நான்... சரண்ராஜ்



துப்பாக்கி வைத்திருந்ததால் சர்ச்சைக்கு ஆளான சரண்ராஜைத்தான் உங்களுக்குத் தெரியும்.

ஆனால், வாழ வழியில்லாமல் அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருமுறை தற்கொலைக்கு முயன்ற சரண்ராஜை உங்களுக்குத் தெரிந்திருக்காது! அப்பா, அம்மா, சொந்த ஊர், நண்பர்கள், உறவினர்கள்... என எல்லோரையும் விட்டுவிட்டு நடிப்பே வாழ்க்கை என ஓடி வந்தவன் நான்! கர்நாடக மாநிலம் பெல்காமில் இருக்கும் கானாபூரில்ஏப்ரல் 27, 1958ல் பிறந்தேன். அப்பா நாராயணன் டிம்பர் சா மில் வைத்திருந்தார். அம்மா ரேணுகா. எனக்கு இரண்டு அக்காக்கள், ஒரு தம்பி. அப்போது வீட்டில் எத்தனை பெண்கள் இருந்தாலும் ஆணுக்குத்தான் மரியாதை, செல்லம், படிப்பு.

அப்படித்தான் வீட்டுக்கே ராஜாவாக வளர்ந்தேன். சின்ன வயதிலிருந்தே பாட்டு, டான்ஸ் பிடிக்கும். அம்மாவின் அப்பா - தாத்தா - பெரிய தலைக்கட்டு. வெளியூர் நடனக் கலைஞர்களை அழைத்து வந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்துவார். எனவே என்னைப் பார்க்கும்போதெல்லாம் அம்மாவுக்கு, தன் அப்பாவைப் பார்ப்பது போலவே இருக்குமாம்!

ஒரு சின்ன நிகழ்ச்சியில் கிடார் பிடித்து ஹைபிட்ச்சில் பாடினேன். கூடவே ஒரு டாக்டர் வேடம் வேறு. பாராட்டு குவிந்தது! பத்தாவது படித்து முடித்ததும் ஒருநாள் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஓய்வாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வீரு என்னும் நண்பன், என் செல்லப் பெயரான ‘பம்மு’என அழைத்து - ஆமாம், என் பெயர் பிரம்மானந்தா என்கிற பொம்மாயி - ‘நீ நல்லா நடிக்கற... சினிமாவுக்கு போனா பட்டைய கிளப்புவ...’ என்றான்.

அதுவரை சினிமா ஆர்வம் என்னிடம் இல்லை. அதன்பிறகோ சினிமா தவிர வேறு சிந்தனையே என்னிடம் இல்லை! இந்நிலையில் இன்னொரு நண்பனான துரைராஜ் பட், ‘உன் மூஞ்சியை ஒருமுறையாவது கண்ணாடில பாரு... நீயெல்லாம் சினிமாவுக்கு செட் ஆகமாட்ட. உன் அப்பாவுக்குத் தெரிஞ்சா உன்னை வீட்டை விட்டே துரத்திடுவார். அப்புறம் நான்தான் ஏதாவது ஹோட்டல்ல உனக்கு வேலை வாங்கித் தரணும்...’ என்றான் அலட்சியமாக.

நான் எதுவும் பேசவில்லை.என்னைக் கிண்ட லடித்த  பட்டை எல்லோருமாகச் சேர்ந்து திட்டினார்கள். மனதுக்குள் எரிமலை பொங்க... அமைதியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். மனதுக்குள் வெறி. வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம், ‘நான் சினிமால நடிக்கப் போறேன்...’ என்றேன்.
அம்மா பதறிவிட்டார். ‘ராஜ்குமார், தர்மேந்திராவை எல்லாம் நாம கடவுளா கும்பிட்டு இருக்கோம்! இதெல்லாம் நடக்கற காரியமில்ல. உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா பிச்சுடுவார்... பேசாம படிக்கிற வழியைப் பாரு...’ என்றார்.

அமைதியாக கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கு நண்பர்களின் கிண்டல் அதிகரித்தது. வீரராகவன் மட்டும் ‘நீ டிரை பண்றா... முடியும்...’ என்று தட்டிக் கொடுத்தபடியே இருந்தான். மனதுக்குள் நாளுக்கு நாள் வெறி அதிகரித்தபடியே இருந்தது. இந்நிலையில் 1976ம் ஆண்டு பிறந்தது.என்னால் ஒருபோதும் அந்த வருட ஜனவரி 26ம் தேதியை மறக்க முடியாது. அன்று மரம் வாங்க ரூபாய் ஏழாயிரத்தை அப்பா மேஜை மீது வைத்திருந்ததைப் பார்த்தேன்!

