நல்ல மாஸ் பட அனுபவத்துக்கு உங்களை அழைக்கிறேன்..!நம்பிக்கையுடன் சொல்கிறார் பாபு யோகேஸ்வரன்

‘‘நல்லபடியாக வளர்ந்து நிக்கிறான் ‘தமிழரசன்! நினைச்சபடியும், இணைஞ்சு நின்னு வேலை பார்த்த ஒற்றுமையிலும் விரும்பும்படியாகவும் வந்திருக்கு.

நல்ல வேகம் பிடிச்சு நிற்கிற சினிமா. ‘துறுதுறு’ன்னு அக்கறையாக பல விஷயங்களைச் சொல்லிட்டும் வந்திருக்கு.
இதை கதையாகச் சொல்லும்போதே விஜய் ஆண்டனிக்கு உடனே பிடிச்சது. ‘சீக்கிரம் ஷூட்டிங் போயிடலாம். ரெடியாக இருங்க பிரதர்’னு பாதிக்கதை கேட்டுட்டு வரும்போதே சொல்லிட்டார். அப்புறம்தான் ஒரு நாள் நிறுத்தி நிதானமா அடுத்த பகுதியைக் கேட்டார். எல்லாம் முடிஞ்சு பார்த்தால் இன்னும் பெரிய படமா வந்திருக்கு.

இப்ப விஜய் ஆண்டனி இருக்கிற கட்டம் அழகான அடுத்த இடம். இதுவரைக்கும் அறிந்து புரிந்ததிலிருந்து அவர் நகர்ந்து வந்திருப்பது அருமையான தருணம். நிறைய அருமையான காட்சிகள் கொண்ட இடங்களை வைச்சிருக்கேன். நிச்சயமாக ‘தமிழரசன்’ இயக்குநராக எனக்கும், சிறந்த நடிகராக அவருக்கும் ஏற்றம் தரும். உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கக்கூடிய தைரியம் எனக்கிருக்கு.

ஆக இது எல்லாமே சாத்தியம்தான்...’’ கூடிப் பெருகுகிற புன்னகையோடு பேசுகிறார் இயக்குநர் பாபு யோகேஸ்வரன். பத்திரிகையாளராக தடம் பதித்து இயக்குநராக ப்ரமோஷன் ஆகியிருக்கிறார் . ‘தமிழரசன்’னு சொன்னதும் அரசியல் உட்பட பல விஷயங்கள்  ஞாபகம் வருதே..?

அப்படியே எல்லாத்தையும் மனசோட வச்சுக்கங்க. இது தமிழரசன்கிற ஒருத்தரோட கதை. 40 வயதை நெருங்கிட்டு அருமையான மனைவி, குழந்தைன்னு சந்தோஷமாக நாளையும் பொழுதையும் இனிமையாகக் கழிக்கிற மனுஷன். இந்தக்கதையை சூப்பர் ஸ்டாரும் செய்ய முடியாது. அதற்குக் கீழே இருக்கிறவங்களும் செய்ய முடியாது.

இந்தப் படத்தில் நடிக்க மூணு பேர் இருக்காங்க. அந்த இரண்டு பேர்கிட்டே நான் கேட்கவே இல்லை. இதில் நிறைய ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. அவங்க ஒவ்வொருத்தரும் தனித்துவத்தில் நிற்கிற மாதிரி இடங்கள் இருக்கும். மூணு சீனில் வந்திட்டுபோனாலும், ஒரு சீனில் தங்கள் பணியை முடிச்சிட்டு ஒருத்தர் திரும்பினாலும் அவங்களும் இந்தப் படத்தை ஒரு Reference மாதிரி பார்த்துக்கலாம்.

உதாரணத்திற்கு, சுரேஷ் கோபி கடந்த 5 வருஷமாக மலையாளப்படங்களில் நடிக்கலை. கூப்பிட்டு, கூப்பிட்டு கேட்டால் ‘செய்ததையே செய்ய வேண்டியிருக்கு’னு சொல்லிட்டு ‘நோ’ சொல்றாரு. இதென்னடா இப்படி பண்றாருன்னு அவரைப்பத்தி அங்கே நினைச்சுக்கிட்டு இருக்காங்க.
இந்தப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணையான ஒரு வேடம்.

