தலபுராணம்-விஜயா வாஹினியும், பிரசாத் ஸ்டூடியோவும்…‘வாழ்க்கை’ படத்திற்குப்பின் ஏவிஎம் செட்டியார் படம் இயக்கவில்லை. தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். இப்படியாக அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘ஓர் இரவு’ படத்தை ஏவிஎம் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்கினார்.

தொடர்ந்து கலைஞர் கருணாநிதி வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ பெரிய வெற்றியைப் பெற்றது. இதை கிருஷ்ணன்- பஞ்சு இயக்கினர். ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியது ஏவிஎம். பின்னர், ‘அன்பே வா’, ‘உயர்ந்த மனிதன்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ எனப் பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியத் திரைத்துறையில் கோலோச்சிய ஏவி மெய்யப்பச் செட்டியார் 1979ம் வருடம் மரணமடைந்தார். பிறகு, ஏவிஎம் நிறுவனத்தை அவரின் மகன்கள் ஏற்று நடத்தினர்.‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘உயர்ந்த உள்ளம்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘மின்சாரக் கனவு’, ‘ஜெமினி’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘அயன்’ எனப் பல படங்களைத் தயாரித்து வெற்றி கண்டனர்.

அன்று ஸ்டூடியோவின் பதினோரு ஃப்ளோர்களும் பரபரப்பாக இயங்கின. பாகப்பிரிவினைக்குப் பிறகு இப்போது ஏவிஎம் சரவணன் ஸ்டூடியோவை இயக்கி வருகிறார். இதில், மூன்றாவது மற்றும் நான்காவது ஃப்ளோர்கள் மட்டுமே இன்று திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்  படப்பிடிப்புத் தளங்களாக உள்ளன. ஏவிஎம் மெட்ராஸில் தொடங்கிய அதேகாலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டூடியோவாக  இருந்தது விஜயா வாகினி. இதன் உரிமையாளர் பி.நாகிரெட்டி.

ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் பொட்டிபாடு என்ற கிராமத்தில் பிறந்தவர். ெமட்ராஸில் படிப்பை முடித்துவிட்டு, தந்தையின் ெவங்காய வியாபாரத்திற்காக பர்மா, சிங்கப்பூர் என வெளிநாடுகள் சென்று அனுபவங்கள் கற்றார்.இவரின் மூத்த சகோதரர் பி.என்.ரெட்டி, ஆரம்ப கால சினிமாவில் முக்கிய பங்காற்றியவர். தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸை’ இயக்கிய ஹெச்.எம்.ரெட்டியிடம் உதவியாளராக இருந்தார்.

பின்னர் ஹெச்.எம்.ரெட்டியும் பி.என்.ரெட்டியும் இணைந்து ‘ரோகிணி பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கி படங்கள் தயாரித்து இயக்கினர். இவர்களுடன் பார்டனராக மூல நாராயணஸ்வாமி என்பவரும் இணைந்து கொண்டார்.இந்த மூவர் கூட்டணியில் வந்த முதல் படம் ‘கிரஹலட்சுமி’. இது 1938ல் தெலுங்கில் வெளியானது.

பின்னர், மூல நாராயணஸ்வாமியும், பி.என்.ரெட்டியும் சேர்ந்து ‘வாகினி பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியை நிறுவினர்.
வாகினி பேனரில் இருந்து ‘வந்தே மாதரம்’, ‘சுமங்கலி’, ‘பக்த போத்தண்ணா’ உள்ளிட்ட சில படங்கள் உருவாகின. இதில், ‘வந்தே மாதரம்’ படத்திற்கான பப்ளிசிட்டி பணிகளைச் செய்து சினிமா துறைக்குள் வந்தார் நாகிரெட்டி.

