அமித் ஷாவின் ஸ்டாக் புரோக்கர் முதல் உள்துறை அமைச்சர் வரை...பாஜகவைப் பொறுத்தவரை எவரும் இரட்டை பதவிகளை ஒரே நேரத்தில் வகிக்க முடியாது என்பது விதிமுறை. 2014ல் பாஜக தேசிய தலைவராக இருந்த இன்றைய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரட்டை பதவி விவகாரத்தால் கட்சிப் பதவியை துறந்தார். அந்த இடத்திற்கு பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளி அமித் ஷா, 2014 ஜூலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அவர், மத்திய உள்துறை அமைச்சரானதால் புதிய தேசிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் என்ன நடந்தது தெரியுமா?

அக்கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை! மாறாக, பாஜ கட்சியின் கொள்கையை ‘சற்றே’ தளர்த்தி ‘தேசிய செயல் தலைவர்’ என்ற பதவியை உருவாக்கி 2019 ஜூலையில் பீகாரைச் சேர்ந்த ஜே.பி.நட்டாவை தேசிய செயல் தலைவராக அறிவித்தனர்!வருகிற டிசம்பரில் புதிய தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தவும், அதுவரை அமித் ஷாவே ேதசிய தலைவராக தொடர்வார் என்றும் கூறினர்!

இன்றைய நிலையில் வாக்குச்சாவடி வாரியாக அக்டோபர் 10 முதல் 30ம் தேதி வரை நிர்வாகிகள் தேர்தலும், மாநிலப் பிரிவுக்கான தேர்தல் நவம்பரிலும் நடக்கிறது.புதிய தலைவரை தேர்வு செய்யாததற்கு சொல்லப்பட்ட காரணம் -‘டிசம்பருக்குள் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது; அதனை அமித் ஷா தலைமையே வழிநடத்திச் செல்ல வேண்டும்’ என்று அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையிடம் மன்றாடியதால் இந்த ‘ஒத்திவைப்பு’ முடிவு எடுக்கப்பட்டது!

மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கும் பாஜகவின் கட்சித் தலைவருக்கும் என்ன தொடர்பு?
இதற்கான விடையில்தான் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக பெற்ற ‘அசுர’ வளர்ச்சி அடங்கியிருக்கிறது!ஆம். கட்சிக்குள் புதிய வியூகங்களை வகுத்துக் கொடுத்து, இந்தி பேசும் மாநில மக்களிடையே தங்களுக்கான பெரும் ஆதரவு அலையை ஏற்படுத்தி, இன்றுவரை அதை தக்கவைத்து வருகிறது பாஜக.

தங்களால் கால் பதிக்க முடியாத மாநிலங்களில் கூட அரசியல் சதுரங்க விளையாட்டால் காய்களை நகர்த்தி, அதன் பலனை ருசிக்கிறது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கைப்பற்றியது; கோவா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்களை பாஜகவுக்குள் இழுத்துப் போட்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது; சிக்கிமில் 15 எம்எல்ஏக்களைக் கொண்ட சிக்கிம் ஜனநாயகக் கட்சியில், அதன் தலைவர் பவன்குமார் தவிர மற்ற 14 எம்எல்ஏக்களையும் பாஜகவில் இணைத்துக் கொண்டது... என உதாரணங்கள் நீள்கின்றன.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? சிக்கிம் மாநிலத்தில் பாஜ கட்சிக்கு ஒரு சிங்கிள் சீட் எம்எல்ஏ கூட இல்லை என்பதுதான்!
இப்படி பல மாநிலங்களில் எம்பி, எல்எல்ஏக்கள் பாஜ கட்சிக்கு தாவியுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அக்கட்சியின் தலைவராக அமித் ஷா இருந்ததுதான்!

இவை அனைத்துமே பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நடந்த சம்பவங்கள் என்பதை மனதில் கொள்வது நல்லது.எனவேதான் அமித் ஷாவை உடனடியாக கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்காமல், கட்சியின் கொள்கையையே சற்று தளர்த்தி இந்த விளையாட்டை பாஜக ஆடுகிறது.

பிரதமர் மோடியின் மனசாட்சியாக விளங்கும் அமித் ஷா, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது கணிக்க முடியாததாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராகத் திகழும் அமித் ஷா யார்..?குஜராத் மாநிலம் அகமதாபாத்தை அடுத்த மான்சாவில் அனில்சந்திரா ஷா - குஷ்ம்பென் ஷா தம்பதியின் மகனாகப் பிறந்தவர்தான் அமித் ஷா என்ற அமித்பாய் அனில்சந்திர ஷா.

இவரது தந்தை மும்பையில் பிவிசி பைப்புகளை விற்பனை செய்தவர். அமித் ஷாவின் 12வது வயதில் குடும்பம் குஜராத்துக்கு இடம் பெயர்ந்தது.
மான்சாவில் தன் பள்ளிப் படிப்பை அமித் ஷா முடித்தார். அகமதாபாத் சி.யு.ஷா அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதுதான் ஆர்எஸ்எஸ் முகாமில், மோடியை முதன்முதலாகச் சந்தித்தார்.

அவர்களின் நட்பின் பரிசாக, 1983ல் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் நிர்வாகப் பொறுப்பு அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டது.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் ஸ்டாக் புரோக்கராக பணியில் அமர்ந்தார் அமித் ஷா.
தேசிய, மாநில அரசியல் நிகழ்வுகளை பாஜக சித்தாந்த முழக்கத்துடன் பேசிவந்த அமித் ஷா, தனது வேலையைத் துறந்து, 1984ல் பாஜக உறுப்பினரானார்.

