நம்ம வீட்டுப் பிள்ளை



தங்கைக்காகவும், உறவுகளுக்காகவும் வாழ்கின்றவனே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. எல்லோரையும் அரவணைத்து வாழ்கின்றவர் சிவகார்த்திகேயன். அப்பாவை இழந்த பிறகு, தங்கையையும், அம்மாவையும் நல்லவிதமாய் கவனித்து சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடர்கிறார்.

பாசத்தைக் கொட்டிவளர்க்கும் தங்கையின் திருமணம் தடையாகி, தனக்குப் பிடிக்காத நட்டியை, தங்கைக்கு திருமணம் செய்துவைக்க நேரிடுகிறது. அதனால் அடுத்தடுத்து நேரிடும் பிரச்னைகள், அண்ணன் தங்கையின் பாசத்திற்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் மீண்டார்களா என்பதே உருக்கச் சித்திரங்கள்.

பெரிய குடும்பம், வேறுபட்ட குணச்சித்திரம் கொண்ட மனிதர்கள், பரிவு, அன்பு, நேசம், வெறுப்பு, நெகிழ்ச்சி என பரந்துபட்ட உணர்ச்சிக்களத்தில் படத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். பொதுவாக நாம் தொலைத்த குடும்ப உறவுகள் மீண்டும் துளிர்விட்டு பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. கூடிவாழ்தலின் பெருமையையும், விட்டுக்கொடுத்தலின் இனிமையையும் அழகாகச் சொன்ன வகையில் இயக்குநர் பாண்டிராஜுக்கு பூங்கொத்து.

எல்லா ஹீரோக்களும் நடிக்க விரும்பும் ‘கிராமத்து குடும்பக் கதை’யில் இது சிவகார்த்திகேயனின் கோட்டா. மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார். குடும்பத்தை இணைத்து நடத்தும் பாந்தத்திலும், தங்கை மீதான பிரியமான அன்பை இயல்பாகக் காட்டும் நேசத்திலும் செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார் சிவா. தங்கையின் திருமணம் தடைபட மருகுவது, பிடிக்காத மாப்பிள்ளைக்கு தங்கையை கட்டிவைக்க நேரிட தவிப்பது, இடையில் படுகாதலாக அனு இமானுவேலிடம் சொக்குவது என ஆல்ரவுண்ட் அசத்தல்.

பாந்தமாக, சாந்தமாக, இரக்கமாக, பாசமாக, தீர்க்கமாக தெளிவான தேவதையாக வசீகரிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படம் முழுக்க நடமாடி, நம் மனதையும் பாசத்தால் நெருங்குகிறார். கணவனிடம் திட்டும், அடியும் வாங்கிக் கொண்டு தன்னைப் பார்க்கவரும் அண்ணன், அம்மாவிடம் வேதனையைச் சொல்லி புலம்பும்போது நம் கண்களில் நீர் திரையிடல்.

தாத்தாவாக இயக்குநர் பாரதிராஜா அப்படியே உயிர்ச்சித்திரம். மொத்த சினிமாவிலும் அத்தனை உயிர்ப்போடு, அளவான நடிப்பில் கச்சிதம். அண்ணனாக சூரி நகைச்சுவை தாண்டி, குணச்சித்திரத்திலும் பெரிய முன்னேற்றம். சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும், ஞாபகங்களில் வெகுநேரம் நிறைகிறார்கள். நட்டி, கிராமங்களில் பார்க்க நேரிடும் முரட்டு மாப்பிள்ளையின் அச்சு அசல் சாய்ஸ்.

வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ஆதிரா, முத்துராமன், நரேன் என ஒவ்வொரு கேரக்டரும் அழுத்தமாக நடிப்பில் முத்திரை பதிக்கிறார்கள். அந்தக் குட்டிப்பையன் அன்புக்கரசு, வேண்டிய பொழுதெல்லாம் காமெடி திரி கிள்ளிப்போடுவது சிறப்பு.

இமான், படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார். ‘உன்கூடவே பொறக்கணும்...’, ‘எங்க அண்ணன்...’, ‘மயிலாஞ்சி...’, ‘காந்தக் கண்ணழகி...’ போன்ற பாடல்கள் எல்லாமே ஹிட் மிக்ஸ். நீரவ் ஷாவின் தடதட ஒளிப்பதிவு படத்துக்கு பவர்ரைடர் எஃபெக்ட் கொடுக்கிறது.நகைச்சுவையோடு பாசமும் நேசமும் கொண்டவன் இந்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.         

குங்குமம் விமர்சனக் குழு