கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்- 31தொழிலில் முன்னேற உதவும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி

அழகிய மணவாள நாயக்க மன்னரின் அரசவை எங்கும் எதிரொலித்தது அந்த உபன்யாசகரின் குரல். மன்னரும் அவரது அமைச்சர் நரச பூபதியும் அந்த உபன்யாசகரின் வாயிலாக கிருஷ்ண சரிதம் என்னும் அமுதத்தைப் பருகித் திளைத்திருந்தனர். அந்த உபன்யாசகரிடம் ஏதோ தனி சக்தி இருக்க வேண்டும். கேட்பவர் அனைவரையும் கதைக்குள் அழைத்துச் சென்றார்.

‘‘கைலாசத்தில் ஒரு நாள்...’’ என்ற அவரது பீடிகையைக் கேட்டு மன்னரும் அமைச்சரும் கைலாசத்துக்கே சென்றுவிட்டார்கள்.‘‘உமா! வாயேன். சற்று உல்லாசமாக உலகைச் சுற்றிவருவோம்!’’ தனது இடது புறத்தில் அமர்ந்திருந்த அம்பிகையைக் கேட்டார் மகாதேவன். ‘‘இதென்ன கேள்வி சுவாமி! தாராளமாகச் செல்வோம்...’’ என்றபடி அன்னம் போல நடையிட்டு நந்திக்கு அருகில் அதன் மீது ஏற ஆயத்தமாக அம்பிகை நின்றுகொண்டாள்.

மகாதேவனும் ஏறிக் கொண்டார். உலகையே சுமக்கும் அம்மை அப்பனைச் சுமக்க, தான் செய்த பாக்கியம் என்ன என்று வியந்துகொண்டே நந்தி புறப்பட்டார். ஈசன் குறிப்பறிந்து அவர் விருப்பப்படும் இடங்கள் எல்லாவற்றையும் நோக்கி நந்தி துள்ளிக்குதித்து ஓடலானார். ஈசனுடன் உலகை வலம் வரும் உவகையால் இயற்கையாகவே சிவந்திருக்கும் அம்பிகையின் முகம் மேலும் சிவந்திருந்தது. ஆனால், பரமனின் முகத்தில்தான் ஏதோ ஒருவிதமான கவலை தெரிந்தது. அதைக் கண்ட அம்பிகை பரம்பொருளுக்கே கவலையா? வியந்தாள்.  

இறைவனின் கவலைக்கு காரணத்தை அறிய அவனை வினவ ஆரம்பித்தாள். ‘‘பரம்பொருளே! கைலாச வாசா! கருணை பொழியும் தங்கள் மதிவதனம் இன்று வாடி இருப்பதேன்..?’’ அம்பிகை ஈசனின் தோளில் சாய்ந்தபடியே கேட்டாள். ‘‘உலகில் உள்ள தீயவற்றை அழிக்கும் பெரும் பொறுப்பு என்னுடையது. ஆனால், தீயவற்றை அழிப்பதற்கு ஓர் ஆயுதம் வேண்டாமா? ஆயுதம் இல்லாமல் எப்படி...’’ சொல்லிக் கொண்டே வந்த பரமனின் கண்களில் ஒரு செண்பக வனம் பட்டது. ‘‘நந்தி! அந்த வனத்தின் அருகே சென்று நிறுத்து...’’ வனத்தின் அருகே அழகான ஓர் இடத்தில் நந்தி, அம்மையப்பனை இறக்கி விட்டார்.

