யார் இந்த கிரேட்டா தன்பர்க்?இன்று சமூக வலைத் தளங்களைத் திறந்தால் முதலில் அடிபடுகிற பெயர் கிரேட்டா தன்பர்க்.

வெறும் 16 வயதே ஆன இந்தச் சிறுமி செய்து வருகின்ற காரியம் மிகப்பெரியது. அவளின் கேள்விகளுக்குப் பெரும் தலைவர்களே பதில் சொல்ல முடியாமல் ஆடிப்போயிருக்கின்றனர்.‘‘இங்கே நடக்கும் எல்லாமே தவறாக உள்ளது. நான் இங்கே இருந்திருக்கக்கூடாது. கடலின் மறுமுனையில் உள்ள பள்ளியில் இப்போது நான் படித்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைத் திருடிவிட்டீர்கள்.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள். சூழலியல் மொத்தமும் உருக்குலைந்துவிட்டது. அழிவின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனால், பொருளாதார வளர்ச்சி குறித்து மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு?

உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். எதிர்காலத் தலைமுறையினரின் பார்வை உங்கள் மீதுதான் உள்ளன. எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால், உங்களை மன்னிக்க மாட்டோம்...’’ சமீபத்தில் கிரேட்டா தன்பர்க் ஐநா சபையில் ஆற்றிய உரையில் பெரு அதிர்வை ஏற்படுத்திய பகுதி இது.

ஸ்வீடனில் பிறந்த கிரேட்டாவின் தாயார் ஒரு பாடகி. தந்தை ஒரு நடிகர். இரண்டு வருடங்களுக்கு முன்பு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி கிரேட்டா கேள்விப்பட, அடுத்த நொடியில் இருந்து அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்.  

ஸ்வீடனில் இருந்து அதிகளவில் வெளியாகும் கார்பன் புகை அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. உடனே தனியொரு ஆளாக சிறிய பதாகையைக் கையில் ஏந்தி தன் போராட்டத்தைத் தொடங்கினார் கிரேட்டா. அப்போது யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இருந்தவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்திவிட்டார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். இந்தப் போராட்டத்தை எல்லாம் அவர் பள்ளியில் பாடம் படிக்க வேண்டிய நேரத்தில் செய்ததுதான் ஹைலைட். வெள்ளிக்கிழமை போராட்டம் வெற்றிபெறவே பல ஊர்களுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்தார். தான், சென்ற ஊர்களிலெல்லாம் வசித்து வந்த மாணவர்களிடம் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உலகம் முழுவதும் பள்ளியைத் துறந்துவிட்டு மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு மூலகாரணமே கிரேட்டாதான். பள்ளிக்குப் போக நேரம் கிடைக்காததால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுமூச்சாக இறங்கிவிட்டார் கிரேட்டா.  இந்த இளம் போராளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.             

கிரேட்டாவை நம்பவேண்டாம்!

ஆம். இப்படியும் ஒரு சாரார் சொல்லி வருகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், கிரேட்டா என்ஜிஓ பின்புலம் கொண்டவர் என்பது.
கிரேட்டாவின் அம்மா பன்னாட்டு என்ஜிஓ ஆன WWF விருது பெற்றவர். உலகின் எந்த மூலையில் மக்கள் எழுச்சி / மக்கள் போராட்டம் நடைபெற்றாலும் அதற்குள் ஊடுருவி மக்களின் கோபத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்குவதே இந்த WWF-ன் வேலை என்ற குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வருகிறது. எனவே, கிரேட்டாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னாலும் என்ஜிஓ அஜெண்டா ஏதாவது இருக்கும் என சந்தேகப்படுகிறார்கள்!

த.சக்திவேல்