நம்மால் முடியும் - ஊக்கமது கைவிடேல்!



வாழ்க்கை மீதான நம்பிக்கையை பாசிட்டிவ் எனர்ஜியில் நகர்த்தும் திவ்யா, பிறக்கும்போதே ஸ்பினா பிஃப்டா (Spina Bifida) முதுகுத் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர். ‘‘தாயின் கரு வளர்ச்சியில் முதுகுத் தண்டுவடம் (spinal cord) உருவாகும்போது, தண்டுவட அடிப்பகுதி தானாக மூடும்.
ஒருசில குழந்தைகளுக்கு மூடாமல் ஒரு சில நரம்புகள், திரவம் (fluid) வெளியேறி சிறு கட்டியாக மாறும். வெளியான நரம்பு உடலின் எந்த பாகத்தில் தொடர்பில் இருக்கிறதோ அது வலுவிழக்கும். அறுவை சிகிச்சை செய்தாலும் சரியாகாத நிலையே நிதர்சனம்.

கொஞ்சம் கொஞ்சமாக கால்கள் வலுவிழக்க, நடக்கும் நிலை பறிபோகும். மூளையிலிருந்து முதுகுத் தண்டுவடத்துக்கு வரும் செய்திகள் தவறும். இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதில் மிஸ்கம்யூனிகேஷன் ஏற்படும்...’’ என தனக்கிருக்கும் பிரச்னையை சுருக்கமாகச் சொல்லும் திவ்யா, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர்.

கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து சாஃப்ட்வேர் என்ஜினியராகப் பணிபுரிபவர். தன்னையும் தன் நிலையையும் முழுமையாகப் புரிந்துகொண்ட ராஜேஷ்குமாரை காதல் மணம் புரிந்தவர். அழகான பெண் குழந்தையின் தாய். இத்துடன், தன்னைப்போல் ஸ்பினா பிஃப்டா- தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி வருபவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வீல்சேர் ரேம்ப், வீல்சேர் மாரத்தான்... என நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிப் புன்னகையோடு தன்னை வெளிப்படுத்தி வருபவர்!

‘‘சொந்த ஊர் திருச்சி மாவட்டம் வாளசிராமணி கிராமம். விவசாயக் குடும்பம். அப்பா, அம்மாவுக்கு தாமதமாகப் பிறந்த ஒரே பெண்குழந்தை நான். பிறந்தபோதே முதுகுத் தண்டு வடத்தின் அடிப்பகுதியில் கட்டி இருந்திருக்கிறது. அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். நான் வளர வளர கட்டியும் வளர்ந்தது.

திருச்சியில் இருந்த தாய்மாமனின் வீட்டில் இருந்தபடிதான் படித்தேன். குழந்தைப் பருவம் துறுதுறு என சேட்டைகளுடன் கடந்தது. வீட்டில் இருந்தவர்கள் செல்லமாக என் தொடையில் கிள்ளுவார்கள். எனக்கு வலியே தெரியாது. இதை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடிக்கடி கீழே தடுமாறி விழுவேன். கால்களில் காயங்கள் ஏற்படும். இதையெல்லாம் விளையாட்டுத்தனமாகவே அனைவரும் நினைத்தனர்...’’ என்று சொல்லும் திவ்யாவின் வலது தொடையில் வீக்கத்தோடு பெரிய தீக்காயம் தோன்றி இருக்கிறது.

‘‘ஒருநாள் என்னைக் குளிக்கவைக்கும்போது அம்மா அதைப் பார்த்து அதிர்ந்தார். அந்தக் காயம் எப்படி வந்தது என்றே எனக்குத் தெரியவில்லை.
இதுதான் என் குடும்பத்தினரை யோசிக்க வைத்தது. மருத்துவராக இருந்த உறவினர் மூலமாக சென்னையில் இருந்த பிரபல மருத்துவமனைக்கு வந்தோம். அங்குதான் என் கால்களில் உணர்வில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து பாதி கட்டியை நீக்கினர்.
12 வயதில் நடையில் மாற்றம். கீழே விழுந்து விழுந்து எழுந்ததில் ரத்தக் காயங்கள். நடை தளரவே கணுக்கால்வரை காலிபர் போட்டு யாருடைய கைகளையாவது பிடித்து நடக்கத் தொடங்கினேன்.

