Face to face - வாசகர்கள் கேள்விகள் குஷ்பூ பதில்கள்ரஜினியின் கட்சியில் கொபசெ ஆக சேருவீர்களா..?

இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டு வரப்போகிறதாமே?
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14.

இப்ப இருக்கற மக்களின் ரேஷன் கார்டுக்கே கிடைக்க வேண்டியது கிடைக்க மாட்டேங்குது. கடைக்கு போனா அங்க சர்க்கரை இருக்காது. அரிசி கிடைக்காது. ப்ளாக்ல விற்பாங்க. நிலைமை இப்படி இருக்கறப்ப ஒரே ரேஷன் கார்டு என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்படுதுனு அரசு தெளிவுபடுத்தணும். ஏன்னா, பாரபட்சம் இருக்கக் கூடாதுனு சொல்றவங்களே அதுல இடஒதுக்கீட்டை கொண்டு வர நினைக்கறாங்க!

சமீபத்தில் சுஜாதா விஜயகுமாருடன் லண்டன் சென்றீர்களே... என்ன ஸ்பெஷல்?
- கோ.குப்புசாமி, சங்கராபுரம்; ராமநாதன், மதகுபட்டி.

என் பெரிய பொண்ணு லண்டன்ல படிக்கப் போறா. ம்ஹும். ஃபிலிம் படிப்பல்ல. சமையல் படிப்பு! பேக்கரி, குக்கிங்னு சமையல் சம்பந்தப்பட்ட படிப்பு. கிராண்ட் டிப்ளமோ பண்ணப் போறா. ஸோ, அவளுக்கு லண்டன்ல வீடு பார்க்கறதுக்காகத்தான் போயிருந்தோம். அங்க நான் தனியா போயிருந்தால், எனக்கும் போரடிச்சிருக்கும். வீடு பார்க்கறதுக்காகத்தான் சுஜாதா கூட வந்திருந்தாங்க. எது நல்லா இருக்கும்... எது நல்லா இருக்காதுங்கற அவங்களுடைய ஒப்பீனியன் எனக்கு ரொம்ப முக்கியம்.

சுஜாதாவும் நானும் ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவங்க, பிருந்தா, அனு இவங்க மூணு பேருமே என் பசங்களுக்கு god mothersனு சொல்லலாம். சில நேரங்கள்ல நான் சொல்ற விஷயத்தை என் பசங்க கேட்கமாட்டாங்க. ஆனா, அதை இவங்க சொன்னா கேட்டுப்பாங்க. என் பசங்க யார் வீட்லேயும் போய் தங்கமாட்டாங்க. ஆனா, சுஜாதா வீட்ல போய் தங்குவாங்க. நாங்களும் வெளியே எங்கும் தங்குறதுக்கு அனுமதிக்க மாட்டோம். ஆனா, சுஜாதா வீட்டுக்கு நோ சொல்ல மாட்டோம்.

அவங்க வீடும் என் வீட்டுக்கு பக்கத்துலதான் இருக்கு. என் பெரிய பொண்ணு சுஜாதாவை ‘தா’னுதான் கூப்பிடுவா. அவளைப் பார்த்துட்டு இப்ப சின்னவளும் ‘தா’னுதான் கூப்பிடுறா. அவங்கள ஒரு தாய் ஸ்தானத்துல பார்க்கறாங்க!

உங்க வீட்டு பூஜையறையைப் பற்றி சொல்லுங்க..?
- அ.முரளிதரன், மதுரை; மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம்.

என் கணவர் முருக பக்தர். எந்த ஒரு விசேஷம்னாலும், அவரோடபட பூஜைனாலும் முருகரை வணங்காம வீட்டை விட்டு கிளம்ப மாட்டார்.

ஒவ்வொரு வியாழக் கிழமையும் முருகருக்கு விரதம் இருக்கார். சைவம் மட்டும்தான் அன்று சாப்பிடுவார்.

வருஷத்துக்கு ஒருமுறை பழனிக்கு போய் தரிசனம் பண்ணிட்டு வருவார். அப்பவும் விரதம் இருப்பார். அவருடைய ஒவ்வொரு புதுப்பட பூஜையன்றும், பிறந்த நாளின்போதும் வடபழனி முருகன் கோயிலுக்கு தவறாம போயிட்டு வருவார். இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சு 25 வருஷங்களா நடக்குது.

நாங்க வீடு கட்டும்போது, பூஜையறைல அறுபடை முருகனையும் ஒரே படமா கொண்டு வர விரும்பினேன். அதுவும் தஞ்சாவூர் பெயின்ட்டிங்ல இருந்தா இன்னும் அழகா இருக்கும்னு தோணுச்சு. அப்படியே க்ராண்டா பூஜையறைல மாட்டியிருக்கோம். அவருக்காக நான் ரெடி பண்ணின முருகர்... ஸ்பெஷல்தான் இல்லையா?!

கர்னாடகாவில் காங்கிரஸின் நிலை இப்போது எப்படி இருக்கிறது..?
- எஸ்.முத்துக்குமார், சென்னை; வெ.ரம்யா, சேலம்.

