ரத்த மகுடம்-73



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

வந்து நின்று சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தருக்கு வணக்கம் தெரிவித்த கடிகை பாலகனைக் கண்டதும் ஸ்ரீராமபுண்ய வல்லபர் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உணர்வில் சஞ்சரித்தார். பல விஷயங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தன.
இதே பாலகனை கைது செய்ய மன்னருக்கே தெரியாமல், தான் முற்பட்டதும்... ஒவ்வொரு முறையும், தான் அனுப்பிய வீரர்களிடம் இருந்து இந்தப் பாலகன் தப்பித்ததும்... தப்பிப்பதற்கு மன்னரே உதவி புரிந்ததும்... அதன் காரணமாக விக்கிரமாதித்தர் மீது தனக்கு எழுந்த மனஸ்தாபங்களும்... அடுக்கடுக்காக ராமபுண்ய வல்லபரின் மனதில் காட்சிகளாக விரிந்தன.

இதே பாலகன்தான் காஞ்சிக்கு வந்த கரிகாலனுக்கு வலது கையாக விளங்கினான்... உதவினான். பின்னணியில் இருந்து இந்த பாலகனை இயக்கியது நம் மன்னர் விக்கிரமாதித்தர்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த பாலகனை வைத்து சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் பகடையாட்டம் ஆடுகிறார்... அது எதற்கு என்று புரியாமல், தான் தவித்தது எல்லாம் அவர் மனக்கண்ணில் சடசடவென்று வந்து போயின.

ஒருவேளை இந்த பாலகன், நம் சாளுக்கிய இளவரசர் விநயாதித்தனாக இருப்பாரோ என்று, தான் சந்தேகப்பட்டதும்... மன்னரிடமே ஆவேசத்துடன் அதைக் கேட்டதும் அக்கணத்தில் அவர் நெஞ்சில் நிழலாடின.அனந்தவர்மர், இந்த பாலகனை வைத்து தன் சகோதரர் விக்கிரமாதித்தரை குற்றம் சாட்ட முற்பட்டதையும்... இதற்காகவே விசாரணை மண்டபத்தில் அமைச்சர் பெருமக்களையும் குறுநில மன்னர்களையும் கூட்டியதையும் நினைத்துப் பார்த்தார்.

வீரர்களின் பலத்த காவலையும் மீறி அந்த விசாரணை மண்டபத்தில் இருந்து இந்த பாலகன் தப்பித்தான். இவன் தப்பிக்க காரணமாக இருந்தவன் கரிகாலனா அல்லது நம் மன்னர்பிரானா என்ற ஐயம் இப்பொழுது வரை ராமபுண்ய வல்லபரின் மனதை அரித்து வருகின்றது.
இந்நிலையில் எங்கு சென்றான்... என்ன செய்கிறான்... என சாளுக்கிய ஒற்றர்களாலும் வீரர்களாலும் சல்லடை போட்டு சலித்தும் கண்டறியப்படாமல் இருந்த கடிகை பாலகன், இதோ வந்து நிற்கிறான்.... சாளுக்கிய மன்னருக்கு வணக்கம் தெரிவிக்கிறான்.

அதுவும் மன்னரின் அந்தரங்க அறைக்கு வெளியே காவலுக்கு நிற்கும் எந்த வீரனும் முறைப்படி வந்து பாலகன் வந்திருக்கும் தகவலை அறிவிக்கவில்லை! ஏதோ, பழக்கப்பட்ட இடம் போலவும், தனது சொந்த அறைக்குள் நுழைவது போலவும் நுழைந்திருக்கிறான். மரியாதைக்கு வெறும் கதவை மட்டும் தட்டிவிட்டு!

தனக்குக் கூட இல்லாத உரிமை இது! பொறாமை கலந்த உணர்வுகள் பூக்க ராமபுண்ய வல்லபர் பெருமூச்சு விட்டார். சில நாழிகைகளுக்கு முன் தனது வரவை மன்னரிடம் அறிவிக்க முதலில் காவலுக்கு நின்ற வீரன் நுழைந்ததும்... மன்னரிடம் தன் வருகையைத் தெரிவித்ததும்... அவசர விஷயம் என்பதால் வீரனின் பதிலுக்காகக் காத்திராமல், தான் அவனுக்குப் பின்னாலேயே மன்னரைக் காண அறைக்குள் வந்ததையும் நினைத்துப் பார்த்தார்.

நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை! தனக்கு வழங்கப்படாத உரிமை இந்த பாலகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மன்னரே அறைக்கு வெளியில் இருக்கும் காவலர்களிடம் இதை தெரிவித்திருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு சர்வசாதாரணமாக மன்னரின் அந்தரங்க அறைக்குள் இப்பாலகனால் நுழைந்திருக்க முடியாது!

எனில் இவன் மன்னரின் மனம் கவர்ந்தவனாக இருக்க வேண்டும் அல்லது மன்னருக்கு சமமானவனாக இருக்க வேண்டும்!
யார் இந்த பாலகன்..? ஒருவேளை, தான் சந்தேகப்பட்டது போல் இவன் சாளுக்கிய இளவரசர் விநயாதித்தன்தானா..?
புள்ளியாக விழுந்த வினா, விருட்சமாக ராமபுண்ய வல்லபருக்குள் வளர்ந்தது.

மன்னரின் முன்னால் மரியாதைக்குரிய உடல் மொழியுடன் நின்றிருந்த கடிகை பாலகனை ஆராய்ந்தார்.
முகம் முழுக்க சாந்தமும் அமைதியும் தவழ்ந்து காணப்பட்டான். தலை முழுக்க மழிக்கப்பட்டிருந்தது. நெற்றியில் திருநீறு. மார்பில் ஸ்படிக மணி மாலை. வெற்று மார்பு. இடுப்பில் காவி வேஷ்டி. அதை பஞ்சகச்சமாகக் கட்டியிருந்தான். தீட்சண்யமான பார்வை. கூர்மை. ஆனால், அதில் அமைதியே தவழ்ந்திருந்தது.

சாளுக்கிய இளவரசர் விநயாதித்தரும் இதே உயரம், இதே வயதுதான். அவர் பார்வையிலும் தீட்சண்யம் சுடர்விடும். கூர்மையும் பளபளக்கும். ஆனால், அமைதி குடிகொண்டிருக்காது. மாறாக வீரம் கொப்பளிக்கும். நாட்டை ஆளும் தகுதி தனக்கு இருப்பதை அவரது உடல்மொழி சதா தெரியப்படுத்திக் கொண்டிருக்கும்.

எனில், இந்த பாலகன், தான் எண்ணியது போல் சாளுக்கிய இளவரசர் அல்ல. தொலைவில் இருந்து பார்த்தபோது எழுந்த ஐயம், அருகில் உற்றுப் பார்க்கையில் உதிர்ந்துவிட்டதை தெளிவாகவே சாளுக்கியர்களின் போர் அமைச்சர் உணர்ந்தார்.எனில், இந்த பாலகன் யார்..? தங்களது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சாளுக்கிய மன்னரின் மனம் கவர்ந்த இளைஞராக எப்படி மாறினார்..? எதனால் மன்னர் இந்தப் பாலகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்..?

ராமபுண்ய வல்லபருக்குள் பூத்த அனைத்து வினாக்களுக்குமான விடை அடுத்தடுத்து அவருக்குக் கிடைக்கத் தொடங்கின. அதற்கு அச்சாரமாக சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் மலர்ச்சியுடன் அந்த பாலகனை வரவேற்றார்.‘‘வா குழந்தாய்... உனது வருகைக்காகத்தான் காத்திருக்கிறேன்... எப்படி இருக்கிறாய்..?’’‘‘தங்கள் ஆசியில் அடியேனுக்கு குறையேதும் இல்லை மன்னா..!’’ மீண்டும் ஒருமுறை விக்கிரமாதித்தரை வணங்கினான்.
‘‘சென்ற காரியம்..?’’

‘‘தங்கள் திட்டப்படியே சகலமும் அரங்கேறின...’’ சொன்ன பாலகன் தன் மடியில் இருந்த ஓலையை எடுத்து சாளுக்கிய மன்னரிடம் பயபக்தியுடன் கொடுத்தான்.மன்னரும் சரி... பாலகனும் சரி... தான், அங்கு இருப்பதையே பொருட்படுத்தவில்லை என்பதை ராமபுண்ய வல்லபர் உணர்ந்தார். காயப்பட்டது போல் அவர் உள்ளம் துடித்தது. கணப் பொழுதுதான். அதற்குள் தன் முன்னாலேயே அந்தரங்கமாக உரையாடத் தொடங்குகிறார்கள் என்றால் அந்தளவுக்கு தன்னை நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்..?