காலிபர் அழுத்தியதால் புண்கள் வந்து உள்ளிருக்கும் எலும்புகள் தெரியத் தொடங்கின...’’ என்று சொல்லும் திவ்யா, இந்தப் புண்களை, தானே சுத்தம் செய்து டிரெஸ்ஸிங் செய்துகொள்வாராம்.‘‘டீன் ஏஜில் மேக்கப் கிட்டை விட ஃபர்ஸ்ட் எயிட் கிட்டைத்தான் அதிகம் சுமந்திருக்கிறேன்! இந்நிலையில் மீண்டும் கால்களில் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது.  

இப்படி பல சிரமங்களுக்கு இடையில் 970 மதிப்பெண் எடுத்து 10ம் வகுப்பில் தேறினேன். கோவையில் இருந்த பிரபல மருத்துவமனையில் என் உடலின் பல இடங்களில் இருந்து ஸ்கின் கிராஃப்ட் செய்து கால் காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரியும், போன் (bone) கிராஃப்ட் செய்து ஆர்த்தோ சர்ஜரியும் செய்தனர். முழுக் கால்களையும் கவர் செய்த காலிபர் அணிந்து நடக்கத் தொடங்கினேன்.

ஸ்கூலில் சிம்பதியோடு என்னைப் பார்க்கத் தொடங்கினர். அது என்னை கஷ்டப்படுத்த +1 படிப்பு தடைபட்டது. என் தாய்மாமா, ‘நீ கட்டாயம் படித்தே ஆக வேண்டும்...’ என்று எடுத்துச் சொல்லி விடுதியோடு இருக்கும் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார். பல பள்ளிகள் என்னை நிராகரித்தன. இறுதியாக சேலத்தில் இருந்த வேதவிகாஸ் ரெஸிடென்ஷியல் பள்ளியில் என்னை சேர்த்துக்கொண்டார்கள்.

மெதுவாகத்தான் என்னால் நடக்க முடியும். எனவே யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்று அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்துவிடுவேன். தேர்வு நேரம் என்றால் நள்ளிரவு 12 மணிக்கே குளிப்பேன். அங்கே நல்ல நண்பர்களும், ஆசிரியர்களும் கிடைத்தார்கள். படிப்பில் என் ஆர்வத்தைப் பார்த்த தாளாளர் இரண்டு ஆண்டும் கட்டணம் வாங்காமலே படிக்க அனுமதித்தார்.

என் உடைகளைத் துவைத்துத் தரவும் ஆட்களை நியமித்தார். விடுமுறையில் தன் காரிலேயே என்னை வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அந்தப் பள்ளிப் பயணம் என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாட்கள்...’’ மலர்ச்சியுடன் சொல்லும் திவ்யா, +2வில் 1115 மதிப்பெண்களை எடுத்து பள்ளியில் முதல் மாணவியாகவும், கணக்கில் 199, மற்ற சில பாடங்களில் 190க்கு மேல் எடுத்து மாவட்ட அளவிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

‘‘அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் திருச்சி மண்டலத்தில் முதல் இடத்தையும், தமிழ்நாட்டில் 4வது இடத்தையும் பெற்றேன். பள்ளியின் சேர்மனே என் கல்லூரிச் செலவையும் ஏற்றுக்கொண்டார். கம்ப்யூட்டர் சயின்ஸை தேர்ந்தெடுத்தேன். மீண்டும் விடுதி வாழ்க்கை.

என் தன்னம்பிக்கையை வடிவமைத்ததில் நண்பர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கல்லூரி வாழ்க்கை மிகப் பெரும் மாற்றங்களைத் தந்தது. கோவா, பெங்களூரு, கேரளா என நண்பர்கள் உதவியோடு சென்று வந்தேன். என் பெற்றோருக்கு சென்னைக்கு எப்படி வரவேண்டும் எனத் தெரியாது. தாய்மாமாதான் அடிக்கடி விடுதிக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச் செல்வார்.

கல்லூரியில் படிக்கும்போது யூரின் மற்றும் பவல் கண்ட்ரோல் இல்லாத நிலை ஏற்பட்டது. மாதவிடாய் பிரச்னைகளும் தொடர... நொறுங்கிப் போனேன். டீ மோட்டிவேட்டாகி பலமுறை அழுதிருக்கிறேன். பெற்றோரிடமும், நண்பர்களிடமும் கூட என் பிரச்னைகளைச் சொல்லாமல் தவிர்த்தேன்.

