நியூஸ் சாண்ட்விச்கத்தாரில் நீல நிற சாலைகள்

கத்தாரில் நிலவி வரும் வெப்ப சலனத்தை குறைக்க, நீல நிற சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக கத்தார் அரசாங்கம், ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து, 200 கிமீ தூரத்திற்கு இந்த சாலையை உருவாக்கியிருக்கின்றது. இவை சாதாரண கருப்பு நிற தார்ச் சாலைகளைவிட 15 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை குறைக்குமாம். மேலும் கருப்பு சாலைகளைவிட பல வருடங்கள் நீடித்தும் விளங்குமாம்!

மீண்டும் விடாது கருப்பு!

80 - 90ஸ் கிட்ஸ்களின் உள்ளம் கவர்ந்த டிவி நாடகங்கள் இப்போது யூடியூப் சேனலில் தினமும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில் சன் டிவியில் சக்கைப்போடு போட்ட ‘மர்ம தேசம் விடாது கருப்பு’, ‘ரமணி Vs ரமணி’, ‘கையளவு நேசம்’, ‘காதல் பகடை’ ஆகிய தொடர்களை இப்போது யூடியூபில் கண்டு ரசிக்கலாம்.  

கடனோ கடன்!

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்திய அரசு வாங்கிய கடன் தொகை மொத்தம் ரூ.4,42,000 கோடிகள்.அடுத்த ஆறு மாதங்களில் ரூ.2,68,000 கோடி கடன் வாங்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் ரோபோ!

ரோபோ பணிப்பெண், ரோபோ வெயிட்டர், ரோபோ கேர்ள் ஃப்ரெண்ட் என்றெல்லாம் போய், இப்போது ரோபோ அரசியல்வாதியும் வந்துவிட்டது!ஜப்பானின் டோக்கியோவில் நடந்த மேயர் தேர்தலின் போதுதான், Michihito Matsuda என்றவரால் உருவாக்கப்பட்டு, அவரின் பெயரிலேயே அழைக்கப்படும் ரோபோ, அந்நாடு முழுவதும் பிரபலமானது.

செயற்கை அறிவுத்திறன் மூலம் தாமா நகரை மேம்படுத்தி, பாரபட்சமில்லாமல் மக்களின் குறைகளைத் தீர்ப்பதாகவும் முன்மொழிந்து வேட்பாளர் பிரசாரத்தையும் செய்திருக்கிறது இந்த ரோபோ!

மொழிபெயர்ப்பாளர் வஉசி!

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., சுதந்திரப் போராட்ட வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அறியாத விஷயம், அவர் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட என்பது! ஆம். ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களை தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.
Power of the Heart    அகமே புறம்
As a Man Thinketh    மனம் போல் வாழ்வு
From Poverty to Power    வலிமைக்கு மார்க்கம்
The way of Peace      சாந்திக்கு மார்க்கம்

ரயில் மோதி யானை பலி!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரி மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை, வேகமாக வந்த ரயில் மோதியதில் முப்பது மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு படுகாயம் அடைந்தது. உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு ரத்தத்தில் மிதந்த போதிலும் வலியில் துடித்தபடியே எழுந்து மீண்டும் காட்டிற்குள் சென்ற அந்த யானையின் வீடியோ, சோஷியல் மீடியாவில் பலரின் அனுதாபத்தையும் பெற்றது.

சில மணி நேரத்தில் அந்த யானை இறந்த செய்தி வெளியானதும், காட்டு வழியே தண்டவாளத்தை ஏற்படுத்தி யானைகளின் பாதையில் மனிதர்கள் குறுக்கிடுவதாகவும், குறைந்தபட்சம் காட்டுப் பகுதிகளில் மெதுவாக ரயிலை இயக்கிச் செல்லலாம் என்றும் மக்கள் தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

புற்றுநோயை ஏற்படுத்தும் மருந்து?!

அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல பார்மா நிறுவனம், Sandoz Inc, Ranitidine (Zantac) மருந்துகளில் புற்றுநோயை உருவாக்கும்
கார்சினோஜன் என்ற காரணிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

Ranitidine மருந்து வகைகளை மக்கள் நேரடியாக மருந்தகங்களிலிருந்து அல்சர், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளுக்காக வாங்குவது வழக்கம்.  
அமெரிக்காவைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் Ranitidine எட்டு பிராண்டுகளையும் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், Ranitidine (Zantac) பாதுகாப்பானதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்