அவ்வளவுதான். யோசிக்கவே இல்லை. அதை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். ஒயின் ஷாப் ஒன்றில் போதை ஏறும் அளவுக்கு பியர் குடித்தேன். ரயிலில் ஏறி பெர்த் ஒன்றில் படுத்தேன். என் நல்ல நேரம்... அன்று டிடிஆர் வரவில்லை.பெங்களூரில் இறங்கி சுதர்சன் லாட்ஜில் ரூம் எடுத்தேன். ‘ஷோலே’ வெளியான நேரம் அது. ஊரே திருவிழாவாக மாறியிருந்தது. தொடர்ந்து மூன்று ஷோஸ் ‘ஷோலே’ பார்த்தேன்.

பணத்தைத் ‘திருடி’ இருப்பதால் வீட்டுக்குச் செல்ல முடியாது. ஆனாலும் அவ்வப்போது வீட்டுக்கு போன் செய்வேன். அம்மாவைத் தவிர மற்றவர்கள் எல்லாம் என் அழைப்பை எடுத்தார்கள்! அவர்களது குரல் கேட்டதுமே போனை கட் செய்துவிடுவேன்.

அந்த ஏரியாவில் இருந்த எலைட் ஹோட்டலில்தான் பெரும்பாலும் வேலை தேடுபவர்கள் நிற்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் அங்கு நிற்கத் தொடங்கினேன். சில நண்பர்கள் கிடைத்தார்கள்.இதற்குள் கொண்டு சென்ற பணம் முழுக்க தீர்ந்து விட்டது. ஒரு நண்பர் மூலமாக காபரே டான்ஸில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. டான்ஸ் தொடங்குவதற்கு முன்னால் ஐந்து - ஆறு பாடல்களைப் பாடத் தொடங்கினேன். இதற்கு கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கும்.

காலை முழுக்க நடிக்க சான்ஸ் தேடி அலைவேன். மாலை நைட் க்ளப்பில் பாட்டு. வாழ்க்கை இப்படியே நகர்ந்தது. இல்லை, ஊர்ந்தது.இதற்கிடையில் பெல்காமைச் சேர்ந்த சிலர் நைட் க்ளப்பில் நான் பாடுவதைப் பார்த்து வீட்டில் சொல்லி விட்டார்கள். அம்மாவால் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

‘எனக்கு மகனே இல்லை...’ என வெறுத்துப் போய் சொல்லிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.மனசு கேட்கவில்லை. ஊருக்குச் சென்று அம்மாவைப் பார்த்தேன். என்னைக் கட்டிப் பிடித்து அழுது தீர்த்தார்கள்.

அப்பாவுக்கு சிறு வயதில் இருந்தே காலில் பிரச்னை உண்டு. அவரால் வேகமாக நடக்க முடியாது. என்னைப் பார்த்து அழுகையும் மகிழ்ச்சியுமாக அருகில் வந்து அப்பா கட்டிப் பிடித்தார்.பாரம் இறங்க நானும் அப்பாவை அணைத்தேன். அவ்வளவுதான் தெரியும். பிரம்பை எடுத்து அடி அடி என அப்பா அடிக்கத் தொடங்கிவிட்டார்!

எப்படியோ அவரிடம் இருந்து விலகி திரும்பவும் ஊரை விட்டு ஓடி வந்தேன். நடிகனாகாமல் இனி ஊர் திரும்பக் கூடாது என முடிவெடுத்தேன். ஆறு வருடங்கள். ஆர்க்கெஸ்ட்ரா வேலையும் பெரியதாக இல்லாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல், நடிக்கவும் சான்ஸ் கிடைக்காமல்... நரகத்தை அனுபவித்தேன். ஒரு கேரேஜில்தான் வாசம்.

அந்த கார் ஷெட்டுக்கு பின்னால் இருந்த ரயில்வே டிராக்கில் இருமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஒருமுறை டிராக்கிலேயே உறங்கிவிட்டேன்.விவேகானந்தர்தான் என்னைத் தெளிய வைத்தார். அவரது நூலைப் படித்துதான் தற்கொலை தவறு என்று உணர்ந்தேன். வாழ்வதே வாழ்க்கைக்கு நாம் செய்யும் மரியாதை எனப் புரிந்தது.

இந்நிலையில் 1982ம் ஆண்டு பிறந்தது. நடிகர் முரளியின் அப்பா சித்தலிங்கையா, ‘பராஜித்தா’ என்ற படத்தை எடுத்தார். அதில் எனக்கு சான்ஸ் கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.அவ்வப்போது எனக்கு அக்காலங்களில் பண உதவி செய்து வந்த நண்பர் ஓங்காரப்பாவும் நானும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

அப்போது டெல்வின் என்னும் மானேஜர் என்னைத் தேடி வந்தார். ‘நாங்க ஒரு படம் எடுக்கறோம். லட்சுமிதான் கதாநாயகி. நீங்கதான் ஹீரோ. ரூ.15 ஆயிரம் சம்பளம். ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ். இந்தாங்க...’ என்றபடி பணத்தைக் கொடுத்துவிட்டுச்சென்றார்! ‘பராஜித்தா’ வெளியான வெள்ளி அன்று சல்லி பைசா கூட இல்லாமல் நண்பர் ஓங்காரப்பா செலவில் அப்போது உணவருந்திக் கொண்டிருந்தேன்! அன்றே என் கையில் ரூ.10 ஆயிரம்! அது மட்டுமா... திங்கட்கிழமைக்குள் அட்வான்ஸாக மட்டும் என் கையில் ஒரு லட்சம் ரூபாய் வந்து சேர்ந்தது!