1987ல் பாஜக இளைஞரணி பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவரது செயல்பாடுகள் கட்சிக்கு பிடித்துப் போகவே 1991ல் மூத்த தலைவர் அத்வானி, குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட போது, ‘எலக்‌ஷன் ஏஜென்ட்’ பொறுப்பை இவரிடம் வழங்கினார்கள்.

இப்பணியையும் அமித் ஷா திறம்பட செய்ததை அடுத்து 1995ல் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றபோது சர்ஹேஜ் தொகுதி, இவருக்கு வழங்கப்பட்டது. அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தொடர்ந்து 4 முறை அதே தொகுதியில் போட்டியிட்டு தன் எம்எல்ஏ பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

மெல்ல மெல்ல கட்சியில் அசைக்க முடியாத நபராக உருவெடுத்த அமித் ஷாவைத் தேடி 2009ல் பணம் கொழிக்கும் குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் துணைத் தலைவர் பதவி வந்தது; போலவே 2014ல் பாஜக தேசிய தலைவர் பதவி இவரது மடியில் வந்து விழுந்தது!
இதுவரை தன் வாழ்நாளில் 29 தேர்தல்களை அமித் ஷா சந்தித்திருக்கிறார். இதில் உள்ளாட்சித் தேர்தல்களும் அடங்கும். தான், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிறும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

குஜராத் மாநில முதல்வராக மோடி பொறுப்பேற்றபோது அவரது அமைச்சரவையில் இடம் பிடித்தார். மாநில முதல்வராக மோடி 12 ஆண்டுகள் இருந்தார். அத்தனை வருடங்களும் உள்துறை, சட்டம், நீதி, சிறை, எல்லைப் பாதுகாப்பு, போக்குவரத்து... என 12 துறைகளுக்கு மாநில அமைச்சராக அமித் ஷா பதவி வகித்திருக்கிறார்.இக்காலங்களில்தான் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இன்றுவரை அவை பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

2005ல் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இவர் இருந்தபோது, சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 2010ல் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து குஜராத் மாநிலத்துக்குள் இவர் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் 2012ல் உச்ச நீதிமன்றம் அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கியது.

போலி என்கவுன்டர், ஆள் கடத்தல், இளம்பெண்ணை வேவு பார்த்தல், வன்முறை, கலவரம்... என அமித் ஷாவின் மீது படிந்திருக்கும் குற்றச்சாட்டுகள் கணக்கில் அடங்காதவை.என்றாலும் பாஜக இவரை நம்பியது. உத்திரப்பிரதேச மாநில லோக்சபா தேர்தல் பொறுப்பாளராக இவரையே நியமித்தது. இதனை அடுத்து நடந்த தேர்தலில் உபியில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது! இதற்கு காரணம் அமித் ஷா! இந்த வெற்றிதான் தேசிய அரசியலில் இவர் கால் பதிக்கக் காரணம். பாஜக தேசிய தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டதும் இதன் பிறகுதான்.

இப்படி படிப்படியாக மோடியிடமும் கட்சியிடமும் நல்ல பெயர் எடுத்த அமித் ஷா, இன்று இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கிறார்!
பிரதமருக்கு அடுத்த செல்வாக்கான பதவியில் இன்று அமர்ந்திருக்கும் அமித் ஷா, தனது மனைவி சோனால் ஷா; மகன் ஜெய் ஷா, மருமகள் ருஷிதா, பேத்தி ருத்ரி ஆகியோரைச் சார்ந்தே உள்ளார்.

இவரது உடன் பிறந்த 6 சகோதரிகளின் குடும்பமும், அமித் ஷாவின் கவனிப்பில்தான் உள்ளனர்.‘அமித் ஷா ஓர் இந்து அல்ல; அவர் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்’ என்று குஜராத்தில் பேசப்படுகிறது. ஆனால், 2018 ஏப்ரலில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமித் ஷா, ‘‘நான் ஓர் இந்து வைஷ்ணவன்; ஜெயின் அல்ல...’’ என்று, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இன்று இவரது மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் லாபம் மட்டுமே பல கோடிகள்! இதற்கெல்லாம் காரணம், அமித் ஷாவின் பதவிதான் என தனியார் இணையதளம் ஒன்று செய்திக் கட்டுரை வெளியிட்டது.கொந்தளித்த ஜெய் ஷா, அந்த இணையதளம் அவதூறு பரப்புவதாக சொல்லி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார்... என்பதெல்லாம் தனிக்கதை!  

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிட்ட அமித் ஷா, தனது வேட்பு மனுவில் அளித்துள்ள விவரங்களின் படி இவரது குடும்ப சொத்தின் மதிப்பு ரூ.38.81 கோடி. 2012ம் ஆண்டு இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.11.79 கோடி என்பதை நினைவில் கொள்க!  இவை எல்லாம் ஆன் த ரிக்கார்ட் ஆக இருக்கும் அமித் ஷாவின் கதை. ஆஃப் த ரிக்கார்ட் ஆக இருக்கும் கதையை இணையதளங்களில் தேடி படித்துக் கொள்ளுங்கள்!                 

செ.அமிர்தலிங்கம்