இந்த எண்ணம் துளிர்விட்டு சாளுக்கிய போர் அமைச்சரின் மேனி எங்கும் மலர்ந்ததும் உற்சாகமானார். இருவரது உரையாடலையும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார். பாலகன் கொடுத்த ஓலைக்குழலை வாங்கிய சாளுக்கிய மன்னர் உடனடியாக அதைப் பிரித்துப் பார்க்கவில்லை. மாறாக, ‘‘பிரச்னை ஒன்றுமில்லையே..? யாருக்கும் உன் மீது எந்த சந்தேகமும் எழவில்லையே..?’’ என்று கேட்டார்.

‘‘இல்லை மன்னா... தங்கள் திட்டப்படியே கரிகாலனுடன் சென்றேன்...’’ பாலகன் பதிலளித்தான்.‘‘கரிகாலனுக்கு உன் மீது எந்த சந்தேகமும்..?’’
‘‘ஏற்படவில்லை மன்னா! முழுமையாக என்னை நம்பினார். விசாரணை மண்டபத்தில் இருந்து என்னையும் சிவகாமியையும் அழைத்துச் சென்றவர் கெடில நதிக்கரைப் பக்கம் வந்ததும் தன் முத்திரை மோதிரத்தை எடுத்து என்னிடம் கொடுத்து காஞ்சிக்கு திரும்பிப் போகும்படி கூறினார்...’’
‘‘ம்...’’

‘‘அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டவன் உங்கள் கட்டளையை நிறைவேற்றத் தொடங்கினேன். கரிகாலனின் முத்திரை மோதிரம் என்னிடம் இருந்ததால் ஆங்காங்கே மறைந்திருந்த பல்லவப் படைகள் என்னைத் தடுக்கவில்லை. நேராக மதுரைக்குச் சென்றேன்... பாண்டிய மன்னரைச் சந்தித்தேன்...’’

அதுவரை பாலகன் பேசிக் கொண்டிருந்ததை உன்னிப்பாக கவனித்து வந்த ராமபுண்ய வல்லபர் சட்டென்று பரபரப்படைந்தார்.
பாண்டிய மன்னரை பாலகன் சந்தித்தானா..?தனது போர் அமைச்சர் பரபரப்படைந்ததை கவனித்த விக்கிரமாதித்தரின் வதனத்தில் புன்னகை பூத்தது.
‘‘பாண்டிய மன்னர் என்ன சொன்னார்..?’’ பாலகனை நோக்கி சாளுக்கிய மன்னர் வினவினார்.

‘‘என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், உங்களிடம் கொடுக்கும்படி இந்த ஓலையைக் கொடுத்தனுப்பினார்...’’ என்றபடி மன்னரிடம், தான் கொடுத்த ஓலைக்குழலை பாலகன் சுட்டிக் காட்டினான்.‘‘வேறு செய்தி..?’’ தன்னிடம் இருந்த குழலைப் பார்த்தபடியே விக்கிரமாதித்தர் கேட்டார்.
‘‘இளவரசர் தகவல் அனுப்பியிருக்கிறார்...’’ ‘‘யார்...? நம் விநயாதித்தரா..?’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் உரையாடலில் நுழைந்தார்.

‘‘ஆம்... போர் அமைச்சரே...’’ மரியாதையுடன் அவருக்கு பதில் சொன்ன பாலகன், சாளுக்கிய மன்னரை ஏறிட்டான். ‘‘உங்கள் திட்டத்துக்கு இணங்கும் நிலையிலேயே பாண்டிய மன்னர் இருப்பதாகவும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் இளவரசர் சொன்னார்...’’
‘‘அப்படியானால் சாளுக்கிய இளவரசரும் மதுரையில்தான் இருக்கிறாரா..?’’ அடக்க முடியாமல் மன்னரிடம் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.
‘‘ஆம் அமைச்சரே...’’ விக்கிரமாதித்தர் முகமெல்லாம் மலர புன்னகைத்தார். ‘‘நான்தான் அவனை அங்கு அனுப்பினேன்...’’
‘‘எதற்கு மன்னா..?’’ ராமபுண்ய வல்லபர் படபடத்தார்.

