ஸ்மார்ட் போன் ஸ்மார்ட் டாய்லெட்!ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி வரிசையில் ஸ்மார்ட் ஹோமை உருவாக்கும் நோக்கத்தில் களமிறங்கி இருக்கின்றன பெரும் நிறுவனங்கள்.
அந்த வகையில் ஸ்மார்ட் ஹோமில் முக்கியப் பங்கு வகிக்கப்போவது டாய்லெட்தான். சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலம்தான் ஸ்மார்ட் டாய்லெட்டின் முக்கிய நோக்கம். இதுவரை தயாரிக்கப்பட்ட டாய்லெட்டுகளுக்கு இருந்த காகிதப் பயன்பாடு இதில் இருக்காது. அப்படியே இருந்தாலும் ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும்.

இதனால் காகிதத்துக்காக செய்யும் செலவு கட்டுப்படுத்தப்படும். அதே நேரத்தில் தண்ணீர் வீணாவதும் குறையும். இதுபோக கழிப்பறைக்குள் கிருமிகள் நுழையக்கூடாது.

கிருமிகளால் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி, காற்றின் மூலமாக ஈரத்தை உலர வைப்பது, தண்ணீர் வெப்பநிலையை நம் விருப்பத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளும் வசதி... என பல்வேறு விதமான நவீன வசதிகளுடன் இந்த டாய்லெட் உருவாகியிருக்கிறது.

இதை புதுவிதமாக எப்படி வடிவமைக்கலாம் என்ற யோசனையில் பல நிறுவனங்கள் முன்மாதிரி டாய்லெட்களைத் தயாரித்து கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த டெக் திருவிழாவில் காட்சிப்படுத்தியது. சுமார் இருபது நிறுவனங்கள் ஸ்மார்ட் டாய்லெட்களை வடிவமைத்திருந்தனர். அதில் அனைவரையும் கவர்ந்த டாய்லெட்டைத்தான் இங்கே இருக்கும் புகைப்படங்களில் பார்க்கிறீர்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிளமிங் நிறுவனமான ‘கோலர்’தான் இந்த ஸ்மார்ட் டாய்லெட்டை உருவாக்கியுள்ளது. ‘தண்ணியைத் திறந்துவிடு’ என்று சொன்னாலே போதும். தானாகவே பைப்பில் இருந்து தண்ணீர் வெளியாகும். பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் நிறைந்தவுடன் அதுவாகவே நின்றுவிடும். பிறகு ‘உங்களுக்குப் பிடித்த பாடலை ப்ளே செய்யட்டுமா’ என்று அங்கிருக்கும் ரோபோ கேட்கும்!

இப்படி ஏராளமான வசதிகளைக் கொண்ட இந்த டாய்லெட்டை ‘செயற்கை நுண்ணறிவு’ வசதியைக் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.
விலை சுமார் 4.5 லட்சம் ரூபாய்!