நம்ம வீட்டு முந்திரிக் கொட்டை!ஹார்ட்டின் லைக்குகளும், கலர்ஃபுல் பொக்கேவும் நிரம்பித் ததும்ப வாட்ஸ் அப்பில் வாழ்த்துக்களை அள்ளிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யைப் பார்த்துவிட்டு ‘என்னங்க பொசுக்குனு அழவச்சிட்டீங்க...’ என அண்ணன் - தங்கை அன்பில் நனைந்து நெகிழ்ந்தவர்களும், சூரியின் மகன் முந்திரிக்கொட்டையாக நடித்த குட்டிப்பையனின் டைமிங் காமெடியில் கலகலத்து மகிழ்ந்தவர்களும் அடங்கும்.

‘யார் அந்த முந்திரிக்கொட்டை?’ என பாண்டிராஜிடம் விசாரித்தால்... ஆச்சரியம் அள்ளுகிறது. அது அவரது மூத்த மகன் அன்புக்கரசு!
‘‘ஆக்சுவலா நான் நடிக்க வந்ததுக்கு பின்னாடி ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் இருக்கு...’’ புதிர் போட்டபடி பேச ஆரம்பித்தார் ஐந்தாம் வகுப்பு படிக்கும்
அன்புக்கரசு.

‘‘நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அப்பா முன்னாடியே குத்து டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கேன். ‘சூப்பர்டா’னு மட்டும் சொல்லிட்டுப் போயிடுவார். ‘சினிமால நடிக்கறியா’னு கேட்டதே இல்ல!அப்படியிருக்கிறப்ப அப்பா டைரக்‌ஷன்ல இந்தப் படத்துல நடிச்சது எனக்கே ஆச்சர்யமா இருக்கு! எங்க ஸ்கூல் ஃபங்ஷன்ல நான் மைம் பண்ணினேன். அந்த புரோக்ராமைப் பார்க்க அப்பாவை கூட்டிட்டுப் போனேன்.

மைம்ல நானும் நாலஞ்சு ஃப்ரெண்ட்ஸும் குதிரை மாதிரி, யானை மாதிரி கேரக்டர்ஸா குனிஞ்சு இருந்தோம். நாங்க நிமிர்ந்து பார்க்க முடியாது. மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடையாளம் தெரியறா மாதிரி முன்னாடி நின்னு மைம் பண்ணினாங்க. நான் பின்னாடி இருந்து பண்ணினதால என்னை சட்டுனு யாருக்கும் அடையாளம் தெரியலை.

அப்பாவுக்கு மனசு கஷ்டமாகிடுச்சு. ஃபங்ஷன் முடிஞ்சதும், ‘என்னடா இப்படி பண்ணிட்டாங்க’னு ஃபீல் செய்தவர், ‘உன்னை நடிக்க வைக்கறேன்’னு சொன்னார். அப்படியே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ல நடிக்க வைச்சுட்டார்!

முழுப்பரீட்சை லீவுலதான் படப்பிடிப்பு நடந்தது. தவிர 10 நாட்கள் மெடிக்கல் லீவும் போட்டேன்! மொத இரண்டு நாட்கள் ஸ்பாட்டுல சிரமப்பட்டேன். அப்பா, பொறுமையா நான் என்ன செய்யணும்னு சொல்லிக் கொடுத்தார். அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்டை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

ஸ்பாட்டுல நானும் மைனா நந்தினி அக்காவும் டிக்டாக் பண்ணிட்டிருப்போம். பாரதிராஜா தாத்தாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ‘டேய் அன்பு... எக்ஸலன்ட்டா’னு முதுகுல தட்டிக்கொடுப்பார். பஞ்சு சுப்பு சார் என்னை ‘மாம்ஸ்’ம்பார். நானும் அவரை ‘என்ன மாம்ஸ்’னு பதிலுக்கு சொல்வேன்.
சூரி அண்ணா, சிவா அண்ணானு எல்லாருமே என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க.

படம் ரிலீஸானதும் ஸ்கூலுக்கு போனேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை ‘முந்திரிக் கொட்டை’னு கிண்டல் பண்ணத் தொடங்கிட்டாங்க!
‘அன்னிக்கு நீ மெடிக்கல் லீவு போட்டது நடிக்கத்தானா’னு மிஸ் கேட்டுட்டு பாராட்டினாங்க. என் தம்பி ரஞ்சன், எனக்கு முத்தம் கொடுத்துகிட்டே இருக்கான். ரெண்டாங்  கிளாஸ்தான் படிக்கறான். ‘நல்லா நடிச்சிருக்கேணா’னு சொல்லிட்டே இருக்கான்.

டைரக்டர் ஏ.எல்.விஜய் சார், விக்னேஷ் சிவன் சார்னு பல டைரக்டர்ஸ் பாராட்டினாங்க. இப்ப விளம்பரப் படங்கள்ல நடிக்கக் கேட்டிருக்காங்க. ஆனா, அப்பா ஸ்ட்ரிக்ட்டா ‘ஆசைக்கு ஒரு படம் நடிச்சாச்சு. இனிமே படிப்புதான் முக்கியம்’னு சொல்லிட்டார். அவர் சொல்றதும் கரெக்ட்தானே?!’’ புன்னகைக்கிறார் அன்புக்கரசு. கெத்து கெத்து!

மை.பாரதிராஜா