செய்யணும். இந்தப் பயிற்சி முதல்ல ஆறு நாட்கள் ஏரிகள்ல நடந்தது.  

அப்புறம், ராக்கெட் வொர்க்‌ஷாப் பயிற்சி. நாமதான் ராக்கெட் செய்யணும். எஞ்சின், பாரசூட் எல்லாம் செட் பண்ணி அதை லாஞ்ச் பண்ணணும். கடவுள் புண்ணியத்துல என்னோட ராக்கெட் ஆயிரம் அடி தூரம் வரை போனது.பிறகு, சர்வைவல் டிரைனிங் பயிற்சி தந்தாங்க. இது எதுக்குனா, நம்ம கேப்சூல்ல கீழிறங்கும்போது ஒருவேளை காட்டு–்க்குள்ள போயிட்டா… அப்ப நாம இருக்குற இடத்தை எப்படி கண்டுபிடிக்கிறது, எப்படி மூவ் பண்றதுனு எல்லாத்தையும் சொல்லித் தருவாங்க.

இந்தப் பயிற்சிக்குப் பின்னர், போலந்து ராணுவ மருத்துவ அகடமிக்குப் போனோம். அங்க சென்ட்ரிஃபியூஜ்னு ஒரு பயிற்சி கொடுத்தாங்க. இதுதான் முக்கியமான பயிற்சி. ஆனா, ரொம்ப கஷ்டமானது. ராக்கெட்ல போறதும், இந்த சென்ட்ரிஃபியூஜ்ல பயிற்சி எடுக்குறதும் ஒண்ணுதான்.

இதுல ராக்கெட்ல போகும்போது நம்ம உடம்பு எந்தளவுக்குத் தாங்கும்னு கணக்கீடு செய்வாங்க. அப்பதான் நாம பாஸாக முடியும். இங்க பூமியில நார்மல் கிராவிட்டி இருக்கும். ஆனா, ராக்கெட்ல போகும்போது கிராவிட்டி ஐந்து மடங்கா மாறும். அப்படி ஏற்படும்போது நம்ம உடல் ரத்தம் எல்லாம் கால்களுக்கு வந்திடும். அப்ப, மயக்க உணர்வுக்கு வந்திடுவோம். இதை வெற்றி கொள்ள முடியுதானு சோதிக்கிற பயிற்சி இது.  

இந்தப் பயிற்சியை நல்லபடியா முடிச்சேன். எனக்கு ஒண்ணும் ஆகலை. அங்கிருந்த எல்லோரும், ‘நீ போலந்துல இருந்தா ஏர்ஃபோர்ஸுக்கு கரெக்ட்டான ஆள்’னு ரொம்பப் பாராட்டினாங்க. இதற்கடுத்து, ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் என்ன வேகத்துல பூமியில இருந்து போய், மறுபடியும் கேப்சூல்ல பூமிக்கு திரும்புமோ அதே வேகத்தைக் கொண்டு எங்களுக்கும் பயிற்சி கொடுத்தாங்க.  

சென்ட்ரிஃபியூஜ்ல அதைச் செய்தோம். இது கொஞ்சம் ஆபத்தான பயிற்சி. அதிலிருந்து வரக்கூடிய விசை ஹார்ட்டுக்கு வரும். அப்ப இதயம் நிற்கக்
கூடச் செய்யலாம். ரிஸ்க் வேண்டாம்னு சொன்னாங்க. பிறகு, சரி முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு சொல்லி செய்தாங்க. இதையும் சிறப்பாகச் செய்தேன். எல்லோரும் வாழ்த்தினாங்க. ‘இதுவரை பெண்கள் யாரும் இந்தப் பயிற்சியை எடுத்ததில்ல. நீதான் ஃபர்ஸ்ட்’னுசொன்னாங்க.

பிறகு, ஹைபோபேரிக் சேம்பர்னு ஒரு பயிற்சி. பூமிக்கு மேல போகும்போது அழுத்தம் மாறுபடும் இல்லையா... அதை கண்ட்ரோல் பண்ண முடியுதானு செக்அப் செய்வதற்கு இந்தப் பயிற்சி.  நாம சாதாரணமா சுவாசிக்கிற காத்துல 21 சதவீதம்தான் ஆக்ஸிஜன் இருக்கும். ஆனா, இதுல நூறு சதவீத ஆக்ஸிஜனை சுவாசிக்க வச்சு உடலில் உள்ள ைநட்ரஜன் எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க.

அப்பதான் மேல செல்லும்போது வளிமண்டல அழுத்தத்தைத் தாங்க முடியும். எங்களுக்கு அரைமணி நேரம் நூறு சதவீத ஆக்ஸிஜனை சுவாசிக்க வச்சு அப்புறம், அந்த இடத்தை மூடிட்டாங்க. இந்த இடத்துல நாம அழுத்த அமைப்பை சரி செய்யலைன்னா நம் காது நரம்புகள் பிரச்னையாகி காது கேட்காமல் கூட போகலாம்.

இதுல பத்தாயிரம் மீட்டர் வரை போனாங்க. எனக்கு காது வலினு எதுவுமே வரல. இந்தப் பயிற்சியுடன் உடலின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் உள்ளதா என்பதை சோதிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது. அடுத்து, ஏரோடைனமிக் டனல்னு ஒரு பயிற்சி தந்தாங்க. கடைசியா, ஸ்கை டைவிங். ஒரு ஏரோபிளேன்ல 3000 மீட்டர் மேல ேபாய்ட்டு அங்கிருந்து குதிச்சோம்.

பாரசூட் ஓபன் ஆகி எப்படி கண்ட்ரோல் பண்ணணும்னு சொல்லித் தந்தாங்க.  
இப்படி விண்வெளி வீரருக்கான பயிற்சிகள் எல்லாத்தையும் முடிச்சிருக்கேன். இப்ப இந்தியா ‘ககன்யான் மிஷன்’ மூலம் மனிதர்களை விண்
வெளிக்கு அனுப்புற திட்டத்தை முன்னெடுத்திருக்கு.

2021ம் வருஷம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட இருப்பதாக சொல்றாங்க. அதற்கான தகுதியை நான் வளர்த்திருக்கேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கணும்னு பிரார்த்திக்கிறேன். என்னோட படிப்புக்கு பல நாடுகள்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனா, என் ஆசை, கனவெல்லாம் இந்தியாவுக்காக விண்வெளி வீராங்கனை ஆகணும்ங்கிறதுதான்!’’ நம்பிக்கை மிளிர சொல்கிறார் உதயகீர்த்திகா.

பேராச்சி கண்ணன்