எங்கெல்லாம் ஜனநாயகத்தை முடக்கி வச்சிருக்கீங்களோ அங்கே ஒரு கட்சி எப்படி இருக்க முடியும்? நீங்க காசு கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்கிட்டு ஆட்சியை பிடிக்கணும்னு ஆசைப்படுறீங்க! இதுக்கு எதிரா குரல் கொடுத்துட்டு இருக்கோம். அதுக்காக காங்கிரஸ் அங்க முடிஞ்சிடுச்சுனு சொல்லிட முடியாது. எடியூரப்பா முதல்வரா இருக்கார். ஆனா, அவங்களுக்கு எடியூரப்பா மேல நம்பிக்கை இல்லை போல! அதனாலதான் நாலு டெபுடி சி.எம்! கட்சிக்குள்ள பிரச்னை வரும்னு அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு. மேலும் ரெண்டு டெபுடி சி.எம். சேர்த்தாலும் ஆச்சரியமில்ல.

எந்த உலகத்திலும் இப்படி நாலு டெபுடி சி.எம்.களை பார்க்க முடியாது! தமிழ்நாட்டுல நாமும் டெபுடி சி.எம். பார்த்திருக்கோம். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வரா இருந்திருக்காங்க. அதேநேரம் ஒரு டெபுடி சி.எம். எப்படி செயல்படணும்னு ஸ்டாலின் அவர்கள் உலகுக்கு காட்டியிருக்கார்.

முதலமைச்சருக்கு தில்லியில் மீட்டிங், வெளிநாட்டுப் பயணம்னு நிறைய ப்ரோக்ராம்ஸ் உண்டு. எல்லா இடங்களுக்கும் அவரால செல்ல முடியாத சூழல்ல அதை ஈடுகட்ட டெபுடி சி.எம் போஸ்ட் கொண்டு வந்தாங்க. இப்ப கர்னாடகால நாலு டெபுடி சி.எம். நாலு பேரும் என்ன செய்யப் போறாங்க?!

ப.சிதம்பரம் விஷயத்தில் உங்கள் கருத்தென்ன?
- ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; ராமசாமி, பாளையங்கோட்டை; முத்துப்பாண்டி, சிவகாசி.

எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. அவரை அரெஸ்ட் பண்ணிட்டு நீங்க என்ன சாதிக்கப்போறீங்க? இதை முழுக்க முழுக்க பழிவாங்கும் உணர்ச்சியா பார்க்கறேன். சதிதான். அவர் என்ன நாட்டை விட்டு ஓடிப்போயிட்டாரா? இல்ல கார்த்தி எங்காவது ஓடிப்போயிட்டாரா? உங்களது எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் கொடுத்துட்டுத்தானே இருக்கார்!

74 வயசுல அவரை திகார்ல போடறது... ரிமாண்ட்ல வைக்கறது... பெயில் கொடுக்க மறுக்கறதுனு பழி வாங்குறது அப்பட்டமா தெரியுது. ஏன்னா, எதையுமே அவங்களால நிரூபிக்க முடியல. சட்டரீதியாக அவர் சந்திக்கத்தானே செய்யுறாரு?

அவர் நாட்டை விட்டு போகக்கூடாதுனு தடை விதிங்க. அதேநேரம் அவர் நாட்டை விட்டு போகணும்னா, எப்பவோ போயிருக்கலாம் என்பதை மறக்காதீங்க!அவரை நிதியமைச்சரா, உள்துறை அமைச்சரா பார்த்திருக்கோம். அதுவும் அவர்கிட்ட இவ்வளவு பணம் எங்கிருந்து வந்ததுனு கேட்டால்? அவங்க பரம்பரை பணக்காரங்க.

அவங்களுக்கு திருடணும்னு அவசியமே கிடையாது. அவருடைய வரலாற்றை புரட்டிப் பார்த்தவங்களுக்கு அவருக்கு எங்கிருந்து பணம் வருதுனு தெரியும். அதுல ஒளிவுமறைவு கிடையாது.

ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் தங்களை அழைத்து கொள்கை பரப்புச்
செயலாளர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா?
- மல்லிகா அன்பழகன், சென்னை - 78;
தியாகராஜன், திருத்தணி.
மொதல்ல ரஜினி சார் கட்சி ஆரம்பிக்கட்டும்! மத்ததை அப்புறம் பேசலாம்!

கலைஞரின் நகைச்சுவை உணர்வு எல்லோருமே அறிந்ததுதான். அவரிடம் நீங்கள் ரசித்த நகைச்சுவை ஒன்று..?
- யூசூப், வேலூர்; பெ.முத்துராமன், திண்டுக்கல்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தப்ப அவருக்கு ஒரு கடிதம் வந்ததாம். அதில் ‘கருணாநிதியே உன்ன சீவிடுவேன்’னு எழுதி இருந்ததாம்.
அந்தக் கடிதத்தைப் பார்த்த அமைச்சர்கள், கட்சியினர் ரொம்பவும் கொதித்தெழுந்து, ‘அதெப்படி தலைவரே உங்கள இப்படி எழுதலாம்’னு
தலைவர்கிட்ட கேட்டிருக்காங்க.

கலைஞர் அவர்கள் ரொம்ப கூலாக, ‘நானே சீவி ரொம்ப நாளாச்சு. இந்த பெரிய மனுஷன் எங்கிருக்காரோ... யார்னு கண்டுபிடிங்க’னு
நகைச்சுவையோடு சொல்லியிருக்கார்!

(பதில்கள் தொடரும்)