‘‘ஆஹா! மதி மயக்கும் வனம். உமா! வா! மாலவனைப் பூஜிக்க இதுவே தகுந்த இடம்...’’ ஈசன் அம்பிகையின் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டே வனத்திற்குள் நுழைந்தார். ‘‘ஹும்... உங்கள் இருவருக்குமிடையில் நான் படும் பாடு பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. நீங்கள் என்னடா என்றால் ராமா ராமா என்று என் அண்ணனையே பூஜிக்கிறீர்கள்! என் அண்ணன் என்னடா என்றால் சிவ சிவா என்று உங்கள் புகழைப் பாடுகிறார். இது தேவலோகத்தோடு நின்றுவிடவில்லை  பூலோகத்திலும் அல்லவா தொடர்கிறது! காசியில் நீங்கள் ராம நாம ஜபம் செய்கிறீர்கள்.

ராமேஸ்வரத்திலோ அந்த ராமன் உங்களை பூஜிக்கிறான். இந்த பேதை இடையில் மாட்டிக்கொண்டு விழிக்கின்றேன்!’’ அம்பிகை குறும்பாக சிவ விஷ்ணு பேதமின்மை என்னும் பெரும் தத்துவத்தைச் சொன்னாள். ஈசன் சிருங்காரமாக ஒரு சிரிப்பு சிரித்தார். அப்பப்பா! சிரிப்பா அது! நமது பாவத்தையும் துக்கத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதே அந்த சிரிப்பு!

‘‘உமா! இன்று என் உள்ளம் குளிரும் வரை அந்த நாரணனை அர்ச்சிக்கப் போகிறேன். அதுவும் இந்த அற்புத வனத்தில் பூத்த செண்பகப் பூக்களால் பூஜிக்கப் போகிறேன். ஆஹா இவைதான் எத்தனை வாசம் மிகுந்ததாக உள்ளது!’’ வனத்தின் நறுமணத்தை முகர்ந்தபடியே ஈசன் சொன்னார்.
அம்மையும் அப்பனுமாக பூஜைக்கு பூ கொய்ய ஆரம்பித்தார்கள். கோவிந்தன் திரு உருவை, உள்ளம் குளிரக் குளிர செண்பகத்தாலேயே மெழுகினார்கள்.

 

மாலவனின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி ஈசன் அர்ச்சிக்கும் வேளையில் ஒரே ஒரு செண்பகப் பூ மட்டும் குறைந்தது. வேறு பூவும் கிடைக்கவில்லை. செண்பக வனத்தில் இப்படி ஒற்றை செண்பகப் பூவிற்குத் திண்டாட வேண்டிவரும் என்பதை எதிர்பாராத அம்பிகை திகைத்துப் போனாள்.

அதைக் கண்டு ஈசன் மெல்ல இள நகை பூத்தார். ‘‘உமா! இங்கு வந்ததும் வனத்தின் அழகை ரசித்தபடியே அதன் சுகந்தத்தை முகர்ந்தேன், நினைவில் உள்ளதா?’’

‘‘ஆம் சுவாமி! ஆனால், அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு..?’’ ‘‘தெய்வத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன் ஒரு பொருளை அனுபவிப்பது தவறு. நான் கேசவனுக்கு சமர்ப்பிக்கப் போகும் புஷ்பங்களை தெரிந்தோ தெரியாமலோ முகர்ந்து விட்டேன். அது மாபெரும் அபசாரம் அல்லவா? அதனால்தான் மாதவன் நம்மை சோதிக்கிறான்...’’அம்பிகைக்கு மெல்ல புரிய வந்தது. ‘‘சோதனையிலிருந்து எங்ஙனம் விடுபடுவது சுவாமி?’’ குழம்பியபடியே கேட்டாள்.
‘‘பாவம் செய்த நாசியை அறுத்து அந்த தூயவனுக்கு சமர்ப்பிப்பதே ஒரே வழி...’’ சொல்லிக்கொண்டே தனது நாசியை ஒரு குறுவாளால் வெட்ட ஆயத்தமானார் சர்வேஸ்வரன்.