அவரை நினைச்சுக்கிட்டு நம்பிக்கையாகப் போனேன். ‘கதை பிடிச்சால் நடிக்கிறேன்’னு சொல்லி கதை கேட்டார். உடனே ‘ஓகே’ சொல்ல ஆச்சர்யம். ‘டேய், சுரேஷ் கோபி மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சிட்டார்டா’னு அங்கே இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சு உடனே பரவிப்போச்சு. சும்மாயில்லை, இத்தனை நாள் அனுபவம் அத்தனை பக்குவத்தோடு வந்திருக்கு.‘தமிழரசன்’ எப்படி இருப்பான்?

இன்னிக்கும் பாருங்க, நமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும், எந்த நிமிஷமும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மொத்தமாகவே, சகலத்திலும் ஊழல்ங்கிற இடத்தில் வந்து இப்ப நின்னுக்கிட்டு இருக்கோம். சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால், வாயைத் திறந்து, கண்ணு சிவந்து கேள்வி கேட்டால் அங்கேதான் பிரச்சினை ஆரம்பம்.

அப்படி ஒரு கட்டம் தமிழரசனுக்கு வந்துவிடுகிறது. குடும்பத்தை அள்ளி அணைக்கிற ஆண்டனி, எதிரிகளைத் துள்ளி அடிக்கிறார். அதுதான் படம்.
எப்படி பொருந்தியிருக்கார் விஜய் ஆண்டனி?சும்மா ஒரு பார்வைக்கு வந்திட்டுப் போகிற நடிகர் இல்லை அவர். அனுபவம் கூடி வந்து, அவருக்கே குறை நிறைகள் புரிந்து, தெளிந்து, நடிப்பதன் சௌகரியம் அறிந்து கை கூடி வந்த நடிப்பு இது.

கதையின் தன்மைகளை, உணர்வை முழுமையாகப் புரிந்து கொண்டால் தவிர இத்தகைய நடிப்பு எட்டிப்பார்க்காது. இதை அருமையாக செய்திருக்கார் விஜய் ஆண்டனி. அடுக்கடுக்கான திருப்பங்களின் முடிவில் என்ன நடக்கும் என்பதுதான் நாம் காணப்போகிற விடை. அதை இயல்பாகக் கொண்டு வருவதற்கு அவர் அத்தனை உதவியாக இருந்தார்.

ரம்யா நம்பீசன் இப்போது நல்ல நடிப்பு பக்குவத்தில் இருக்கிறார். ஏற்கிற கேரக்டரை எப்படி உள்வாங்குவது என்பதில் சரியா இருக்காங்க. இதில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ரொமான்ஸ் பக்கமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. போகிற போக்கைக் கவனித்தால் அவங்க கேரளாபக்கம் போய்விடாமல் இங்கே இருந்து விட வாய்ப்பு இருக்கிறது. யோகிபாபுவும் ஒரு முக்கிய கேரக்டரில் வருகிறார்.

இளையராஜா மியூசிக்...
இப்பவும் அவரைக் கேட்காமல் தமிழகம் தூங்குதா! இப்படி ஆண்டாண்டு காலமாக அவர் நம்மை பின்தொடர்ந்து வருவது எவ்வளவு அழகு! விஜய் ஆண்டனிக்கு ராஜா இசை என்றால் உயிர். அவர் இசையில் பாடினார். அதில் விஜய் ஆண்டனிக்கு அவ்வளவு பெருமை. ரெண்டு பேரும் சந்தோஷமா பேசிக்கிட்டாங்க. மறுபடியும் இளைய ராஜாவை பெரிய மாஸ் படத்திற்கு கூட்டி வந்திருக்கோம்.

இதுவரைக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம்தான் அவரை மிஸ் பண்ணியிருக்கோம். நாம்தான் இதைப் புரிஞ்சுக்கணும். இதில் அருமையான பாடல்களைக் கொடுத்திருக்கார். அதுக்கு பதில் மரியாதையாக அதை செழுமையாக பயன்படுத்தியிருக்கோம். புரடியூசர் பெப்ஸி சிவாதான் இதைப் பெரிய படமாக்கினார்.

எனக்கு கேமராமேன் நண்பர்கள் அதிகம். ஆனால், இதைச் செய்வதில் அனுபவம் கூடியவர் ஆர்.டி.ராஜசேகர். அதை அவரும் புரிந்து செயல்பட்டது என் பேறு. என்னதான் அதை நாங்கள் உருவகித்து இருந்தாலும், அதை செயலுக்குக் கொண்டு வருவது  அவர்தான். ஒரு நல்ல மாஸ் படத்திற்கான அனுபவத்திற்கு உங்களை அழைக்கிறேன்.l

நா.கதிர்வேலன்