பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில டிப்ஸ்
ஸ்மார்ட்போன் பயனாளர்களின் முக்கிய குற்றச்சாட்டே பேட்டரி ரொம்ப நேரம் நிற்பதில்லை என்பதுதான். அது எந்த நிறுவன போனாக இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு மட்டும் மாறுவதில்லை. தவிர, நாளாக நாளாக சார்ஜைத் தாங்கும் திறன் பேட்டரிக்குக் குறைந்துகொண்டே வருகிறது. எந்த நேரத்தில் பேட்டரி தன்னுடைய செயலை இழக்கும் என்று துல்லியமாக சொல்ல முடியாது. சில நேரங்களில் பேட்டரி திணறக்கூட செய்யும்.
 2017ல் ஐபோன் பேட்டரிகள் திணற ஆரம்பித்ததும் அதன் பயனாளிகள் இணையத்தில் ‘ஆப்பிள்’ நிறுவனத்தைக் கழுவி ஊற்றினார்கள். தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டு பேட்டரியின் திறனை மேம்படுத்துவதாக ஒப்புதல் அளித்தது ‘ஆப்பிள்’. இந்நிலையில் டெக் வல்லுநர்கள் உங்களின் பேட்டரி திறனைப் பாதுகாக்கவும், சார்ஜை ரொம்ப நேரம் தக்க வைக்கவும் சில ஆலோசனைகளைத் தந்துள்ளனர்.
* உங்கள் போனின் சாஃப்ட்வேர்களை அப்டேட்டாக வைத்துக்கொள்ளுங்கள். ஐபோன், சாம்சங் போன்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி சாஃப்ட்வேரை அப்டேட் பண்ணச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கும். எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் அப்டேட் செய்து கொள்வது நல்லது. பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க இந்த சாஃப்ட்வேர் அப்டேட் பெரும் உதவி செய்கிறது.
* ஆப்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு சதவீதம் சார்ஜை எடுத்துக்கொள்கிறது என்ற கிராஃப் உங்களின் ஸ்மார்ட்போனிலேயே இருக்கும். அதிக சார்ஜை உறிஞ்சும் ஆப்களை தேவையானபோது மட்டும் பயன்படுத்திவிட்டு அணைத்து வைத்துவிடுவது நல்லது.
* ஸ்கிரீன் வெளிச்சம் சார்ஜை அதிகமாகத் தின்னும். அதனால் ஸ்கிரீனை மங்கலாக வைத்துக்கொள்வது பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கும்.
* மொபைல் நிறுவனங்கள் தரும் இணைய வசதியைப் பயன்படுத்துவதை விட, வை-பை இணைய வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது. அப்போது ஏரோபிளேன் மோடில் கூட போனை வைத்துக்கொள்ளலாம்.
|