ஊருக்கு தகவல் சொல்லிவிட்டு சென்றேன். நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டு வாசலில் எனக்காகக் காத்திருந்தார்கள்! அப்பா, அம்மா, அக்கா, தம்பிக்கு எல்லாம் சந்தோஷம்.வரிசையாக படங்களில் நடிக்கத் தொடங்கினேன். ஊரில் எனக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்.

அதற்குச் சென்றபோது கூட்டத்தில் என் பால்ய நண்பன் பட்டை பார்த்தேன். அவனை அருகில் அழைத்து மேடை ஏற்றி, ‘இன்று நான் நடிகனாக உங்கள் முன் நிற்க இவன்தான் காரணம்...’ என கூட்டத்தின் முன் சொல்லிவிட்டு, அவன் என்னை கிண்டல் அடித்த வாக்கியத்தை அப்படியே சொன்னேன்.பட் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்!

1985ம் ஆண்டு. ‘பிரதிகதனா’ என்னும் தெலுங்குப் படம். பெரிய வில்லன் ஒருவன் நடு ரோட்டில் விஜயசாந்தியை பலாத்காரம் செய்வது போல் அப்படத்தில் ஒரு காட்சி. அந்த பெரிய வில்லனாக நான் நடித்தேன்.அந்தப் படம் என்னை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு போய்ச்சேர்த்தது.

‘பூவும் புயலும்’ டப்பிங் படம் வழியே தமிழில் அறிமுகமானேன். அதைப் பார்த்துவிட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ‘நீதிக்கு தண்டனை’யில் வாய்ப்பு கொடுத்தார்.இதன் பிறகு திரும்பிப் பார்க்க நேரமில்லை. வரிசையாக வில்லனாக நடித்தேன். ‘பாட்ஷா’வில் ரஜினிக்கு நண்பன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் சார் ‘ஜென்டில்மேன்’ படத்தில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடம் கொடுத்தார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, ஒரியா... என பல மொழிகளில் நடிக்கத் தொடங்கினேன். கல்பனா எனக்கு மனைவியாக அமைந்தது உண்மையிலேயே வரம். எனக்கு  மிகவும்ஆதரவாக இருக்கிறார். எங்களுக்கு மூன்று பிள்ளைகள். மூன்று ஷிஃப்டில் நான் நடித்துக் கொண்டிருக்க... கல்பனாதான் அவர்களை வளர்த்து ஆளாக்கினார்.

இரண்டாவது மகன் பாட்டு, டான்ஸில் ஆர்வம் செலுத்தினான். சரி... என்னைப் போல் அவன் நடிகனாவான் என்று நினைத்தேன். பார்த்தால்... அமைதியாக இருந்த பெரிய மகன் தேவராஜ் நடிகனாகி விட்டான்! தேவேந்திர ராஜ் பைலட் ஆகிவிட்டான்! மகள் வைஷ்ணவியும் படிப்பை முடித்துவிட்டார்.

என் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படித்தார்கள். மெரிட்டில்தான் பாஸ் செய்தார்கள். என் பெயரை எங்கும் பயன்படுத்தாமல் அவர்களாகவே இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அந்த துப்பாக்கி மேட்டர் மட்டும் கொஞ்சம் சர்ச்சையாகி விட்டது.
அந்த நேரத்தில் நிறைய நடிகர்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். அப்போது நடிகர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகம் இருந்ததே இதற்குக் காரணம்.

நான் காரில் தனியாக சென்று வருபவன். எனவே பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருந்தேன். சரியான லைசென்ஸ், பராமரிப்பு எல்லாம் செய்திருந்தேன்.என் போறாதவேளை, அன்றைய தினம் கோயிலுக்குச் செல்லும்போது ஏதோ நினைவில் துப்பாக்கியை பாக்கெட்டில் வைத்துவிட்டேன். அது மீடியாவின் கண்களில் பட்டு சர்ச்சையாகி விட்டது.இந்த சோதனையையும் கடவுளின் செயலாகவே பார்க்கிறேன். எல்லாம் நன்மைக்குத்தான்.

கடைசியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். தயவுசெய்து எந்தச் சூழலிலும் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று நினைக்காதீர்கள்; வாழ்க்கை பரமபதம்தான். பாம்பில் இறங்கினாலும் மறுபடியும் ஏணியில் ஏறுவோம். பாம்பில் இறங்கியபோது இந்த சரண்ராஜ் தற்கொலை செய்து கொள்ள நினைத்தான். அது மட்டும் நடந்திருந்தால் இன்று உங்கள் முன்னால் ‘நான்...’
என என்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பேனா..?

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்