பழைய ஜீன்ஸில் ஏழை மாணவர்களுக்கு புது செருப்பு!ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க சுமாராக நான்காயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகும்!

இதை நன்கு உணர்ந்த ஜோத்பூரைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து பழைய ஜீன்ஸ்களைச் சேகரித்து பள்ளிக்கூட பைகள், செருப்புகள், மற்றும் பென்சில் பர்ஸ்கள் என அவற்றை ரீ மாடல் செய்து இதுவரை 1200க்கும் மேலான ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள்!
‘சோல்கிராஃப்ட்’ (Solecraft) அமைப்பை உருவாக்கிய மிருணாளினி ராஜ்புரோகித் மற்றும் டெக்ஸ்டைல் பின்னணி கொண்ட அதுல் மேத்தா ஆகிய இருவரும் உற்சாகமாக இதுகுறித்து பேசத் தொடங்கினார்கள்.   

‘‘ஒரு சின்ன காபி சந்திப்புலதான் ‘சோல்கிராஃப்ட்’ அமைப்பு உருவாச்சு...’’ சொல்லும்போதே அதுல் மேத்தாவின் குரலில் அவ்வளவு பெருமை.
‘‘சிஏ படிச்சு முடிச்சதும் அப்பாகூட பிசினஸ் பக்கம் வந்தேன். மிருணாளினி ஒரு ஃபேஷன் டிசைனர். இன்னொரு நண்பரான நிகில் கேலாட், சிவில் என்ஜினியர். பக்கத்து வீட்டு நண்பன். பிராஃபிட் - நான் பிராஃபிட் சேல்ஸில் அவனுக்கு நல்ல அனுபவம் உண்டு...’’ புன்னகைக்கும் அதுல் மேத்தா, உலகிலேயே அதிக மாசு மற்றும் பொருள் விரயம் உள்ள துறை டெக்ஸ்டைல் பிசினஸ்தான் என்கிறார்.

‘‘அனுபவபூர்வமா இதை உணர்ந்தேன். அப்பதான் இவ்வளவு செலவு செஞ்சு தயாரிக்கிற துணிகளை நாம ஏன் மறுசுழற்சி செய்யறதில்லைனு ஒரு கேள்வி எழுந்தது. இதுபத்தி நிகில்கிட்ட பேசினேன். எங்க உரையாடலைக் கேள்விப்பட்ட மிருணாளினி, தனக்கும் அதே எண்ணம் இருக்கறதா சொல்லி எங்க கூட இணைஞ்சாங்க.  

சில நாட்களுக்குப் பிறகு மிருணாளினியும் நிகிலும் சேர்ந்து மார்வாடி கேட்டலிஸ்ட் என்னும் இன்குபேட்டர் சென்டரை மையமாகக் கொண்டு இயங்கும் ‘சோல்கிராஃப்ட்’ ஐடியாவைக்கொண்டு வந்தாங்க. எல்லா துணிகளையும் மறுசுழற்சி செய்ய முடியாது. கொஞ்சம் வலிமையான, உழைக்கக்கூடிய துணிகளைத்தான் அப்படி செய்ய முடியும். ஆக, டெனிம்தான் இதுக்கு சரியானது. லெதர் மாதிரியான மெட்டீரியலை தேர்வு செஞ்சா அதன் மேக்கிங் செலவும் செய்முறையும் கொஞ்சம் கடினமா இருக்கும். ஸோ, டெனிம் துணிகளை டிக் செஞ்சோம்...’’ என அதுல் மேத்தா முடிக்க, மிருணாளினி தொடர்ந்தார்.

‘‘நண்பர்கள்ல ஆரம்பிச்சு கல்லூரி, பள்ளிகள்னு நாங்களே நேரடியா போய் டெனிம் உடைகளை சேகரிச்சோம். நல்ல நிலைல இல்லாத டெனிம் டிரெஸ்ஸைக் கூட நாங்க விடலை. சேகரிச்சதை கிளீனிங், பிளீச்சிங்னு 25க்கும் மேலான முறைகள்ல கிட்டத்தட்ட புது ஜீன்ஸ் மாதிரியே அதை மாத்தினோம். இதுக்குப் பிறகுதான் பேக், செருப்பு, பென்சில் - பேனா பவுச் மெட்டீரியலா அதை மாற்றும் ப்ராசஸ்.

ஜெய்ப்பூர், ஜோத்பூர் பகுதிகளைச் சேர்ந்த அடிமட்ட தையல் கலைஞர்களை வைச்சு இப்படி பேக், செருப்பு, பவுச் எல்லாம் செய்தோம். இதன் வழியா அவங்களுக்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். எங்க சொந்த செலவுல நூறு நூறு செட் தயாரிச்சு அதை கிராமப்புற குழந்தைகளுக்கு கொடுத்தோம்...’’ சாதித்த பெருமையுடன் மிருணாளினி முடிக்க, தொடர்ந்தார் அதுல்.

‘‘மெல்ல மெல்ல எங்களுக்கு டொனேஷன்ஸ் வர ஆரம்பிச்சுது. சிலர் டெனிம் துணிகளைக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. சிலர் பணமா உதவத் தொடங்கினாங்க. போறாதா... இப்ப ஐந்து லட்சம் டார்கெட் வைச்சு இயங்கிட்டு இருக்கோம்.இதுக்கு இடைல நிகில் இன்னொரு திட்டத்தோட வந்தான். ‘பலருக்கு நம்ம கிட் பிடிச்சிருக்கு. ஏன் இதை பெரியவங்களுக்கும் விற்கக் கூடாது’னு கேட்டான்.

எங்களுக்கும் இது சரினு பட்டது. இந்த வருமானத்தை வைச்சு இன்னும் பல ஏழை மாணவர்களுக்கு இலவசமா எங்க கிட்டை சப்ளை செய்ய முடியுமே! ஸோ, ரூ.400க்கு இப்ப எங்க கிட்டை விற்பனை செய்யறோம். http://www.solecraft.org/team வெப்சைட்ல இன்னும் நிறைய டீடெயில்ஸ் இருக்கு. இந்தியாவின் எந்த மூலைல இருந்தும் ஆன்லைன்ல ஆர்டர் செய்யலாம்.நிறைய கல்லூரி மாணவர்களும் ஆபீஸ் கோயிங் கைஸும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. ஒவ்வொரு கிட் சேல்ஸும் இன்னொரு ஏழை மாணவருக்கு கிஃப்ட் ஆகுது!’’ மலர்ச்சியுடன் சொல்கிறார் அதுல் மேத்தா.

ஷாலினி நியூட்டன்