செமஸ்டர் மதிப்பெண்கள் 10க்கு 8 பாயிண்டர் அளவில் இருந்தது. எனது நண்பர்கள் பழைய கல்லூரி நண்பர்களிடத்திலும் பேசி  எனக்கு  மாடிஃபைட் ஸ்கூட்டர் வாங்கிப் பரிசளித்தனர். அதன்பிறகே சுதந்திரக் காற்றை முழுமையாக சுவாசிக்கத் தொடங்கினேன். தோழிகள் இணைந்து பிறந்தநாள் பரிசாக வெயிட்லஸ் காலிபரை வாங்கித் தந்தனர்...’’ சொல்லும்போதே திவ்யாவின் குரலில் அவ்வளவு அன்பு வழிந்தது.

‘‘காம்பஸ் இன்டர்வியூவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஐபிஎம் நிறுவனத்தில் சேர்ந்தேன். காரணம், அந்நிறுவனம் மட்டுமே எம்ப்ளாயி ஃபிரெண்ட்லி மற்றும் டிஸபிளிட்டி கேர் நிறுவனமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் பலர் அங்கு பணிவாய்ப்பு பெற்றிருந்தனர்.
அலுவலகம் அருகிலேயே விடுதி எடுத்துத் தங்கினேன். அங்கு பலர் பிஸியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி பயிற்சி மாணவிகளாக இருந்தனர். அவர்களின் வழிகாட்டுதலில் என் பிரச்னையைக் கவனித்த ஒரு மாணவி, ‘உனக்கு இருப்பது ஸ்பினா பிஃப்டா’ என்றார்.

முதல் முறையாக அந்த வார்த்தை என் காதில் விழ... கூகுளில் தேடினேன். என் பிரச்சனைகள் புரிந்தன. ‘ஸ்பினா பிஃப்டாவைச் சரிசெய்ய முடியாது. இருப்பதைத் தக்கவைக்க சில பிஸியோதெரபி பயிற்சிகளை எடு’ என்றார்கள். ஆக்குபேஷனல் தெரபி ஆலோசனைகளும் பெற்றேன்.

சம்பள உயர்வோடு வெரைஷான் நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க, அங்கு ராஜேஷ் நண்பராக அறிமுகமானார். என் நிலை உணர்ந்தும் என்னை ரொம்பவே நேசித்தார். என் தயக்கங்களை உடைத்தார். பிஸியோதெரபி, ஸ்விம்மிங், சி.எம்.சி. மெடிக்கல் கவுன்சிலிங் என தொடர்ந்து அழைத்துச் சென்றார்.

பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் முடிய, தாய்மை அடைந்தேன். நகர முடியாத நிலையில் வீல்சேருக்கு மாறினேன். வேலையில் நான் காட்டும் சின்ஸியாரிட்டி பார்த்து நிறுவனமே வொர்க் ஃப்ரம் ஹோம் வாய்ப்பு கொடுத்தார்கள். முழு மருத்துவக் கண்காணிப்பில் பிறந்த எங்கள் மகள் தீராபுன்னகை,எங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள்...’’ என்கிறார் தாய்மை தந்த பூரிப்பு மாறாமல்.

‘‘இதன்பின் International federation for spina bifida and hydrocephalus அமைப்பின் தொடர்புகள் கிடைத்தது. எனக்குத் தெரிந்து ஸ்பினா பிஃப்டா பிரச்னை உள்ள நபர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தை பெற்றவர்களின் மருத்துவப் பதிவும் இல்லை. இது என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற அளவுக்கு ஆலோசனைகள் வழங்கத் தீர்மானித்தேன். அதை செயல்படுத்தியும் வருகிறேன்.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்கிற எண்ணத்தை எப்போது கைவிடுகிறோமோ... எப்போது கழிவிரக்கம் கொள்ளாமல் இருக்கிறோமோ... அப்போதுதான் வலிகளைக் கடக்கத் தொடங்குவோம். நாம் நகர... நகர... தன்னால் கதவுகள் திறக்கும்... வழிகளும் புலப்படும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் திவ்யா.

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்