‘‘பல்லவர்களை வெற்றி கொள்ள!’’ சட்டென்று பதில் அளித்த விக்கிரமாதித்தரின் கண்கள் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கின. சாளரத்தை நோக்கி நடந்தபடியே பேசத் தொடங்கினார்.‘‘பாண்டியர்களும் நமக்கு எதிரிதானே... தமிழகத்தையே வெற்றி கொள்ளத்தானே நாம் முயற்சிக்கிறோம்... அப்படியிருக்க எதற்காக பாண்டியர்களுடன் இப்பொழுது நட்பு பாராட்டுகிறோம்... என்றுதானே கேட்க வருகிறீர்கள்..?

காரணம் இருக்கிறது ராமபுண்ய வல்லபரே. பாண்டியர்கள் நமக்கு மட்டுமல்ல... பல்லவர்களுக்கும் எதிரிதான். எப்படி பல்லவர்களையும் பாண்டியர்களையும் ஜெயித்து சாளுக்கிய பேரரசை நாம் ஸ்தாபிக்க நினைக்கிறோமோ அப்படி பல்லவர்களும் நம்மையும் பாண்டியர்களையும் வெற்றி கொள்ள நினைக்கிறார்கள்; பாண்டியர்களும் நம்மையும் பல்லவர்களையும் வீழ்த்த வியூகம் வகுக்கிறார்கள்!

நம் மூவருக்குமே அடுத்த இருவரின் எண்ணம் தெரியும். போலவே, இரு எதிரிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்த முடியாது என்பதையும் மூன்று அரசுகளும் அறிந்திருக்கின்றன. ஒருவரை வெற்றி கொண்ட பிறகே அடுத்தவரை நோக்கி நகர முடியும் என்ற புரிதல் மூன்று அரசுகளிடமும் நிலவுகின்றன.

எனவேதான் பல்லவர்கள் முந்துவதற்குள் நாம் காய்களை நகர்த்தியாக வேண்டும் என்று முடிவு செய்தேன். என் மகன் விநயாதித்தனை மதுரைக்கு அனுப்பி வைத்தேன். ‘பல்லவர்களுடன்தான் எங்களுக்குப் பகை... எங்கள் தலைநகரை தீக்கிரையாக்கிய பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கவே தமிழகத்துக்கு வந்திருக்கிறோம்... மற்றபடி பாண்டியர்கள் மீது போர் தொடுக்கும் எண்ணம் துளிக்கூட எங்களுக்கு இல்லை... எனவே நடக்கவிருக்கும் போரில் யார் பக்கமும் நிற்காமல் பாண்டியர்கள் நடுநிலை வகிக்க வேண்டும்...’ என பாண்டிய மன்னருக்கு வேண்டுகோள் வைத்தேன்.

முதல் கட்ட நடவடிக்கைகளை என் மகன் செய்துவிட்டான். இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் அங்கிருக்கும் நிலையை அறிய இந்த பாலகனை அனுப்பி வைத்தேன்...’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.‘‘இதற்கெல்லாம் அவகாசம் தேவை என்றுதான் கரிகாலனை காஞ்சிக்கு வரவைத்து போக்குக் காட்டினீர்களா மன்னா..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் வியப்புடன் கேட்டார்.ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தார் விக்கிரமாதித்தர்.

‘‘இந்த பாலகன் யார் மன்னா..?’’
கேட்ட தன் போர் அமைச்சருக்கு எந்த பதிலையும் சொல்லாமல் தன் கரங்களில் இருந்த ஓலைக் குழலைப் பிரிக்க விக்கிரமாதித்தர் முற்பட்டார்.
ஆனால், குழலை அவர் பிரிப்பதற்குள் -சாளரத்தில் ஒரு புறா வந்து அமர்ந்தது.பரபரப்புடன் அந்தப் புறாவைப் பிடித்து அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த பட்டுத் துணியைப் பிரித்தார்.வனத்தில் இருந்து சிவகாமிதான் அவருக்கு செய்தி அனுப்பி யிருந்தாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்