நிர்வாண ஹோட்டல்!‘ஆர்கானிக்’ என்கிற இயற்கை உணவு தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டு வருகிறது. பாரீஸ், நியூயார்க், மும்பை போன்ற பெரு நகரங்களின் முக்கிய வீதிகளை ஆர்கானிக் ஹோட்டல்கள் அலங்கரிக்கின்றன. இதில் உச்சபட்சமாக சாப்பிட வரும் வாடிக்கையாளர்களையே ஆர்கானிக்காக்கி அழகு பார்க்கிறது லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்று.

அந்த ஹோட்டலின் பெயர், ‘பன்யாடி’. இயற்கை, பரிசுத்தம் இதன் பொருள். இங்கே இயற்கையான முறையில் உணவு கிடைப்பதோடு நாமும் இயற்கையான முறையில் சாப்பிடலாம்.

அதாவது நிர்வாணமாக! காட்டுக்குள் இருப்பதைப் போன்ற அனுபவத்தைத் தருவதற்காக மூங்கில், மரத்துண்டுகள் என இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஹோட்டலின் பர்னிச்சர்களையும், உள்கட்டமைப்பையும் பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

இங்கே நிர்வாணம் என்பது கட்டாயமல்ல. ஹோட்டலுக்குள் நுழைந்தவுடன் ஆடையுடன் சாப்பிடும் பகுதிதான் முதலில் நம்மை வரவேற்கிறது. ஆனால், அங்கே ஒருவர் கூட இருப்பதில்லை. அங்கிருந்து செல்லும் ஒரு கதவில் ‘பரிசுத்தத்திற்குச் செல்லும் வழி’ என எழுதியிருக்கும்.

அதற்குள் ஆடையின்றி ஆர்கானிக் உணவைச் சாப்பிடும் பகுதி உள்ளது. உடைகளைப் பாதுகாத்து வைப்பதற்காக தனியாக ஒரு லாக்கர் அறை கூட உள்ளது. அங்கே உடைகளை வைத்துவிட்டு வெளியே வந்து பார் பகுதியைத் தாண்டி இருக்கும் கதவைத் திறந்தால் பெரிய டைனிங் ஹால். அது முழுக்க முழுக்க நிர்வாண விருந்துக்கானது.

நவீன உலகின் தாக்கம் எதுவுமே தெரியாதபடி அந்த இடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் கூட இல்லை. விளக்கு வெளிச்சம்தான்.
நெருப்பில் வாட்டிய இறைச்சியும் கிழங்குகளும் பழங்களும் பருப்புகளும்தான் உணவு. ‘‘மனிதர்கள் தங்கள் உடம்பின் மீது கொண்டுள்ள அதிருப்தியை, அசூயையைப் போக்குவதுதான் எங்களின் முக்கிய நோக்கம்...’’ என்கிறார் ‘பன்யாடி’ ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் செப் லையால்.