இந்நேரம், ஸ்டூடியோவிற்கான தேவை ஏற்பட வாகினி ஸ்டூடியோ உருவானது. இது மூல நாராயணஸ்வாமி, பி.என்.ரெட்டி, பி.நாகிரெட்டி என சில பங்குதாரர்களுடன் உதயமானது.ஸ்டூடியோவின் கட்டடப் பணி 1945ல் ஆரம்பிக்கப்பட்டு 1948ல் முடிவடைந்தது. பிறகு, வாகினி பிக்சர்ஸும், வாகினி ஸ்டூடியோவும் பரபரப்பாயின.

இந்நிலையில் 1945ல் பி.என்.ரெட்டி இயக்கிய ‘சொர்க்க சீமா’ படத்திற்கு கதை வசனம் எழுத, எழுத்தாளரான அலுரி சக்கரபாணி வந்து சேர்ந்தார். அப்
ேபாது நாகிரெட்டியும் சக்கரபாணியும் நண்பர்களாகினர்.அந்த நட்பு சக்கரபாணி இறக்கும் வரை தொடர்ந்தது. எந்தஒரு விஷயத்தையும் சக்கரபாணியிடம் கருத்து கேட்டபிறகே செய்வார் நாகிரெட்டி. அந்தளவுக்கு அவர்களின் நட்பு ஆழமாக இருந்தது.

இதற்கிடையே மெட்ராஸில் ஓர் அச்சகத்தை நடத்தி வந்தார் நாகிரெட்டி. அங்கிருந்து 1947ல் ‘சந்தமாமா’ என்ற குழந்தைகளுக்கான இதழைத் தொடங்கினார். இது 14 மொழிகளில் வெளியானது. தமிழில் ‘அம்புலிமாமா’ என வெளிவந்தது. அதுமட்டுமல்ல. இதற்கு முன்னரே 1945ம் வருடம் ‘ஆந்திர ஜோதி’ என்ற மாதப் பத்திரிகையையும் நடத்திக் கொண்டிருந்தார். பிறகு, நண்பர் சக்கரபாணியுடன் இணைந்து ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தை தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.

இந்நேரம், வருமான வரி பிரச்னை காரணமாக வாகினி ஸ்டூடியோவில் அதிக பங்குகள் கொண்டிருந்த மூல நாராயணஸ்வாமியால் ஸ்டூடியோவை ஏற்று நடத்த முடியவில்லை. இவர் 1950ல் மரணமடைந்தார். இதனால், நாகிரெட்டி வாகினி ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ வழியே படங்கள் தயாரித்தார். இந்த பேனரில் நாகிரெட்டியும், சக்கரபாணியும் இணைந்து தயாரிக்க 1950ம் வருடம் ‘சௌகாரு’ ெதலுங்குப் படம் வெளியானது. இதை இயக்கியவர் எல்.வி.பிரசாத்.

இந்தப் படத்தில்தான் சவுகார் ஜானகி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘பாதாள பைரவி’, ‘மிஸ்ஸியம்மா’, ‘கல்யாணம் பண்ணிப்பார்’, ‘மாயா பஜார்’ என அடுத்தடுத்து தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வெற்றி கண்டன. ‘விஜயா வாகினி ஸ்டூடியோஸ்’ பிரபலமானது.
1961ம் வருடம் ‘வாகினி ஸ்டூடியோ’ நாகிரெட்டிக்கு சொந்தமானது. ‘‘ஏழு ெபரிய படப்பிடிப்புத் தளங்களையும், அவற்றில் ஒரே சமயத்தில் ஏழு படப்பிடிப்புகள் நடைபெறுவதற்கான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்புக்கான பல எடிட்டிங் அறைகளுடன் கூட சிறந்த லெபாரட்டரியும் அமைந்திருந்தன.