‘‘செண்பகப் பூ போல அழகாக இருக்கும் அந்த நாசியைக் கொய்ய வேண்டாம்! நான் என் நாசியைத் தருகிறேன் பிரபோ...’’ அம்பிகையின் கதறல் வனத்தில் எதிரொலித்தது. பின் சட்டென்று நின்றும் போனது. ஆம்! மித மிஞ்சிய ஆச்சரியத்தால் அம்பிகை வாயடைத்துப்போய் நின்றாள்.

மகேசன் நாசியை வெட்டப் புகும் சமயம் நவரத்ன அணிகள் மின்ன, மேக வண்ணத்தில் ஒரு கை ஈசனின் கைகளைப் பற்றி அதைத் தடுத்து நிறுத்தியது!இந்த அற்புதக் காட்சியைக்கண்டே மகாதேவன் மனைவி வாயடைத்துப் போனாள்.

‘‘சிறு விஷயத்திற்காக இப்படி தங்களது அழகிய நாசியை அறுத்துக் கொள்ளலாமா?’’ போலிக் கோபத்தோடு கேட்டார் வைகுண்டவாசன்.
‘‘அதே சிறு பிழைக்காக பூக்களை மறைத்து என்னை சோதிக்கலாமா?’’ மாயவனை மடக்கினார் மகாதேவன்.  ஈசன் பதிலைக் கேட்டு மாயவன் நகைத்தார். அவரது நகைப்பில் மகாதேவனும் சேர்ந்து கொண்டார்.‘இவர்கள் ஆடும் நாடகத்தில் அவ்வப்போது அகப்பட்டுக் கொள்கிறேன்...’ என்று அம்பிகை புலம்பியது எவ்வளவு உண்மையாகப் போய்விட்டது!

‘‘கைலாசவாசா! தீயவற்றை அழிக்க ஓர் ஆயுதம் வேண்டி எம்மை பூஜித்தீர்கள் அல்லவா? இதோ இந்த திரிசூலத்தை வைத்துக் கொள்ளுங்கள்...’’ என்று அமுதமாய் மொழிந்தபடியே ஈசனுக்கு ஒரு மின்னும் திரிசூலத்தைத் தந்தார் மாலவன்.‘‘இப்படி அந்த பரமேஸ்வரனுக்கே ஆயுதம் தந்து அருளிய கருணைக் கடல் வேறு யாருமில்லை மன்னா... மன்னார்குடியில் வீற்றிருக்கும் அந்த ராஜகோபால சுவாமிதான்!’’ என்றபடி தனது பெரிய உரையை சற்று நிறுத்தினார் அந்த உபன்யாசகர்.

மன்னரும் அமைச்சரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ‘‘எந்த புராணத்தின் அடிப்படையில் இந்தக் கதையை சொல்கிறேன் என்று என்னைப் பார்க்கிறீர்கள்... சரிதானே மன்னவா?’’ ஆம் என்பதுபோல் மன்னரும் தலையசைத்தார்.‘‘ஆதாரம் இல்லாமல் அளந்துவிடுபவன் இல்லை நான். இந்தக் கதை ‘பாஞ்ச ராத்ர ஆகமம்’ என்னும் வைஷ்ணவ ஆகம நூலில் உள்ளது மன்னா...’’ அழுத்தமாகச் சொன்னார் உபன்யாசகர்.  

‘‘சுவாமி! மன்னார்குடியில் வாழும் அந்த வேத விழுப் பொருளின் லீலைகளை மேலும் விளக்கிச் சொல்லுங்கள்...’’ கைகுவித்து கண்ணீர் மல்க மன்னர் வேண்டினார். அவரது செயல் உபன்யாசகரை வியக்கச் செய்தது. மன்னரின் கிருஷ்ண பக்தியை மனதால் வியந்தபடியே கதையைத் தொடர ஆரம்பித்தார் அவர்.