அத்துடன் மூன்று பாடல் ஒலிப்பதிவுக் கூடங்கள், படம் பார்ப்பதற்கென்று ஆறு தியேட்டர்கள், அரங்க நிர்மாணப் பணிகளுக்கான கூடங்கள், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பல ஒப்பனை அறைகளும் இருந்தன...’’ என விஜயா வாகினி ஸ்டூடியோவில் இருந்த வசதிகள் பற்றி ‘சினிமாவின் மறுபக்கம்’ தொடரில் குறிப்பிடுகிறார் பழம்பெரும் கதை வசனகர்த்தாவான ஆரூர்தாஸ். இதன்பிறகு, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நம்நாடு’ எனப் பல வெற்றிப் படங்களைத் தந்தனர். ஆனால், 70களின் தொடக்கத்தில் ஸ்டூடியோவின் செயல்பாடுகள் குறைந்தன.

இதனால், ஸ்டூடியோ இருந்த இடத்தில் 1972ல் விஜயா மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை வழியே விஜயா மருத்துவமனை தொடங்கப்பட்டது.
பிறகு, விஜயா ஹெல்த் சென்டர், ஹார்ட் பவுண்டேஷன் எல்லாம் வந்தன. ஆனால், படத்தயாரிப்பை விடாமல் தொடர்ந்தார் நாகிரெட்டி.
இந்நிலையில், 1987ம் வருடம் இந்தியாவின் உயரிய சினிமா விருதான தாதா சாகிப் பால்கே விருதினைப் பெற்றார். அவரின் சகோதரர் பி.என்.ரெட்டியும் இந்த விருதினை 1974ல் பெற்றார்.

தயாரிப்பாளர், இயக்குநர், பத்திரிகை ஆசிரியர், வணிகர் எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி 2004ம் வருடம் மறைந்தார்.
இப்போது அவரது வாரிசுதாரர்கள் தொடர்ந்து ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ பேனரில் படங்களைத் தயாரித்து வருகின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘சங்கத்தமிழன்’ படம், இந்நிறுவனத்தின் தயாரிப்புதான்!

இன்று நாகிரெட்டியின் நினைவைப் போற்றும் வகையில் அவரின் குடும்பத்தினர் மருத்துவமனையின் உள்ளே ஒரு மியூசியத்தை நிர்வகித்து வருகின்றனர். அதில், அவர் பயன்படுத்திய கண்ணாடி, கார், பெற்ற விருதுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரைப் போலவே பன்முகத் திறமை கொண்ட ஆளுமை எல்.வி.பிரசாத். ஒருநடிகராக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் பின்னாளில் தயாரிப்பாளர், ஸ்டூடியோ உரிமையாளர், இயக்குநர் எனப் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார்.

இந்தியாவில் வெளியான முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’வில் சின்ன ரோலில் நடித்தார். பின்னர், தமிழில் வெளியான முதல் பேசும் படமான ‘காளிதாஸிலும்’, தெலுங்கில் வெளியான முதல் பேசும் படமான ‘பக்த பிரகலாதா’விலும் நடித்தார்.முதலில் வெளிவந்த மூன்று பேசும் படங்களிலும் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் எல்.வி.பிரசாத். 1908ம் வருடம் ஆந்திராவிலுள்ள ஏலூரு தாலுகாவில் சோமவாரபாடு என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

சிறுவயதிலேயே நாடகத்தின் மீது அதீத ஆர்வம். இதுவே அவரை நடிகராக பரிணமிக்க வைத்தது. 17 வயதில் தன் மாமன் மகளான சவுந்தர்யா மனோகரம்மாவை திருமணம் முடித்தார்.பிறகு, பிரசாத்தின் தந்தை வாங்கிய கடனால் குடும்பமே நொடிந்தது. இந்நேரம், வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நூறு ரூபாயுடன் சினிமா மீதான ஆர்வத்தில் பம்பாய் தாதரில் இருந்த கோஹினூர் ஸ்டூடியோவிற்குச் சென்றார் பிரசாத்.

பல்வேறு கஷ்டங்களுக்குப் பிறகே அவருக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தது. பின்னர், உதவி இயக்குநரானார். இவரின் முழுப்பெயர் அக்கினேனி லட்சுமி வரப்பிரசாத ராவ். அதுவே எல்.வி.பிரசாத் என்றானது.1949ம் வருடம் ‘மனதேசம்’ என்கிற தெலுங்குப் படத்தை இயக்கினார்.

இதில், என்.டி.ராமாராவை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நாகிரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் தொடங்கிய முதல்படமான ‘சவுகாரு’ படத்தை இயக்கினார்.பிறகு ‘மிஸ்ஸியம்மா’, ‘மனோகரா’ போன்ற படங்களை தமிழ், ெதலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கி வெற்றி கண்டார்.  

இந்நிலையில், 1955ம் வருடம் முதல்முதலாக ‘லட்சுமி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பேனரில் ‘இளவெல்பு’ என்ற ெதலுங்குப் படத்தைத் தயாரித்தார்.
இதுவே, 1956ம் வருடம் ‘பிரசாத் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற கம்பெனிைய உருவாக்க வைத்தது. இதன்பிறகு, தயாரிப்பாளர் கம் இயக்குநராக வலம் வந்தார் எல்.வி.பிரசாத்1960களில் பிரசாத் ஸ்டூடியோவை நிறுவினார். ‘‘இவரிடம் முதலில் உதவி இயக்குநராக இருந்து பின்னாளில் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் ஆன ரங்கநாததாஸ் என்பவர் அருணாசலம் சாலையின் வடகோடியில் ஓர் இடத்தை வாங்கினார்.

 அதில், ஸ்டூடியோ கட்டுவதற்காக ஒரு தளத்திற்கு அஸ்திவாரம் போட்டு அத்துடன் பணி நின்றுபோனது. பின்னர், 1964ல் எல்.வி.பிரசாத் அதை விலைக்கு வாங்கி தனது பிரசாத் ஸ்டூடியோவை கட்டினார். ஸ்டூடியோவிற்கான கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே தனது ‘பிரசாத் புரொடக்‌ஷன்ஸ்’ பேனரில் நான் திரைக்கதை, வசனம் எழுதிய ‘இதயக் கமலம்’ படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் எடுத்தார்...’’ என தன்னுடைய ‘சினிமாவின் மறுபக்கம்’ தொடரில் நினைவுபடுத்துகிறார் ஆரூர்தாஸ்.

அன்று மூன்று ெபரிய ஃப்ளோர்களில் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. தொடர்ந்து இவரின் மகன் ரமேஷ் அமெரிக்காவில் இருந்து படிப்பு முடித்து திரும்பியதும், 1974ல் பிரசாத் பிலிம் லேப் தொடங்கினார்.1981ல் இவரின் தயாரிப்பில் இந்தியில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஏக் தூஜே கே லியே’ மாபெரும் வெற்றி கண்டது. இதே வருடம் கமல் நடிப்பில் வெளியான ‘ராஜபார்வை’ படத்தில் நடிகை மாதவியின் தாத்தாவாக நடித்தார் எல்.வி.பிரசாத்.

1982ம் வருடம் இந்திய அரசின் உயரிய சினிமா விருதான தாதா சாகிப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1994ம் வருடம் மரணமடைந்தார் எல்.வி.பிரசாத்.அவருக்குப் பிறகு அவரின் மகனும், பேரன்களும் தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவையும் லேப்பையும் நடத்தி வருகின்றனர். இதில், சினிமா டிஜிட்டலான பிறகு கெமிக்கல் லேப் மூடப்பட்டுவிட்டது.

இன்று ரிக்கார்டிங், எடிட்டிங் மற்றும் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தவிர, ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில், டைரக்‌ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங் அண்ட் டிசைன் போன்ற கோர்ஸ்கள் கற்றுத் தரப்படுகின்றன. கடைசியாக இந்த ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட படம் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘பிகில்’!                         

பேராச்சி கண்ணன்

ராஜா

ஆர்.சந்திரசேகர்