 ‘‘ஈசன் தவமியற்றிய அதே செண்பக வனத்தின் வழியாக இரண்டு பேர் விறுவிறு என்று நடந்து கொண்டிருந்தார்கள்...’’அந்த முனிவர்களின் நடையில் அசாத்திய வேகம். அவர்களது உருவத்திற்கும் நடைக்கும் சம்பந்தமே இல்லை. காற்றை மிஞ்சும் வேகம். அவர்களது வேகம் வானமார்க்கமாகச் சென்றுகொண்டிருந்த நாரதரையே திரும்பிப் பார்க்கச் செய்தது.

‘‘உண்ணா நோன்பிருந்து தவமிருக்கும் முனிவர்களிடம் இவ்வளவு வேகமா?’’ ஆச்சரியத்தில் நாரதரின் கண்கள் அகண்டு விரிந்தன.

இனிமையாகத் தனது மஹதி வீணையை மீட்டியபடியே அவர்கள் அருகில் நாரதர் வந்தார். அந்த நேரத்திலும் கூட அவரது நா ‘‘நாராயணா...’’ என்று சொல்ல மறக்கவில்லை.‘‘முனிவர்களே! நீங்கள் யாரென்று அடியேன் அறியலாமா..? இந்தக் கொடும் கானகத்தில் இவ்வளவு வேகமாக நடந்து எங்கு செல்கிறீர்கள்..?’’ நாரதரின் வியப்பு அவரது குரலில் பிரதிபலித்தது.

மூச்சு வாங்கியபடியே அவ்விரு முனிவர்களும் பேச ஆரம்பித்தார்கள். ‘‘என் பெயர் கோபிலர். இவர் பெயர் கோபிரளயர். நாங்கள் இருவரும் பல காலம் தவம் செய்து கொண்டிருந்தோம். தவம் கலைந்து கண்விழித்த வேளையில், தவத்தின் மூலமாக நாங்கள் அடைய நினைக்கும் பரம்பொருள் - பூமியில் கிருஷ்ணனாக அவதரித்ததாக கேள்விப் பட்டு அந்த இறைவனை சேவிக்க துவாரகைக்கு சென்று கொண்டிருக்கிறோம்...’’

இதைக் கேட்டு நாரதர் தன்னை மறந்து சிரித்தார். ‘‘அந்த மாயவன் தனது அவதார நோக்கத்தை முடித்துவிட்டு வைகுண்டம் சென்று பல காலம் ஆகிறது. நீங்கள் இப்போது துவாரகை சென்றால் அங்கு துவாரகையும் இருக்காது... கண்ணனும் இருக்கமாட்டார்...’’ நாரதர் சொன்னதைக் கேட்டு அந்த இரு முனிவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

‘‘தாத்தா... தாத்தா... கொஞ்சம் பொறுங்க...’’ கண்ணன் சட்டென்று நாகராஜனை இடைமறித்தான்.‘‘சாரநாதப் பெருமாள் கதையைத்தானே சொல்லிட்டு இருந்தீங்க... திடீர்னு இப்ப மன்னார்குடி ராஜகோபால சுவாமி பத்தி சொல்லிட்டு இருக்கீங்களே...’’ ஆனந்தவல்லி சட்டென கண்ணனை அணைத்து முத்தமிட்டாள். ‘‘சரியான கேள்வியைத்தான் கேட்கற. இதுக்கான பதிலை தாத்தா கதை சொல்லி முடிச்சதும் நீயே புரிஞ்சுப்ப.

ராஜ கோபால சுவாமி ரொம்பவும் சக்தி வாய்ந்தவர். அந்த பரமேஸ்வரருக்கே அவர் கடமையைச் செய்ய கருவியைக் கொடுத்தவர்... அதாவது தொழில்ல எந்தச் சிக்கல் வந்தாலும் அதைத் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தவர்... கதையை முழுசா கேட்டதும் உனக்கே புரியும்...’’ சொன்ன தன் மனைவி ஆனந்தவல்லியைப் பார்த்து கண்களால் புன்னகைத்துவிட்டு கதையைத் தொடர்ந்தார் நாகராஜன்...

(கஷ்டங்கள் தீரும்)    

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்